தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…

மாவீரன் லெப்டினன்ட் வெங்கடேஸ் (சண்முகசுந்தரம் ஜீவகரன்) நினைவாக

படம் போல இன்னும் மனதுள் பதிந்து போயிருக்கும் காட்சிகளை நினைந்து நினைந்து கலங்கும் ஒரு தாயின் நினைவு. வெங்கடேஸ், எனது மகன் மொறிஸின் அருமைத் தோழன். கடற்புலி மேஜர் பாமாவின் அண்ணன். எனக்கு அவன் அன்பு மகன்.

அவன் எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் „பசிக்குதணை. கெதியாச் சமையுங்கோணை“ என்று உரிமையோடு என்னிடம் சொல்லுவான். சமைத்ததும் சாப்பிடுவான். நான் அவனுக்காகவும் அவன் போன்ற மற்றைய போராளிப் பிள்ளைகளுக்காகவும் கடலை, பருப்பு, முறுக்கு... என்று எல்லாம் சுட்டும், பொரித்தும் வைத்திருப்பேன். அவன் வரும் போதெல்லாம் அவைகளை மிகவும் விரும்பி ருசித்துச் சாப்பிடுவான். தன் வீடு போலவே என் வீட்டில் நடந்து கொள்வான்.

எனது மூக்குக் கண்ணாடியை நான் கழற்றி வைத்தால் போதும், அதை எடுத்துப் போட்டுக் கொண்டு அயர்ண் பண்ணி வைத்திருக்கும் சேர்ட் களில், காசைப் பொக்கற்றினுள் வைத்தால் வெளியில் தெரியக் கூடிய வகையிலான ஏதாவதொரு மெல்லிய சேர்ட்டையும் தெரிவு செய்து எடுத்துப் போட்டுக் கொண்டு, என்னிடம் தாள் காசு தரும்படி கேட்டு வாங்கி அதைப் பொக்கற்றுக்குள் வைத்து விட்டு மொறிஸின் இளையக்காவிடம் „இளையக்கா, இப்ப என்னைப் பார்க்க அறிவாளி மாதிரி இருக்குதோ?“ என்று கேட்பான்.

அனேகமான சமயங்களில்
தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…

என்ற பாடல் கசற்றைப் போட்டு விட்டு, றேடியோவுக்கு முன்னால் அமர்ந்து, மேசையில் தன் தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டு, பாடலைக் கேட்ட படி அழுது கொண்டிருப்பான்.

அவன் கண்களில் இருந்து கண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும். நான் பலதடவைகள் அதைப் பார்த்து „ஏன் அப்பு அழுகிறாய்?“ எனக் கேட்டிருக்கிறேன்.

ஆனால் அவன் ஒரு நாளும் அந்தப் பாடலுக்கும் அவனுக்கும் இடையிலான துயரத்தைப் பற்றி எனக்கு எதுவுமே சொன்னதில்லை.

அன்றும், அதாவது 1988ம் ஆண்டு, மே மாதம், 10ந் திகதி எங்கள் வீட்டுக்கு வந்தவன் அந்தப் பாட்டுக் கசற்றைப் போட்டுக் கேட்டு அழுது கொண்டிருந்தான்.

„அப்பு ஏனடா அழுகிறாய்? சோல்லனடா“ என்றேன்.

அவன் கண்களைத் துடைத்துக் கொண்டு „ஒண்டுமில்லை அம்மா. ஒரு நல்ல ரீ (தேநீர்) உங்கடை கையாலை தாங்கோ“ என்றான்.

„இரு அப்பு உடனை கொண்டு வாறன்“ சொல்லி விட்டு அடுக்களையை நோக்கி விரைந்தேன்.

அந்த நேரம் எனது மகன் மொறிஸ் அவசரமாய் வீட்டுக்குள் ஓடி வந்தான். வந்ததும் வராததுமாய் „வெங்கடேஷ், வெளிக்கிடு கெதியாய். கூட ரவாஸ் வருவான். அவனையும் கூட்டிக் கொண்டு போ“ சொல்லிக் கொண்டு ஒரு பையில் ஏதோ பொருட்களைப் போட்டு வெங்கடேஷிடம் கொடுத்தான்.

„அம்மா ரீ (தேநீர்) கொண்டு வருவா. குடிச்சிட்டுப் போறன்“ வெங்கடேஷ் சொல்வது என் காதில் விழுந்தது. நான் அவசரமாய் தேநீரைத் தயாரிக்கத் தொடங்கினேன்.

ரவாஸ் மிக்ஸரைக் கொறித்துக் கொண்டிருந்தான்.

„போதுமடா எழும்படா“ மொறிஸின் அதட்டல் எனக்குக் கேட்டது.

நான் இருவருக்கும் அவசரமாய் கோப்பைகளில் தேநீரை ஊற்றிக் கொண்டு ஓடி வந்தேன். அவர்கள் இருவரும் எனது வீட்டின் கிழக்குப் பக்கக் கதவால் வெளியில் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

„அவங்கள் ரீ யைக் குடிச்சிட்டுப் போகட்டுமன்“ என்றேன்.

„சும்மா இருங்கோ அம்மா. அவங்களுக்கு இப்ப நேரமில்லை. இரவு வருவாங்கள். உங்கடை ஆசைக்கு எல்லாம் குடுங்கோ“ என்றான். நான் கலக்கத்தோடு வாயடைத்துப் போய் நின்றேன்.

அவர்கள் „அம்மா போட்டு வாறம்“. „மொறிஸ் சரிதானே…“- என்ற படி பின் கேற்றைத் திறந்து கொண்டு வெளியேறினார்கள்.

அவர்கள் போய் கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கும். பயங்கரமான வேட்டுச் சத்தங்கள் கேட்டன. நாமெல்லோரும் கதி கலங்கி விட்டோம். மொறிஸின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவன் எங்கோ வெளியில் ஓடினான். நாம் அதாவது நானும், எனது பெண் பிள்ளைகளில் மூவரும் செயல் இழந்து தவியாய்த் தவித்த படி துடித்துக் கொண்டு நின்றோம்.

இரவு எட்டு மணியளவில் தீராத சோகத்துடன் மொறிஸ் வீடு வந்து சேர்ந்தான்.

„என்னடா, என்ன நடந்தது?“ நான்தான் கேட்டேன்.

அவன் குமுறிக் கொண்டு „வெங்கடேஷ் போயிட்டான் அம்மா“ என்றான். தொடர்ந்து „அம்மா ரவாசும்தான் போயிட்டான்“ சொல்லித் தேம்பினான். எனக்குச் சம்மட்டியால் எனது தலையில் யாரோ அடித்தது போல இருந்தது.

வெங்கடேஷ் கொண்டு சென்றது முக்கியமானவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய சில மிக முக்கியமான விடயங்கள் என்பதுவும், இந்தியன் ஆமியின் துரத்தலால் ரவாஸ் குண்டடி பட்டு வீழ்ந்ததும், வெங்கடேஷ் ஓடி ஓடி இயலாத நிலையில் ஒரு வீட்டில் புகுந்து தனக்குத் தானே காதுக்குள் வெடி வைத்து மரணித்த கொடிய உண்மையும் பின்புதான் எமக்குத் தெரியவந்தன. அழுதோம். கதறினோம். அவர்கள் வித்துடல் கூட எமக்குக் கிடைக்கவில்லை.

ஆனால் அன்றும், என்றும், இன்றும் ஏன் அவன் அந்தப் பாட்டுக்கு அழுதான் என்ற விடை எனக்குக் கிடைக்கவேயில்லை. விடையைக் கூறாமலே அவன் போய் விட்டான். „ஒரு நல்ல ரீ உங்கடை கையாலை தாங்கோ“ என்று கேட்டவன், அன்று எனது ரீ யைக் கூடக் குடிக்காமல் போய்விட்டான்.

படம் போல இன்னும் மனதுள் பதிந்து போயிருக்கும் காட்சிகளை நினைந்து நினைந்து கலங்குகிறேன்.

தென்பாண்டிச் சீமையிலே... பாடலைக் கேட்கும் போதெல்லாம்
என் நெஞ்சு குலுங்கி அதிர்வுறும்.
என் பிள்ளை வெங்கடேஷின் நினைவு என்னை அலைக்கழிக்கும்.


சிவா தியாகராஜா
மன்கைம், யேர்மனி
23.10.2008


Drucken   E-Mail

Related Articles