வாசம்

மழையின் பேரிரைச்சலும், சுழன்றடிக்கும் காற்றின் 'ஊய்ங்..ஊய்ங்' என்ற ஓசையும், நின்ற இடத்திலேயே தலையைச் சிலுப்பி பேய் போல உரு ஆடும் வீதியோரத்து மரங்கள் எழுப்பும் கூச்சலுமாய் அந்தச் சிறு நகரம் வெலவெலத்துப் போயிருப்பது போல் தோன்றியது!

வீதியோரங்களில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மழையில் நனைந்து, காற்றில் சிதறிய இலைகளும் குப்பைகளும் அதன்மேல் படிந்து போக, அவை உருமாறிப்போய் அநாதரவாக நின்றிருந்தன.

அவள் சாளரத்திற்கு வெளியே நீண்டிருக்கும் தன் தலையை மறுபக்கம் திருப்பி சுற்றுமுற்றும் தன் கண்களை சுழலவிட்டாள். கனத்த மழைத்தூறல்கள் அவள் தலைமுடியை நனைத்தன. அதுபற்றி அவள் கவலையேதும் கொள்ளவில்லை. ஆள்நடமாட்டமே அற்றுப் போய்க்கிடந்த அந்த வீதியின் தோற்றம் தான் அவளுக்குள் ஏனோ இனம்புரியாத துயரை ஏற்படுத்தியது!

அவள் தலையை உள்ளேயிழுத்துவிட்டு மெதுவாக நடந்து வந்து கதிரையில் இருந்த துவாலையால் தன் ஈரமான தலையை துவட்டினாள். சாய்மனைக்கதிரையில் அவள் வாசித்த குறையில் கவிட்டு வைத்த புத்தகம் அப்படியே இருந்தது. அதனைத் தொடர்ந்து வாசிக்கும் ஆர்வம் ஏனோ குலைந்து போயிருந்தது.

வீட்டினுள் பரவத்தொடங்கியிருந்த குளிர், தடித்த குளிருடைகளையும் மீறி இலேசாக உடலைத் தாக்குவது போல் உணர்ந்தாள். மெல்ல நடந்து சென்று திறந்திருந்த சாளரத்தின் கதவுகளை இழுத்துப் பூட்டினாள். மின்வெப்பமேற்றிகளை முடுக்கிவிட்டு இருப்பறையை வெப்பமேற்றினாள். சமையலறைக்குச் சென்று சூடாகத் தேநீர் தயாரித்து வந்தாள். ஆவி பறந்து கொண்டிருக்கும்; தேநீர் குவளையை கையில் ஏந்தியபடி சாளரத்தின் கண்ணாடி வழியே தெரியும் மழைத்தூறல்களை நீண்ட நேரமாகப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

கண்ணுக்குத் தெரியும் எல்லா வெளிகளையும் நிறைத்தபடி மழை..மழை...மழை மட்டுமே!

அவள் மழையைப் பார்த்தபடியே, கால்களை நீட்டி எப்போதும் அமர்ந்திருக்கும் மெத்தைக்கதிரையில் அமர்ந்து தேநீரை அருந்தத் தொடங்கினாள்.

'மழை நேரம் சுடச்சுட தேநீர் அருந்துவது எவ்வளவு சுகமானது! மழையின் அழகும் தேநீரின் சுவையும் சேர்ந்து தரும் இன்பம் அளவிடமுடியாதது!'

அவள் தேநீரை உறிஞ்சியுறிஞ்சி, ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தாள். மழை சாளரத்தின் கண்ணாடிகளில் விழுந்து கோலம் போடுவதை அவள் கண்கள் இமைக்காமல் பார்த்தபடி இருந்தன.

'மழை அழகானது! அது சந்தோசத்தையும் தருகிறது. சொல்ல முடியாத துயரத்தையும் தருகிறது. சிலவேளைகளில் அது பயத்தையும், சமயத்தில் சலிப்பையும் கூடத் தருகிறது. சில சமயங்களில் எதிர்பார்த்திராத உற்சாகத்தையும் தருகிறது. மழையின் குணங்கள் தான் எத்தனை விநோதமானவை?'

அவள் தேநீரை உறிஞ்சும் ஓசை மட்டும் அந்த இருப்பறையை நிறைத்திருந்தது. அவளின் உணர்வுகள் யாருடனோ பேசிக்கொண்டிருந்தன.

'ஆனாலும் ஊர்மழையின் குணம் தனி. அதன் மணமும் தனி தான். அது எங்களோடு நிறையப் பேசும். எங்களோடு சேர்ந்து சிரிக்கும். எங்களோடு சேர்ந்து விளையாடும். மனசிற்குள் புகுந்து கிசுகிசுக்கும். அதுவும் நாங்களும் இரண்டறக் கலந்திருந்தோமில்லையா.?'

ஊரின் மழைநாட்களைப் பற்றி நினைக்கும் போதே அவளையறியாமல் புல்லரிக்கத் தொடங்கியது! மனம் சிறுகுழந்தை போல் துள்ளியோடத் தொடங்கியது. வயிற்றினுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பது போலிருந்தது.

'அன்றைக்கு ஊரிலும் இது போலவே தான் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருந்தது! அது ஒரு மார்கழி மாதம். ஒவ்வொரு மாரியிலும் தவறாமல் நடப்பது போல் அன்றைக்கும் மழைவெள்ளம் வீதியெல்லாம் கரைபுரண்டு ஓடியபடியிருந்தது. மஞ்சள் நிறமாகவும், பழுப்புநுரைகள் பொங்கவும், மண்ணையும் கற்களையும் புரட்டியெடுத்துக் கொண்டு ஓடியது! வீட்டின் கிழக்குப்புற வளவை ஒட்டியுரசியபடி நகரும் வெள்ளவாய்க்கால் வழியாக, வேலிகளையும் மரங்களையும் இடித்துத் தள்ளிக்கொண்டு அது பாய்ந்து செல்லும் வேகம் வியப்பில் கண்களை விரிய வைத்தது!'

வெள்ளம் வடிந்த பின்னர் ஆர்வத்தில் ஓடிச்சென்று வீட்டிற்கு முன்னாலிருக்கும் வீதியினை அவள் பார்த்தபடி நின்றிருந்தாள். ஒரு குமர்ப்பெண் குளத்தில் மூழ்கிக் குளித்தெழுந்தது போல் வீதி பளிச்சென்று அத்தனை அழகாயிருந்தது. யாருமற்ற அந்த நேரம் தன்னந்தனியாக, வெறுங்காலோடு அந்த வீதியில் நடந்து திரிய அவள் மனம் ஆசை கொண்டது. இரட்டைச்சடை போட்ட தனது நீண்ட கூந்தலை முன்னால் விட்டபடி, நீளப்பாவாடையை இருகைகளாலும் தூக்கிப்பிடித்துக்கொண்டு வெறுங்காலோடு இறங்கி, வீதியில் மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்தாள்.

'பிள்ளை...அபர்ணா...அபர்ணா...' அடுத்த கணமே வீட்டுக்குள்ளிருந்து அம்மாவின் குரல் அவள் காதுகளில் வந்து விழுந்தது. அவள் திரும்பிப் பார்த்தாள். வீட்டுப் படலைவாயிலில் பெத்தம்மா நின்றிருந்தா. வெற்றிலை போட்டுச் சிவந்திருந்த அவவின் உதடுகள் மெல்லிய புன்னகையில் நனைந்திருந்தன. மேற்சட்டை அணியாத அவவின் செழுமையான சிவந்த உடல் மாலைவெயிலில் மினுங்கிக்கொண்டிருந்தது. அவளையே வைத்தகண் வாங்காமல் அவ பார்த்தபடி நின்றிருந்தா.

அவ அப்படிப் பார்ப்பது அவளுக்கு ஏனோ உள்ளுரக் கூச்சமாக இருந்தது. அவள் நடையை நிறுத்திவிட்டு 'பெத்தம்மா....' என்று மெதுவாக அழைத்தாள்.

பெத்தம்மாவின் சிவந்த உதடுகள் மெதுவாக விரிந்தன. அவ தனது முத்துமுத்தான வெண்பற்கள் தெரியச் சிரித்தா.

'வா பிள்ளை. பங்கை கொம்மா கூப்பிடுறா' அவவின் குரல் வாஞ்சையுடன் அவளைத் தழுவுவது போலிருந்தது.

அவள் படியேறி உள்ளே வரும்போதும் ஒருதடவை திரும்பிப் பார்த்தாள். பெத்தம்மா அப்போதும் படலை வாயிலிலேயே நின்றிருந்தா. வெள்ளம் வடிந்த வீதியை ஒருவித லயிப்போடு அவ பார்த்துக்கொண்டு நிற்பது தெரிந்தது.

அந்தக் காட்சி அவள் நினைவில் வரும்போதெல்லாம் அவை புதிது புதிதாய் எதையெதையோ அவளுக்குச் சொல்கிறது. இப்போதும் அவளுக்கு அது ஞாபகத்தில் வந்தது. அடுத்த கணமே மேனி சிலிர்ப்பது போலிருந்தது.

அவள் ஜேர்மனி நாட்டிற்கு வந்து விட்டிருக்கும் இந்த இருபத்திநான்கு வருட காலத்தில், அவளைச் சுற்றி எவ்வளவோ மாற்றங்கள் நடந்து விட்டன! அவள் முன்னெப்போதும் நினைத்துப் பார்த்திராத ஒரு தேசம் இது. எப்போதும் சந்தித்திராத மனிதர்கள், புதிய ஊர், புதுவிதமான மனை, புதியவகை மரங்கள், பெயர் தெரியாத பூக்கள், காதில் விழுந்தறியாத மொழிகள் என எல்லாம் அவளை ஒரு வேற்றுலகிற்குள் இறக்கி விட்டது போன்ற உணர்வினைக் கொடுத்திருந்தது.

காலம் அவளைப் புடம்போட்டு இப்போது அங்கே காலூன்றி நிற்கப் பழக்கிவிட்டிருந்தது அவளுக்கே அதிசயம் தான்.

அவள் மீளவும் சாளரத்தின் கண்ணாடி வழியாக தன் பார்வையை எறிந்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் மழை அவளின் மனக்கதவுகளை மீளவும் திறந்து வைக்கத் தொடங்கியது. மழையின் இடைவிடாத ஓசை அவளை எங்கோ இழுத்துச் செல்லத் தொடங்கியது.

'இப்படியொரு கொட்டும் மழைநாளில் தான், அந்த அழகான திருமணம்; நடந்தது!'

ஊரில் எல்லோரது கண்களையும் கவர்ந்து வைத்திருக்கும் அந்தப் பென்னம்பெரிய கல்வீடு அன்றைக்கு அத்தனை அழகாக இருந்தது. திருமணத்தில் ஒரு குறையும் இருந்துவிடக்கூடாது என்பதில் ஐயா கண்ணும் கருத்துமாக இருந்தார். தம்பிமாரும் உறவினர்களும் சேர்ந்து வீட்டை மாவிலை, தோரணங்களாலும், வாழைமரங்களாலும் அபரிதமாக அலங்கரித்திருந்தார்கள்.

திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் வீட்டுமுற்றத்தில் குலைகுலையாகக் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்த செம்மாதுளம் பழங்களைப் பற்றியும், முற்றத்தின் தெற்குப்புறத்தில் நீளமான பசிய ஓலைகளை விசிறிகள் போல் பரப்பியபடி வரிசையாக நிற்கும்; செவ்விளநீர் மரங்களைப் பற்றியும் சிலாகித்துப் பேசிக்கொண்டேயிருந்தார்கள்!

அன்றைக்கு அவ்வூர் பிள்ளையார் கோயிலில் தாலிகட்டு வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கோயிலில் நடக்கும் முதல் கல்யாணம் அதுவென்று ஐயாவுக்கும் அம்மாவுக்கும் மனம்கொள்ளாத பெருமை! பெத்தம்மா வெண்ணிற பட்டுச்சேலை அணிந்திருந்தா. சேலைக்குப் பொருத்தமான வெள்ளைப்பட்டுச் சட்டை மேலுக்கு அணிந்திருந்தா. நெற்றியில் நிறையச் சந்தனம் அள்ளி வைத்திருந்தா. காதுகளில் சிவப்பு நிறக் கடுக்கன். வாய்கொள்ளாமல் தாம்பூலம் தரித்தபடி அன்றைக்கு அவ வெகு அழகாயிருந்தா.

ஊரில் வழிவழியாக வந்த அவளின் சந்ததியினர் உருவாக்கிய குலதெய்வக் கோயில் தான் அவ்வூர் பிள்ளையார் கோயில். அன்றைக்கு அதிகாலையிலேயே பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் செய்து, பட்டு வேட்டி, சால்வை, தலைப்பாகை அணிவித்து, சம்பங்கிப் பூ மாலையும், அருகம்புல் மாலையும் சாத்தியிருந்தார்கள்.

"பிள்ளையார் இண்டைக்கு புது மாப்பிள்ளை மாதிரி இருக்கிறாரக்கா.." தம்பி ஓடிவந்து உற்சாகம் மேலிடச் சொன்ன போது அவளுக்குப் புல்லரித்தது.

பிள்ளையார் கோயிலில் அதிகாலை அபிஷேகம் முடிந்த கையோடு மழையும் தொடங்கிவிட்டது. பின்னர் அன்று முழுவதும் அந்த மழை நிற்கவேயில்லை.

'கல்யாண நாளன்று இப்படி 'சோ' வென்று மழை கொட்டுவது நல்லது' என்று பலரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"அடடா...என்னது இண்டைக்குப் பார்த்து இப்படி மழை கொட்டுகிறதே?" என்று விசனப்பட்டவர்களும் இருந்தார்கள்.

வீட்டின் தலைவாயிலில் கட்டிவிடப்பட்டிருந்த வாழைக்குலைகளும், தோரணங்களும், செவ்விளநீர்க்குலைகளும் கொட்டும் மழையில் நனைந்து ஈரம் சொட்டியபடி கிடந்தன. பாலும் பழமும் பூக்களும், பால்ச்சாம்பிராணியும், மாவிலைகளும், அத்தரும்; பன்னீரும், தாம்பூலமும் கலந்த கதகதப்பான வாசனை வீட்டை நிறைத்திருந்தது.

பட்டு வேட்டி, பட்டுச்சேலை சரசரக்க ஆண்களும் பெண்களும் அங்குமிங்கும் ஓடித்திரிந்துகொண்டிருந்தார்கள். அவளுக்குப் பயத்திலும் கூச்சத்திலும் நெஞ்சுக்குள் ஏனோ திக்;திக்கென்று அடித்துக்கொண்டே இருந்தது.

உறவுப்பெண்கள் அவளின் நீண்ட அடர்த்தியான சுருள் தலைமுடியை வாரிக் கொண்டையிட்டு, பொன்னுச்சிப்பட்டம் கட்டி, மல்லிகையும் முல்லையும் றோஜாக்களுமாய் சூட்டிவிட்டுக்கொண்டிருந்தார்கள். கூந்தலிலிருந்து சொரியும் வாசனையில் மனமும் உடலும் கிளர்ந்து ஒருவித மயக்கத்தில் மூழ்குவது போலிருந்தது!

அந்த நாளை இப்போது நினைத்தாலும் அந்தப் பூக்களும், அவற்றின் மயக்கும் வாசனையும் காற்றில் தவழ்ந்து வந்து நாசியைத் தீண்டுவது போல் அவள் உணர்வாள்!

அன்றைக்கு ஊர் முழுவதும் அவளின் கல்யாணம் பற்றிய பேச்சாகவே இருந்தது. பிள்ளையார் கோவிலில் றோஜாமணவறையிட்டு முதல் முதலாகத் தாலி கட்டு நடைபெறுவது இவளுக்குத் தான் என எல்லோரும் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். பல வர்ண றோஜாப்பூக்களை உரும்பிராய்ப் பக்கமிருந்து சின்னையா தான் குதிரை வண்டியில் வரவழைத்திருந்தார். வெளிவீதியில் வீற்றிருக்கும்; அரசமரப்பிள்ளையாருக்கு, திருவாத்திப் பூவில் நீண்ட மாலை அணிவித்திருந்தார்கள். வீதியெங்கும் தோரணங்கள் கட்டியிருந்தார்கள்.

அம்மா மணிப்புரிக்கூறையும், ஐயா பட்டுவேட்டி சால்வையும் உடுத்தியிருந்தார்கள். தங்கச்சி செவ்வந்திப்பூ வர்ணத் தாவணி போட்டிருந்தாள். தம்பிகள் பட்டுவேட்டி சால்வையில் ராஜாக்கள் போல இருந்தார்கள்! காங்கேசந்துறையிலிருந்து நாதஸ்வரக்கோஸ்டி வந்திருந்தது. இளைஞர்கள் எழுதிக் கொடுத்த பாடல்களையெல்லாம் அவர்கள் பொழிந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள். அம்மாவும் ஐயாவும் அறுகரிசி போடும் போது கண்கலங்கி அழுதார்கள். அம்மாவின் மூக்கில் தொங்கும் மூக்குத்தி ஈரம் படிந்து நாள்முழுதும் மின்னிக்கொண்டேயிருந்தது!

பெத்தம்மா சற்றே தள்ளி கோயில் தூணோடு சாய்ந்து அமர்ந்திருந்து தன் கண்களிலிருந்து வழியும் ஆனந்தக் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் சேலைத்தலைப்பால் துடைத்துக் கொண்டேயிருந்தா.

அன்று தாலிகட்டு வைபவம் முடிந்த கையோடு, மணமக்கள் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டவுடன் அம்மாவும் ஐயாவும் நொத்தாரிசுவின் முன்னிலையில் வைத்து, அந்த அழகான வீட்டினை அவளுக்கு சட்டபூர்வமாக எழுதிக்கொடுக்கும் போது அவள் நெஞ்சு விம்மியது. கண்கள் குளமாகியது. அது சந்தோசத்திலா துயரத்திலா என்று அவளுக்கே புரியாமல் இருந்தது.

அன்றைக்கு அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் நொத்தாரிசு புறப்பட்ட பின்னரும் அந்த வீட்டைப்பற்றியும் அதன் நேர்த்தியான கட்டமைப்புப் பற்றியுமே அவள் காதுபடப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

முதன்முதலாக அந்த ஊரில் கட்டப்பட்ட கல்வீடு அது. ஏழு பெரிய அறைகளையும் ஒரு சற்சதுரமான சமையலறையையும் நீண்ட பெரிய விறாந்தாவையும், ஒரு சின்ன விறாந்தாவையும் கொண்ட டானா வடிவ வீடு. கிணறும் கிணற்றடியும் சமையலறையோடு ஒட்டியபடி பிழக்கத்திற்கு வசதியாக இருக்கும். அந்த வீட்டைக் கட்டும் போது கட்டுவேலைக்காரர்களுடன் சேர்ந்து அவளும் தன் பங்கிற்கு, மண்ணும் கல்லும் சுமந்து உதவியது இப்பவும் அவளுக்கு ஞாபகத்தில் வருவதுண்டு.

வீடு கட்டி முடிந்ததும் கோப்புசத்தை நிமிர்ந்து பார்க்கும் தோறும் அவளுக்கு உடலெல்லாம் புல்லரிக்கும்!

அவ்வளவு உயரமான கோப்புசம் எதற்கு?| என அன்று திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் விசாரித்தார்கள்.

'மாடி வீட்டிற்குரிய கோப்புசம் அது. வரும் காலத்தில் மேலே மாடிவீடு கட்டப்போகிறம்' என்று சின்னத் தம்பி வருவோர் போவோருக்கெல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொண்டேயிருந்தான்.

அன்றைக்கு, சின்னத்தம்பியின் அளவுகணக்கற்ற சந்தோசத்தை அவன் பேச்சிலும் நடையிலும் கண்டு அவள் வியந்தாள். அக்காவின் கல்யாணம் அவனை ஒரு துள்ளலோடு நடமாட வைத்திருந்தது.

'கல்யாணம் முடிந்ததும் எங்கள் எல்லாரையும் பிரிஞ்சு அக்கா தனியாக அத்தானுடன் சேர்ந்து கொழும்புக்குப் போய்விடுவா' என்று வீட்டில் யாரோ சொன்னதை எண்ணியெண்ணி தனக்குள்ளேயே மறுகி மறுகி யாருக்கும் தெரியாமல் கண்களைத் துடைத்துக்கொண்டிருந்தாள் தங்கச்சி.

அந்தக் குடும்பத்தில் அபர்ணாம்பாளைக் கண்டால் அங்கு வருவோர் போவோரெல்லாம் 'சாது' என்று வாஞ்சையுடன் அவளை அழைப்பது வழமை. சமையலில் அவளது கைப்பக்குவம் பற்றிப் பேசாதவர்களே கிடையாது. பெத்தம்மா, பெத்தப்பா, ஐயாவின் ஒன்றுவிட்ட சகோதரிகள் என எல்லோருமே அவள் சமைத்த உணவை சாப்பிடும் போது 'பிள்ளையின் கை சாதாரண கையில்லை. அமுதசுரபியெல்லோ' என்று பாராட்டுவார்கள். அவளுக்கது அதீத புகழாரமோ என கூச்சம் கொள்ள வைக்கும். ஆயினும் உள்ளுர அளவில்லாத சந்தோசத்தைத் தரும்.

'அம்மாவின் கை பக்குவத்தை விடவா..?' என்று ஆச்சரியம் மேலிட மனம் திருப்பிக் கேள்வி கேட்கும்.

வீட்டில் ஆசாரம் அதிகம். அம்மாவும் ஐயாவும் தீட்சை பெற்றவர்கள். தினமும் தலைமுழுகி, சூரியநமஸ்காரம் செய்து, அவர்கள் சாப்பிடும் வரை அவளும் சாப்பிடாமல் காத்திருப்பாள்;. எல்லோரும் ஒன்றாக தரையில் சப்பாணி கட்டி அமர்ந்திருந்து வாழையிலையில் சாப்பிடும் போதிருந்த சுகத்தை, இன்றைக்கு நினைத்துப் பார்க்கும் போது ஒரு சொர்க்கத்தையே இழந்து விட்டோமே என மனசு பரிதவிக்கும்!

திருமணப்பேச்சு நடந்து கொண்டிருந்த போது அது முற்றாகி சிறப்பாக நிறைவேறவேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டிருந்த சகோதரர்கள் எல்லோரும் அவளின் திருமணம் நடந்து முடிந்த பின்னர் தமது கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டு திரிவதைக் காண அவளுக்கும் உள்ளுர அழுகையழுகையாக வந்து கொண்டிருந்தது.

பெத்தம்மா தனது மனதினுள் நிறைந்து கிடக்கும் அத்தனை பிரிவுத்துயரையும் மறைத்து, முகமெல்லாம் சந்தோசத்தை நிரப்பி வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டாலும், அவவின் புன்னகையில் இழையோடும் மெல்லிய துயரிழையை அபர்ணாம்பாளால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை.

'பெத்தம்மா இல்லாவிட்டால் அந்தக் கல்யாணம் நடந்திருக்குமா?'

அவள் அவ்வப்போது நினைத்துப் பார்க்கும் கேள்வியது.

திருமணப்பேச்சு நடந்து கொண்டிருந்த அன்றையதினம் அவளுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. துயரம் தாங்காமல் களஞ்சியஅறைக்குள் போய்த் தனித்து நின்று விம்மிவிம்மி அழுது கொண்டிருந்தாள் அவள்.

வயலிலிருந்து கொண்டு வந்து, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகளின் மேல், முகத்தைப் புதைத்து அழுதுகொண்டிருந்தவளின் கண்ணீர்; மூட்டைகளில் கோடுகளாக வழிந்து கொண்டிருந்தன.

அவளைத்தேடி உள்ளே வந்த பெத்தம்மா அவளைக் கண்டதும் திடுக்குற்றுப் போய் 'அபர்ணாம்பாள்.....' எனப் பதறிய குரலில் அழைத்தவாறே அருகில் வந்தா.

அவளை எப்பவும் 'அபர்ணாம்பாள்' என முழுப்பெயரும் சொல்லி அழைப்பது அவளின் பெத்தம்மா மட்டும் தான். பெத்தம்மா அவளின் அம்மாவைப் பெத்தவள். அவ தனது தாயாரின் பெயரை அப்படியே இவளுக்கு ஆசைப்பட்டு வைத்ததாக, அம்மா சொல்லக் கேட்டிருக்கிறாள். பெத்தம்மாவின் சங்கீதம் போன்ற இனிமையான குரலும், மெல்லிய உயரமான உடல்வாகும், யாரிடமும் அவள் கண்டிராத அந்த எலுமிச்சைப்பழ நிறமும், நெற்றிவரை இறங்கும்; சுருண்ட முடியும், பெரிய விழிகளும், தடித்த சிவந்த உதடுகளும் அடுத்த சந்ததியில் யாருக்கும் இதுவரை வந்துவிடவில்லை என்பதில் இவளுக்கு மகா கவலை!

பெத்தம்மாவின் கைவிரல்கள் அவள் தலையில் பட்டதும் அவள் நிமிர்ந்து பார்த்தாள். குளமாகிக் கிடந்த அவள் கண்களில் பெத்தம்மா இரட்டையாகத் மிதந்து கொண்டு நின்றிருந்தா. 'பொலபொல' வென வழியும் அவளது கண்ணீரைக் கண்டதும் துடித்துப் போன பெத்தம்மா 'என்னாச்சு...' என்பது போல் விழிகளை அகல விரித்தா. அடுத்த ஒரு நொடியில் எல்லாம் புரிந்து கொண்டவ போல் அவளின் தலையைத் கோதி, கண்ணீரைத் தன் சேலைத்தலைப்பால் துடைத்து, மார்போடு சேர்த்து மெதுவாக அணைத்துக் கொண்டா.

'அழக்கூடாது பிள்ளை. நடக்கப்போறது ஒரு நல்ல காரியம். இதுவரைக்கும் இருபத்திநாலு ஜாதகங்கள் பார்த்துக் களைச்சுப்போயிட்டம். இது இருபத்தியஞ்சாவது. உனக்கு லக்கிணத்திலை செவ்வாய், பொருந்தி வாறது வலும் கஷ்டம். உனக்கிது தெரியாததில்லைப் பிள்ளை' பெத்தம்மா அவளைத் தன் மடியில் போட்டு நெற்றியை தடவியவாறே சொல்கிறா.

"இதையும் விட்டால் வேற எங்கை போறது பிள்ளை? வறுமைப்பட்ட குடும்பம் தான். ஆனால் மாப்பிள்ளை படிச்சவன், நல்ல உத்தியோகம்..."

அவள் கண்ணீரோடு பெத்தம்மாவை நிமிர்ந்து பார்த்தாள். பெத்தம்மா மீண்டும் அவளின் கண்களைத் துடைத்து விட்டுக்கொண்டு சொன்னா.

"தானாத் தேடிவந்த பெரிய இடத்துச் சம்பந்தங்கள் எல்லாம் பொருத்தமில்லை எண்டு ஆகிப்போச்சு. என்ன செய்யிறது? செல்வத்திலை செழித்துக் கிடக்கிற குடும்பத்து மாப்பிள்ளைகள் பாக்கிறதுக்கு நல்லாயிருக்கும். ஆனால் வாழ்க்கைக்குப் பொருத்தமில்லையெண்டால் குடும்பம் சீரழிஞ்சு போயிடும் பிள்ளை. எங்களுக்கு எங்கட குலக்கொழுந்து சந்தோசமாய் , சீரோடயும் சிறப்போடயும் வாழ வேணும். இதுவும் தானா தேடிவந்திருக்கு. எண்பது வீதம் பொருத்தம். இப்பிடியொரு உச்சப்பொருத்தம் யாருக்கு வாய்க்கும்? வலிய வந்த சீதேவியை தூக்கி வீசிறது சரியே மேனை?"

அவள் பெத்தம்மாவின் கண்களையே பார்த்தபடி அவவின் மடியில் சாய்ந்து கிடந்தாள்.

"எனக்கு நம்பிக்கையிருக்கு, நீ நல்லாயிருப்பாய். மகராசியாக இருப்பாய். ஓண்டுக்கும் கவலைப்படாமல் சந்தோசமாய் இரு" பெத்தம்மா அவளின் தலையை வருடியபடியே இரகசியக் குரலில் சொல்லிக் கொண்டிருந்தா. அந்தக் குரலின் ரிதத்தை அவளால் இன்றைக்கும் மறக்கமுடியவில்லை!

அவளின் சின்னச்சின்னச் சந்தோஷங்களையும் துக்கங்களையும் மன உளைச்சல்களையும் நுணுக்கமாகப் புரிந்து கொண்டிருந்த பெத்தம்மா இப்பவும் அவளருகில் இருப்பாவானால் மனதிற்கு எவ்வளவு ஆறுதலாகவும் சுகமாகவும் இருக்குமென அவள் ஒரு கணம் நினைத்துக் கொண்டாள்!

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவளின் திருமண அடுக்குகள் நடக்கத் தொடங்கிய சில நாட்களில், அவளுக்கு பெத்தம்மா சொன்னதெல்லாம் சரியென்றே தோன்றத் தொடங்கியது. அல்லது அப்படி நினைக்கப் பழகிக்கொண்டாள் என்றும் தோன்றியது.

திருமணப்பேச்சு முற்றாகியதும் வீட்டில் தம்பிகளும் தங்கையும் 'அக்காவுக்கு கல்யாணம்' என்று வாய்க்கு வாய் எல்லோருக்கும் சந்தோசமாக சொல்லிக்கொண்டு திரிவது அவள் காதில் விழத்தொடங்கின. அவர்கள் அவளை ஒரு தாயின் ஸ்தானத்திலும் ஒரு உற்ற சிநேகிதியின் ஸ்தானத்திலும் வைத்திருந்தார்கள் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அந்த வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் மனசை ஒப்படைப்பது அவளிடம் மட்டும் தான். அதற்காகவே அதிக கவனத்தோடு, மிகுந்த ஒழுக்கசீலியாக வாழப்பழகிக் கொண்டவள் அவள். வீதி தெரியாமல் வீட்டைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த உயர்ந்த வேலிக்குள் அவளின் கௌரவமான ஆட்சியும், அதிகாரங்களும், நேரிய வாழ்வும், வளங்களும் அடங்கிக் கிடந்தன!

வீட்டு வளவில் இரண்டு பசுமாடுகள் நின்றிருந்தன. தினமும் மடி கழுவி, பால் கறப்பதிலிருந்து சமையல் காரியங்கள் செய்தல், கிடுகு பின்னுதல், பனையோலை கிழித்தல், பனாட்டு காயப்போடுதல்;;, நெல் குற்றுதல், குரக்கன் திரித்தல், ஒடியல் இடித்தல், வயலிலிருந்து வரும் நெல் மூட்டைகளை விற்பனைக்கு அனுப்பி வைத்தல், வீட்டினருக்குப் புதிய ஆடைகள் தைத்தல், காசுப்பெட்டியைக் கையாளல், கோயில் திருவிழாக் காலங்களில் விரதமிருந்து வீட்டை ஆசாரங்களுடன் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருத்தல் என்று அந்த வீட்டை, கண்ணுக்குத் தெரியாமல் கட்டிக்காத்து ஆண்டு கொண்டிருந்தவள் இவள்.

திருமணப்பேச்சு முற்றாகி விட்ட பின்னர் திடீரென்று தங்கச்சி எல்லாப் பொறுப்புகளையும் சுமப்பதற்கு தயாராவது போல் இவள் செய்யும் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யத் தொடங்கியிருந்தாள். அப்போது தங்கச்சியைப் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது.

'இவள் இந்தச் சின்னக் கைகளால் எப்படி இவற்றையெல்லாம் செய்து சமாளிக்கப் போகிறாள்?' என்ற யோசனை மனதிற்குள் வந்தபடியே இருந்தது.

அச்சமயத்தில் தான், மாப்பிள்ளை ஒரு நாள் திடுதிப்பென்று ஐயாவைச் சந்திக்க வீடு தேடி வந்திருந்தார். கொழும்பிலிருந்து விடுமுறையில் வந்திருப்பதாகச் சொல்லிக்;கேட்டது. அன்றைக்குத்தான் அவள் முதல்தடவையாக அருகில் நின்று அவரைப் பார்க்கும் சந்தர்ப்பமும் அமைந்தது. எதிர்பாராத ஒரு சமயத்தில் அவர் வந்திருந்ததால் அவள் சற்றே சங்கடப்பட்டுக் கொண்டிருந்தாள். அச்சமயம் அவள் தலைமுழுகி, ஈரக்கூந்தலில் துவாலையைப் போட்டு அள்ளிமுடிந்து கொண்டு சாமியறையில் சாம்பிராணி காட்டி வழிபாடு செய்துவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தாள். அன்றைக்கு அவளைக் கண்டவுடன் வியப்பில் விரிந்த அவர் கண்களும், அந்தக் கண்களில் நிறைந்திருந்த கனிவும், அதனுள் ஒளிந்திருந்த காதலும், உதடுகளில் கசிந்த புன்னகையும் இன்றைக்கு நினைத்தாலும், அவள் உணர்வுகளை மயிலிறகாய் வருடும்;!

சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்தவளின் மனதினுள் ஆயிரம் நினைவுகள் முன்னும் பின்னுமாய் தாவித்தாவி ஓடிக்கொண்டிருந்தன. நெஞ்சிற்குள் ஒட்டிக்கிடக்கும் ஞாபகங்கள் ஒவ்வொன்றும் வெ வ்வேறு திரைப்படங்களின் வெ வ்வேறு முக்கியமான காட்சித் துண்டுகள் போல் மனதிற்குள் வந்து வந்து போயின.

வெளியில் இப்போ மழை சற்று குறைந்திருந்தது போலும். வெள்ளம் வழிந்தோடுவதும், மரங்களிலிருந்து நீர் சிந்துவதும் விதம்விதமான ஓசைகளாகக் கேட்டுக்கொண்டிருந்தன. பழைய ஞாபகங்கள் அவளை அசையவிடாமல் ஒரு போர்வையாய் சுற்றிக் கிடக்க, அவள் மெதுவாகக் கண்களை மூடிக்கிடந்தாள்.

திடீரென்று வீட்டுக் கூடத்திலிருந்த தொலைபேசி மணி அலறத் தொடங்கியதும் இடறுப்பட்டுக் கீழே விழுந்தவள் போல் பதற்றத்துடன் எழுந்து நின்றாள். அவளைச் சுற்றியிருந்த ஞாபகங்கள் ஒருநொடியில் சிதறிப் போயின. தொலைபேசியைத் திரும்பிப் பார்த்தாள்.

தொலைபேசிக்கு அவள் வைத்திருக்கும் முகம் சில சமயத்தில் சந்தோசமாகவும், சில சமயத்தில் சோகமாகவும், சில சமயத்தில் உற்சாகமாகவும், சிலவேளைகளில்; கோபமாகவும் அவளைப் பார்ப்பது போலிருக்கும். இப்போது அது அவளை கேலியாகவும், குறும்பாகவும் பார்ப்பது போலிருந்தது. அவளுக்கு அது உள்ளுர ஒருவித எரிச்சலை உண்டாக்கியது.

அவள் தொiபேசியருகில் சென்று அதில் விழுந்துகொண்டிருக்கும் அழைப்பெண்ணைக் கூர்ந்து பார்த்தாள். அது தங்கச்சியினதோ அல்லது பிள்ளைகளினதோ அல்லது பேரப்பிள்ளைகளினதோ அழைப்பிலக்கம் அல்ல என்பதை உறுதிப்படுத்திய பின்னர் தொலைபேசியின் மணி அடித்து ஓயும்வரை ஒருவித வன்மத்துடன் அதைப் பார்த்தவாறே நின்றிருந்தாள்.

இனிய கனவொன்று கலைந்ததான சலிப்புடன் வந்து மீண்டும் தன் சாய்மனைக்கதிரையில் அமர்ந்து கொண்டாள்.

மெல்லியதொரு பெருமூச்சுடன் கதவிற்கு வெளியேயிருக்கும் மொட்டை மாடியை பார்த்தபடி யோசித்துக்கொண்டிருந்தாள்.

மாடியின் சற்சதுரமான திறந்த முகப்பினருகில் வீதியோரம் நிற்கும் பிரமாண்டமான ரிலியா மரத்தின் கிளைகள் காற்றில் அசைந்தசைந்து சுவர்களை உரசிக்கொண்டிருந்தன.

காற்றோட்டமும் வெளிச்சமும் பரவிக்கிடக்கும் அந்த மொட்டை மாடியின் திறந்த சீமென்ற் தளம்; இன்று மப்பிலும்; மந்தாரத்திலும் மூழ்கிக் கிடந்தது. தரையில் விழும் மழைநீர் நதிக்கிளைகளைப் போல் பிரிந்தோடி கீழே வடிகுழாய்களினூடாய் இறங்கும் ஓசை 'க்ளுக் க்ளுக்' எனக் கேட்டுக் கொண்டிருந்தது.

மொட்டைமாடியின் திறந்த சீமெண்ட் தளம்; நெஞ்சளவு உயரமுள்ள ஒரு தடுப்புச்சுவரினால் வரையறுக்கப்பட்டிருந்தது. அந்தச் சுவரோடு ஒட்டியபடியிருக்கும் நீளமான பூந்தொட்டி மழைநீரினால் நிரம்பியிருந்தது. அதற்குள்ளிருந்த செவ்வந்திச் செடிகளும், வர்ண றோஜாக்களும் மழையில் அடிபட்டு நனைந்து, சோர்ந்து போய் நடுங்கிக் கொண்டிருந்தன. அவற்றைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஏனோ துயரம் மேலிட்டது!

சில மாதங்களிற்கு முன்னர் தான் அவற்றை அவள் வாங்கி வந்து நாட்டியிருந்தாள். அதற்காக அவள் வெகுதூரம் நடந்து சென்று ஒரு பூங்காப் பண்ணையிலிருந்து வாங்கி வந்தாள்.

அன்றைய தினம் அவளுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. அது ஒரு சிரமம் நிறைந்த நாளாக இருந்தது. வாங்கிய மரக்கன்றுகளை அவளால் ஒன்றுசேரத் தூக்கி வரமுடியாமல் தனது தள்ளுவண்டியில் வைத்து மெதுவாகத் தள்ளி வந்தாள். பூங்கன்றுகளின் பாரத்தினால் தள்ளுவண்டியை அவளால் வழமைபோல் இலகுவாக தள்ளிவர முடியவில்லை. சிறிது தூரம் தள்ளுவதும், பின்னர் சிறிது நேரம் வீதியோரமாக நிற்பதுமென அவள் வீடு வந்து சேர அன்று மாலையாகிவிட்டது.

சந்தைக்குப் போகும் நாட்களில் உரம் கலந்த மண்பைகளை அவ்வப்போது சுமந்து வந்து பூந்தொட்டியை சிறிது சிறிதாக அவள் நிரப்பி வைத்திருந்ததால் அன்றிரவே மரக்கன்றுகளையெல்லாம் பூந்தொட்டியினுள் நாட்டி, தண்ணீரும் ஊற்றியிருந்தாள்.

பின்னர் வந்த நாட்களெல்லாம் அவற்றோடு பேசியபடியே அவற்றிற்கு தண்ணீர் ஊற்றுவாள். காய்ந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து அப்புறப்படுத்துவாள். அவை வளர்ந்து பூக்கத் தொடங்கியபோது அவள் நெஞ்சிற்குள் ஏற்பட்ட பரவசமும் மகிழ்ச்சியும் வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாதவை.

அவளிருக்கும் அந்தத் தொடர்மாடியில் அவளுடைய மொட்டை மாடியைத் தவிர, மற்றைய எல்லோரது மொட்டைமாடிகளிலும் பலவர்ணப் பூக்கள் பூத்துச் சொரிவதை அவள் பார்த்துப் பார்த்து ஏங்கிய காலம் ஒன்று இருந்தது. அங்கு வாழும் ஜேர்மனியர்கள் கூலிக்கு யாரையாவது பிடித்து, பூமரங்களை நாட்டி, தமது மொட்டைமாடிகளை எப்போதும் அழகாக்கி விடுகிறார்கள். ஆனால் இப்போது தன் வீட்டு மொட்டைமாடியிலும் பூக்கள் பூக்கத் தொடங்கிவிட்டன என்ற போது அவளுக்குப் பெருமை தாங்கமுடியவில்லை!

அந்த மாடியில் வாழும் யாராவது எதிரில் வரும்போது 'குட்ன் மோகன் அல்லது 'குட்ன் ஆபென்ட்' என்று காலை மாலை வணக்கங்களை மட்டும் அதுவரை சொல்லிவந்த அவள், அதற்குப் பின்னர் உற்சாகம் மேலிட, மேலும் சில வார்த்தைகளில் அவர்களோடு பேசத்தயாராகியிருந்தாள். இப்போது அங்குள்ள பலரும் அவளின் றோஜாப்பூச்செடிகள் பற்றி அவளோடு சிலாகித்துப் பேசத்தொடங்கியிருந்தார்கள்.

அவளிடமிருந்த ஊதாநிற றோஜாப்பூக்களைப் பற்றி எதிர்வீட்டிலிருக்கும் எமிலியா என்ற மூதாட்டி குறிப்பிட்டுக் கேட்கும் போது அவளுக்குப் பெருமை கொள்ளாது சந்தோசத்தில் நெஞ்சு விம்மித்தணியும்.

எமிலியா சில மாதங்களிற்கு முன்பொருநாள் அவளின் வீட்டிற்குள் வந்திருந்தாள். சிகரெட் பிடிப்பதற்கு நெருப்பெட்டி கேட்டு இவளிடம் வந்திருந்தாள்.

இவள் கதவைத் திறந்த போது எமிலியா கையில் சிகரெட்டோடு 'அபர்..அபர்..'என்ற படி ஜேர்மன் பாஷையில் எதையோ சொல்ல முற்பட்டபோது இவளுக்கு விளங்கிவிட்டது. அவள் எமிலியாவை நட்போடு உள்ளே அழைத்தாள். எமிலியா உள்ளே வந்ததும் அவளின் வீட்டை வியப்போடு சுற்றிச்சுற்றிப் பார்த்தாள்.

வீட்டிற்குள் ஒழுங்காக, நிரையாக புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு புத்தக அலுமாரி, ஒரு தையல் இயந்திரம், ஒரு நாற்பத்தியிரண்டு அங்குலப் பழைய தொலைக்காட்சிப்பெட்டி, ஒரு நீராவி மின்னழுத்தி, சிறிய வானொலிப்பெட்டி, உடைகளை மடித்து வைக்க, ஓக் மரத்தில் செய்யப்பட்ட இரு அலுமாரிகள், வெள்ளைவெளேரென்ற விரிப்போடு ஒரு கட்டில், ஒரு வட்டவடிவமான சிறிய சாப்பாட்டு மேசை, இரண்டு கதிரைகள், கால்களை நீட்டியபடி அமர ஒரு சாய்கதிரை, விருந்தினர்கள் வந்தால் அமருவதற்கும், தூங்குவதற்குமான ஒரு நீண்ட பஞ்சுமெத்தைக்கதிரை என எல்லாவற்றின் மீதும் எமிலியாவின் கண்கள் விழுந்து மீண்டன.

சுவரிலிருக்கும் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தைக் காட்டி 'அவர் யார்' என்று எமிலியா ஆச்சரியத்தோடு கேட்டாள்.

'அது என் கணவர்' என்றாள் அவள்.

எமிலியா மீண்டும் ஒரு தடவை அந்தப்புகைப்படத்தை புன்னகையோடு உற்றுப்பார்த்தாள்.

"உன் கணவர் இவ்வளவு அழகானவரா?" என்றாள். அவள் புருவங்கள் உயர்ந்திருந்தன.

அபர்ணாம்பாளின் மெல்லிய வெட்கம் கலந்த புன்னகையை எமிலியா ரசிப்பது தெரிந்தது.

"நீ அவரை இழந்தது எனக்கே கவலை தருகிறது' எமிலியா சொல்லிவிட்டு தன் உதடுகளை ஒருகணம் இறுக மூடிக்கொண்டாள். அடுத்த கணமே தனக்கேயுரிய அந்த அசாதாரண புன்னகையை முகத்தில் தவழவிட்டபடி அவள் பார்வையை அப்பால் தாவவிட்டாள்.

சுவரிலிருக்கும் மற்றைய படங்களின் பக்கம் எமிலியாவின் பார்வை செல்லும் போதே "இது என் மூத்தமகளின் குடும்பம், இது என் இரண்டாவது மகளின் குடும்பம், இது என் மகன்மார். இது என் பேரப்பிள்ளைகள்.." என்று தன் சுட்டு விரலை நீட்டி, உற்சாகம் மேலிட ஒவ்வொன்றாக அபர்ணாம்பாள் சொல்லிக்கொண்டு போனாள்.

"உன் குடும்பம் எவ்வளவு அழகாயிருக்கிறது தெரியுமா? நீ அதிர்ஸ்டசாலி.." என்றாள் எமிலியா. அவளதைச் சொல்லும் போது குரலில் மெல்லிய நடுக்கம் தெரிந்தது.

அப்போது எமிலியா முன்பொருதடவை சொன்ன விடயம் மீண்டும் அவள் ஞாபகத்தில் வந்தது. எமிலியாவின் பிள்ளைகள் யாரும் இருபது வருடங்களிற்கும் மேலாக தன்னை ஒருபோதும் வந்து பார்ப்பதுமில்லை, தன்னுடன் தொலைபேசியிலும் பேசுவதில்லை என்று, சில மாதங்களிற்கு முன்னர் அந்த மாடியில் வசிக்கும் எல்லோருக்கும் நடந்த தேநீர் விருந்தொன்றில் அபர்ணாம்பாளுக்கு அதனைச் சொல்லியிருந்தாள். அப்போது எமிலியா மீது அவளுக்குள் ஏற்பட்ட அதே கழிவிரக்கம் இப்போதும் ஏனோ அவள் மீது ஏற்பட்டது.

இருப்பறையின் கண்ணாடிக் கதவினூடாகத் தெரியும் மொட்டைமாடியில் பூத்துக்குலுங்கும் வர்ணப்பூக்களின் பக்கம் எமிலியாவின் பார்வை சட்டென்று திரும்பியது. அவள் கண்கள் விரிய அவற்றைப் பார்த்தாள்.

"உன்னைப் போலவே உன் வீடும் மிகவும் அழகாயிருக்கிறது. நீ வைத்திருக்கும் பூமரங்கள் என்னை போகவிடாமல் இழுத்து வைத்திருக்கின்றன" என எமிலியா சொல்லும் போது அபர்ணாம்பாளின் நெஞ்சு சந்தோசத்தில் நிறைந்து போனது.

அன்று எமிலியா விடைபெற்றுப் போகும் போது மிகுந்த மனக்கிளர்ச்சியோடும், போக மனமில்லாமலும் போன மாதிரியிருந்தது!

நினைவுகளை உடைத்தெறிவது போல் திடீரென்று மீண்டும் தொலைபேசி மணி அடிக்கிறது. அவளுள் விரிந்திருந்த காட்சிகள் யாவும் ஒருநொடியில் சிதறிப்போக, தட்டுத்தடுமாறி எழுந்து சென்று தொலைபேசியை தூக்குகிறாள்.

"அம்மா என்ன செய்யிறீங்கள்?" மறுமுனையில் கணீரென்று குரல் ஒலித்தது

"ஆர் காயத்திரியே? நான் தேத்தண்ணி போட்டு குடிச்சுக்கொண்டிருக்கிறன்"

"நல்லது. உடல்நிலையெல்லாம் ஓகேயாக இருக்கோ?"

'"ஓம் பரவாயில்லை. நாரி நோ தான் அடிக்கடி வந்து போகும். மற்றும்படி எல்லாம் ஓகே. வெளியிலை தொடர்ந்து ஒரே மழையாயிருக்கு, பிள்ளைகளெல்லாரும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்திட்டினமே?" அபர்ணாம்பாள் கேட்கிறாள்.

"ஓமம்மா வந்திட்டினம். நீங்கள் இண்டைக்கு மத்தியானம் என்ன சாப்பிட்டினிங்கள்?"

"சிவப்புப்பச்சை அரிசியிலை பால் சோறு கொஞ்சம் செய்து, நல்லெண்ணையிலை கத்தரிக்காயும் பொரிச்சு, பச்சைமிளகாய் சம்பலும் அரைச்சு சாப்பிட்டனான்"

"பிறகென்ன, நீங்கள் சொல்ல எனக்கே சாப்பிடவேணும் போல ஆசையாயிருக்கு. மற்றது, ஒரு விசயம் சொல்ல வேணுமம்மா"

"சொல்லு"

"பேர்லினிலையிருந்து பெடியள் போன் பண்ணினவங்கள். இந்தமுறை மாவீரர்நாளுக்கு நீங்கள் தான் அங்கை கொடியேத்த வேணுமாம். உங்கட போன் நம்பர் தெரியாதபடியால் என்னட்டை அடிச்சுக் கேட்டவை. நான் அம்மாவைக் கேட்டிட்டுச் சொல்லுறனென்டு சொன்னான். அவங்களே வந்து உங்களை காரிலை கூட்டிக்கொண்டு போவாங்களாம்.."

சில விநாடிகள் தொலைபேசி இருபக்கமும் அமைதியில் மூழ்கிக் கிடந்தது.

"அம்மா... என்னம்மா? யோசிக்கிறியள் போல இருக்கு. போவியள் தானே? சரியெண்டு சொல்லட்டே?"

"இல்லையில்லை. நானொண்டும் யோசிக்கேல்லை....."

"எனக்குத் தெரியுமம்மா. நீங்கள் இனி ... ஊர் விசயங்களையெல்லாம் நெஞ்சுக்குள்ளை போட்டுக் குமைஞ்சுகொண்டிருப்பியள். அது தான் அவங்களிட்டை ஓமெண்டு உடனை சொல்ல யோசினையாயிருந்தது"

"அதொண்டுமில்லை. நான் கட்டாயம் வந்து கொடி ஏத்துவனெண்டு அவங்களிட்டை சொல்லு" அபர்ணாம்பாளின் குரல் சத்தமாகவும் தெளிவாகவும் ஒலித்தது.

"சரியம்மா. நான் பின்னேர வேலைக்கு வெளிக்கிட வேணும். பிறகு அடிக்கிறன். நீங்கள் பிறகு பழையதுகளை யோசிச்சுக்கொண்டு இருக்கக்கூடாது. நேரத்துக்கு படுங்கோ"

மறுபுறத்தில் தொலைபேசியின் ரிசீவர் வைக்கும் ஓசை கேட்டது.

அவள் மெதுவாக வந்து கதிரையில் அமர்ந்தாள். மனசு பொங்கிப் பொருமி, உள்ளுக்குள் புதைத்து வைத்திருக்கும் அத்தனையையும் உடைத்து வெளியே தள்ளிவிடுமோ என்று பயமாக இருந்தது. குழறியழுதால் சுகமாயிருக்கும் போலவும் இருந்தது.

நடந்து முடிந்த அனர்த்தங்களை, துயரங்களை அவள் நினைத்து மறுபடியும் கலங்கக் கூடாதென வைத்தியர் பலதடவைகள் அறிவுறுத்தி விட்டார். மீண்டும் மீண்டும் அது நடந்தால் அவளின் இதயத்திற்கு அதனை தாங்கும் சக்தியில்லையென்றும் சொல்லியிருக்கிறார்.

'ஞாபகங்களை யாரால் தடுத்துவிட முடியும்?'

அவ்வப்போது வெட்டியடிக்கும் மின்னல் பளீர் பளீரென உள்ளே வெளிச்சம் காட்டி விட்டுப் போனது! முகில்களின் மெல்லிய உரசலும், அதனைத் தொடர்ந்து எழும் இடியின் முழக்கமும் விட்டு விட்டுக் கேட்கத் தொடங்கியது!

அவள் தேநீர்க்குவளையை மேசையில் வைத்துவிட்டு தனது கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டு மெதுவாக நடந்து மாடியின் திறந்த தள வாயிலுக்கு வந்து நின்றாள். நனைந்த வெளிவீதியும் வீடுகளும் பிற கட்டடங்களும் இருள் சூழ்ந்து கிடந்தன. வீதி விளக்குளின் ஒளியைத் தவிர வேறெந்த ஒளியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.

சில்லென்ற குளிர்காற்று வீசியது. தோளில் போர்த்திருந்த கம்பளிப் போர்வையை நன்றாக இழுத்து மூடிவிட்டுக்கொண்டு மழை தூறும் பெருவெளியைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

ஊரிலிருக்கும் பிள்ளையார் கோயிலின் தெற்கு வீதியில் பிரமாண்டமாய் சடைத்து நிற்கும் அரசமரத்தை எப்போதும் அவளுக்கு ஞாபகப்படுத்தியபடியிருக்கும் கரோலினாபொப்லரின் மரக்கிளைகள் அவளது மொட்டைமாடியின் அரைச்சுவரைத் தொடுவதும் பின்னர் விலகுவதுமாக காற்றில் சிலிர்த்து அசைந்து ஆடிக்கொண்டிருந்தது! மழை நீரில் நனைந்திருக்கும் அதன் பச்சைப்பசேலென்ற இதயவடிவ இலைகள் தெருவிளக்கின் ஒளி பட்டு, மினுங்கிக் கொண்டிருந்தன! மெல்லிய மஞ்சள் நிறத்தில் தும்பைப்பூக்கள் போலிருக்கும் அதன் சிறுபூவிதழ்கள் மொட்டைமாடியின் சீமென்ற் தரையெங்கும் விசிறியடித்தது போல்; சிதறிக்கிடந்தன.

தூரத்தே சிறுதூறல் மளமளவென்று பெருமழையாகி அவளை நோக்கி வேகமாக ஓடிவருவது தெரிந்தது!

கண் மூடி முழிக்க முதல் கனமழையின் பேரோசை எங்கும் நிறையத் தொடங்கியது!

- சந்திரா இரவீந்திரன்

(லண்டனிலிருந்து வெளியாகும் 'சிறுகதை மஞ்சரி' 2021 சிறப்பு மலரில் பிரசுரம்)

Drucken   E-Mail

Related Articles

வனஸ்பதி

முள்முருக்கை

நெஞ்சிற்குள் உறைந்திருக்கும் பனிமலை!

சப்பாத்து

சிறுகதை

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்