மணமாலை என்றோர் செய்தி வந்தால்... Print
Literatur - கவிதைகள்
Written by குகக் குமரேசன்   
Sunday, 16 August 2009 21:38

நாலு குமர் கரைசேர்க்க
நாற்பது தாண்டியது...
நாற்றும் நட முடியாது
நடுத் தலையும் வெளித்தது...

இனி என் முறைதானென்று
இள நகை புரிந்திருக்க!
ஐந்தாவது குமருக்கு
அழகாய் அடுக்குப் பண்ணிவிட்டு,
அவசரமாய் போனெடுத்தாள் அம்மா!
அவள் என்ன செய்வாள்
கரை சேர்க்கத்தானே கடல் கடந்தோமென்று
கரையிலிருந்து குரல் கொடுத்தாள்!

மூத்தக்கா போனெடுத்து
முதலில் மூத்தவனையாகிலும் எடுத்துவிடு என்றாள்!

வேலையை விட்டுவிட்டார்! - இனி
வெளிநாடு போகத் திட்டமென்று
விரைவாகத் தொடர்பு கொண்டாள் இளையக்கா!

பெத்தகடன் மறவாத் தந்தை
சில்லறைக் கடனையேனும் சீக்கிரமாய் முடியென்றார்!
கடன் முடிவதெப்போ? நான் முடிப்பதெப்போ?

பொல்லு}ன்றும் காலம் கண்ணுக்குள் சுழல்கிறது!
பூமாலை இனியெதற்கு போகட்டும்!

இருந்தாலும் எனக்கோர் ஆசை!
இரை தேடும் பறவைகளே!
பொங்கல் பொங்கும்
புண்ணிய நேரத்திலாவது
என் சுகம் கேட்டு ஓர் போன் எடுப்பீர்களா?
மணமாலை எனக்கும் வேண்டுமென்று
உங்கள் மனச்சாட்சி சொல்லி விட்டால்...
மகிழ்வுடனே பொங்கிடுவேன் பொங்கல்!

குகக் குமரேசன்
Last Updated on Friday, 29 January 2010 13:28