home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 14 guests online
மகத்தான எம் திலீபன் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தீட்சண்யன்   
Thursday, 21 September 2017 21:09

விடுதலை வேட்கை சுடராய் விழிகளில் நடனமாட
பறந்திடும் கேசத்தோடும் புன்னகை வதனத்தோடும்
நடந்தவன் நல்லூர் வீதி மேடையை நாடிச்செல்ல
திரண்ட எம் மக்கள் கூட்டம் 'தெய்வமே..' என்றழைக்க
பஞ்சென வெண்மைக் கேசம் கொண்டதோர் பக்தி மாது
பையவே திலீபன் முன்னால் பாதையை மறித்து வந்து
கையிலே தாங்கி வந்த அர்ச்சனைத் தட்டைத் தொட்டு
விரலிலே விபூதி அள்ளி எம் வீரனின் நுதலில் பூச
பௌர்ணமித் திங்களாய் எம் திலீபனோ முகம் ஜொலித்தான்

எங்களின் பிரச்சனைக்கு... எங்களின் விடுதலைக்கு...
எங்களின் பங்குமின்றி எங்களின் விருப்புமின்றி
சிங்களம் பெற்றெடுத்த ஜெயவர்த்தனாவும்,
தன்னலம் மட்டுமேயோர் இலட்சியக் குறியாய்க் கொண்ட
அன்றைய பாரதத்தின் அரசியல் ஓச்சுவோனும்
தங்களுக்குள்ளே கூடித் தந்திரக் கூத்தடித்து
செய்தவோர் ஒப்பந்தத்தின் அம்சங்கள் ஐந்தினையே
செயற்படவைக்கத் திலீபன் வயிற்றுடன் போர் தொடுத்தான்

மக்களும் மாணவரும் மேடையைச் சூழ்ந்திருக்க
பக்கலில் மேடையிட்டு கவிதைகள் சொற்பொழிவு
உணர்வுகள் கொப்பளிக்கும் உயர்மிகு வேளையதனில்
திலீபனும் தன்னுணர்வில் மக்களோடிணைந்து கொண்டான்
ஒப்பிலா அந்த வீரன் உறுவினை கண்டு மக்கள்
வெப்பினார், வீரமுற்றார் - சங்கது
சுட்டதைப்போல் மென்மேலும் தெளிவு பெற்றார்

பற்றது-சுய பற்றது விட்டுத் திலீபன்
பாடையை நோக்கிப் பயணம்
சொட்டதும் தளரா முனைப்பில்
வெப்புடன் தொடர்ந்த போதும்
புத்தனின் பாரதமோ பகர்ந்தது ஏதுமில்லை

காந்தியைப் போற்றும் அந்த இந்திய தேசம் அன்று
ஏந்திய ஒப்பந்தத்தைச் சரிவரச் செய்யவில்லை
காந்தியின் தேசமென்று புகழுரைத்தாரேயன்றி
அன்னவர் அகிம்சா வழியைப் புரிந்திட மறுத்தார்-ஐயோ
அந்தக் காந்தியும் கூட முன்னர்
நீருணவு அருந்தித்தானே விரதமும் அனுசரித்தார்!
நீரதும் ஏலாத் திலீபன், இளமையின்
ஆசாபாசா உணர்வெலாம் ஒடுக்கிப் போரில்
ஆயுதம் ஏந்திக் காயம் பட்டவன் பட்டும் மீண்டும்
உடலதை எரிக்கும் போரை உவப்புடன் ஏற்ற வேளை
பதரெனப் பாரதத்தால் புறமென ஒதுக்கப் பட்டான்

கணம் கணமாக அந்த இந்தியப் பதிலைக் காத்து
பிணமெனும் நிலை வராமல் திலீபன்
வாழ்ந்திட வேண்டுமென்று துடித்தனர் மக்கள்
ஆங்கே துவண்டனர் தாய்க்குலத்தோர்

ஏதுமே எட்டவில்லை!?
ஐரிஸ் போராட்டவீரன் பொபி சான்டஸ் என்ன செய்தான்?
சிறையிலே வதங்கி வாடி வீரமாய் சாவணைத்தான்
ஆயினும் அவனும் நீராகாரம் நிதமும் உண்டான்

மகத்தான எம் திலீபன் மன உறுதி பாரீர்!
எக்கட்டத்திலேனும் தன் விருப்புக்கு மாறாக
மருந்தோ, சிகிச்சையோ, உணவோ, நீரோ
தந்திடக் கூடாதென்று சத்தியம் வேண்டிக் கொண்டே,
மேடையில் போயமர்ந்தான்-சந்தன மேனியாளன்
இறப்பின் பின்னரும் தன் ஈகத்தின் தொடர்ச்சியாக
உடலின் கூறுகள் உயர் கல்விக்கு உதவவென
மருத்துவ பீடத்திற்கு அனுப்பிடல் வேண்டுமென்றான்

நிமிடங்கள் மணிகளாக மணித்துளிகள் தினங்களாகி
ஒன்றாக இரண்டாக மூன்றாக நாட்கழிய
உடலால் சோர்வுற்றான் மக்கள் உள்ளங்களில் தீயிட்டான்
எங்கும் எரியும் உணர்ச்சிப் பிரவாகம்
முண்டியடித்துத் திரளும் சனக்கூட்டம்
சீருடைச் சிறார்களின் தளர் நடைச் சோகம்,
ஊரூராக உருக்கொண்டு மக்கள்
பேரணியாக நல்லூர் நகர்ந்தனர்
திலீபனுக்குத் துணையாகத் தம் வயிற்றில் தீ மூட்ட
அணியணியாக ஆட்கள் திரண்டனர்
ஆங்காங்கு மேடைகள்
ஆத்திர உணர்வு மக்களுள் கிளர்ந்தது
கோத்திரம், குலம், சாத்திரம் யாவும் கூடையில் போயின - சோற்றுப்
பாத்திரம் தொட மக்கள் கூசினர்
தேற்றவோர் வார்த்தையின்றி தேசம் சிவந்தது
நல்லூரிலேயே அருகிலொருமேடை
வல்லையில் ஐவர்
முல்லையில் திருச்செல்வம்
திருமலையில் வேறொருவர்
மட்டுநகர் மேடையில் மற்றொருவர்
எங்கும் வியாபித்த இலட்சியப் போர்த்தீ

ஆயினும்
பாரதபூமி பார்த்தே கிடந்தது
தேரோடிய எம்மண்ணில்-கண்ணீர் ஆறோடியது
வசந்தம் வீசிய வாழ்நிலத்தில்
அக்கினிப் புயல் அனல் வீசியது

நாட்கள் கடந்தன்
காந்தீயப் போர்வைகள் கிழிந்தன
மகாத்மா என்ற மாபெரும் வார்த்தையை
தனக்கே உரித்தான தனியான அணிகலனாக
தானே தனக்குச் சூடிக்கொண்ட பாரதம்
வேஷம் கலைந்து விவஸ்தை கெட்டு-வெறும்
கோஷதாரியாக குறிகெட்டு நின்றது
காந்தீயமென்று போற்றிப் பூஜிக்கும்
குவலயத்து மக்களெல்லாம்
குருடர்களாய்ப் போயினரோ!

அந்தக் காருண்யப் பாதையிலே
அணுஅணுவாய் எரிந்தழியும்
திலீபமெனும் மெழுகுச் சுடர்-இந்தத்
தீன விழிகளில் ஈரமதைத் தரவில்லையோ?!
மனித தர்மமென்ன மாண்டே போனதோ?!
புத்தன் பிறந்த தேசமென்றார்களே
சித்தமே கல்லான எத்தர்களோ இவர்கள்?!
சத்தமின்றி அமர்ந்திருந்து
சித்திரவதை தன்னை
மெத்தனமாய்க் கண்கொள்ளும்
வித்தையிலே விற்பன்னரோ?!

பத்திரமாய் நாம் வாழ சித்திரமாம் எம் திலீபன்
கத்தியில்லா யுத்தமொன்றை கணம்கணமாய் முன்னெடுக்க
புத்தியிலே பொறிவெடித்து எம் புத்திரர்கள் எல்லோரும்
சத்திய வேள்வியிலே சேர்ந்து குதித்தார்கள்
சொத்தான எம் ஈழம் பெற்றிடலே வேதமென்று
வற்றாத பேராறாய் வரிசையிலே வந்தார்கள்

உடல் வற்றி உயிர் வற்றிப் போன எம் இளவல்
கடல் வற்றிக் காய்ந்திட்ட சவர் படிந்த நிலமாக-விழி
மடல் ஒட்டி வேதனையின் விளிம்புகளைத் தொட்டு நின்ற - அப்
பதினோராம் நாளோர் பாவப்பட்ட நாளென்றால்
பன்னிரண்டாம் நாளை நான் எப்படித்தான் பகர்ந்துரைப்பேன்

நல்லூரின் வீதிதனில் நாடறியாச் சனவெள்ளம்
லட்சோப லட்சமாய் பட்சமிகு மக்கள்
கண்ணீரும் கதறல்களும் காற்றோடு பேச-திலீபன்
கண்ணோடு கண்மூடினான் -நாம்
கண்ணீருக்கு அணை தேடினோம்

- தீட்சண்யன்
ஒலிபரப்பு- புலிகளின்குரல் வானொலி
திலீபன் நினைவு வாரம் 1997