புலம் பெயர் வாழ்வில் திருமணமான பெண்களின் எதிர்காலம்

புலம் பெயர் வாழ்வில் திருமணமான பெண்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை மேலோட்டமாகப் பார்த்திருந்தோம். இனி திருமணமாகாத பெண் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது என்பதைப் பார்ப்போம்.

திருமணமாகாத பெண்பிள்ளைகளின் எதிர்காலம் கூட பல்வேறு விதமாகவேதான் அமையப் போகிறது. பெற்றோர்களின் தன்மையைப் பொறுத்தே பிள்ளைகளின் நிகழ்காலம் நிர்ணயிக்கப் படுகிறது.

அனேகமான பெற்றோர் கட்டுப்படுத்தி வளர்ப்பது ஒன்றுதான் பிள்ளைகளை நன்னெறிப் படுத்தும் என்று எண்ணி பிள்ளைகளின் முற்போக்கான தன்மைக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறார்கள். இதனால் பிள்ளைகள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இப்படியான பெற்றோர்களின், பிள்ளைகளின் எதிர்காலம், எதிர்காலம் என்று சொல்வதை விட நிகழ்காலம் மிகவும் கடினமானதாகவே இருக்கும். இவர்களின் திறமைகள் மழுங்கடிக்கப் பட்டு எதிர்காலம் கூட இவர்களுக்குள் பயத்தை ஏற்படுத்தி, இயல்பாகவே இவர்களிடம் உள்ள தன்னம்பிக்கை குறுகடிக்கப் பட்டு விடும்.

ஆனாலும் இன்றைய திருமணமாகாத பெண்பிள்ளைகளின் எதிர்காலம், சில மோசமான கணவன்மாரிடம் அகப்பட்டுக் கொண்ட இன்றைய திருமணமான பெண்களின் எதிர்காலம் போல மோசமானதாக அமையாது என்று நம்பிக்கை கொள்ளலாம்.

. ஏனெனில் தற்போதைய பெரும்பாலான பெண்பிள்ளைகள் மிகவும் விழிப்புணர்ச்சியுடனும், எதையும் ஏன், எதற்கு என்று ஆராய்ந்து பார்க்கும் தன்மையுடனும், மிகுந்த தன்னம்பிக்கையுடனும் இருக்கிறார்கள். முந்தைய பெண்களைப் போல் கலாச்சாரம், பண்பாடு, சம்பிரதாயம் என்ற பெயரில் நடக்கும் போலிச் செயற்பாடுகளை ஏன் எதற்கு என்ற ஆராய்ச்சியில்லாமல் ஏற்றுக்கொள்ளும் அறிவீலித்தனம் பெரும் பாலான இன்றைய பெண் பிள்ளைகளிடம் இல்லை. சம்பிரதாயப் போர்வைக்குள் தம்மை ஒழித்துக் கொள்ள இவர்கள் தயாராக இல்லை.

இருந்தும், பெரும்பாலான பெரியவர்கள் 'இது தப்பு'என்றுதான் கருதுகிறார்கள். இதனால் பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

இதே நேரம் பல பெற்றோர் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுடன் நட்பாகப் பழகி அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை நன்நெறிப் படுத்துகிறார்கள். இப்படி வளர்க்கப் பட்ட பிள்ளைகள் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு நம்பிக்கையும் மனத்தெளிவும் கொண்டுள்ளார்கள். இவர்களின் எதிர்காலம் நிட்சயம் பிரகாசமானதாய் அமையும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.

அளவுக்கதிகமான கட்டுப்பாட்டுக்குள் வளரும் பிள்ளைகளை விட அன்பாக வளர்க்கப் படும் பிள்ளைகள் மிகவும் தெளிவான மனநிலையுடனும், வாழ்க்கை மீது பற்றும், நம்பிக்கையும் கொண்டவர்களாகவும் உள்ளார்கள். இதைப் பெற்றோர்கள் புரிந்து கொண்டால் பல பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

அத்தோடு இன்றைய ஆண்பிள்ளைகள் அதாவது இங்கு வளர்பவர்கள், முந்தைய ஆண்கள் போல நான் ஆண் என்ற திமிர்த்தனம் இல்லாமல் பெண்களுடன் பழகத் தொடங்கியுள்ளார்கள்.

இது கூட புலம்பெயர் வாழ்வில் பெண்களின் எதிர்காலம் அடிமைத்தனத்துக்குள் அடங்கிப் போகாதிருக்க அத்திவாரமாகிறது.

நான் நம்புகிறேன், புலம் பெயர் மண்ணில் இன்று வளர்ந்து கொண்டிருக்கும் பெண்கள் சமூகத்தின் எதிர்காலம் ஓரளவுக்கேனும் ஆரோக்கியமானதாகவும், அழகியதாகவும், வாழ்வை வாழ்வாக அனுபவிக்கும் தன்மை கொண்டதாகவும் அமையும் என்று.

சந்திரவதனா
12.06.2001


மின்னூல் - நாளைய பெண்கள் சுயமாக வாழ... (March 2016)


Drucken   E-Mail

Related Articles

அவளுக்கென்ன...

சர்வதேசப் பெண்கள் தினம்

ஆண்-பெண் நட்பு