home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 28 guests online
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Monday, 05 October 2015 09:21
வெண்புறாவிற்கு அழைத்துச் செல்ல வாகனம் இருந்தது. ஆனாலும் நடந்தே வெண்புறாவிற்குச் செல்ல விரும்பினேன். நடை போட்டு வெண்புறாவிற்குப் போகும் பொழுது கொஞ்சம் அசை போட்டுக் கொண்டேன்.

ஐரோப்பிய தமிழர் புனர்வாழ்வுக் கிளைக் கூட்டத்தில் „வெண்புறா நிறுவனத்தில் எங்கள் சேவை' பற்றி நான் உரையாற்றிய பொழுது டொக்டர் என்.எஸ்.மூர்த்தியின் சிந்தனை எங்கோ சிதறி இருந்தது என்று நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். அதன் விளைவுதான் இப்பொழுது நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.

எங்கள் சேவையின் நோக்கமும், அதன் வெற்றியும் டொக்டர் என்.எஸ்.மூர்த்தி அவர்களையும் ஏதாவது செய்யத் தூண்டி இருக்க வேண்டும். பல வருடங்களாக யாருமே அக்கறை கொள்ளாத வெண்புறா வேலைத் திட்டத்தின் பாரம்பரியம் இப்பொழுதுதான் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. தானும் செயற்கைக் கால் பொருத்தும் ஒரு வேலைத் திட்டத்தை இலண்டன் கிளை ஊடாக ச் செய்தால் என்ன என்ற எண்ணம் அவருக்கு வந்திருக்கிறது. இலண்டனில் இருந்து ஒரு தொழில் நுட்ப வல்லுனரையும் அழைத்துக் கொண்டு வன்னிக்குப் புறப்பட்டு விட்டார்.

யேர்மனிய தொழில் நுட்பத்தினூடான கால் பொருத்தும் திட்டத்திற்கு நிகராக இலண்டன் தொழில் நுட்பத்தினூடான கால் பொருத்தும் திட்டத்திற்கான பட்டறை வன்னியிலே நடக்கிறது. இந்த விடயம் எனது காதுக்கு வந்த பொழுது சாதாரணமாகவே எடுத்துக் கொண்டேன். ஆனால் வெண்புறா நிறுவனத்தை முழுமையாக எடுத்து அவர் செயற்படும் அறிவிப்பானது ஐபிசி வானொலியில் வந்த பொழுதுதான் மனது சோர ஆரம்பித்தது.

யேர்மனியக் கிளையின் செயற்கை உறுப்பு பொருத்தும் எங்களின் நீண்ட வருடங்களின் ஓட்டம் நின்று விடப் போகிறது. எங்களின் வேண்டுகோளை ஏற்று தனது நிறுவனத்திலேயே ஸ்ராலினுக்கு கொல்கர் கடந்த ஐந்து மாதங்களாக தொழில் நுட்ப ரீதியாகப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றான்.

எங்களது செயற்திட்ட ம் பற்றி தாயகத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தனது 2002ம் ஆண்டு ஆடி மாத அறிக்கையில்,

„இதுவரை காலமும் வெண்புறா செயற்கை உறுப்பு தொழில் நுட்ப நிறுவனம் தனது சூழலுக்கேற்ப உள்ளுர் சந்தையில் கிடைக்கக் கூடிய மூலவளப் பொருட்களைப் பாவித்தே தனது அளப்பரிய சேவையினை வலுக்குன்றியோர் மத்தியில் வழங்கி வந்துள்ளது.

அண்மையில் சமகால தொழில் நுட்பங்களைப் பாவித்து துரிதமாகவும் தரமாகவும் செயற்கைக் கால்களைத் தயாரித்து வழங்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் இது மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.

இம் முயற்சிகளுக்கு அனுசரைணயாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தனது யேர்மன் நாட்டுக் கிளையின் உதவியுடன் அந்நாட்டிலுள்ள ஒத்தோப்பேடி நிறுவனப் பிரதிநிதியான திரு. கொல்கர் அவர்களை வரவழைத்து உள்ளுர் தொழில் நுட்பவியலாளர்களுக்குப் பயிற்சியளித்ததன் மூலம் இப் புதிய தொழில் நுட்ப வசதிகள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. திரு கொல்கர் அவர்களுக்கு உதவியாக அந்நாட்டில் இருந்து திரு, திருமதி செல்வகுமாரன் ஆகியோர் இங்கு வந்து பயிலுனர்களுக்கு பலவகையிலும் உதவியாக இருந்தமை மிகவும் பாராட்டுதலுக்கு உரியதொன்றாகும்.

இரசாயன மூலப் பொருட்கள் தாராளமாகக் கிடைக்கும் பட்சத்தில் போர் அனர்த்தங்களினால் கால்களையிழந்த ஏராளமானோர் துரிதகதியில் பயனடைவர் என்பது உறுதியளிக்கப் பட்டுள்ளது.

இப்படிக் குறிப்பிடுகிறது.

ஆக எங்களுக்குத் தேவையானது எல்லாம் மூலப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வசதிகளை மேம்படுத்திக் கொள்வது. ஆனால் செய்யப் பட்டது என்னவோ மாற்றாக இன்னும் ஒரு தொழில் நுட்ப அறிமுகம்.

என் மனதில் ஒரு குறை இருந்தது. அதை இங்கு நான் சொல்ல விரும்பவில்லை. குறை பட்டுக் குறை பட்டுக் கறை பட்டுப் போனவர்கள் நாங்கள். ஆதலால் என் மனதில் இருந்த அந்தக் குறையை அப்படியே புதைத்து விடுகிறேன்.

மாலையில் சூசை உங்களைச் சந்திக்கிறார் என மறுநாள் காலையில் தகவல் வந்தது. அத்தோடு இன்னும் ஒரு தகவல் வந்தது. அன்று மாலையில் கஸ்ரோவுடனான சந்திப்பும் ஏற்பாடாகி இருக்கிறது என்று.

இனியும் தாமதிக்க முடியாது இனியவாழ்வு இல்லத்திற்குப் பயணமானோம். பயணிக்கும் வாகனத்திலேயே செஞ்சோலை, மற்றும் நவம் அறிவுக் கூடத்திற்கான பொருட்களையும் ஏற்றிக் கொண்டோம். எங்களுடன் அன்ரனியும் உடன் பயணித்தார்.

இனியவாழ்வு இல்லம், செஞ்சோலை, சூசை, கஸ்ரோ என சந்திப்புகளை வரிசைப் படுத்திக் கொண்டோம்.

கொல்கருக்கு நேரம் இல்லை. ஸ்ராலினுடன் வெண்புறாவில் அவனை விட்டு விட்டு நாங்கள் மட்டும் பயணத்தை மேற்கொண்டோம்.

இனியவாழ்வு இல்லத்திற்கு நாங்கள் சென்றிருந்த பொழுது மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. இனியவாழ்வு இல்லத்தின் மண்டபத்தில் எல்லோரும் கூடி இருந்து இனிய வாழ்த்துச் சொல்லி எங்களை வரவேற்றார்கள். செரோலியன் அமைப்பு தந்த பொருட்களை அங்கிருந்த பிள்ளைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தோம்.

கட்டிடம் கட்டுவதற்காக செரோலியன் அமைப்பு தந்த பணத்தை இனிய வாழ்வு இல்லத்தின் நிர்வாகி தம்பு வினாயகமூர்த்தி அவர்களிடம் கையளித்தோம். மழை வெளியில் பலமாகக் கொட்டிக் கொண்டிருப்பதால், எங்களைக் கொண்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வைச் செய்ய முடியாதிருந்தது. அதற்கான வருத்தத்தை அவர் சொன்னார்.

„இது ஒரு வெறும் சம்பிரதாய நிகழ்வுதான். மழை இல்லாத ஒரு பொழுதில் எங்களுக்கா நீங்களே அடிக்கல்லை நாட்டிக் கொள்ளுங்கள் என்று தம்பு வினாயகமூர்த்தி அவர்களிடம் சொன்னேன்.

நாட்டுக் கோழிக்கறியோடு அசத்தலான ஒரு மதிய உணவை அங்கே தந்தார்கள். உதவிக்கான நன்றியை என் மூலம் செரோலியன் அமைப்புக்குத் தெரிவிக்கச் சொன்னார்கள்.

நேரத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டி இருந்ததால், உணவு அருந்திய உடனேயே புறப்பட்டு விட்டோம்.

செரோலியன் அமைப்பு செய்த உதவிக்கு நன்றி தெரிவித்து அதன் நிர்வாகி தம்பு வினாயகமூர்த்தி அவர்கள் பின்னர் கடிதம் ஒன்றை யேர்மனிக்கு அனுப்பி வைத்தார். அதில் செரோலியன் அமைப்பு தந்த பணத்தில் கட்டிய கட்டிடத்திற்கான புகைப் படத்தையும் மறக்காமல் நன்றியோடு இணைத்திருந்தார்.

„செஞ்சோலைக்குப் போற வழியில் கஸ்ரோவின்ரை அலுவலகத்திலை நவம் அறிவுக் கூடத்திற்கான பொருட்களை ஒப்படைச்சுப் போட்டு போவம். எதுக்காக எல்லாத்தையும் கொண்டு அலையோணும்?“ அன்ரனி அப்படிக் கேட்டது எனக்கும் சரியாகத் தெரிந்தது.

நவம் அறிவுக் கூடத்திற்கு என்று நாங்கள் கொண்டு வந்த பொருட்களை கஸ்ரோவின் அலுவலகத்தில் ஒப்படைத்தோம். „உங்களுக்கு இரவுச் சாப்பாடு இங்கேதான்' என்று கஸ்ரோ அன்றைய இரவு உணவுக்கு அழைப்பு விடுத்தார்.

மாலையில் வந்து மீண்டும் கஸ்ரோவை சந்திப்பதாகச் சொல்லி செஞ்சொலைக்குப் பயணமானோம்.

செஞ்சோலையில் அதிக நேரம் செலவிட முடியவில்லை. எங்களது நிலைமை ஜனனிக்குத் தெரிந்திருந்தது. மீண்டும் சந்திப்போம் என்று விடைபெற்றோம். நன்றியோடும், நட்போடும் ஜனனி எங்களை வழியனுப்பி வைத்ததார்.

அந்த „மீண்டும் சந்திப்போம்“ என்ற வார்த்தைகள் பொய்யானவைதானா? தெரியவில்லை.

அங்கிருந்து புறப்பட்டு வழியில் ரேகாவையும் இணைத்துக் கொண்டோம்.

அடுத்த சந்திப்பு முல்லைத்தீவில் சூசையுடனானது.

- (தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27
Last Updated on Sunday, 18 October 2015 22:37