home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 27 guests online
முடித்து வைக்கப்பட்ட வழக்கு! PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Sunday, 07 December 2014 22:34
அறுபதுகளின் பிற்பகுதி. நான் மாணவனாக இருந்த நேரம். அரசியலின் அரிச்சுவடியே எனக்கு அப்பொழுது தெரியாது. இப்பொழுது மட்டும் என்ன தெரியும் என்று கேட்கும் எண்ணம் உங்களுக்கு இப்பொழுது வந்திருக்கும். ஆனால் மரியாதை நிமித்தம் நீங்கள் அப்படியான கேள்விகள் எல்லாம் கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எனக்கு அப்பொழுது அரசியலில் தெரிந்தது எல்லாம் வீடும், சைக்கிளும்தான். „இதற்கு நேரே புள்ளடி போடுங்கள் என்றோ „உங்கள் பொன்னான வாக்குகளை இந்தச் சின்னத்துக்குப் போடுங்கள்' என்றோ தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன. அந்தப் பிரசுரங்களில் வீடு அல்லது சைக்கிள் படமோதான் இருக்கும். சில சமயங்களில் நட்சத்திரப் படத்துடனும் துண்டுப் பிரசுரம் கிடைத்திருக்கிறது.

எங்கள் நகரத்தில் இரண்டு முக்கிய வேட்பாளர்கள். ஒருவரது சின்னம் வீடு. மற்றையவரது சின்னம் சைக்கிள். என்னதான் ஓடி ஓடிப் பிரச்சாரம் செய்தாலும் ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கே வெற்றி. அதுவும் பெரிதளவிலான வாக்கு வித்தியாசங்கள் எல்லாம் கிடையாது. மிகச் சொற்ப வாக்குகளால் சைக்கிள் பின் தள்ளப் பட்டு விடும். அந்த சொற்ப வாக்குகளின் வெற்றியை வல்வெட்டித்துறை நகர வாக்காளர்களே ஏற்படுத்தி விடுவார்கள். வீட்டின் வேட்பாளர் அவர்களது நகரத்தைச் சேர்ந்ததால் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து தங்களது வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அவர்கள் வீட்டுக்கே போட்டு விடுவார்கள். மற்றும்படி கொள்கைகளின் அடிப்படையில் வாக்குகள் கிடைத்தன என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் எங்களுக்கு அடுத்த தொகுதியான உடுப்பிட்டித் தொகுதியில் காலகாலமாக சைக்கிளே வென்று கொண்டிருந்தது. வீடு பின்னுக்கே நின்றது.

அப்பொழுது குழுக்களாக தங்கள் தலைவனுக்கு தேர்தல் வேலைகள் செய்தாலும், ஆளாளுக்கு முறைத்துக் கொள்வார்களே தவிர அடிதடி எல்லாம் பலமாகக் கிடையாது.

ஆனாலும் ஒரு கொலை அந்த நேரத் தேர்தலின் போது நடந்தது.

நான் இனி சொல்லப் போகும் சம்பவதில் இடம்பெறும் பெயர்களை வேண்டும் என்றே மாற்றி இருக்கிறேன். எதற்கு வம்பு?

அபிமன்யு. அஞ்சாத வீரனுக்கான பெயர். வீட்டுச் சின்னத்துக்கான முக்கிய அபிமானி. திருமணமாகி இளம் மனைவி, மகளோடு வல்வெட்டித்துறையில் இருந்து வந்து பருத்தித்துறையில் வசித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து விட்டு வரும் பொழுது அடித்துக் கொல்லப்பட்டு விட்டார். சைக்கிள் சின்னத்தின் அதிமுக்கிய அபிமானிதான் அதைச் செய்தார் என்பது எல்லோருக்கும் அப்பொழுது உள்ளங்கை நெல்லிக்கனி.

அவருக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமே, ஆதி என்று பெயர் வைப்போமா? எனக்கு ஓகே. ஆகவே தொடருவோம்.

வழக்கு என்று வந்த பொழுது, குற்றவாளியாகக் காண்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லாததால், நீதிமன்றத்தால் ஆதியைத் தண்டிக்க முடியவில்லை. ஆதிக்காக வழக்காடியவர் சைக்கிள் சின்னத்தின் வேட்பாளர் என்பதையும் மெலிதாக இங்கே குறிப்பிட்டு விடுகிறேன். அதன் பிறகு ஆதிதான் நகரத்தின் முக்கிய புள்ளி. எல்லோரிடம் இருந்தும் பயத்துடன் கூடிய ஒரு மரியாதை அவருக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.

அபிமன்யுவின் மனைவியோ என் புருசன் வாழ்ந்த இடம்தான் எனக்கு அயோத்தி என்று மகளுடன் பருத்தித்துறையிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார்.

காலங்களின் ஓட்டத்தில் இந்தக் கதை பழம் கதையாகி சம்பவம் தெரிந்தவர்களுக்குக் கூட அது மறந்து போயிற்று. சைக்கிள் வேட்பாளரும் எவ்வளவோ முயன்றும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறாமலே காலமாகிப் போனார்.

எண்பதுகளின் ஆரம்பப் பகுதி. இப்பொழுது ஆதி பருத்தித்துறை நவீன சந்தையில் மரக்கறிகள் விற்பனை செய்து கொண்டிருந்தார். சுன்னாகம் சந்தையில் மொத்தமாக மரக்கறிகளை கொள்வனவு செய்து பரு.நவீன சந்தையில் சில்லறையாக விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் விற்பனை செய்து கொண்டிருந்த அந்த சந்தையில் அவர்தான் மகாராஜா. அவரை மீறி காகம் கூட ஒரு பலாப்பழச் சுளையை கொத்த முடியாது. இந்த நேரத்தில்தான் சில இளவட்டங்கள் வியாபாரம் செய்ய சந்தைக்குள் ஆர்வமாக வந்தார்கள்.

வந்தவர்களுக்கு, நான் முன்பு சொன்ன அபிமன்யுவின் பழைய வீட்டோடு உறவுமுறையும் இருந்தது. ஆகவே முரண்பாடு என்பது சந்தைக்குள் உடனேயே வந்து விட்டது. ஒருநாள் ஆதி கர்ஜனை செய்ய இள இரத்தம் பொங்கி எழ பிரச்சனை பூதகரமாகிப் போனது.

ஆதி வீட்டுக்குச் சென்று தனது பழைய வாளை எடுத்துக் கொண்டு நகரத்தை வலம் வர ஆரம்பித்தார். தனது கணவனின் வீரத்துக்கு துணையாக ஆதியின் மனைவியும் இணைந்து ஊர் வலத்தில் ராஜா ராணியாக வலம் வந்தார்கள். „இப்ப வாங்கடா பாக்கலாம்' என்ற ஆதியின் கர்ஜனையால் நகரம் முழுக்க நடுங்கிக் கொண்டிருந்தது. எதற்கு வம்பு என்று நகரத்துக் கடைகள் எல்லாம் மூடிக் கட்டிக் கொண்டு நகரத்தை அமைதியாக்கப் பார்த்தன. தட்டிவான்கள், மினிவான்கள் எல்லாம் இனி நின்றால் உருப்படி சேராது என்று புறப்பட்டுப் போயின. இதில் போனால் சங்கடம் இல்லை என்று இ.போ.ச பஸ்கள் மட்டும் நிலையத்தில் தரித்து நின்றன.

நல்ல வேளை மீண்டும் ஒரு அசம்பாவிதம் எங்கள் நகரத்தில் நிகழவில்லை. அடுத்தநாள் நகரம் தனது அன்றாட வேலைகளில் கவனமாக இருந்தது. நவீன சந்தை கூடி இருந்தது. விற்பனைக்காக ஆதி குவித்து வைத்திருந்த மரக்கறிகளுக்கு மத்தியில் அவரது வீரவாள் நிமிர்ந்து நின்றது. அந்த இள வட்டங்கள் மட்டும் சந்தைக்கு விற்பனை செய்ய வரவில்லை.

சம்பவம் நடந்து கொஞ்ச நாட்கள்தான், அபிமன்யுவின் கதை போல் நாங்கள் சந்தையில் நடந்த சச்சரவையும்; வழக்கம் போல் மறந்து போனோம்.

„சுன்னாகம் சந்தைக்கு மரக்கறி வாங்கப் போன போது இன்பருட்டியிலை பஸ்ஸை மறிச்சு ஆதியை வெட்டிப் போட்டுட்டாங்களாம்' நண்பன் கணேசன் காலையில் ஓடிவந்து சொன்ன பொழுது ஆச்சரியமாக இருந்தது. வாள் வைத்திருந்தது ஆதி. ஆனால் வெட்டப் பட்டு வீழ்ந்து கிடப்பதும் என்னவோ ஆதி.

'வா பாக்கலாம்'

கணேசனின் சைக்கிளில் தொத்திக் கொண்டேன்.

பஸ்ஸின் இருக்கையில் ஆதி சின்னா பின்னமாகி இருந்தார். அவரின் திடகாத்திரமான கறுத்த மேனியில் சிவப்புகள் சிதறி இருந்தன. இன்னும் சற்று நேரத்தில் இராணுவம் வரலாம் என்ற அச்சம் இருந்ததால், பார்வையாளர்கள் பார்த்த கண்ணோடு உடனடியாகத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட ஆயத்தமான வேளையில் கணேசன் என்னைத் தட்டி ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினான்.

ஒரு பெண் ஓடி வந்து கொண்டிருந்தாள். ஓடி வரும் வேகத்தில் கூந்தல் அவிழ்ந்து கடல் காற்றில் தலைமயிர்கள் பறந்து கொண்டிருந்தன. கொஞ்சம் வயதானதால் வேகமாக அந்தப் பெண்ணால் ஓட முடியாமல் இருந்தது தெரிந்தது. மூச்சிரைக்க வந்து பஸ்ஸின் முன்னால் நின்றாள். வந்தவள் வீழ்ந்திருந்த ஆதியைப் பார்த்தாள். காற்றில் பறந்து கொண்டிருந்த தனது கூந்தலை அள்ளி நிதானமாக முடிந்து கொண்டு எக்காளம் இட்டுச் சிரித்தாள். போய் விட்டாள். அவள் முகத்தை கவனித்தேன். வாழ்வில் வாழ்ந்ததின் பயனைக் கண்ட திருப்தி தெரிந்தது.

„யாரடா மச்சான் இது?' கணேசனைக் கேட்டேன்.

„அபிமன்யுவின் மனைவி உத்தரை'

கணேசனை சைக்கிளில் வைத்து ஓடுவது என்பது நிறைந்த சிரமம்.

„வரக்கை நான்தான் ஓடினனான் போகக்கை நீதான் ஓடோணும்' என்ற கணேசனின் பேச்சுக்கு மறு பேச்சில்லாமல் கடல் காத்து வேகமாக ஒரு பக்கம் தள்ள வாயில் நுரை தள்ளாத குறையாக சைக்கிள் பெடலை உழக்கிக் கொண்டிருந்தேன்.

அமைதியாக „சைக்கிள் பார்' இல் இருந்து கொண்டு கணேசன் சொன்னான். „பாரடா மச்சான் பருத்தித்துறையில் இருந்து இன்பருட்டி வரை ஒண்டு ஒண்டரை கிலோ மீற்றர் இருக்கும். மனுசி அங்கை இருந்து இதைப் பாக்கிறதுக்கு ஓடி வந்திருக்குது.'

கூந்தல் முடித்து ஆதியின் உடலைப் பார்த்து சிரித்த அந்த உத்தரையின் முகம் மட்டும் எனது கண்ணை விட்டு இன்னும் அகலாமலே இருக்கிறது.

அதுசரி ஆதியை யார் கொன்றார்கள் என்ற கேள்வி உங்களிடம் இருக்குமே.

முதலில் ஒன்று சொல்கிறேன். இது நடந்த கால கட்டங்களில் பல இயக்கங்கள் முளைவிடத் தொடங்கி இருந்தன. போதாததற்கு யார் செய்தார்கள் என்பதற்கான சாட்சியங்கள் இல்லை. காலை விடியல் நேரம். இருட்டு. ஆகவே யாராலும் எதையும் சரியாகப் பார்க்க முடியவில்லை ஆதி தரப்பில் வாதாடுவதற்கு சைக்கிள் வேட்பாளரும் உயிரோடு இல்லை. ஆகவே வழக்கை இத்தோடு மூடி வைத்து விடுவோம்.

„அதுசரி அந்த இளவட்டங்களைப் பற்றி...'

அவர்கள் எப்பொழுதோ அந்தக் கரைக்குப் போய் விட்டார்கள் என்று சொன்னார்கள்.

ஆழ்வாப்பிள்ளை
06.11.2014
Last Updated on Sunday, 07 December 2014 22:43