home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 39 guests online
மானம் ஒன்றே பெரிதென.. PDF Print E-mail
Arts - சினிமா
Written by ஆழ்வாப்பிள்ளை   
Sunday, 23 November 2014 11:51
எத்தனை பேருக்கு பி.எஸ்.வீரப்பாவை நினைவு இருக்கிறதோ தெரியவில்லை. இவர் அதிகமாக ஏற்று நடித்தது என்னவோ வில்லன் பாத்திரங்கள்தான். ஆனால் மிகை நடிப்பானாலும் அது அழுத்தமான  நடிப்பின் பதிவு. அன்றைய கால கட்டத்தில் அத்தகைய அவரின் நடிப்புத்தான் திரையில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது.

பி.எஸ்.வீரப்பா திரையில் சிரிக்க ஆரம்பித்தால் அரங்கில் இருக்கும் குழந்தைகள் அழ ஆரம்பித்து விடுவார்கள் என்று ஒரு நிலை இருந்தது.  எம்ஜிஆரை வைத்து யாராவது அரச படம் தயாரிக்க முனைந்தால் முதலில் கூப்பிடு வீரப்பாவை  எனும் நிலையில் அட்டகாசமான வில்லனாக எம்ஜிஆருக்குப் பொருந்தி இருந்தார். எத்தனையோ வில்லன்கள் எம்ஜிஆர் படங்களில் வந்து போனாலும், எம்ஜிஆர், பி.எஸ்.வீரப்பா என்றோரு கூட்டு பலராலும் ரசிக்கப் பட்டிருந்தது. எம்ஜிஆர் , தனது கடைசிப் படமான ´மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்` படத்திலும் பி.எஸ்.வீரப்பாவுக்கு வில்லன் பாத்திரம் கொடுத்திருந்தார் என்பதில் இருந்து அது மேலும் உறுதியாகிறது.

´வஞ்சிக்கோட்டை வாலிபன்` என்றொரு திரைப்படம். ஜெமினி வாசன் தயாரித்தது. அன்றைய நாட்டியத் தாரகைகள் பத்மினி, வையந்திமாலா இருவருக்குமான ஒரு போட்டி நடனம் அந்தத் திரைப் படத்தில் இருக்கும். நாட்டியத்தில் சிறந்தது பத்மினியா? வையந்திமாலாவா? என்று ரசிகர்கள் மத்தியில் பட்டி மன்றமே நடந்து கொண்டிருந்த நேரம் அது. இந்த போட்டி நடனத்தால் படத்தின் வியாபாரம் பல மடங்கு உயரும் என்று தயாரிப்பாளர் தரத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதன் நிமித்தம் நடனத்திற்கான பயிற்சிக்கு நடிகைகள் நீண்ட நாட்களை எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். படமும் முடிந்து திரையில் காண்பிக்கப் பட்ட பொழுது ரசிகர்கள் ரசித்தது என்னவோ, போட்டி நடனத்தின் நடுவில் வரும் 'சபாஸ் சரியான போட்டி' என்ற பி.எஸ்.வீரப்பாவின் வசன உச்சரிப்பைத்தான். இந்த 'சபாஸ் சரியான போட்டி'  என்ற வார்த்தைகள் நீண்ட காலமாக நிலைத்து நிற்கிறது என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் பி.எஸ்.வீரப்பாதான்.

மகாதேவி என்றோரு படம். இந்தப் படத்தில் பி.எஸ்.வீரப்பா அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை  ' “அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி!

இது எவ்வளவு தூரம் இரசிகர்களை ஈர்ந்தது என்று அன்றைய கால கட்டத்தில் காதலர்களாக இருந்த இளைஞர்களைக் கேட்டால் தெரியும். மகாதேவியின் பெயரை எடுத்து விட்டு தங்களது காதலியின் பெயரைச் சொல்லி பலர் பேசித் திரிந்ததை நானும் கேட்டிருக்கிறேன்.

மகாதேவி திரைப்படத்திற்கான வசனங்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருந்தார். அழகான உச்சரிப்பால் பி.எஸ்.வீரப்பா அந்த வசனங்களுக்கு உயிர் தந்திருப்பார். சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் சாவித்திரியிடம், தன் ஆசைக்கு இணங்கா விட்டால் உன் கணவனைக் கொன்று விடுவேன் என அவர் எச்சரிக்கும் விதமே அழகு.

மகாதேவி..!
நாளை உன் மஞ்சள் அழியும்
மங்கள நாண் அறும்
உன் மணவாளன் பிணமாவான்
நீ தனியாவாய்
எனக்கு கனியாவாய்!


இப்படிப் பேசி விட்டு ஒரு  வில்லன் சிரிப்பு ஒன்று தருவார். அது அவருக்கே உரித்தானது.

அந்தத் திரைப் படத்தில், “சம்மதம் தந்து விடு இல்லை என்றால் நாளை, ஏணையில் உறங்கும் உன் மகனைக் கொன்று விடுவேன்” என்று காலக் கெடு தந்து  வீரப்பா மறுநாள் வருவார். அப்பொழுது இடம் பெற்றுக் கொண்டிருக்கும் பாடல்தான் 'மானம் ஒன்றே பெரிதென கொண்டு வாழ்வது நமது சமுதாயம்...'

கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி. டி.எஸ்.பகவதி பாடியிருப்பார். இந்தப் பாடலுக்கு சாவித்திரியின் நடிப்பு அருமையாக இருக்கும். திரையின் முழு அளவிலும் சாவித்திரியின் முகமே இடம் பெற்றிருக்கும். தன் மகனை இழக்கப் போகிறோம் என்ற  சோகத்தை முகத்தில் காட்டி நிற்கும் அவரின் நடிப்பை இன்று பார்க்கும் பொழுது மனதை ஏதோ ஒன்று அழுத்துகிறது.

தனது மகனின் வீர மரணத்துக்குப் பாடு என எம்.என்.ராஜத்திடம் மன உறுதியோடு சொல்லி விட்டு பின்னர் நிலை குலைந்து அழுகிறாரே அதுதான் நடிகையர் திலகம்.

ஆழ்வாப்பிள்ளை
23.11.2014
Last Updated on Sunday, 16 February 2020 21:00