home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 35 guests online
சுமதி ரூபனின் `மனமுள்´ (குறும்படம்) PDF Print E-mail
Arts - சினிமா
Written by சந்திரவதனா   
Tuesday, 21 October 2014 21:40
படைப்பாளி பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி ஒரு படைப்பை நோக்கும் போதுதான் படைப்பின் முழுமையான பரிமாணமும் ஒரு நோக்கனைச் சென்றடையும். ஆனாலும் மனமுள் குறும்படத்தை நான் பார்க்கும் போது, தமிழ்ப்பெண் ஒருத்தியின் படைப்பு என்ற குறுகுறுப்புடனான நோக்கு என்னுள் தவிர்க்க முடியாததாகி விட்டது.

படத்தைக் கணினித்திரையில் மிகவும் சிறியதாகத்தான் பார்க்க முடிந்தது. அதனாலோ என்னவோ எடுத்த உடனேயே என் கவனம் தொழில் நுட்பங்கள் பற்றிய பக்கங்களில் செல்லாது, கதையின் கருவோடு சென்றிருந்தது. ஒருவேளை சுமதி ரூபனின் யதார்த்தமான, சமூகப் பிரக்ஞை நிறைந்த படைப்புக்களின் மேல் நான் வைத்திருக்கும் அபிமானமும், மதிப்பும் கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

நாசூக்கோடும், நயப்போடும் கதை சொல்லும் சுமதி ரூபனின் திறமை, படத்தின் கதை வசனங்களில் அழகாகக் கை கூடியுள்ளது. தந்தையர் இருவரும் பேசும் போதும் சரி, குழந்தைகள் இருவரும் தாம் வாழும் நாட்டின் மொழியில் இயல்பாகப் பேசும் போதும் சரி, பேச்சுக்கள் நயப்புடன் அமைந்து பார்வையாளரை கதைக்குள் ஈர்த்து விடுகின்றன.

கருவை எடுக்கும் போது அதில் எனக்குச் சற்று ஏமாற்றம் என்றே கூறலாம்.
"நாங்கள் முதல் வரக்கை நல்லாயிருந்தது. இப்ப.. சரியான தமிழ்ச்சனம்." என்ற வார்த்தைகளைக் கொட்டி.. அந்த ஆணின் தன்மையைக் காட்ட சுமதி முனைந்திருக்கலாம். ஆனால் கூடி வாழ்ந்ததால் கேடு வந்து பாழாய்ப்போன பல புலம் பெயர் மூலைகள் கனடா, பாரிஸ், லண்டன்... போன்ற இடங்களில் இன்னும் இருக்கின்றன.

புலம் பெயர்ந்த பின் தனிமை என்ற ஒன்றைக் கண்டு வெகுண்டு, எங்காவது ஒரு தமிழ் முகத்தைக் கண்டாலே மகிழ்ந்து, தமிழ்க் குரலுக்காக ஏங்கி, தமிழ் எழுத்துக்களையே காணாது வாடி... இன்று தமிழர்கள் இல்லாத இடம் தேடி ஓடுமளவுக்கு பல தமிழர்கள் வந்து விட்டார்கள். அனேகமான பல தமிழர்கள் கூடி வாழ்வது நல்லது என்பது போல வெளியில் கதைத்தாலும், உள்ளார தமிழர்கள் இல்லாத இடம் தேடித்தான் வாழ்கிறார்கள். யதார்த்தமாகச் சிந்தித்துப் பார்த்தால் அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

தாயகத்தில் நாங்களும் எங்களோடு வாழ்ந்தவர்களும், தமிழர்கள் என்பதையும் கடந்து அடியடியாக வந்த உறவுகள். எம்மோடு ஒத்து, அதாவது ஓரளவுக்காவது எமது நடைமுறைக்கு, எமது பழக்கவழக்கங்களுக்கு.. என்று ஒத்து வாழப் பழக்கப் பட்டவர்கள். ஒரு கூட்டாக எம்மோடு வாழ்ந்தவர்கள். அது மட்டுமன்றி அடி, நுனி என்று அவர்தம் பரம்பரைப் பழக்க வழக்கங்கள் கூட எமக்குத் தெரிந்திருக்கும். இந்தக் குடும்பத்துடன் இந்தளவுக்குத்தான் சகவாசம் வைக்க வேண்டும் என்னும் கணக்குப் போட்டு வைக்கும் அளவுக்கு ஓரளவுக்கேனும் ஒவ்வொரு குடும்பத்தையும் அறிந்து வைத்திருப்போம்.

ஆனால் புலம் பெயர் மண்ணில் அப்படியான நிலைமைகள் இல்லை. சந்திப்பவர்களில் எத்தனையோ பேர் தேவை கருதிப் பழகிவிட்டு, சமயம் வரும் போது உதைத்து விடுபவர்களாகவும், நட்பென்று சொல்லிக் கரம் நீட்டி விட்டு தருணம் பார்த்து முறித்தெறிய முனைபவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களது சுயரூபமோ, குணாதிசயமோ எடுத்த எடுப்பிலேயே யாருக்கும் தெரிந்து விடுவதில்லை. சிலரின் அநாகரீகமான பழக்க வழக்கங்களுடன் கூட ஒன்ற முடிவதில்லை.

தனிமை, அந்நியச் சூழ்நிலை என்ற ஒரு அந்தர நிலையில் தமிழர் என்று கண்ட உடனே மகிழ்ச்சியில் திளைத்து, அவர்கள் பற்றி எதுவுமே தெரியாமலே  நண்பர்களாக மதித்து வீடுகளுக்குள் அனுமதித்து விட்டு, காலப்போக்கிலோ அன்றி ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலோ அவர்களின் சில செயற்பாடுகளால் நண்டைத் தூக்கி மடியில் வைத்தவர்களாய் திண்டாடிப் போகிறோம்.

இது இன்று நேற்றல்ல. பலகாலமாக புலத்தில் தொடர்கிறது. இது போன்றதான சில சம்பவங்கள், நடைமுறைகள் போன்றவற்றின் பிரதிபலிப்புத்தான்
"தமிழர்களோ..! அங்கே வேண்டாம்." "நாங்கள் முதல் வரக்கை நல்லாயிருந்தது. இப்ப.. சரியான தமிழ்ச்சனம்." போன்றதான குரல்கள்.

அதனால் நாங்கள் முதல் வரக்கை நல்லாயிருந்தது. இப்ப.. சரியான தமிழ்ச்சனம். என்ற இந்தப் பிரச்சனையைச் சொல்லி அந்த ஆணின் குண இயல்பைக் காட்ட முனைந்தது அவ்வளவு சரியானதாக எனக்குப் படவில்லை.

அந்த ஆண் தன்னைத் திறம்பட்டவராகக் காட்ட நினைத்து அப்படிச் சொல்லும் போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. படத்தின் முடிவில் அவரின் மனசுள் இருந்த அசூசையான தன்மையைப் பார்த்த போது தனக்குள்ளே இவ்வளவு அழுக்கை வைத்திருக்கும் இவருக்கு அதைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது என்ற எண்ணமும் எழுகின்றது. ஆனாலும் சுமதி சொல்ல வந்த விடயத்தையும் அந்த நபரின் குண இயல்பையும் இன்னும் சற்று வித்தியாசமான முறையில் சொல்ல முயன்றிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

சந்திரவதனா
7.8.2004
Last Updated on Tuesday, 21 October 2014 21:57