பிரசன்னாவின் `இருளின் நிழல்' (குறும்படம்)

புலம்பெயர் சூழலில் காட்சியூடக வெளிப்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இசைப்பாடல்கள், பாடல் காணொலிகள், குறும்படங்களின் வருகை அதிகரித்துள்ளது. புலம்பெயர் நாடுகளிலிருந்தும், தாயகத்தில் மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் எனப் பல பாகங்களிலுருந்தும் குறும்படங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆங்காங்கே முழுநீளத் திரைப்படங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. லெனின் சிவம் எழுதி நெறியாள்கை செய்த 'ஒரு துப்பாக்கியும் மோதிரமும் – A Gun and A Ring' என்ற முழுநீளத் திரைப்படம் ஈழத்துச் சினிமா சார்ந்த நம்பிக்கையைத் தரக்கூடியதொரு தொடக்கம் என பரவலான பாராட்டினைப் பெற்றுள்ளது.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கின்ற இரண்டு குறும்படங்கள் எனது கவனத்தை ஈர்த்துள்ளன. ஒன்று பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் ரப் இசைக்கலைஞராகவும் பாடலாசிரியராகவும் அறியப்பட்ட சுஜித்ஜி எழுதி நெறியாள்கை செய்த 'மாசிலன்'. மற்றையது நோர்வேயைச் சேர்ந்த இளைய கலைஞர் பிரசன்னா எழுதி நெறியாள்கை செய்த 'இருளின் நிழல்'. இவற்றில் மாசிலன் குறும்படம் மணமுறிவு (விவாகரத்து) நிகழ்ந்த பெற்றோர்களுக்கிடையில் நிகழும் ஈகோ நிறைந்த செயற்பாடுகளுக்குள் பந்தாடப்படும் குழந்தையின் உளவியலை மையப்படுத்தியதாக உருவாக்கப்பட்டிருந்தது. இருளின் நிழல் குறும்படம் பற்றிய பதிவு இது. மாசிலன் குறும்படம் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் எழுத முயற்சிக்கிறேன்.

'இருளின் நிழல்' குறும்படம் தமிழ் ஊடக மற்றும் கலை இலக்கியத் தளங்களில் பேசாப் பொருளாகவுள்ள புலம்பெயர் சூழலின் சமூக அநீதி ஒன்றினைப் பேசியுள்ளது. புலப்பெயர்வின் இருண்மையான பக்கமொன்று கதைக்கான கருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எதிர்கால வாழ்வுக்கான கனவுகளோடும், அந்தக் கனவுகளுக்காக பெருந்தொகை கடனையும் உழைப்பையும் மூலதனமாக்கி முன்னேறத் துடிக்கும் தமிழ் இளைஞர்களின் வாழ்வியல் துயரத்தினைப் பேசியிருக்கின்றது.

நோர்வேயில் தமிழ் ஊழியர்கள் சில சிறு தமிழ் முதலாளிகளால் மோசமாக சுரண்டப்படும் நிலைமை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நோர்வே தமிழ்3 வானொலியின் விவரண நிகழ்ச்சியொன்றில் ஒலிபரப்பப்பட்டிருந்தது. நோர்வே தேசியத் தொலைக்காட்சியில் (NRK) ஊடகவியலாளராகப் பணியாற்றும் ராஜன் செல்லையா தயாரித்திருந்த அந்த வானொலி நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த சில ஊழியர்கள் தமக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். ஆயினும் தமிழ் ஊடகப்பரப்பிலும் கலைப்படைப்புகளிலும் இந்த அநீதி இதற்கு முன்னர் அதிகம் பேசப்பட்டதில்லை என்ற வகையிலும் இக்குறும்படம் முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்தப் பின்னணியில், இக்குறும்படம் சார்ந்து சமூகக் கண்ணோட்டத்திலான பார்வையையும், குறும்படத்தின் கலைத்துவ வெளிப்பாடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தும் சுருக்கமாகப் பகிர்வதே இந்தப்பதிவின் நோக்கம்.

ஈழத்திலிருந்து முகவர்களுக்கு பெருந்தொகை பணத்தை இறைத்து, அவர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அழைத்துவரப்படும் இளைஞர்கள் அந்நாடுகளில் வாழ்விட உரிமையைப் பெறுவதில் எதிர்நோக்கும் சிக்கல்கள் அதிகம் வெளியில் தெரியாதவை. பயணவழியில்கூட மாதக்கணக்காக அல்லற்பட்டே பலரும் ஏதோவொரு நாடுகளில் தஞ்சமடைகிறார்கள். அதுமட்டுமல்ல வாழ்விட உரிமை என்பதற்கு அப்பால் தற்காலிக வதிவிட உரிமையோடு வேலை செய்வதற்குரிய உரிமையைப் பெறுவது என்பதுகூட சுலபமான காரியமல்ல என்பதை நாம் அறிவோம். இது அந்தந்த நாடுகளின் வெளியுறவு, குடிவரவு அரசியல், வெளிநாட்டவர் சார்ந்த அந்தந்த நாடுகளின் நிலைப்பாடு, தாயகத்தின் அரசியல் சூழல் மற்றும் அனைத்துலக அரசியலோடு தொடர்புபட்ட விடயங்களாகும்.

இவ்வாறான சூழலுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மனிதர்கள் உழைப்பு புலம்பெயர் நாடுகளிலுள்ள சில தமிழ் முதலாளிகளால் எப்படி சுரண்டப்படுகின்றது, ஊதியம் மறுக்கப்படுகின்றது என்பதை உணர்வுபூர்வமாகவும் நேர்த்தியாகவும் பதிவுசெய்துள்ள கலைவடிவமாக 'இருளின் நிழல்' குறும்படத்தினை அடையாளப்படுத்த முடியும். இது புலம்பெயர் நாடுகளில் பலவற்றில் நடைபெற்றதும் நடைபெறுகின்றதுமான அநீதி. இக்குறும்படத்தின் கதைக்களம் பிரான்ஸ் நாட்டில் நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

வாழ்விட உரிமை மறுக்கப்பட்ட பலர், சட்டத்திற்கு புறம்பான முறையில் வாழவேண்டிய நெருக்கடி நேரிடுகிறது. வாழ்விட உரிமை மறுக்கப்பட்ட இளைஞர்கள் எஞ்சியிருக்கும் தன்னம்பிக்கையோடு தஞ்சம் கோரும் இறுதியிடமாக விளங்குவது தமிழ் முதலாளிமார் என்பது பல நாடுகளின் யதார்த்தம். தமிழ் முதலாளிமார் என்று இங்கு சொல்லும் போது பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவகங்களை நடாத்துவோரைக் குறிக்கின்றது.

இந்த முதலாளிமாரில் சிலர் தம்மிடம் வேலை தேடிவரும் இத்தகைய இளைஞர்களிடமிருந்து கடின உழைப்பினை உறிஞ்சியெடுப்பதோடு, அவர்கள் இரவுபகல் பாராது உழைத்துச் சேர்த்த பணத்தையும் எவ்வாறு சுரண்டுகிறார்கள் என்பதும் தாம் சுரண்டியதை அவர்கள் மீளக் கேட்கும் போது, எவ்வித குற்றவுணர்வுகளுமற்று, அவர்களைக் காட்டிக்கொடுத்து நாட்டைவிட்டு அனுப்புமளவிற்கு ஈடுபடுகின்றார்கள் என்பதும் இயல்பாக வெளிப்பட்டுள்ளது.

ஒப்பீட்டளவில் இயல்பான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளமை கதையோட்டத்திற்குப் பலம் சேர்த்துள்ளது. ஓரிரு காட்சிகளில் செந்தமிழ் வசனங்கள் துருத்திக் கொண்டு வெளிப்படுவது இயல்புத்தன்மையை இழக்கச் செய்துள்ளது. கிட்டத்தட்ட 13 நிமிடங்களைக் கொண்டுள்ளது. இக்குறும்படத்தின் பின்னணி இசை நேர்த்தியாக உள்ளது. கதையோட்டத்திற்கு ஒத்திசைவாக, அதனை நகர்த்திச் செல்வதில் இசையின் பங்கு நேர்த்தியாகவுள்ளது.

இதில் பங்குபற்றியுள்ள நடிகர்கள் பாத்திரங்களின் தன்மையுணர்ந்து இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். முதன்மைப் பாத்திரமேற்று நடித்திருக்கும் குணபாலன் மற்றும் ரஜிந்த் ஆகியோரின் வெளிப்பாடு குறிப்பிடத்தக்கது. உரையாடல் வெளிப்பாட்டில் நாடகப்பாணி சற்று எட்டிப்பார்த்தாலும், நல்லவர் போன்ற புறத்தோற்றத்தையும், வஞ்சகம் கொண்ட அகத்தோற்றத்தையும் குணபாலன் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட இளைஞனாக நடித்திருக்கும் ரஜிந்த் சிறப்பான தெரிவு. இயலாமை, ஏக்கம், விரக்தி அப்பாவித்தனம் என அவரின் நடிப்பும் நேர்த்தியாக வெளிப்பட்டுள்ளது.

பிரசன்னா ஏற்கனவே சில குறும்படங்களையும் சில பாடல் காணொலிகளையும் உருவாக்கியுள்ளார். பிரசன்னாவின் கலைத்துறை ஈடுபாட்டினை ஆரம்பத்திலிருந்து அவதானித்து வருபவர்கள் இந்தக் குறும்படத்தில் கதைசொல்லல், திரைக்கதை அமைப்பில் முன்னேற்றத்தினைக் காணமுடியும். புலம்பெயர் வாழ்வியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மைக்கதை என்பதும் தடுமாற்றமில்லாத திரைக்கதையும் இக்குறும்படத்திற்கு வலுச்சேர்த்துள்ளது எனலாம்.

தொழில்நுட்பக்கூறுகளில் இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம். ஒளிப்பதிவிலும் ஒளியமைப்பிலும் (Cinematography and Lighting) மேலும் கவனம் செலுத்தியிருப்பின் இதன் தொழில்நுட்பத்தரம் மேலும் உயர்ந்திருக்கும். காட்சிகள், கோணங்களில் (Camera frames and angles) சற்று நேர்த்திக்குறைவு தென்படுகின்றது. படத்தொகுப்பும் அவ்வாறே. படத்தின் எல்லாக் காட்சிகளிலும் இருண்மை ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஆனால் எடுத்துக்கொண்ட பேசுபொருள் இருண்மை சூழ்ந்தது என்ற வகையில் படம் முழுவதும் பிரக்ஞையோடு அந்த இருண்மை கொண்டுவரப்பட்டதா அல்லது வசதியின்மை, வளமின்மை காரணமாக ஒளியமைப்பு உரிய முறையில் அமைக்கப்படவில்லையா என்ற கேள்வி எழுகின்றது. படம் முழுவதும் இருண்மை நிறம் நிறைந்திருப்பதைத் தவிர்த்திருந்தால் இதன் கலைத்துவ மற்றும் காட்சிபூர்வ அழகியலுக்கு மெருகூட்டப்பட்டிருக்கும்.

இக்குறும்படம் புலம்பெயர் வாழ்வியலின் சமூக அநீதி ஒன்றினைப் பேசமுற்பட்டுள்ளது என்ற அடிப்படையில் ஒரு சமூகப்பிரக்ஞையுடைய ஆக்கமென அடையாளப்படுவதோடு முக்கியத்துவமும் பெறுகின்றது.

ரூபன் சிவராஜா
06.10.2014


Quelle - Ponguthamizh


Drucken   E-Mail

Related Articles