home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 16 guests online
விருட்சமாக எழ விழுந்த வித்து PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by கவிஞர் நாவண்ணன்   
Wednesday, 25 June 2014 06:16

(கவிஞர் வற்றாப்பளையூர் தீட்சண்யன் நினைவாக புலிகளின் குரல் வானொலியில் 19.5.2000 அன்று ஒலிபரப்பப்பட்ட சிறப்பு நிகழ்ச்சி.)


விருத்தம்

வளர்பிறை முழுமை கொள்முன்
தேய்ந்திருள் சூழ்ந்ததென்ன!
மலரிதழ் விரியுமுன்னே
மண்ணிலே உதிர்ந்ததாமோ!
தளர் நடை பயில் குழவி
தணலிடை எரியலாமோ!
தமிழ்க்கவி வற்றாப்பளையூர்
தீட்சண்யா தீய்ந்தாயோ நீ!

உரை

வன்னியிலே கவி படித்த வானம் பாடி
வற்றாது சுரந்து நின்ற தமிழின் ஊற்று
முற்றாக ஓய்வெடுக்க முடிவு கொண்டு
முடிவடையா பயணத்தைத் தொடங்கி விட்டாய்
அன்றொருநாள் கவியரங்கில் தலைமை தாங்கி
அன்ப நீ பிறந்த இடம் விபரம் கேட்டேன்
கரும்புலிகள் நினைவு நாள் கவியரங்கில்
கரும்பான நின் கவிதை சுவைக்கு முன்னே
விரும்பாது இருந்தாலும் என் வினாக்கு
விடையாக நீ கொடுத்த பதிலீதன்றோ?

தீட்சண்யன் பதில்:

வடமராட்சியின் வீரம் விளையும்
பருத்தி நகரில் பிறந்தவன்
இடம் பெயர்வென்று ஏதும் வர- முன்னரே
வன்னிக்கு   நகர்ந்தவன்
வற்றாப்பளையென்னும் வளம் கொழி பூமியில்
வாழ்வு அமைத்தவன்
எத்தேசத்திருப்பினும் ஈனமாய் வாழ்வதை
முற்றாக வெறுப்பவன்
சுதந்திர வேட்கையின் சூக்கும வேதத்தை
உள்ளாரச் சுகிப்பவன்
உடலால் ஊனமுற்றிருப்பினும்
உளத்தால் களத்தில் நிற்பவன்
ஆடாத் தலைவனின்
வாடா வேகப் புயல் மூச்சதனில்-மாறா
ஈழம் மாண்புடன் மலருமென
மனதார நினைப்பவன்
தீர்க்கமான திடநெஞ்சு கொண்ட
போhர்க்குணத் தீட்சண்யன்


உரை:

ஆமாம், நீ
தீர்க்கமான திடமனது கொண்ட
போர்க்குணத் தீட்சண்யன் தான்
ஈனரைக் கண்டு எரி தழலாய் எழுந்த
மானத் தமிழ் கவிஞன்
நாணல் என வளையாத
கூனல் விழா நெஞ்சன்
தியாகராசா சிவகாமசுந்தரி
தம்பதிகளின் முதல் மகனாய்
பருத்தித்துறை ஆத்தியடியில்
மூத்த பாலகனாய் பிறந்து
பாவலனாய் வளர்ந்தவனே!
எட்டான பிள்ளைகளில்
எழுவருக்கும் மூத்தவனே!
பிறேமராஜன் என்று
பெற்றவர்கள் பெயரிட்டார்.
பின் நாளில் நீயோ
தீட்சண்யன் உருவெடுத்து
திகட்டாத கவி புனைந்தாய்

தேசத்தை நேசித்த கவிஞனே!
மண் மீது கொண்ட பாசம்
நின் மனையிலே பிறந்தது
நீயோ மானமுற்ற தமிழ்க் கவிஞனாகி
மனையிருந்தே தீ வளர்த்தாய்
பருத்தித்துறை ஹாட்லியில்
கற்ற கல்வியும் - ஆங்கிலமும்
பேராதனை ஆசிரியர் கல்லூரி ஞானமும்
தமிழும் ஆங்கிலமும் கை கட்டிப் பணிபுரிய
ஆசிரியப் பணியோடு
அன்னை மண் மீட்புக்கும்
உட்கார்ந்து இருந்த படி
உறுதியுடன் பணி புரிந்தாய்

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என
பாரதி மொழிந்த பா மொழிக்கு ஒப்ப
தாயக மீட்புப் போருக்கு துணை செய்து
தமிழிலே நீ பெயர்த்த புத்தகங்கள் பற்பலவாம்
ஆழ்கடல் போல் ஆர்ப்பரிப்பு ஏதுமின்றி
அமைதியாய் நீ செய்த போராட்டப் பங்களிப்பு
அடுத்தவர்க்குத் தெரியாது
அதை உன்னிடம் கொடுத்தவர்களுக்கும்
செய்து கொடுத்த உனக்கும்
மட்டுமே தெரியும் அந்த மகத்தான சேவை.

தீட்சண்யனின் இறுதிக்கவிதை

இங்கே தயவு செய்து மலர் போட வேண்டாம்
தமிழீழத்திற்குக் கொஞ்சம் உரமேற்றுங்கள்

செத்துவிட்டேன் என்றா நினைத்தீர்கள்
இல்லை ஐயா, வித்தாகி விட்டேன்-விருட்சம் வரும்

புரிந்து கொள்ளுங்கள் இது சிதையல்ல
பட்டறிவுப் புத்தகம் பக்கம் புரண்டு கிடக்கிறது

வேண்டுமென்றா செத்தேன்? வினை
அந்த வினை வேறல்ல
நாண்டு நின்று நல்லவரை நாசமாக்கும்
பழிக்கு  நான் ஆளானேன்
-தீட்சண்யன்


இறுதிக் கவிதையிலும்
ஈழத்துக்கு உரம் சேர்க்க
எழுதிச் சென்ற கவிஞா..!

தீட்சண்யன் வாழ்வு திடுமென முடிந்தது
தீட்சண்யன் திருவுடல் தீயோடு கலந்தது
கவிஞன் இவன் கவிதைகளோ வாழும்
கவிஞனே உனக்கெமது கண்ணீர் அஞ்சலிகள்
நின கடைசிக் கவிதைகளின் வரிகள் போல்
வித்தாக விழுந்தாய் விருட்சமாக வளர்வாய்

தீடசண்யா நீ தீர்க்கதரிசி.


- கவிஞர் நாவண்ணன்

---------

நீங்கள் இதுவரை கேட்டது -
கவிஞர் வற்றாப்பளையூர் தீட்சண்யன் சிறப்பு நிகழ்ச்சி

பிரதியாக்கம் - நிகழ்ச்சித்தயாரிப்பு -
கவிஞர் நாவண்ணன்

பங்கு கொண்டோர் -
சீலன், நாவண்ணன், செம்பருதி, கனிமொழி
இசை - சிறீகுகன்

19.5.2000 அன்று புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான
கவிஞர் தீட்சண்யன் சிறப்பு நிகழ்ச்சியிலிருந்து ஒரு பகுதி


நன்றி- புலிகளின் குரல் வானொலி

Last Updated on Wednesday, 25 June 2014 06:32