கடந்த பத்து நிமிடங்களில் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை நூறாவது தடவையாகப் பார்த்து விட்டேன். நேரம் மாலை 7 மணி 15 நிமிடங்கள். பாழாய்ப் போன தொடரூந்து இன்னும் வந்து சேரவில்லை. மெல்பேர்ன் 'கிலன் வேவர்லி' தொடரூந்து நிலையத்தில் நான் இழந்துவிட்ட மணித்துளிகள்தான் மிக அதிகம். மெல்பேர்னின வெள்ளவத்தை என்று கூறுமளவுக்கு 'கிலன் வேவர்லியில்' தமிழர்கள் அதிகம் வாழ்கின்றார்கள். நல்லதொரு அரசாங்க பள்ளிக்கூடம் இருப்பதால் இந்த இடம் ஈழத் தமிழரை ஈர்த்ததில் வியப்பில்லை.
எனது வாகனத்தைக் கடந்து சென்ற பலர் தலையசைத்துப் புன்னகைத்துச் சென்றார்கள். நானோ பொறுமையை இழந்து கொண்டிருந்தேன். வேனில் காலம். மாலைப் பொழுது. ஆதவனுக்கு இந்தக் காலத்தில் மெல்பேர்னில் 'ஓவர் டைம்'. கெதியில் மறையப் மாட்டான். ஆனால் என் மனதில் மெல்ல இருள் கவிழ்கின்றது. முன் பின் தெரியாத இந்தப் பெண்ணை நம்பி என் தன் மானத்தை இழந்து விடுவேனோ? அவள் வருவாளா? இல்லாவிடில் கடைசி நேரத்தில் கையை விரித்து விடுவாளா? நினைக்கையில் நெற்றியில் வியர்வை துளிர்க்கின்றது. தற்செயலாக இறுதி நேரத்தில் முடியாது என்று சொல்லிவிட்டால்...?. முதலில் அவள் இந்த தொடரூந்தில் வந்து சேரவேண்டுமே. அவள்தான் 7 மணிக்கு வரும் வண்டியில் வருவதாக செல்லிடைத் தொலைபேசியில் செய்தி அனுப்பியிருந்தாள்.
எனக்கு இது நன்றாக வேண்டும். மனைவி தடுத்தாள். எதைத்தான் அவள் தடுக்காமல் விட்டாள்? 'கூத்தாடுவதும் ... நெளிப்பதும் ஆத்தாதவன் செய்யும் செயல்' என்று அடித்துச் சொன்னாள். மெல்பேர்னின் தமிழ் வானொலிகளில் எல்லாம் என் நாடகத்தை விளம்பரப்படுத்தி விடடார்கள். ஏதோ நான் பெரிய நாடக ஆசிரியன் என்பது போல் வானொலியில் நேர்காணல் வேறு. இப்பொழுது மணப்பெண் இல்லாத கலியாண வீடு மாதிரி எனது நிலை. இங்குள்ள ஈழத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா. அதற்குத்தான் இந்த நாடகம். அந்தக் காலத்திலே கல்லூரியில் நான் ஒரு சின்ன நாடகம் போட்ட கதையை, நாசமாகப் போன ஒரு நண்பன், சங்கத் தலைவரிடம் சொல்ல, அவர் ஏதோ என்னையும் சங்கரதாஸ் சுவாமிகள் என்று கெஞ்ச, நான் இலுப்பைப் பூ சர்க்கரையானேன். ' அதுக்கென்ன செய்தாப் போச்சு' என்று வாயால் வெளுத்துப் போட்டு இப்ப வெளுத்துப் போய் நிற்கின்றேன். மானம் போகப் போகுகின்றது.
ஒத்திகைக்கே ஒழுங்காக வராத இந்தக் கதாநாயகி, விழாவன்றும் வழமை போல்' சாரி அங்கிள் எனக்குச் சுகமில்லை' என்று செல்லமாகச் சொல்லிவிடுவாளோ? ' ஓ கே அம்மா, அடுத்த ஒத்திகைக்கு ஒழுங்காக வந்திடுங்கோ' என்று தேனாகப் பல முறை சொல்லிவிட்டேன். பின்னர் மனதாறத் திட்டியும் இருக்கின்றேன். நாடகம் அரங்கேறும் அன்று அவள் வராவிட்டால்..? இங்கேயெல்லாம் கல்லெறி, முட்டை எறி கிடையாது. கொழும்பு மாதிரி பாதள உலகத்துக்குச் சொல்லத் தேவையில்லை. வெள்ளை வானில கூட்டிக் கொண்டு போக மாட்டார்கள். ஒரு பார்வை. பக்கத்தில இருக்கிறவரிடம் 'இவர்தான் ஆள்' என்று கண்ணால் ஒரு சாடை. எல்லாத் தலைகளும் ஏளனமாக என்னைப் பார்க்கும். மெல்பேர்னில் விடுதலைப் போருக்கு எதிராக இலங்கை அரசோடு கைகோர்த்து நிற்கின்ற ஒன்று இரண்டுகளுக்குக் கிடைக்கும் அதே பார்வைதான் எனக்கும் கிடைக்கும். அதுகளுக்கு உரத்த தோல். என்னால் தாங்க முடியுமா?
தோடரூந்து வருகின்றது. அதிலே அவள் வர வேண்டுமே. மற்ற நடிகர் நடிகைகளெல்லாம் 'வேர்மன்ட சௌத்' பள்ளிக்கூடத்திலே காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அங்குதான் எங்கள் ஒத்திகை நடக்கும். இவள் வந்து சேர்ந்தால் பத்து நிமிடங்களில் அங்கு போய்விடலாம். பிள்iளாயர், சிவன், முருகனெல்லாம் இப்போது என் நாவில் உருளுகின்றார்கள். எப்போதோ சோதனை எடுத்த நாட்களிலேதான் அவர்களின் நினைப்பு முன்பு வந்தது. இப்n;பாழுது இந்தக் கதாநாயகிக்காக வந்திருக்கின்றது. தொடரூந்து மெல்லிய ஓசையோடு நிற்கின்றது. பள்ளிக்கூடம் முடிந்ததும் வெளியே ஓடி வரும் மாணவர்கள் போல் தொடரூந்து நிலையத்தில் இருந்து பலர் வெளியே வேகமாக வருகின்றார்கள். நான் எனது வாகனத்தில் இருந்து உன்னிப்பாக நிலைய வாசலையே பார்க்கின்றேன். கூத்து முடிந்து கூட்டம் கலைந்தது போல் எல்லோரும் போய்விட்டார்கள். தொடரூந்தும் தன் பயணத்தைத் தொடர்கின்றது. ஆனால் அவள்..?
என் நாடித் துடிப்பு வேகமாகின்றது. 'என்னடாப்பா உன்ரை இரத்த அழுத்தம் சிறிலங்கா விலைவாசி மாதிரி மேல மேல போகுது' என்று என் வைத்திய நண்பன் நேற்றுத் தான் சொல்லி வியந்தான். இந்த நாடகத்தோடு நானும் மேலுக்குப் போய்விடுவனோ என்ற அச்சம் வேறு. அபசகுணம் மாதிரி நேற்று என் அன்பான மனைவி ' லைவ் இன்சூரன்ஸ் பொலிசிக்கு ஒழுங்காகக் காசு கட்டிரியலோ?' என்று கேட்டு வைத்தாள்.
ஒத்திகைக்குக் காத்து நிற்கும் மற்ற நடிகர், நடிகைகளை நினைத்து மனம் வருந்தியது. நடந்து முடிந்த நான்கு ஒத்திகைளில், இரண்டுக்கே தரிசனம் தந்தாள். இந்தப் பெண் நல்ல நடிகை என்று அறிமுகம் செய்து வைத்த நண்பனைச் சபித்தேன். கண்டால் அடித்து நொறுக்க வேண்டுமென முடிவெடுத்தேன்;. இனி என்ன செய்வது? வெள்ளி விழாவிற்கு மூன்று வாரங்களே இருக்கின்றன. அதற்குள் இன்னொரு நடிகையைத் தேடி எடுத்துப் பழக்க முடியாது. அப்படியென்ன, மெல்பேர்னில் நடிகைகள் கொட்டியா இருக்கின்றார்கள்? தண்டவாளம், ஒரு முழக் கயிறு என்று விபரீதமான கற்பனைகள் கடிவாளமின்றி ஒடத் தொடங்கின.
அப்பொழுதுதான் அவளைப் பார்த்தேன். பிள்ளையாரோ, முருகனோ, சிவனோ கண்ணைத் திறந்திருக்க வேண்டும். யார் கண்ணைத் திறந்தார் என்று தெரிந்தால் அடுத்த முறை அவரை மாத்திரம் கும்பிடலாம். அன்னம் போல் அடி மேல் அடி வைத்து அவள் வந்தாள். அவள் கால்பட்டால் மண்ணுக்கு நொந்து விடும் என்று எண்ணினாளோ? சுட்டும் விழிச் சுடர்தான் அவள் விழிகள். சுருண்டு அடர்ந்த கேசம். அதற்குள் சிகப்பு ரோஜா போல் மறைந்து கொள்ளும் அழகிய முகம். அவள் கதாநாயகிதான் சந்தேகமேயில்லை. அவள் பெயர் அமுதா. மெல்பேர்னில் உள்ள 'மொனாஸ்' பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானம் இறுதி ஆண்டில் படிக்கின்றாள். இருபத்தொரு வயது இருக்கும் என்று நினைக்கின்றேன்.
'சாரி அங்கிள் கன நேரமாக நிற்கிறீங்களா?' தேனொழுகக் கேட்டாள்.
நான் வழுக்கைத் தலையைத் தடவியபடி பல்லு வைத்தியரிடம் நிற்பது போல் இளித்தேன். பல்லிளிக்காமல் இந்த உலகத்திலே இப்பொழுதெல்லாம் என்னதான் செய்ய முடியும்? தடவிய கையெல்லாம் எண்ணெய். முடி வளரும் என்று சொல்லி யாரோ கொடுத்த தைலம் ஒன்றை என் மனைவி என் தலையில் கொட்டியிருந்தாள்.
' அப்பிடி ஒன்றுமில்லை' என்று பச்சையாக ஒரு பொய்யைச் சொல்லி, தலையிலிருந்த இரண்டு, மூன்று மயிரால் வழுக்கைத் தலையை மறைக்க முயன்றேன். இந்த நாடகத்தை அரங்கேற்றும் முயற்சிக்கு முன் ஆறு மயிராவது இருந்திருக்கும். அது இன்னொரு கவலை. வாகனத்தை ஓட்ட ஆரம்பித்தேன்.
எனக்கு இப்பொழுது தெம்பு வந்துவிட்டது. இவளிடம் ஒரு உறுதி மொழி வாங்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.
' அமுதா, என்ன நடந்தாலும் இந்த நாடகத்தை எப்படியாவது நடிச்சுத் தர வேணும்.' நான் கெஞ்சுவது போல் கேட்டேன்.
'என்ன மாமா அப்படிச் சொல்லிட்டீங்கள்?' 'அங்கிள்' மாமாவாக மாறியதைக் கவனித்தேன்.
'இந்த நாடகத்தில் நடிக்கிறதையே பெருமையா நினைக்கிறன். நீங்கள் என்ன எழுதிரியள்? எங்கடை மக்களின்ரை கதையைத்தானே சொல்லுறீங்கள். எழுத்தில எவ்வளவு உணர்ச்சி? எத்தனை உண்மைகள்? நீங்கள் நினைக்கிற மாதிரி என்னால வடிவாகச் செய்ய முடியுமோ என்றுதான் கவலை.'
உச்சி குளிரும் என்பார்களே, தலை விறைத்து விட்டது.
நாங்கள் ஒத்திகை நடக்கும் 'வேர்மன்ட சௌத்' பள்ளிக்கூடத்துக்கு வந்து விட்டோம். 'வேங்கை நாட்டு வேந்தன்' என்ற என் நாடகத்தின் ஒத்திகை ஆரம்பமானது. எனது உரையாடலுக்கு நடிக நடிகையர்கள் உயிர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கேலியும், கிண்டலுமான எங்கள் ஒத்திகைகள் ஓர் இனிமையான அனுபவம். என் கதாநாயகியைத் தவிர மற்ற எல்லோரும் என்னோடு நன்கு ஒத்துழைத்தார்கள். ஒத்திகைக்கு நேரம் தவறாமல் வருவதோடு களைப்பாறுவதற்கு வடை, போண்டா என்று ஏதாவது தின் பண்டங்களும் கொண்டு வருவார்கள். ஒருவரை ஒருவர் ஊக்குவிப்பார்கள். இது ஒரு கூட்டு முயற்சி என்பதை உணர்ந்து நாடகத்தின் வெற்றிக்குக் கடுமையாக உழைத்தார்கள். ' வேங்கை நாட்டு வேந்தன்' என்று ஒரு கற்பனை அரச கதை ஊடாக ஈழநாட்டுப் பிரச்சனையை கருவாகக் கொண்டு எழுதியிருந்தேன். அதனாலோ என்னவோ அவர்கள் அதைத் தங்கள் கதை போல் எண்ணி மிகவும் ஆர்வத்தோடு நடித்தார்கள். உணர்ச்சி பெருகும் நடிப்பு. கோபம், சோகம், வீரம் என்று பல கோடி உணர்வலைகளை அவர்கள் மோதவிட்டார்கள்.
மரகத நாட்டு மன்னன், வேங்கை நாட்டின் மீது படையெடுத்து வந்து விடுகின்றான். வேங்கை நாட்டு இளவரசியாக அமுதா நடிக்கின்றாள். அவள் என் வசனங்களைப் பேசும் போது உணர்ச்சி பொங்கும். அவள் தமிழ் உச்சரிப்பால், முகபாவங்களால் என் இளவரசியாகவே மாறிவிட்டாள். அவளது அபாரமான நடிப்புக்கு ஈடு கொடுக்க முயன்ற மற்றவர்களின் நடீப்பும் அதனால் உயர்ந்தது. இவளை வைத்து இதை மேடை ஏற்றி விட்டால் மெல்பேர்ன் வாழ் தமிழர் மனங்களில் நம் மண்ணில் வாடும் மக்கள் மீது அளவுக்கு அடங்கா அன்பு பொங்கும் என்பது என் எண்ணம்.
அமுதாவின் வசனம். அவளை நான் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். பொறி பறக்க அவள் பேச ஆரம்பித்தாள்.
'அப்பா, இதுவரை பேசாது இருந்தேன், தங்கள் ஆணை பிறக்கும் என்று. உங்களின் மகள் என்பதால் என்னை மறந்து விட்டீர்கள். வீட்டுக்கு ஒரு வீரன் நாட்டுக்குத் தேவை என்றீர்களே. எங்கே உங்கள் வீட்டிலிருந்து புறப்படும் வீரன்?
பெண் என்பாதால் பேதை, போர்ப் பாதை தெரியாத பூங்கோதை என்று நீங்களும் எண்ணி விட்டீர்களா?. யுத்தம் தங்கள் சித்தம் இல்லை என்பதை எங்கள் நாடறியும். ஆனால் எங்கள் மண்ணில் அந்நியன் கால் வைத்தால், அவன் தலை கட்டாந் தரையிலே உருளும் என்பதை நாளை உலகறியும். கட்டளை இடுங்கள். எங்கள் கன்னியரின் கத்தி முனையிலே அவர்களுக்குப் புத்தி புகட்டுவோம்.'
மயிர் கூச்செறிந்தது. சக கலைஞர்கள் எல்லோரும் கைதட்டினார்கள். ஆனால் எனக்கோ அவள் வசனத்திலும், முகத்திலும் காட்டிய உணர்வு, உடல் அசைவில் இல்லாதது போலிருந்தது.
'வசனம் நல்லாப் பேசுறீங்கள். ஆனால் ஒரு இடத்திலே நின்றுதான் பேசுறீங்கள். மேடை பெரிசு. அதை முழுதாகப் பாவிக்க வேணும். கொஞ்சம் அசைஞ்சு நடியுங்கோ. இன்னும் நல்லாக இருக்கும்.' என்றேன்.
அவள் முகம் கோணியது. ஓன்றும் பேசாது போய் உட்கார்ந்து விட்டாள். எனக்குப் பேயறைந்தது போலாகிவிட்டது. அதன் பின் ஒத்திகையில் அவள் உற்சாகத்தைக் காணவில்லை. முன்பு ஒரு முறையும் இதே போல்தான்.;. அவள் தான் பரத நாட்டியம் சிறு வயதில் பழகியதாக ஒரு முறை கூறி இருந்தாள். நாடகத்தில் ஒரு நடனத்தைப் புகுத்தினால் நன்றாக இருக்கும் என்றேன். முறைத்துக் கொண்டு போய் விட்டாள். ஒருவாறு இந்த நாடகத்தை அரங்கேற்ற வேண்டும். அதன் பின் இந்தப் பெண்ணின் முகத்தில் கூட விழிக்கக் கூடாது என்று எனக்குள் தீர்மானித்தேன்.
அரங்கேறும் நாள் நெருங்க, நெருங்க எனக்கு அச்சமாகவே இருந்தது. என்னுடைய வைத்திய நண்பன் இரத்த அழுத்தத்தைப் பார்த்த பின், ' மச்சான், உன்றை மரண உயிலிலை எனக்கும் ஏதாவது எழுதி வை' என்றான். ' உணர்ச்சி வசப்படாமல் கொஞ்சம் அமைதியாக இரடா' என்று அறிவுரை கூறினான்.
அடுத்தடுத்த வாரங்களிலும், அடுத்த நேர உணவுக்காகக் காத்து நிற்கும் அகதியைப் போல் தொடரூந்து நிலையத்தில் நான் காத்து நின்றேன். இப்பொழுது பழகிவிட்டது. அமுதாதான் கடைசியாக வெளியே வரும் பயணி. திரைப் படங்களில் வரும் 'ஸ்லோ மோசன்' நடை. இரசிக்கத்தான் முடியவில்லை.
விழாவிற்கு முதல் நாள். வெள்ளிக்கிழமை மாலை. ஓளி, ஒலி, மேடை அமைப்பு, ஒப்பனையோடு இறுதி இரவு ஒத்திகைக்கு அமுதாவுக்காக எல்லோரும் காத்து நிற்கின்றோம். அத்தனை சலசலப்புக்குள்ளும் வேகமாகத் துடிக்கும் என் இருதயத்தின் ஓசையை என்னால் கேட்க முடிந்தது. அவளைக் காணவில்லை. என் உடலெங்கும் வியர்த்துக் கொட்டுகின்றது. தோள் பக்கம் வலி வருகின்றதா என்று கவனமாக அவதானிக்கின்றேன். அதைத் தவிற இருதயம் நிற்பதற்கான எல்லா அறிகுறிகளையும் என்னால் உணர முடிகின்றது.
செல்லிடை தொலைபேசி அழுகின்றது. அவள்தான்.
'சாரி அங்கிள். இன்றைக்கு வர ஏலாது. சுகமில்லை. அதோட வந்தனென்றால் நாளைக்கு வர ஏலாமல் போயிடும்.'
அவள் தொலைபேசியைத் துண்டித்து விட்டாள். நான் துடித்துப் போய்விட்டேன். திருப்பி அவளோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. செய்தி கேட்டு அங்கிருந்த எல்லோரது முகங்களும் தொங்கிப் போயின. அவளை ஏசாதாவர்கள் எவரும் இல்லை. மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்க நினைத்த என்னை எல்லோரும் கோபித்துக் கொண்டார்கள். நாளை அவள் வருவாள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? நாடகத்தை இரத்துச் செய்யுங்கள் என்று சங்கத் தலைவர் கத்தினார். என் முகத்தைக் கூட அவர் பார்க்கவில்லை. அந்த சித்திரவதையை என்னால் தாங்க முடியவில்லை.
நான் கும்பிட்ட தெய்வங்களின் கருணையோ, என்னவோ? அமுதா என்னைக் கைவிடவில்லை. அடுத்த நாள் நாடகத்திற்கு வந்து சேர்ந்தாள். எதிர்பார்த்ததை விட நாடகம் நன்றாக அமைந்தது. பாராட்டுகள் வந்து குவிந்தன. எல்லோரும் மிகவும் நன்றாக நடித்திருந்தார்கள். ஆனாலும் அவள் இறுதி ஒத்திகைக்கு வராததால் பல குறைகள் எனக்குத் தெரிந்தன. நான் நாடக ஒளிப் பேழையைப் பார்த்து அகமகிழ்ந்தேன். அமுதா திறமையாக நடித்திருந்தாலும் அசையாது அழகிய சிலை போலவே சில சமயங்களில் மேடையில் காட்சி அளித்தாள். என்னைத் தவிற மற்றவர்கள் அதைக் கவனித்திருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம். இனியாவது அமுதாவின் பொறுப்பற்ற நடத்தையைக் கண்டிக்க வேண்டும் என்று எண்ணினேன். அவளைப் பெற்றவர்களையும் பார்த்து நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று நினைத்தேன். இனிப் பயமின்றி பேசலாம். நாடகந்தான் அரங்கேறி வி;ட்டதே. ஓளிப் பேழையின் பிரதியை அவளுக்குக் கொடுக்கும் சாக்கில் அவள் வீட்டுக்குச் செல்லத் தீர்மானித்தேன். தொலைபேசியில் அவளை அழைத்த போது ' வாருங்கள் மாமா' என்று மகிழ்வோடு சொன்னாள்.
அவர்கள் வீடு 'கிலன் வேவர்லியில'; இருந்து வெகு தூரத்தில் 'மில் பார்க்'; என்னும் இடத்தில் இருந்தது. ஒரு மணி நேர காரோட்டம். தெருவோரத்தின் உயர்ந்து வளர்ந்த மரங்களும்;, பழைய வீடுகளும் பல காலமாக மக்கள் அங்கே வாழ்ந்திருக்க வேண்டும் என்பதைப் பறை சாற்றின. அமுதாவின் வீட்டு இலக்கத்தைத் தேடினேன். அவர்கள் வீட்டு இலக்கம் 22. அஞ்சல் பெட்டியில் பொறிக்கப்பட்ட 22 ல் ஒரு 2 தலை கீழாகத் தொங்கியது. தனது முன்னைய நிறம் பச்சை என்று அஞ்சல் பெட்டியில் ஆங்காங்கே எஞ்சி இருந்த பச்சைப் பூச்சு சொல்ல முயன்றது. இளமையை இழந்து, ஒப்பனை இல்லாத கதாநாயகி போல் அவர்கள் வீடு 'எனக்கும் வண்ணம் பூசுங்கள்'; என்று மன்றாடியது. வாசல் படிக்கட்டருகில் நீண்டு வளர்ந்த புற்கள,; புதர்களாகி அவர்கள் வீட்டுக்குள் செல்ல எத்தனித்தன. இந்த வீட்டிலா அமுதா? இது இளவரசியின் மாளிகை அல்லவே.
அமுதாதான் கதவைத் திறந்தாள். நீண்டு விரிந்து, தரையைத் தொடும் நீல நிறப் பாவாடை. வட இந்திய சங்கீத மேதைகள் போடுவது போல் மெல்லிய நீலத்தில் சட்டை அவளது முழந்தாள் வரை நீண்டிருந்தது. என்னைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தாள்.
'வாங்கோ மாமா' என்றாள்.
அவள் குரலின் வாஞ்சை என்னைக் கவர்ந்தது. அறையில் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு பழைய தொலைக் காட்சிப் பெட்டி. அதை விடப் பழைய சோபாக்கள். அதில ஒன்றில் அமர்ந்தேன். பள்ளத்தில் விழுந்தது போலிருந்தது. சுதாகரித்துக் கொண்டேன். தந்தைக்கு உடல் நலமில்லை என்றும், தாயோடு வைத்தியரைப் பார்க்கச் சென்றதாகச் சொன்னாள். நாடகத்தைப் பற்றி அதிக நேரம் பேசினோம். சின்னக் குறைகளைச் சொல்ல மனம் வரவில்லை. அவளை மனதாறப் பாராட்டினேன். அவளது பல்கலைக் கழக வாழ்க்கையைப் பற்றி அதிகம் கதை;தாள். அடுக்களையில் பாத்திரங்களின் ஓசைகள் கேட்டன. அங்கு யாரென்று நான் கேட்கவில்லை.
'என்ன குடிக்கின்றீர்கள் மாமா?' என்றாள். 'மாமா' என் மனதைத் தொட்டது. எல்லோரும் 'அங்கிளாக' இருக்கும் போது மாமாவில் ஒரு சொந்தம் தெரிந்தது. ஏனோ அவளைக் கடிந்து பேச என்னால் முடியவில்லை.
'தேத்தண்ணி' என்றேன்.
' அண்ணே, மாமாக்கு ஒரு தேத்தண்ணி போடு' என்று சோபாவில் ஒய்யாரமாகச் சாய்ந்தவாறு உத்தரவிட்டாள்.
அது எனக்குப் பிடிக்கவில்லை. இப்படித்தான் இவள். ஓத்திகையிலும் மற்றவர்களைக் கொண்டே தேநீர் எடுப்பாள். குடித்த கோப்பை கூட கொண்டு போய் வைக்க மாட்டாள். எனக்குத் தேநீர் குடிக்கும் ஆசை போய் விட்டது. எழுந்து போய் விடலாமா என்று எண்ணினேன். சிறிது நேரம் அவள்தான் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். என் காதில் எதுவும் விழவில்லை. ஆனால் நான் அடுத்துக் கண்ட காட்சி என் இரத்தத்தைக் கொதிக்க வைத்தது.
அடுக்களை அறையில் இருந்து இரு சக்கர வண்டியின் சில்லுகளை கைகளால் உருட்டியபடி அவளது அண்ணன் வந்தான். அவன் முன்னால் தட்டத்தில் எனக்கான தேநீர் கோப்பை இருந்தது.
அவனுக்கு இரண்டு கால்களும் இல்லை.
எனக்கு எழுந்து ஓட வேண்டும் போலிருந்தது. ' அடி, சண்டாளி காலில்லாத இவனைக் கொண்டா எனக்குத் தேநீர் போட வைத்தாய்?' என்று கத்தத் தோன்றியது. அவளது அழகு ஒரு மாயத் தோற்றம். அவளுக்குள் குடியிருக்கும் அரக்கியைத்தான் என்னால் இப்போது பார்க்க முடிந்தது. அருவருப்புடன் அவளை நோக்கினேன். அவள் அண்ணன் புன்னகையோடு தேநீர் கோப்பையை நீட்டினான்.
'இந்தாருங்கோ மாமா. உங்கள் நாடகம் நல்லா இருந்தது' ஒரு இராஜகுமாரனின் குரல் அவனுக்கு. தேநீரை மறுக்க முடியவில்லை.
'அண்ணனுக்குக் காலில்லை'
'உனக்கு இதயமில்லை' சொல்ல என் உதடுகள் துடித்தன.
'உங்கடை நாடகத்தில நடிக்க எனக்கும் ஆசை. எனக்குத்தான் காலில்லையே. அரசனாக எப்படி நடிக்கிறது?' அவன் சிரித்தான். குரலில் விரக்தியை விட நகைச் சுவையே தெரிந்தது. அவன் தொடர்ந்தான்.
'எல்லாரும் கேட்கிற கேள்வியை ஏன் நீங்கள் கேட்கயில்லை? எப்பிடி கால் போச்சு?'
'அண்ணை, தொடங்காதே விடு' அமுதா தடுத்தாள்.
அவன் நிறுத்தவில்லை.
'அது ஒரு சனிக்கிழமை. இரவு ஏழு மணி இருக்கும். நான், தங்கைச்சி, அம்மா, அப்பா, என்றை சிநேகிதன் பாலன் எல்லாரும் இடியப்பம் சாப்பிட்டுக் கொண்டு இருந்த நாங்கள். அப்பதான் இராணுவத்தின்றை வெடிச் சத்தம் கேட்டிது. செல் அடிக்கிறாங்கள் என்று ஆரோ கத்திச்சீனம். பாலனும், நானும் சேர்ந்து வெட்டின பதுங்கு குழிக்குள்ள எல்லாரும் ஓடிப் போயிட்டம். பெரிய சத்தமா வெடியொன்று கேட்டிது. அதுக்குப் பிறகு எங்களைச் சுத்தி ஒரே புழுதியும், மண்ணும், புகையும். எனக்கு மேல பாலன். அவனைத் தள்ளினன். அவன் செத்துப் போயிட்டான் என்று அப்ப எனக்குத் தெரியல்லை. நான் சாகயில்லை.'
அவன் அதைச் சொல்லும் போது சக்கர வண்டியிலிருந்த அவனது துடை மேலும் கீழும் ஆடியது. முழந்தாளோடு முடிந்து போன தன் காலை அவன் தடவிக் கொண்டான்..
'அதுதான் நான் பாலனை சைக்கிளிலை வைச்சு ஓடேக்க எடுத்த படம்' சுவரில் தொங்கிய புகைப் படத்தைச் சுட்டிக் காட்டினான்.
சாதாரணமாக கதை சொல்வது போல் எந்தவித சலனமும் இன்றி அவன் சொல்லி முடித்தான்.
நான் படத்தைப் பார்த்தேன். புன்சிரிப்போடு; பாலன் உந்துரிளியின்; சட்டத்தில் இருந்தான். கம்பீரமாக அமுதாவின் அண்ணன் ஒரு காலை நிலத்தில் ஊன்றியபடி வண்டியின் ஆசனத்தில் இருந்தான்.
'பார்த்தீங்களே என்றை காலை?' அவன் முகத்தில் ஒரு பெருமை.
தேநீர் தொண்டைக் குழியில் நின்றது. என் இதயம் கனத்தது. நான் திணறினேன். ஏதும் பேச முடியவில்லை.
அமுதா மீது கோபமே பொங்கியது. அவளை வாய்க்கு வந்தவாறு ஏசி விட எண்ணினேன். அவன் முன்னால் அப்படிச் செய்ய மனம் வரவில்லை. தனியாக அவளை அழைத்து அவள் குறையை எடுத்துச் சொல்ல வேண்டும். அறிவு சொன்னது. உணர்வை அடக்கிக் கொண்டேன். என் முகம் சிவந்தது. கண்கள் அனலைக் கொட்டின. அவளை நேருக்கு நேர் பார்த்து,
'தங் யூ' என வெடுக்கெனச் சொல்லி எழுந்தேன். அமுதா வாசல் வரை வந்தாள்.
' மாமா, நானும் உங்களுக்கு ஒன்று சொல்ல வேணும்.' அவள் தயங்கினாள்.
நான் விழிகளை உயர்த்தி, என் கோபத்தை அதற்குள் அமர்த்தி என்ன என்பது போல் அவளைப் பார்த்தேன்.
'மாமா, நாடகத்தில நீங்கள் ஆடச் சொன்னீங்கள். நான் ஆட இல்லை. நடந்து நடிக்கச் சொன்னீங்கள். அதுவும் நான் செய்ய இல்லை. கடைசி நாள் ஒத்திகைக்கும் நான் வரயில்லை. நீங்கள் ஏன் என்று கூடக் கேட்கயில்லையே.'
இதற்கு மேலும் என்னால் பொறுக்க முடியவில்லை.
'கேட்கத்தான் வந்தனான். இப்ப நீ நடந்து கொண்டதைப் பார்த்த பிறகு, அது பெரிய குற்றமாகத் தெரியல்லை. ஆனால் காலில்லாத அண்ணணிட்டை வேலை வாங்கிறியே. இந்த சின்ன வயசில மற்றவர்களுக்கு உதவ வேண்டிய நீ, இருந்த இடத்திலே இருந்து உத்தரவு போடுறியே. .அதைத்தான் என்னால பொறுக்க முடியல்லை' நான் நடந்தேன்.
அமுதாவின் தழதழத்த குரல் காதில் விழுந்தது.
'மாமா' என்றாள். தொடர்ந்து விம்மல்.
'அழு. நல்லா அழு.' நான் மனதுக்குள் சொன்னேன்.
ஆனாலும் என்னை அறியாது அவளைத் திரும்பிப் பார்த்தேன். அவள் தலை குனிந்திருந்தாள். கண்ணீர்த் துளிகள் நிலத்தில் விழுந்தன. நீர் நிறைந்த கண்ணோடு என்னை நிமிர்ந்து பார்த்தாள். அடுத்து அவள் நடந்து கொண்ட முறை என்னை திகைக்க வைத்தது.
அமுதா மெதுவாகக் குனிந்து தன் பாவாடையை முழந்தாள் வரை தூக்கினாள்.
'என்ன செய்கிறாய்?' என்று ஆத்திரத்தோடு கத்தினேன்.
நான் பார்த்த காட்சி. அதிர்ச்சியுடன் நிலத்தில் அமர்ந்து விட்டேன்.
அழகான ஒரு கால்.
ஆனால் மறு கால்.....
வாடிய கொடி போல், சூம்பிப் போய்த் தொங்கிக் கொண்டிருந்தது. அவளது மெலிந்த கைகளை விட அது மெலிந்திருந்தது. தீயினால் சுட்டது போல் அதில் ஆயிரம் வடுக்கள்.
'மாமா, என்றை காலிலேயும் செல் பட்டிட்டுது. இந்தக் காலுக்கு இரத்த ஓட்டம். முழுதாக இல்லை. அதால அதுக்கு சக்தி குறைவு. கன நேரம் அந்தக் காலால எனக்கு நடக்க முடியாது. நிற்க முடியாது. அண்ணனுக்கு நோகாது. எனக்கு சரியா நோகும். ஆபரேசன் செய்தவை. முழு இரத்த ஓட்டத்தையும் அதுக்குக் குடுக்க முடியல்லை. நாடகம் நடிச்சு முடிக்கும் மட்டும் ஒரே வலி மாமா' அமுதா முகத்தைக் கைகளால் மூடி, குலுங்கிக் குலுங்கி அழுதாள். விரல்களின் ஊடே விழி நீர் கசிந்தது. அவள் இப்போது தரையில் இருந்தாள்.
என் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை.
மெலிந்து சோர்ந்த அவள் காலை எடுத்து என் மடியில் வைத்தேன்.
அதை என் கண்களில் ஒத்தி, நானும் கத்தி அழுதேன்.
என் கண்ணீர்த் துளிகள் அந்தச் சின்னக் கால்களில் விழுந்து தெறித்தன. அவள் அண்ணன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
இப்போதெல்லாம் நானும், எனது இளவரசியும் அவள் காலைக் குணமாக்கும் வைத்தியத்தைத் தேடிக் கொண்டு இருக்கின்றோம். பல விசேட பயிற்சி பெற்ற வைத்தியர்களுடன் கலந்து பேசுகின்றோம். வைத்திய சஞ்சிகைகளில் அவள் காலைக் குணமாக்க புதிய வழி முறைகள் இருக்கின்றனவா என ஆராய்கின்றோம்.
செய்தி சொல்கின்றது:
'புதிய குண்டுகள் வாங்க இராணுவ அதிகாரி வெளி நாடு பயணம்.' - தெ.நித்தியகீர்த்தி |