home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 27 guests online
நந்திக்கடல் தாண்டி... 2 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Monday, 08 February 2010 06:42
முல்லைக்கடல் தனக்கேயுரிய அமைதி கலந்த ஆரவாரத்துடன் எம்மை வரவேற்றது. அலைகள் நிதானமாக எழுந்து, சரிந்து வந்து கரையைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன. வான் கடலோடு முட்டிக் கொண்டிருந்தது. சின்ன வயதில் பருத்தித்துறைக் கடற்கரையில் நின்று, எதிர்கரையைத் தொட்டுக் கொட்டிருக்கும் வானத்தை ஒரு தடவையாவது எட்டிப் பிடிக்க வேண்டும் என்று தீராத ஆவல் கொண்டு மனம் அலைந்த நாட்கள் சட்டென்று நினைவில் வந்து போயின.

கடற்படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் மணலிலேயே கதிரைகளும், மேசையும் போட்டு எமக்காகக் காத்திருந்தார். சொன்ன நேரத்தையும் விடத் தாமதமாகவே வந்திருந்தோம். மாலையாகிக் கொண்டிருந்ததால் சுட்டெரிக்கும் வெயில் இன்றி இதமான மெல்லிய குளிர்காற்று எம்மைத் தழுவியது. இன்முகத்துடன் சூசை எம்மை வரவேற்றார்.

“என்ன.. வீட்டை வாறனான்தானே என்றார்.” ம்.. எனக்கு அது தெரியாது. அவர் எனது வீட்டுக்கு வந்து போகும் காலத்துக்கு முன்னரே நான் புலம் பெயர்ந்து விட்டேன்.
“பருத்தித்துறைக்குப் போனால் உங்கடை ஆத்தியடி வீட்டுக்குப் போகாமல் நான் திரும்பிறேல்லை.” என்றார். அம்மாவையும் தங்கைமாரையும் நன்கு நினைவு வைத்திருந்தார். தம்பி மொறிஸை இந்திய இராணுவம் தேடத்தொடங்கிய காலத்தில் அம்மாவும், அப்பாவும், தங்கைமாரும் யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். அதன் பின் தம்பி போகாத, ஸ்ரேசன் ரோட்டில் இருந்த அந்த யாழ்ப்பாண வீட்டுக்குக்  கூட தனது நண்பர்களுடன் சென்று அம்மாவைச் சந்தித்து அளவளாவி அம்மாவின் கைப்பதங்களைச் சுவைத்துச் செல்வாராம். கடற்படைத்தளபதி, கேணல் என்பதற்கும் அப்பால் எனது தம்பி மொறிஸின் நெருங்கிய நண்பனாக இருந்து எம்மோடு கதைத்தார்.

என்னால்தான் அதிகம் கதைக்க முடியாதிருந்தது. குரல் வெளிவர மறுத்தது. எனது கணவரும், பிள்ளைகளும்தான் கதைத்தார்கள். கதைத்துக் கொண்டிருக்கும் போதுதான் அவர் இயல்பிலேயே இனிமையாகப் பழகும் சுபாவம் கொண்டவர் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

வருண கிரண... பற்றி நான் கேட்டதும் முல்லைக்கடலின் அந்த எல்லையில்... என்று தொடங்கி போர் வியூகங்கள், திட்டமிடல்கள் என்று அவர் மிகவும் தெளிவாக விளக்கிய போது, வீடியோக்களில் அவரைக் களத்தில் பார்த்த ஞாபகம் வந்தது. அப்படியொரு தெளிவான விளக்கமான பேச்சு.

கதைத்துக் கொண்டிருக்கும் போதே அருகில் எங்கோ சூட்டுச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. மனம் அசௌகரியப் பட நாம் சற்றுக் குழம்பினோம். 'பயப்படாதைங்கோ. அது ஒண்டுமில்லை. பெடியள் சுட்டுப் பழகிறாங்கள். பிறகு உங்களைக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டுறன்" என்றார்.

அப்போது கரையில், வீதியில் நின்ற இன்னொரு வாகனத்தில் இருந்து ஒருவர் ஒரு பாத்திரத்துடன் இறங்கி வந்தார். நாம் வரும்போதே அந்த வாகனம் அவ்விடத்தில் நிற்பதை அவதானித்திருந்தேன். அதில்தான் சூசை அவர்கள் வந்திருக்க வேண்டும். கூடவே ரேகாவும் சிறு தட்டுக்களைக் கொண்டு வந்து மேசையில் எம்முன் வைத்து கரண்டிகளும் வைத்தான். பாத்திரத்தில் இருந்தது சில்லுக்கழி.

கடலும், வானும் இணைந்து உலகமே அதுவாய் ஒரு புறத்தை ஆக்கிரமித்திருக்க, பனைகள் மறுபுறம் நெடுத்திருக்க கடற்கரை மணலில் கதிரை போட்டமர்ந்து கடற்படைத் தளபதி சூசை அவர்களுடன் கதைப்பதிலேயே ஆனந்தித்திருந்த எமக்கு, அந்தச் சமயத்தில்  தித்திக்கும் சில்லுக்கழி பரிமாறப்படும் என்பது எந்தக் கனவுகளிலும் வந்திராத நனவு.

நியமாகவே சில்லுக்கழி தித்தித்தது. உளுத்தம்மாவும், தேங்காய்ப்பாலும் கலந்த வாசனையும், இதமான இனிப்பும் சேர்ந்து நாக்கைச் சப்புக் கொட்ட வைத்தது.

நாவுள்ள வரை மறக்க முடியாத அந்தச் சுவையுடன் சுடுபயிற்சி நடை பெறும் இடத்துக்கு மணலில் கால்கள் பதித்து நடந்தோம். வழி நெடுகிலும் ஆங்காங்கு மரங்களோடும், செடிகளோடும் மெய்ப்பாதுகாவலர்கள் துப்பாக்கிகளை ஏந்தியபடி நின்றார்கள். நாம் இருந்து அளவளாவியது வரை சற்றுத் தள்ளியே நின்ற ஒரு இளம் போராளி மட்டும் எங்களுடன் சூசையைப் பின் தொடர்ந்தான். அவனைப் பார்த்ததுமே இனம் புரியாத கனிவு மனதில். என் தம்பிமாரை ஞாபகப்படுத்தினான். மிகநேர்த்தியாக போராளிக்குரிய உடைகளை அணிந்து பிஸ்ரோல், குண்டுகள், துப்பாக்கி சகிதம் என் கண்களைப் பனிக்க வைத்தான்.

அவனைப் பார்த்துச் சிரித்தேன். அவன் கண்களில் மிகுந்த கனிவு தெரிந்தாலும் சிரிக்கக் கூடாது என்ற வைராக்கியம் கொண்டவன் போல மௌனமாகவே என்னைப் பார்த்தான். இதைப் பார்த்து விட்ட ரேகா “அக்காவைப் பார்த்து நீ சிரிக்கலாம். அக்கா எங்கடை ஆள்தான்” என்றான். அப்போதும் கூட அவன் வாய் இறுக மூடி, மௌனமாகவே தொடர்ந்தான். கனிவு நிறைந்த அந்தக் கண்கள் மட்டும் என்னைப் பார்த்து மிக மிக மென்மையாகச் சிரித்தன. மெதுமெதுவாக என் அருகில் நடக்கத் தொடங்கினான். அவன் தலையைத் தடவி ஆதரவாக இரண்டு வார்த்தைகளாவது பேச வேண்டும் என மனசு அவாப்பட்டது.

அவனது அம்மா, அப்பா, சகோதரர்கள் எல்லோருமே இந்திய இராணுவத்தினரால் அழிக்கப்பட்டு விட்டனர் என்று ரேகா மெதுவாக என்னிடம் சொன்னான். அவன் அப்போது குழந்தையாக இருந்தானாம். ரேகா எனது தம்பி மயூரனின் நண்பனாக இருந்ததாலோ என்னவோ எப்போதும் என்னோடு `அக்கா..´ என்றொரு அந்நியோன்னியத்தோடு பழகுவான். அவ்வப்போது ஏதாவது சிறுசிறு தகவல்களை என் காதில் போட்டு வைப்பான். என்னில் அத்தனை நம்பிக்கை வைத்திருந்தான்.

சுடுபயிற்சி நடைபெறும் இடத்தை நாம் வந்தடைந்ததும் பயிற்சியில் இருந்தவர்கள் சுடுவதை நிறுத்தி எம்மை வரவேற்றார்கள். எனது பிள்ளைகளுக்கு துப்பாக்கி இயங்கும் விதம் பற்றியும், இயக்கும் விதம் பற்றியும் சூசையும், அவர்களும் சிறு சிறு விளக்கங்கள் கொடுத்தார்கள். சிறிது நேரம் அங்கு பொழுதைக் கழித்த பின் ´கடலுக்குள் போய் போர்க்கப்பலைப் பார்த்து வருவோம்` என்றார் சூசை. போர்க்கப்பல் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நின்றது.

போராளிகளுடன் படகில் சென்ற போது மிக இறுக்கமாக இருந்த போராளிகள் கூட நட்போடு கதைக்கத் தொடங்கினார்கள். சிலர் கதைப்பதற்கு சங்கோஜப் பட்டாலும் சிரிப்பால் நட்பையும், மகிழ்வையும் உணர்த்தினார்கள்.

போர்க்கப்பலுக்குள் நின்று பார்த்த போது எம்மைச் சூழக் கடல். ஆக்ரோசமாக மேலெழும்பி, சுனாமியாக உயிர் குடிக்கக் கூடிய கண்ணுக்குத் தெரியாக புதிர்களையெல்லாம் தனது ஆழத்தினுள்ளே அமுக்கி விட்டு,  ஒரு வித அழகிய  லயத்தோடு அலைகளை அள்ளி வந்து கப்பலோடு மோதியது அந்தப் பெருங்கடல். அலைகளோடு இசைந்து இசைந்து எம்மைத் தாலாட்டியது கப்பல்.  ஊ.. ஊ.. என்ற ஓசையோடு வந்து எம்மைச் சீண்டியது காற்று. போர்க்கப்பலில் இருந்து குண்டுகள் எப்படி அனுப்பப் படுகின்றன, கப்பலுக்குள்ளான செயற்பாடுகள் என்ன, என்பது பற்றியெல்லாம் விளக்கிக் கொண்டிருந்தார் சூசை.

எனது பிள்ளைகளும் அதை இயக்கிப் பார்த்த போது அண்டவெளியே அதிர்ந்தது போன்ற பாரிய சத்தம் எம்மையும் அதிர வைத்தது. உடனேயே தூரத்தில், ஒரு குறிப்பிட்ட எல்லையில் நின்ற இலங்கை இராணுவமும் இரு குண்டுகளை வெடிக்க வைத்தது. நாம் கலவரப்பட்டோம். “அது சும்மாதான். தாங்களும் இருக்கிறம் எண்டதைக் காட்டுறதுக்கு... பயப்படாதைங்கோ” என்றார்கள் சூசையும், ரேகாவும்.

கரையில் இருந்து பார்க்கும் போது கவனத்துக்கு அவ்வளவாக எட்டாத தூரத்தில், மறைத்து நங்கூரமிடப்பட்டிருந்த ஒரு பெரிய கப்பலைக் காட்டினார் சூசை. அது இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்டதாம். முகத்தில் வெற்றிப்புன்னகை மிளிர்ந்தது. போராளிகளிகளின் முகங்களிலும் அந்த வீரச்செயலின் வெற்றிப்பிரதாபம் ஜொலித்தது.

காற்றின் ஓசையும், அலையின் சலசலப்பும் பெரு ஒலியெழுப்ப அதையும் விடச் சத்தமாகக் கப்பலுக்குள் கதைத்துக் கொண்டிருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. சூரியன் தன்னையோ, தன் கடமையையோ மறக்கவில்லை. அஸ்தமனத்துக்காய் விரைந்து கொண்டிருந்தான். வானம் சிவந்தது. கடலும் செந்நிறமாய் மின்னியது. கஸ்ரோவிடம் ஏழு மணிக்கு வருவதாகச் சொல்லியிருந்தோம். எனது கணவர், சொன்னபடி போய்விட வேண்டும் என்பதில் அவதானமாக இருந்தார்.

சூசை “நீங்கள் என்னட்டை வந்து இரவுச் சாப்பாட்டைச் சாப்பிட்டிட்டுத்தான் போகோணும்” என்றார். நாம் சங்கடப்பட்ட போது “கொஞ்சம் லேற்றாக வருவதாக கஸ்ரோவுக்கு அறிவிக்கிறேன்” என்றார்.

(தொடரும்)

சந்திரவதனா
4.2.2010


நந்திக்கடல் தாண்டி... 1
நந்திக்கடல் தாண்டி... 3 
Last Updated on Wednesday, 12 November 2014 10:04