home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 30 guests online
விட்டு விடுதலை காண் - மன்னார் அமுதன் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by கலைவாதி கலீல்   
Friday, 20 November 2009 07:35

கவிதைக்கென்று சில வரையறைகளும் வரம்புகளும் உள. யாப்பமைதியுடனும், அணிச்சிறப்புடனும், தளைதட்டாமல் எழுதப்படுவதே கவிதை என்பர். கவிதையில் பிழையிருப்பின் அதனைச் ´சங்கப் பலகை` ஏற்றுக்கொள்ளாது. ஒரு காலத்தில், கடினமான செய்யுள் வடிவில் இருந்த கவிதைகள், பின்னர் படிப்படியாக இலகுபடுத்தப்பட்டது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என்ற பா வகைகளைப் படித்துத் தெளிய பகுப்புரை மற்றும் தனி அரும்பத அகராதிகள் தேவைப்பட்டன.  பின்னர் செய்யுள்கள், கவிதை மற்றும் பாடல் வடிவம் பெற்றன. ஆயினும் யாப்பிலக்கணம் சற்றும் பிசகாமல் தளைதட்டாமல் எழுதப்பட்டது, அல்லது பாடப்பட்டது. காலம் செல்லச்செல்லக் கவிதையின் கடினத்தன்மையும் குறைக்கப்பட்டது. ஆயினும், கவிதை இலக்கணத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. இலகுவாய் விளங்கிக் கொள்ளத் தக்க சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும் கவிதையின் தனித்துவம் கெட்டுவிடாமல் பேணிக் காக்கப்பட்டது. அதாவது யாப்பிலக்கணம் முறையாகப் பேணப்பட்டது.

புரட்சிக் கவிஞன் பாரதிக்குப் பின்னர் கவிதை வடிவம் பல்வேறு மாற்றங்களைப் பெற்றது. சொல்லிலும் பொருளிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. செய்யுள் வடிவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கவிதை வடிவமாகிப் பின்னர் அவை வசன கவிதை, நவீன கவிதை, உரைநடைக் கவிதை, புதுக்கவிதை என்று பல்வேறு பரிணாம மாற்றங்கள் பெற்றன.  “பழையன கழிதலும் புதியன புகுதலும் வலுவில கால வகையினானே” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இம்மாற்றங்கள் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாயின. இன்றைய நவீன யுகத்தில் அந்நிய கவிதா சாரல்களும் நம் தமிழ் மீது வீச ஆரம்பித்துள்ளன. அவை “ஹைக்கூ” எனப்படும் ஜப்பானியக் குறுங்கவிதை வடிவமும், “லிமறிக்ஸ்” எனப்படும் ஆங்கிலக் ´குறும்பா` வடிவமுமாகும். எது எவ்வாறு இருப்பினும் யாப்பெனும் சிறைக்கூடத்தில் இருந்து கவிதை விடுதலை பெற்றாலும் கூட, கவிதை எனப்படுவது ´கவித்துவம்` எனும் உயிர்முச்சின் பாற்பட்டதாகும் இல்லாவிடில் அது கவிதை ஆகாது. அத்தோடு ´ஓசை` அற்றவையும் கவிதை ஆகாது. அவை வெறும் வசனங்களே! கவிதைக்கு ஓசை மிக அவசியமானதாகும். இது எனது அசைக்க முடியாத கருத்தாகும். “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை” என்றான் பாரதி. அதனைப் பின்பற்றியே கவிதை இலக்கியம் படைத்து வருகிறார், இளங்கவிஞரான மன்னார் அமுதன். அவரது கவிதைகளை நான் படித்துப் பார்த்தேன். சொல் புதிது, சுவை புதிதாக இருப்பதை உணர்கிறேன். இவர் மரபுக் கவிதைகளைத் தவிர்ந்து புதுக்கவிதைகளையே எழுதியிருக்கிறார். இவரது கவிதைகளில் மனிதநேயம், காதல், கழிவிரக்கம், விரக்தி, வேதனை, பந்தபாசம், ஏமாற்றம், எதிர்பார்ப்புகள், கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் பாங்கு, போராடும் குணம், இன்னோரன்ன உணர்ச்சி பிரவாகங்கள் இழையோடுவதை அவதானிக்க முடிகிறது. யாப்பிலக்கணத்தை மீறி மரபை உடைத்து இவர் எழுதியிருந்தாலும், இவரது கவிதைகளில் வெறும் வசனப் பாங்கு காணப்படவில்லை என்பது விசேட அம்சமாகும். பெரும்பாலான புதுக்கவிஞர்களின் கவிதைகளில் காணமுடியாத ஓசைநயம், ஓசைச்சுவை இவரது கவிதைகளில் இழையோடுவதையும் அவதானிக்க முடிகிறது.

ஒரு கவிஞனுக்கு ஆகாயத்திற்கு அப்பாலும் ஊடுருவிப் பாய்கின்ற தீட்சண்யப்பார்வை இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அமுதனின் கவிதையைப் படித்துப் பார்த்த போது தீட்சண்யப்பார்வை  இவரிடம் இருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

“விளக்கோடு எரிந்து வீழ
விட்டிலல்ல நாங்கள்
விழுந்த இடம் பொசுக்கிவிடும்
விடிவள்ளி தமிழனென்று – சொல்லடி சிவசக்தி…
விதைத்த இனம் முளைத்து வரும்
மீண்டும் உனை சிதைத் தழிக்கும்
சாம்பலாக வீழ்ந்தாலும்
பீனிக்சாய் எழுவோமென்று – சொல்லடி சிவசக்தி…"

போன்ற கவிதைகள் மூலம் கவிஞரது உளப்பாங்கையும், உணர்ச்சி வேகத்தையும், கவிதா வீச்சையும், வீரத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

வீரத்தையும் விவேகத்தையும் பாடும் கவிஞர் அழகியலையும் அழகாய் பாடுகிறார். காதலும் கனிரசமும், தாய்மைச் சிறப்பும் இவர் கவிதா வரிகளில் நர்த்தனமிடுகின்றன. சில கவிதைகள், நெஞ்சில் மெலிதாய் மயிலிறகு கொண்டு நெருடிய நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.

“ தாய் மடியில் தலைசாய்த்தால்
பசிகூட மறந்துவிடும்
வெண்குரலில் பண்ணிசைத்து
வேந்தனெனைத் துயில வைப்பாள் ”

என்று தாயின் சிறப்பைப் பாடும் கவிஞர், “ தோள்களில் சாய்ந்தும்
தலைமுடியைக் கோதியும்
மூக்கோடு மூக்கை உரசியும்
என் உயிரைப் பிழியப்போகின்றாய் ”

என்று காதலியின் இனிமையையும் பாடுகிறார்.

“ கண்ணிரண்டும் விண்மீன்கள்
காதுமடல் செவ்வானம்
புருவங்கள் பிறைநிலவு"
பூத்த பூவாய் செவ்விதழ்கள்”

என்று உவமான, உவமேயங்களை சிறப்பாகக் கையாளும் கலையறிந்த இளங்கவிஞரான அமுதனின் எதிர்காலம் பிரகாசமானது எனத் துணியலாம்.

நூலின் பெயர்: விட்டு விடுதலை காண்
நூலாசிரியர்: மன்னார் அமுதன்
விலை:150 ரூபாய்
கிடைக்குமிடங்கள்: பூபாலசிங்கம் புத்தக சாலை, பிட்ரபேன் புத்தகசாலை, ஜெயா புத்தக சாலை

 - கலாபூஷணம் கலைவாதி கலீல்
முன்னாள் உபபீடாதிபதி
உதவி ஆசிரியர் - நவமணி பத்திரிகை - இலங்கை

 

Last Updated on Wednesday, 13 February 2013 08:58