home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 35 guests online
யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி - வள்ளிநாயகி இராமலிங்கம் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by கலாநிதி பார்வதி கந்தசாமி   
Friday, 07 August 2009 05:15

பேசாப் பொருளைப் பேசத்துணிந்த குறமகள் வள்ளிநாயகி இராமலிங்கத்தின் நூல் வெளியீடு
'யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி'குறமகள் கதைகள் என்ற சிறுகதை நூலின் எழுத்தாளரான வள்ளிநாயகி இராமலிங்கம் யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஒர் ஆய்வு என்ற ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளார். இளமைக் காலம் முதல் பெண்களின் சமத்துவத்தில் அக்கறை காட்டிவந்த வள்ளிநாயகிக்கு வீட்டில் எல்லாவித தேவைகளும் நிறைவேற்றப் படக் கூடிய பொருளாதாரச் சூழ்நிலை இருந்ததாலும் தொடர்கல்விக்கான தந்தையாரின் ஆதரவு கிடைத்ததாலும் மிடுக்காக எதையும் செய்யக் கூடியவராக அவர் காலப் பெண்களுள் ஒரு புதுமைப் பெண்ணாக வாழக் கூடியவராக இருந்தார். இந்த வாய்ப்பு யாழ்ப்பாணத்துப் பெண்கள் பலருக்குக் கிடைக்காதது. காலனித்துவ மரபால் வந்த கிறிஸ்தவக் கல்லூரியூடாக ஆங்கிலக் கல்வியையும் பெற்றுக் கொண்ட வள்ளிநாயகி கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகப பணியாற்றியவர். இந்தியாவில் புவனேஸர் கல்லூரியில் வெளிவாரிப் பட்டதாரியாகி நாடக டிப்ளோமாவைக் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் செய்து கொண்டவர். தமிழார்வத்கைப் பாலபண்டித வகுப்புக்களுக்குச் சனி – ஞாயிறு கிழமைகளில் சென்று நிறைவேற்றிக் கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதுகலைமாணி வகுப்பில் கற்க முயன்ற குறமகள் ஆய்வுக் கட்டுரைக்கான தகவல் சேகரிப்பு முயற்சியின் மூலம் இந்த நூற் தொகுதியின் மூன்று கட்டுரைகளையும் எழுதிக் கொண்டார். வள்ளிநாயகியின் வீட்டுச்சூழல் காந்தியக் கருத்துக்களை இறுகப் பற்றிப் பிடிக்க வைத்தது. இவரின் சித்தப்பா ஒருவர் கல்வி கற்க வேண்டிய தேவையின் அவசியத்தை வெகுவாக உணர்த்தினார். அவருடைய கருத்துக்களால் கவரப்பட்ட வள்ளிநாயகி உயர்கல்வி கற்பதற்கு உந்தப் பட்டார்.

அவருடைய காலத்தில் ஏழாம் வகுப்புடனேயே பாடசாலைக்கு முழுக்குப் போடும் பெண்கள் பலராக இருந்தனர். ஆனால் வள்ளிநாயகி இளவாலை கிறிஸ்தவப் பெண்கள் கல்லூரியில் சேர்ந்து கல்வியில் தன்னை உயர்த்திக் கொண்டார். தன்னுடன் நடேஸ்வராகக் கல்லூரியில் ஏழாம் வகுப்பு வரை படித்த பெண்களில் இருவர் உடுவில் பெண்கள் பாடசாலைக்கும்இ நான்கு பேர் இராமநாதன் கல்லூரிக்கும் ஒருவர் இளவாலை கிறிஸ்தவ பெண்கள் கல்லூரிக்கும் சென்றதாகக் கூறிக் கொண்டார்.

குறமகளுடைய பெண்கள் தொடர்பான ஈடுபாட்டிற்குப் பின்புலமாக இருந்தது இடையாற்று மங்கலம் சூடாமணி ஐயர் என்ற நடேஸ்வராக் கல்லூரியின் அதிபரின் இடையறாத காந்தீயச் செயற்பாடுகள். அவர் இந்திய சுதந்திரம் பற்றி நிறையவே போதித்து வந்தவர். காந்தி பற்றியும் ஹரிசனர்கள் பற்றியும் ஏழைகள் பற்றியும் பலரையும் பேசுவதற்காகக் கல்லூரிக்கு அழைத்துக் கொண்டவர். இந்தியாவிற்கு அடிக்கடி சென்று வந்த வர்த்தகரான தந்தையார் சின்னத்தம்பியின் உதவியினால் சரோஜினி நாயுடுஇ கமலா நேருஇ மோதிலால் நேருஇ விஜயலட்சுமி பண்டிற் போன்றோர் பற்றிய ஏராளமான நூல்களைப் பெற்று வாசித்துக் கொண்டார். அத்துடன் நடேஸ்வராக் கல்லூரியின் நாடகங்கள் மேடையேற்றிய சமயத்தில் காட்சி மாறும் வேளையில் முன்புறமாக வள்ளிநாயகியும் செய்தி அறிவிப்பாளர் விக்னேஸ்வரனின் தாய் கமலாவும் வள்ளி ராதை கிருஷ்ணர் வேடமிட்டு ஆடியது கூட அக்காலத்தில் பெண்கள் முன்நின்று செய்யாத விடயமாக இருந்தது. வைரமுத்து குழுவினரின் நாடகங்களையும் காங்கேசன்துறையில் அடிக்கடி பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததும் நாடக ஆர்வம் இவருக்கு எழக் காரணமாயின.

கிறிஸ்தவப்பெண்கள் கல்லூரி தன் கல்வி உயர்வில் முக்கிய பங்கை ஆற்றியுள்ளது எனக் கூறினார் குறமகள். பெண்கள் சீர்திருத்தம்இ சமத்துவம் தொடர்பாகச் சிறுகதைகளை எழுதி வந்த குறமகள் முதுமானிப் பட்டப் படிப்பிற்காக ஆய்வை மேற்கொள்ளத் தொடங்கிய போது கூமப் பெண்கல்வியை ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டார். ஆய்வு முழுமையாக முற்றுப் பெறா விட்டாலும் ஆய்வு மூலம் அவர் எழுதிக் கொண்ட மூன்று கட்டுரைகளும் அவருடைய ஆய்வுப் புலமைத்துவத்தை யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி என்ற நூலில் வெளிக்காட்டுவதைக் காணலாம். இந்நூலில் அந்த மூன்று கட்டுரைகளும் தொகுக்கப் பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பெண்களின் கல்விப் பாரம்பரியம்: 18ம் நூ.ஆ தொடக்கம் 19ம் நூற்றாண்டு வரை என்பது முதலாவது கட்டுரையாகும். இந்நூலுக்கு முகவுரை எழுதிய பேராசிரியர் கா. சிவத்தம்பி “இக்கட்டுரை வரன் முறையாக மேற்கொள்ளப்பட்ட ஒரு சீரிய ஆய்வின் முதல் வரைபு என்று கொள்ளப் படத்தக்கது. இக் கட்டுரையில் இடம் பெறும் தரவுகள்இ தகவல்கள்இ ஆராய்ச்சி வியாக்கியானங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது மிக்க ஆர்வத்துடன் மிகப் பெரிய ஒரு பரப்பினை அலசி ஆராய்ந்துள்ளார் என்பது தெரிய வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது கட்டுரையாக சைவமும் தமிழும் வளர்த்த தமிழ்ச்செல்வி பார்வதி அம்மையார் பற்றியும் மூன்றாவது கட்டுரையாக காந்திய வழி சமூகசேவையாளர் “தமிழ மகள்”_ மாசிலாமணி மங்களம்மாள் பற்றியும் எழுதியுள்ளார். மங்களம்மாளை நேரடியாகவே சந்தித்து முதல் தர ஆய்வுத் தரவுகள் பெற்றுக் கொண்டவர். இந்நூலின் பின்னிணைப்பாக மங்களம்மாளின் முதல் சந்திப்பும் தொடர்பும்இ புகையிரதப்பாதைஇ டாக்டர் வண.பீற்றர் பேர்சிவல் பாதிரியார் பற்றியும் கொடுக்கப் பட்டுள்ளது.

மங்களம்மாள் பற்றிய வரலாறு யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்களுடைய உயர்வு எத்தகைய சமூகப் பரிமாணங்களைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகின்றது. இலங்கைப் பெண்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்தவர்கள் இதுவரை வெளிக்கொண்டு வராத தமிழ் மகள் என்ற பத்திரிகையை நடாத்திய வண்ணார் பண்ணை வாசியான மங்களம்மாள் பற்றிய தகவல்களை ஆய்வு மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளமை வள்ளிநாயகியின் ஆய்வுப் புலமையை வெளிப் படுத்துகின்றது.

பெண்கல்வி என்று பார்க்கும் போது யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தில் நிலவிய பெண்கள் பற்றிய கருத்தாக்கம் பால்நிலை சார்ந்தவை என்பதை வள்ளிநாயகி துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றார். வள்ளிநாயகி தனது முகவுரையில் நாவலர் மேல் வைத்திருந்த மதிப்பு அவருடைய நாலாவது பாலபாடத்தை வாசித்ததும் அதிர்ச்சியைத் தந்ததாகக் கூறுகின்றார். நாவலர் பெண்களைத் தீட்டுக்குரியவர்களாகக் கருதி அவர்களுக்கான உயர்வு பற்றிச் சிந்திக்கவில்லை. அவருடைய சமய நூல்களில் பெண்கள் எது எல்லாம் செய்யக் கூடாது என்பது பற்றி எழுதியுள்ளார்.

இந்நூலுக்கு ரொறன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்களும் ஆங்கிலத்தில் முன்னுரை வழங்கியுள்ளார். வள்ளிநாயகி போன்று ஈழத்துப் பெண்கள் கல்விப் பாரம்பரியத்தையோ ஈழத்துப் பெண்களுடைய வாழ்வியல் பிரச்சினைகள் பற்றியோ ஆய்வுகளை யாரும் இன்னமும் ஆழமாக மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இவருடைய ஆய்வு பெண்கள் பற்றிய நீண்ட ஆய்வுகளுக்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.
Last Updated on Sunday, 09 August 2009 10:39