home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 97 guests online
ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் PDF Print E-mail
Tamils - கலைகள்
Written by வதிரி சி. ரவீந்திரன்   
Tuesday, 28 July 2009 09:55

இசைத்துறையின் வரலாறு இந்தியாவிலேயே தோற்றம் காண்கிறது. அதன் ஒரு செயல் வடிவமான பரதமும் அங்குதான் பிறந்தது. இதன் வளர்ச்சியின் பின்புலமாக மற்றைய நாடு களிலும் இக்கலைகள் வளர்க்கப்பட்டன. இந்த வளர்ச்சியின் ஒரு நாடாக எமது நாடும் அங்கீகாரம் பெறுகிறது. எமது மக்களின் இசை, நடன வளர்ச்சியின் ஆர்வம் காரணமாக நம்மவர்கள் இசை, நடனம் மற்றும் இசை வாத்தியங்களை தென் இந்தியாவில் சென்று கற்று பாண்டித்தியம் பெற்றவர்களாக விளங்குகின்றனர். யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய பகுதிகளில் தென்னிந்திய வித்துவான்கள் வந்து இசை வகுப்புகளை நடாத்தியுமுள்ளனர். ஒரு காலத்தில் இந்திய தவில் - நாதஸ்வரக் கலைஞர்களுக்கு இணையாக நமது கலைஞர்களும் திகழ்ந்தனர். இசையின் ஒரு பகுதியான நாட்டுக் கூத்து தமிழர்களின் பாரம்பரியக் கலையாகும். இதே போன்று காமன் கூத்து மலையகத்தின் பாரம் பரியக்கலையாக இருப்பதையும் உணர முடிகிறது.

நமது மக்களுக்கென்று பாரம்பரியக் கலைவடிவங்கள் இருந்தாலும் நம்மவர்களுக்கென்று ஒரு இசைவடிவம் இருக்கவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. இசைப்பேரரசு திரு. சண்முகரத்தினம் அவர்களின் இசையில் பல பாடல்களை பலர் பாடியிருந்தனர். இதை இலங்கை வானொலியே ஒலிபரப்பி வந்தது. இதே போன்று வீரமணி ஐயர் அவர்கள் பாடல்களை எழுதி, இசையமைத்து பாட வைத்துள்ளார். இவரது பாடல்கள் கீர்த்தனங்களாக அமைந்தன. இவரது பாடல்களை மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன், T.M. சௌந்தரராஜன் ஆகியோரது குரல்களிலும் கேட்கின்றோம். இவைகள் கர்நாடக இசையிலமைந்த பாடல்களாகவே இருந்தன.

1969ல் காவலூர் ராஜதுரை அவர்களால் வர்த்தக சேவை நிகழ்ச்சிக்காக பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. நம்மவர் பாடலில் நம்மவர் குரல் ஒலித்ததாக திரு. விக்னேஸ்வரன் கட்டுரையொன்றில் குறிப்பிடுகின்றார். (வடமராட்சியின் இசைப் பாரம்பரியம் நூல்) இதன் பின் தமிழருக்கு தனித்துவமான இசையொன்று தேவையென பலர் ஆதங்கம் கொண்டமையால் இதனைப் பூர்த்தி செய்ய மர்ஹம் H.M.B. முகைதீன் வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

1970-71 காலப்பகுதியில் இலங்கை வானொலியில் H.M.B. பணிப்பாளர் சபையில் அங்கம் வகித்த போது மெல்லிசைப் பாடல்கள் என்ற நிகழ்ச்சிக்கு அங்கீகாரம் வழங்கினார். அன்றைய காலத்தில் ஈழத்து இரத்தினம் எழுதிய அனேக பாடல்களே பாடப்பட்டன. ஈழத்து இரத்தினம் தென்னிந்தியாவின் தமிழ் சினிமாவுக்கும் பாடல் எழுதியதாக ஞாபகம். படத்தின் பெயர் ஞாபகத்தில் இல்லை. மெல்லிசைப் பாடகராகத் தெரிவு செய்யப்பட்ட முதல் கலைஞர் தானென பாடகர் முத்தழகு கூறுகிறார். மெல்லிசைப்பாடலின் பிதாமகனென ‘பரா’ என்று அழைக்கப்பட்ட திரு. S. K. பரராஜசிங்கம் பெயர் பெறுகிறார். இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகக் கடமை புரிந்த பரா அவர்கள் இயற்கையான இசைஞானம் மிக்கவர். பரா பற்றிய இன்னொரு தகவலையும் சொல்லி வைக்க வேண்டும். பராவும் இவரது சகோதரர் Dr. மகேஸ்வரனும் ஒரு காலத்தில் இசைக் கச்சேரிகள் செய்தார்களென்ற தகவலை மூத்த இலக்கிய ஆர்வலரான த. இராஜகோபாலன் சொல்லக் கேள்விப்பட்டேன். பராவின் இனிமையான குரலும் இசைஞானமும் பராவை நல்ல தொரு மெல்லிசைப் பாடகனாக்கியது.

இலங்கை வானொலியின் இசைப் பகுதியில் சேவையாற்றிய பலர் இசையமைத்து மெல்லிசைப் பாடல்கள் வெளிவந்தன. இசையமைப்பாளர்களாக ஆரம்பத்தில் M. முத்துசாமி, றொக்சாமி, லத்தீப், T.V. பிச்சையப்பா கண்ணன் - நேசம் ஆகியோர் இசையமைத்த பாடல்களே ஒலிபரப்பப்பட்டன. ஆரம்பத்தில் பாடல்கள் வெளி வந்தபோது பல விமர்சனங்கள் வந்தன. இன்று இருக்கும் கேள்வியைத்தான் அன்றும் கேட்டார்கள். இந்தியாவின் பாடல்களோடு நெருங்குமா? இசைகள் ஏதோ தகரத்தில் அடிப்பதாக ஏளனம் பண்ணினார்கள். யார் கேள்விகளைக் கேட்டாலும் மெல்லிசையை இரசிப்பதற்கென்று ஒரு சிறு கூட்டம் இருந்ததை மறுப்பதற்கில்லை. நம்நாட்டுப் பாடல்கள் ஒலிபரப்பும் போது நான் வானொலிக்குக் கிட்டச் சென்று விடுவேன். எனது வீட்டிலே “மெல்லிசைப்பாடல்” நடக்குதென்று சொல்வார்கள். இந்தப் பாடல்களை நான் திருமணமாகி பிள்ளைகள் பிறந்த பின்பும் ஆர்வமாக இரசித்திருக்கின்றேன். இந்த மெல்லிசைப் பாடல்கள் பற்றி நான் பேசிக் கொள்வதற்கு ஒரு ரசிகன் இருந்தார். அவர் பராவின் நல்ல நண்பனாவார். அவர் சட்டத்தரணி செ. பேரின்ப நாயகம். அவர் நல்ல இசை ரசிகன். அவரும் சில பாடல்கள் ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தார். அதனால் இருவரும் பேசி மகிழ்வோம். அவரிடம் இன்றும் ஒலி நாடாக்கள் இருக்கின்றன.

நம்நாட்டுக் கவிஞர்கள் பலரது பாடல்கள் இசையமைத்துப் பாடப்பட்டன. ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராஜன், பா. சத்தியசீலன், அல்வைச்சுந்தரன், அங்கையன் கைலாசநாதன், பளீல்காரியப்பர் ஆகியோரே நினைவில் வருகின்றனர். நம் நாட்டு சினிமாப் பாடல்களும் மெல்லிசைப் பாடல்களுக்குள் அடக்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வந்தன. அதனால் தென்னிந்தியப் பாடல்களுடன் நமது பாடல்கள் இணையாகுமா என்று கேட்டதில் வியப்பில்லைத் தான்! பாடல்களை பதிவு செய்வதிலே ஆரம்பித்த நமது கலைஞர்களுக்கு நல்ல பக்கவாத்தியங்கள் இருக்கவில்லை. பழைய வாத்தியக்கருவிகளுடன், சிங்கள தமிழ் கலைஞர்களுடன் செய்ய வேண்டிய சூழ்நிலை. கலையகத்துள் குறிப்பிட்ட நேரத்துள் ஒத்திகை, ஒலிப்பதிவு செய்யவேண்டுமென்ற தகவல்களை வானொலி நிகழ்ச்சிகளுக்கு நானும் சென்று வந்தபின்பே நமது கலைஞர்களுக்கு இருந்த தடைகளை அறியமுடிந்தது.

ஆரம்பத்தில் கோகிலா, சுபத்திரா, அம்பிகா தாமோதரம், முல்லைச்சகோதரிகள், பார்வதி சிவபாதம் என்று இன்னும் பலரும் பரா, குலசீல நாதன், அருமைநாயகம், சந்திரசேகரன், முத்தழகு, கணபதிப்பிள்ளை, சத்தியமூர்த்தி என்று இன்னும் பலரும் பாடக் கேட்டுள்ளேன். பாடல்கள் மனதுக்கு மகிழ்வைத் தந்தன. பராவின் பாடல்களான கங்கையாளே, சந்தன மேடையின் நிலவினிலே, அழகான ஒரு சோடிக்கண்கள், குல சீல நாதனின் ஞாயிறென வந்தாள், ஈழத்திரு நாடே என்று பாடல்கள் வரும். என். சண்முகலிங்கனின் பல பாடல்களை பராவும், குலசீலநாதனும் பாடியுள்ளார்கள். இதேவேளை சில்லையூரானின் பாடல்களும் பராவையும் குலசீலநாதனையும் உச்சத்துக்கு கொண்டு சென்றன. பளீல் காரியப்பரின் “அழகான ஒரு சோடிக்கண்கள்” என்ற பாடலும் ஒரு முத்திரை பதித்த பாடலாகும். சில்லையூரானின் கவித்திறனுக்கு “ஞாயிறென வந்தாள்” என்ற பாடல் பெரும் புகழ் சேர்க்கிறது. கிழமைகளையும், மாதங்களையும் வைத்து மிக அழகாக வடித்த பாடலாகும். அக்கவிதையின் உயிர்த்துடிப்பு சில்லையூரின் வாயால் வரும்போது இன்னும் மெருகுபெறுகிறது. (சில்லையூரின் கவிதைச் சிமிழ்) முத்தழகு பல பாடல்கள் பாடினாலும் “எண்ணங்களாலே என்ற பாடலே நினைவில் வருகிறது. அப்பாடல் “அனுராகம்” என்ற படப்பாடலாகும்.

கோகிலா சுபத்திரா சகோதரிகளும் மனதுக்கினிய பாடல்களைப் பாடியவர்களாவர். ‘கங்கையாளே’ என்ற பாடலிலும் இவர்களின் பங்களிப்பு இருந்ததாக எண்ணுகிறேன். அம்பிகா தாமோதரம் அவர்கள் இசைப்பேரரசு சண்முகரத்தினத்தின் இசையமைப்பில் பல பாடல்களை மெல்லிசை என்று வரும் முன் பாடியுள்ளார். இனிமையான குரல், அடக்கமான ஏற்ற இறக்கங்களுடன் அவரது பாடல்கள் அமைந்திருக்கும். “மாணிக்கத் தேரிலே மயில் வந்தது மயிலாசனத்திலே மயில் வந்தது” என்ற பாடலையும் அவர் பாடியிருந்தார். இதன் பின் இப்பாடலை வேறொரு மெட்டமைப்பில் பாடகர் அமுதன் அண்ணாமலை பாடிப் புகழ் கொண்டார். வேல்விழா நிகழ்வுகள், திருவிழாக்களிலும் இப்பாடலையும் அண்ணாமலை பாடுவார். இவரது இப்பாடலுக்கு பெருமதிப்பு இருந்து வந்தது. முள்ளியவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட முல்லைச் சகோதரிகளின் குரலும் இனிமையானது. இவர்களது பாடல்கள் அனேகமாக அல்வைச்சுந்தரனின் கவிதை வரிகளையே பாடிக் கொண்டிருந்தது. தைதையென தைமகளும் வந்தாள், பாடு நண்பா பரிசுதரும்பூமி என்ற பாடல்களும், இன்றோர் புதிய தினம் எங்கும் புதுமை மணம் ஆகிய பாடல்களும் ஞாபகத்தில் வருகின்றன. மெல்லிசைப்பாடல்கள் பற்றிக் குறிப்பிடுகையில் அல்வைச் சுந்தரன் பற்றிய தகவலையும் கூறவேண்டும். அல்வாயைப் பிறப்பிடமாகக் கொண்ட த. சுந்தரலிங்கம், நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தின் உயர்தர வகுப்புச் சித்தியடைந்தவர். பண்டிதர் வீரகத்தியிடம் தமிழ் இலக்கணம் கற்றமையால் மரபுக் கவிதைகள் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரைப் போன்றே கருணை யோகன் என்ற கலாநிதி செ. யோகராஜாவும் நல்ல கவிதைகளைப் படைத்தவர். வடமராட்சியில் அல்வைச்சுந்தரன், கொற்றை பி. கிருஷ்ணானந்தன், நெல்லை நடேஷ், கோவி நேசன் ஆகியோரும் நானும் பல கவியரங்குகளில் பங்கேற்றுள்ளோம். அல்வைச் சுந்தரன் ஆசிரியராகி எட்டியாந்தோட்டையில் சேவையாற்றுகிறார். இன்று கவிதையை மறந்து ஒரு புகைப்படக் கலைஞராகவே பிரபல்யம் பெற்றுள்ளார்.

மெல்லிசைப் பாடகர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள் என்று பலர் நம் நாட்டுப் பாடல்களுக்குள் பங்களிப்பு செய்துள்ளனர். அதற்காக எல்லோரையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் முடியவில்லை. தங்களைக் கூறவில்லை என்று யாரும் எண்ணவும் தேவையில்லை. ஏனெனில் பாடல்கள் வரும் போது வானொலி, தொலைக்காட்சியில் அவர்களது பெயரும் வந்து கொண்டுதானிருக்கும். அதற்காக யாரும் கவலைப்படத் தேவையில்லை. மெல்லிசைப் பாடல்களுள் “அழகுநிலாவானத்திலே பவனி வரும் வேளையிலே” என்ற பாடலும் இனிய சுகத்தைத் தரும் பாடலாகும். இப்பாடலைப் படியவர் மு. செ. விவேகானந்தன் என்பவராவார். முத்து சாமியின் இசையில் மண்டூர் அசோகா எழுதிய பாடலென எண்ணுகிறேன். இப்பாடலும் மிகவும் பிரபல்யம் பெற்ற பாடலாகும். இந்த மெல்லிசை வட்டத்துக்குள் பலபெண்பாடகி களும் உள்ளே நுழைந்தனர். சக்திதேவி குருநாதபிள்ளை, அருந்ததி ஸ்ரீரங்கநாதன், புஸ்பாராஜசூரியர், ஜெகதேவி விக்னேஸ்வரன், வனஜா ஸ்ரீனிவாசன், ஜனதாசின்னப்பு, திவ்யமலர் ஆகியோரையும் குறிப்பிடலாம். அருந்ததியின் பாடல்கள் நன்றாகத்தானிருக்கின்றன. என்றாலும் இவரது குரலும் சகோதரியான அம்பிகாவின் குரலும் சிலவேளை ஒரே மாதிரியிருப்பதை அவதானிக்கலாம்.

சில்லையூரானின் “சிக்கனமே சிறந்த செல்வமடி” என்ற பாடலை யார் பாடினார்கள் என்ற கேள்வி என்னுள் எழுகிறது. அருந்ததியின் புதல்வன் சாரங்கன் ஸ்ரீரங்கநாதனும் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கண்ணன் - நேசம் என்ற இசையமைப்பாளர்கள் இலங்கையின் தமிழ் சினிமாவுக்கும் பங்களிப்பு செய்துள்ளனர். கண்ணன் இன்றும் யாழ்ப்பாணத்தில் பல பாடல்களுக்கு இசையமைத்து இசைத் தட்டுக்களாக வெளிக்கொணர்ந்துள்ளார். கண்ணன் - நேசம் இசையமைப்பில் ‘புதுறோஜா மலரே’ என்ற பாடலை பாக்கியராஜா தொலைக்காட்சியில் பாடியிருந்தார். அது வானொலியிலும் ஒலிபரப்பாகி இருந்தது. இப்பாடலை ஷெல்லிதாசன் எழுதியிருந்தார். ஷெல்லிதாசன் பல புதுக்கவிதைகளை எழுதியவர். இப்போ எழுதாமல் ஓய்ந்துவிட்டார். புதுறோஜா மலரே என்ற பாடலையும் மௌளகுரு எழுதிய சின்னச் சின்ன குருவிகள் என்ற பாடலையும் எனது மூத்த மகனுக்கு பாடிக்காட்டுவேன். அவரும் பாடிப் பாடி சிறுவயதில் தூங்கிக் கொள்வார். இப்பாடல்களை எனது மகன் வளர்ந்த பின்பும் பாடிக்காட்டுவான். கால நிகழ்வுகளால் மௌனகுரு எழுதிய அந்தப் பாடல் ஒலிபரப்பத் தடையாகி விட்டது.

“நாளை இந்த ஈழ நாட்டை நடத்தப்போகும் குருவிகள்” என்பது தான் அந்த வரிகள். இந்த வரியை புரியாததினால் இப்பாட்டை நிறுத்தி விட்டார்கள். அமுதன் அண்ணாமலையின் மண்குடிசை என்வீடு மாளிகைதான் என்மனசு என்ற பாடலும் முத்தமிழ் முருகனுக்கு மூன்று தலம் என்ற பாடலும் அண்ணாமலையின் பாடல்களுள் பெயர் பெற்றவை. கதிர் சுந்தரலிங்கம், அன்சார் ஆகியோரது பாடல்களும் நினைவில் வருகின்றன.

“அழகான பாட்டொன்று பாடாய்” என்ற பாடல் ‘அரங்கேற்றம்’ நிகழ்ச்சியில் பாடிய N. கிருஷ்ணனின் முதலாவது மெல்லிசைப் பாடலாகவும் இடம்பெற்றது. இவர் அதிகம் பாடலைப் பாடவில்லையென்றாலும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் பாராட்டுப் பெற்றவையாக அமைந்தன. இவர் கலாவதியுடன் பாடிய சொல்லத்தான் நானும் எண்ணித்தான் நாளும் என்ற பாடல் மறக்க முடியாத பாடலாகும். இப்பாடலுக்கு திருமலை பத்மநாதன் இசையமைக்க K.K. மதிவதனன் பாடலை யாத்துள்ளார். கலாவதி ஈழத்து மெல்லிசைத் துறையில் மட்டுமல்ல, சிங்களப் பாடல்களையும் பாடியுள்ளார். அதே போன்று முத்தழகுவும் சிங்களத்தில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

முத்துசாமிமாஸ்ரரின் இசையில் பாட ஆரம்பித்த N. ரகுநாதன் அவர்கள் முத்துசாமியின் மகன் மோகன்ராஜ் அவர்களின் இசையிலும் பாடியுள்ளார். பூச்சூடும் நேரம் வந்தாச்சு, நினைப்பது எல்லாம் நடக்குது என்ற நினைவினில் மயங்காதே என்ற பாடலும், மாத்தளை முத்துமாரியம்மன் பற்றிய பாடல்களை M.S. செல்வராஜாவின் இசையிலும் பாடி தனக்கென ஒரு இடத்தை பதித்துக் கொண்டார். வானொலியில் இசைக்கச்சேரி செய்யும் கலைஞரான இவரது மெல்லிசைப் பாடல்கள் தனித்துவமானது தான். அடுத்து சத்தியமூர்த்தி என்ற பாடகன் ஒரு சங்கீதக் கலைஞனோவென எண்ணத் தோன்றுகிறது. அவர் பாடிய “ஓ வண்டிக்காரர்” என்ற பாடல் நீலாவணனை நினைவுபடுத்திக் கொள்கிறது. சங்கீத ஞானம் கொண்ட கலைஞனாக சத்தியமூர்த்தியை பதிவு செய்கிறது.

மெல்லிசைப்பாடல்களுக்கு முன்பு பொப்பிசைப்பாடல்கள் வானொலியிலும், அரங்குகளிலும் வேகமாக வந்து கொண்டிருந்த வேளை பொப்பிசைக் கலைஞர்கள் பைலா ஆட்டப் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார்கள். மெல்லிசைப் பாடல்கள் புகுந்தவேளை வானொலியில் கடமையாற்றிய S. ராமச்சந்திரன், A.E. மனோகரன் ஆகியோரும் பல பாடல்களை பாடியிருந்தனர்.

சங்கீதபூஷணம் M. A. குலசீலநாதன் அவர்களே முதலில் மெல்லிசைப் பாடல்களை பாடியிருந்தார். இதன் பின் சங்கீத பூஷணங்களான L. திலகநாயகம்போல், S. பத்மலிங்கம் ஆகியோரும் மெல்லிசைப் பாடல்களை பாடியிருந்தனர். திலகநாயகம் போல் பாடிய நித்திரையில் தூங்கும் நித்திலமே வாராய் என்ற பாடல் இன்றும் காதில் வந்து ஒலிக்கிறது. S. பத்மலிங்கத்தின் “பாட்டுக்கு நீயொருகம்பன் என்ற பாடலும். ராமமூர்த்தியின் இசையிலமைந்த “உச்சி வெயில் காட்டினுள்ளே” என்ற பாடலும் பிரசித்தி பெற்றவை.

ஒரு காலகட்டத்தில் மெல்லிசைப்பாடல்களை இந்தியக் கலைஞர்களான ஜொலி ஏபிரகாம், T.M.S.. இன் புதல்வர் செல்வகுமாரும் பாடியிருந்தனர். அப்போது ஈழத்தின் மெல்லிசையா? இந்தியாவின் மெல்லிசையா எனக் கேட்டனர். ராமமூர்த்தி இசையமைக்கலாமென்றால் இந்தியக் கலைஞர்கள் பாடக் கூடாதா? என்ற கேள்வி மட்டும் எழவில்லை. ஏனெனில் இவர்கள் இலங்கை வந்தபோது தற்செயலாக பங்குபற்றிய நிகழ்வாகும். ஆனால் ஈழத்துப் பாடல் என்ற பெயர் அழிந்து மெல்லிசைப்பாடலென்ற பெயர் நிரந்தரமானது. திருமதி பார்வதி சிவபாதம் என்ற பாடகி ஆரம்பகாலத்தில் பல பாடல்களைப் பாடியவர். இவர் பாடிய “மல்லிகை பூத்த பந்தலில்” என்ற பாடல் இன்றும் நினைவில் நிற்கிறது.

மெல்லிசைப் பாடகர்களுக்கான தேர்வு காலத்திற்கு காலம் நடைபெற்று வந்தது. இதில் பல கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழில் பாடவல்ல சுஜாதா அத்த நாயக்கா சந்திரிகா டீ அல்விஸ் (பின்னாளில் ஸ்ரீவர்த்தனா) ஆகியோரும் பாடலைப் பாடினார்கள். சந்திரிகா பாடிய “ஆடி வரும் தென்றலே பாட்டுப்பாடவா!” என்ற பாடல் மனதில் பதிந்திருந்தது. இப்பாடல் சிங்களப் பாடலாகவும் மொழிமாற்றம் செய்யப் பட்டிருந்தது. சில சிங்கள இசையமைப்பாளர்களும் மெல்லிசைப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அனேகமாக ரூபவாஹினியில்தான் இது நடந்தது.

1977 இன் வன்செயலின் பின்பு சுதந்திரன் பத்திரிகையில் ஒரு கேலிச்சித்திரம் வந்திருந்தது. தங்கரதம் போலே பொங்கி வரும் மலரே எந்தன் ஈழநாட்டை பார்த்தாயா? சிங்களமும் தமிழும் சேர்ந்து நடம்புரியும் மங்காத காட்சியில் பூத்தாயா? என்ற மெல்லிசைப் பாடலை எழுதி தமிழர்களை சிங்களவர்கள் பஸ்வண்டியில் இறக்கி கொலை புரிவது போன்ற கேலிச் சித்திரம். இந்தப்பாடல் முன்பு வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வந்தது. மெல்லிசைப் பாடலும் கேலிச்சித்திரத்திற்கு பயன்பட்டது என்பது பலருக்கு தெரியாத விடயம்.

மெல்லிசைப்பாடல்களுக்கு ரூபவாஹினியும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தது. ஜெகதீசன், நிலாமதி, ஸ்ரீதர் பிச்சையப்பா, மகிந்தகுமார், கணேஸ்வரன், ராணியோசெப் என்று ஒரு கூட்டமே இருந்தது. இங்கும் அருணா செல்லத்துரை அவர்கள் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார். ‘உதயகீதம்’ என்ற நிகழ்ச்சியை தயாரித்து வளர்ந்து வரும் பாடகர்களை பாட வைத்தார். திவ்யராஜன், ஜெயபாரதிதாசன், விஜயரத்தினம், யாதவன், மொறின் ஜெனற் போன்றவர்கள் இதனூடாக பாடவந்தவர்களென எண்ணுகிறேன். S. மகேந்திரன் என்பவர் இசையமைத்து நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

பல பாடகர்களின் பெயர்களைக் குறிப்பிட்ட நான் ஜோசப் ராஜேந்திரனை மறந்திருந்தால் அது பெருந்தவறாகும். ஏனென்றால் இவரும் ஒரு ஆரம்பகால பாடகன், பரா, குலசீலநாதன், ஜோசப், ராஜேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள். ஜோசப் ராஜேந்திரனின் பாடல்கள் மிகவும் இனிமையானவை. இவர் நவாலியூர் செல்வத்துரையின் ‘காத்திருப்பேன் உனக்காக’ என்ற படத்திலும் பின்னணி பாடியுள்ளார். அடுத்து பொன் சுபாஷ்சந்திரன் பாடிய திருமலையில் ஒரு நாள் திருமணம் நடந்ததுவாம் என்ற பாடலும் இன்னும் சில பாடல்களும் ஞாபகத்தில் வருகின்றன. மகிந்தகுமார் ஒரு சிறந்த பாடகர். அவர் பாடிய “கற்பனை செய்வதால் கோடி சுகம்” என்ற பாடலை மிகவும் விரும்பிக் கேட்பேன். காரணம் இந்தப்பாடலை எழுதியவரும் சில்லையூரான்தான்! அவரது கவிதைகள், பாடல்களை ரசிப்பதிலே அலாதிப்பிரியம் கொண்டவன் நான். சில்லையூரானிடம் இருந்த சிறப்புகள் எல்லோருக்கும் கிடைக்காது. அது அவருக்கு ஒரு கொடை. மகிந்தகுமார் பாடிய அந்தப்பாடல் சில்லையூரான் இறப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதியதாக இருக்கலாம். பல கவிஞர்கள் மெல்லிசை மூலம் பாடலாசிரியர்களாக வந்தனர். மூத்த கவிஞர்களுக்கு பின்பு வந்தவர்களில் V. ஜெகதீசனின் பாடல்வரிகள் சிறந்தவை. வலுமென்மையாக காதலையும் இயற்கையையும் வைத்து கச்சிதமாக எழுதும் திறன் கொண்டவர். மரபு, ஓசையோடு பாடலெழுதிய கவிஞர்களுக்கெல்லாம் என்னாலும் பாடலெழுத முடியுமென ஒரு புதுக்கவிஞரும் புறப்பட்டார். புதுமைக்கவியென்றும் இவரைக் குறிப்பிடலாம். அவர்தான் மேமன் கவியாகும். இவரது பாடல்கள் வானொலி தொலைக்காட்சிகளில் பார்த்தும் கேட்டுமுள்ளேன். இவருடைய கவிதைகள் சில புரியாவிட்டாலும் மெல்லிசைப் பாடல் கவிவரிகள் ரசிக்கும் படியாக இருக்கிறது. அந்த வகையில் ‘கவிபாய்’ கலக்கி விட்டாரென்றே கூறவேண்டும்.

ச. ஷஜகான் (சிவகுமார்) பற்றி செய்திகள் வந்து கொண்டிருந்தன. அவருடைய பாடல் அல்பம் வெளிவந்ததாக அறிந்தேன். வானொலி தொலைக்காட்சியென்று விட்டு வைக்காதவர். நல்ல குரல் வளம் மிக்கவர். பாரதியார் வேடமிட்டு ஒரு மெல்லிசைப் பாடலைப் பாட பார்த்துள்ளேன். அவரது மென்மையான குரலிலே எனக்கு கூடிய அன்பு! அப்சராஸ் இசையிலும் பாடியவர். கவிஞர் ‘கனிவுமதி’  இசை அல்பம் வெளியீட்டு விழாவில் மெல்லிசை பற்றி ஏதோ பேசியிருந்தார். முதல் பாடல்களை ரசித்துக் கேட்க வேண்டும். M. மோகன்ராஜ் அக்னி சிவகுமார், நிலுஷ்ஷி ஆகியோரும் மிகவும் சிறந்த மெல்லிசைப் பாடல்களைப் பாடியுள்ளனர். சில பாடல்களை சிவகுமார் இசையமைத்துள்ளார். எத்தனையோ நல்ல பாடகர்கள் இருக்கிறார்கள். நீதிராஜசர்மா, கலைக்கமல் ஆகிய கலைஞர்களும் மறக்க முடியாதவர்கள். கவிஞர் H.M. ஷம்ஸ் நல்ல பாடகர், பாடலாசிரியர். இவரது “வெண்புறாவே” பாடல் காலத்தால் அழியாத கவிச்சித்திரமாய் விளங்குகிறது. இன்னும் இப்பாடலை நினைத்து கனவு காணுகின்றோம். விடிவு காணவேண்டும் என்ற ஆசை!

சினிமாப்பாடல்கள் பாடினால் மெல்லிசை பாடமுடியுமென எண்ணியவர்கள் பலர். அப்படிப் பாடப்போய் சந்தர்ப்பம் கிடைக்காமல் போனவர்களும் உளர். இன்னும் சிலர் சங்கீதத்தை பாடமாகக்கற்று டிப்ளோமாபட்டம் பெற்று வானொலிக்கு கச்சேரி செய்ய முடியாதவர்களாகவும் இருந்தனர். இவர்களுக்கெல்லாம் மெல்லிசைப்பாடல் கைகொடுத்தது. தங்கள் குரலை மெல்லிசையூடாக வானொலியில் ஒலிபரப்பி வைத்தனர். மெல்லிசை என்பது இலகு சங்கீதம். இந்த மெல்லிசையை நம் தமிழரின் ஒரு இசை வடிவமாக பதிக்க வேண்டுமென்ற அவாவே இருந்தது. அதற்காகவே மெல்லிசை என்ற பெயரோடு மலர்ந்தது. ஆனால் சில இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் மெட்டுக்குப் பாட்டுபோட்டு பாட்டுவரிகளை நீட்டி வைத்தனர். இதனை இந்தியச் சினிமாப்பாடல்களின் வரம்பிற்கு கொண்டுவர முயன்றனர். ஆனால் அது வெற்றியளிக்காமலே போய்விட்டது. பாடலாசிரியர்கள் இயற்கையைப் பாடுகின்றேன் என்று பொருத்தமற்ற வரிகளை வலிய இழுத்து போட்டு பாடல்களை கீழே விழுத்தியுமுள்ளனர்.

மெல்லிசைத்துறைக்குள் காரை செ. சுந்தரம்பிள்ளை, செ. குணரத்தினம், அம்பி போன்ற மூத்த கவிஞர்களும், அன்பு முகைதீன், கார்மேகம் நந்தா, அக்கரைப்பாக்கியன், மண்டூர் அசோகா, இறைதாசன், எழில்வேந்தன் இன்னும் பலர் பாடல்களை எழுதியுள்ளனர். விபரமாக எழுதுவதெனில் எல்லாப் பாடல்களையும் கேட்ட பின்பு ஒரு ஆய்வு செய்தால் மெல்லிசையின் வளர்ச்சி பற்றி அறிவதற்கு ஏதுவாக அமையும். இங்கு நினைவில் நின்ற பாடல்களையும், பாடகர்களையும், கவிஞர்களையுமே எழுதியுள்ளேன். இது பற்றிய சிறந்த ஆய்வு வந்தால் வரவேற்கக் கூடிய விடயமாகும். மெல்லிசைக்கு இலங்கை வானொலியும், வாஹினியும் கூடுதலான வாய்ப்பை வழங்க முன் வரவேண்டும். அப்போதுதான் நமக்கென்று ஒரு இசைவடிவம் நிறைவு காணும்.

வதிரி சி. ரவீந்திரன்

Last Updated on Saturday, 09 July 2011 20:40