கடந்து வந்த நமது சினிமா - 4

குசுமலதா திரைப்படத்தின் தோல்வியின் பின் நீண்ட ஆண்டுகளாக இலங்கைத் தமிழ்த் திரையுலகத்தைப் பற்றி தமிழர் யாரும் சிந்தித்ததாகப் பதிவுகளில் இல்லை. ஹென்றி சந்திரவன்ச என்ற சிங்களவரே தமிழ் படத்தைத் தயாரிக்க முன் வந்தார். முதல் சிங்களத் திரைப்படத்தை தமிழரான எஸ்.எம். நாயகம் தயாரித்ததற்கு இது நன்றிக் கடனாகவும் இருந்திருக்கலாம்.

தமிழில் அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி என்ற நாவலைத் தழுவியே முதல் இலங்கைத் தமிழ்ப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டது. அந்தத் திரைப் படத்திற்கு சமுதாயம் என்ற பெயரிட்டு  தயாரிப்பாளரான ஹென்றி சந்திரவன்சவே இயக்குநராகவும் பணியாற்றினார். சமுதாயம் திரைப்படத்தை 35 மி.மீ. பிலிமில் எடுப்பதாகவே ஆரம்பத்தில் திட்டமிடப் பட்டிருந்தாலும் படத்தைத் தயாரிக்க ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினையால் இப்படம் 16 மி.மீ. பிலிம்மில்தான் வெளிவந்தது. ஆனாலும் ரெக்னிக் கலரில் சமுதாயம் இருந்தது.

சமுதாயம் திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதாவும் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கின்றார். பின்னாட்களில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பான இரத்தத்தின் இரத்தமே திரைப்படத்தில் கீதாவின் மகள் நடிகை ராதிகா நடித்திருக்கின்றார்.

சமுதாயம் திரைப்படத் தயாரிப்பில் இடையிலேயே சில சிக்கல்கள் எழுந்தன. இப் படத்தில் கதாநாயகனாக நடித்த வி.தங்கவேலுவிற்கும் ஹென்றி சந்திரவன்சவேயிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் வி.தங்கவேலு மற்றும் சிலரும் இடையிலேயே விலகிக் கொண்டனர். ஆதலால் ஹென்றி சந்திரவன்ச வேறு நடிகர்களை வைத்து சமுதாயத்தைத் தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. வி.தங்கவேலுவின் பாத்திரம் எஸ்.என்.தனரத்தினத்திற்குத் தரப்பட்டது. பின்னாட்களில் பெருமளவு குணசித்திர வேடத்தில் தோன்றிய எஸ்.என்.தனரத்தினம் அவர்கள் ஒரே நேரத்தில் ஒரே கதையை தமிழிலும், சிங்களத்திலும் தயாரிக்கும் முறை உருவாகக் காரணமாக இருந்தார். இதனால் தமிழில் தோல்வி கண்ட திரைப்படங்கள் சிங்களத்தில் ஓரளவேனும் கைகொடுத்து தயாரிப்பாளரது நிதி நிலமை பாதிக்காத ஒரு நிலை ஏற்பட வாய்ப்பானது.

சமுதாயத்தில் இருந்து வெளியேறிய வி.தங்கவேலு சும்மா இருக்கவில்லை. அவர் சமுதாயம் படத்தில் இருந்து தன்னுடன் வெளியே வந்த நண்பர் ஏ.அருணனுடன் சேர்ந்து புரட்சி என்ற 35 மி.மீ. படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். புரட்சியில் வி.தங்கவேலுவே கதாநாயகன். ஆனால் புரட்சியை பாதியிலேயே கைவிட்டுவிட்டார். வழமை போல் கலைஞர்களுக்குள் ஏற்படும் போட்டி பொறாமை உட்பூசல்கள் இத்திரைப்படத்தைத் தயாரிப்பதிலிலும் ஏற்பட்டது. போதாததற்கு போதிய நிதிகளும் இல்லாததால் புரட்சி பாதியிலேயே நின்று விட்டது. இதுதவிர எஸ்.எம். நாயகம், கடல் கடந்த தமிழர் என்ற தமிழ்க் கலர் படத்தில் வி.தங்கவேலுவிற்கு முக்கிய வேடம் தருவதாக அறிவித்தார். ஆனால் அப்படம் விளம்பரத்தோடு நின்றுவிட்டது.

சமுதாயத்தில் நடிகர்கள் பிரச்சினை ஒருவாறாக முடிவுற்றாலும் வேறு இரு பிரச்சினைகள் தலை தூக்கின. முதலாவதாக படத் தயாரிப்பின் நடுவே பொருளாதாரப் பிரச்சினை எழுந்தது. அதில் பங்கு பற்றிய கலைஞர்கள்  பொதுமக்களிடம்  அன்பளிப்புக்களைப் பெற்றே அந்தத் திரைப்படத்தை முழுமையாக்க உதவியிருக்கிறார்கள்.

இரண்டாவது பிரச்சினை சமுதாயத்தை திரையிட சினிமா அரங்கங்கள் கிடைக்கவில்லை. இறுதியாக 1962இல் பொறளை என்ற இடத்தில் உள்ள வை.எம்.பீ.ஏ. மண்டபத்தில்தான் சமுதாயத்தை வெளியிட முடிந்தது. இதன் பின்னரும் திரையரங்குகள் கிடைக்காததால்  இந்தத் திரைப்படம் நாடு முழுதும் பவனி வரத் தொடங்கியது. எப்படியென்றால் பாடசாலைகள், மண்டபங்கள் தோறும் மக்கள் காட்சிக்காக காட்டப்பட்டன. இறுதியாக இலங்கைத் திரைப்படக் கூட்டு ஸ்தாபனத்தின் ஆதரவில் தெமட்டக் கொட என்ற இடத்தில் மானல் தியைரங்கில் திரையிடப் பட்டது. அதில் பிரதம விருந்தினராக தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்:ஜே. வி. செல்வநாயகம் அவர்கள் கலந்து கொண்டார். எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் இரண்டே இரண்டு திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்து இருக்கின்றார். ஒன்று சமுதாயம். இரண்டாவது 1968இல் வெளிவந்த ஏ.ரகுநாதனின் நிர்மலா.

16 மி.மீ. பிலிம்மில் தயாரிக்கப்பட்ட சமுதாயம் இலங்கையின் முதல் தமிழ் திரைப்படம் என்ற பதிவைப் பெற்றது போல் தோட்டக்காரி திரைப்படம் அடுத்த பதிவைச் செய்து கொண்டது. இலங்கையின் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 35 மி.மீ. பிலிமில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் என்பதே அதன் பதிவாகும்.

தோட்டக்காரி திரைப்படத்தை பி.எஸ்.கிருஸ்ணகுமார் இயக்கியிருந்தார். அவரே இத் திரைப்படத்தின் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை சமுதாயம் படத்தில் இருந்து இடையில் விலகிக் கொண்ட வி.தங்கவேலுவே தயாரித்திருந்தார். கதாநாயகியாக சிங்கள நடிகை ஜெயஸ்ரீ நடித்திருந்தார். இதுவும் ஒரு நீண்ட காலத் தயாரிப்பாக இருந்திருக்கிறது. காரணம் என்னவெனில் தயாரிப்பாளரான வி.தங்கவேலுவிடம் போதிய பணம் இருக்கவில்லை. எப்பொழுது அவர் கையில் பணம் கிடைக்கின்றதோ அப்பொழுது மட்டுமே இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்.

திரைப்படத் தயாரிப்பில் முன் அனுபவம் இல்லாததால் தோட்டக்காரி தயாரிப்பில் மேலும் மேலும் நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டு வி.தங்கவேலு சிரமப்பட்ட போது கலையார்வம் கொண்ட ரஞ்சனி முத்துவேல் அவர்கள் பண உதவி செய்து தோட்டக்காரி தயாரிப்பில் உதவி செய்திருக்கின்றார். தோட்டத் தொழிலாளரைப் பற்றிய கதையைக் கொண்ட இத் திரைப்படத்தில் எஸ். தொண்டமான், அஸீஸ் ஆகியோரின் உரைகளும் இடம் பெற்றிருந்தன.

தோட்டக்காரி திரைப்படம் 28.03.1962 இல் இலங்கையில் ஒரே நேரத்தில் ஒன்பது திரையரங்குகளில் திரையிடப் பட்டிருந்தது. இரண்டு கிழமைகளுக்கு மேல் இத்திரைப்படம் திரையரங்குகளில்  தங்கவில்லை. ஏகப்பட்ட தொழில் நுட்பப் பிழைகள் இருந்ததாக அறியமுடிகிறது. இந்தப் படத்தின் தோல்வி பி.எஸ்.கிருஸ்ணகுமாரை தளரச் செய்து விடவில்லை. 1964இல் மீனவப் பெண் படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். நெறியாள்கையையும் இவரே செய்தார். இதுவும் ஒரு நீண்டகாலத் தயாரிப்பே. ஏறக்குறைய பத்து ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. காரணம் நிதி நெருக்கடியே. இறுதியாக 1973இலேயே திரைக்கு வந்தது.

தோட்டக்காரி திரையில் தங்காதது போல் வி. தங்கவேலுவும் நீண்ட நாட்களுக்கு இலங்கையில் தங்கவில்லை. 1950ம் ஆண்டளவில் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வி.தங்கவேலு ஆரம்பத்தில் சிற்றுண்டிச்சாலையிலும் பலசரக்குக் கடையிலுமே வேலை பார்த்தார். பின்னர் தானே சொந்தமாக பலசரக்குக் கடை, சைவச் சாப்பாட்டுக் கடைகளை நிர்வகித்து நடத்தி வந்தார். சினிமா மோகத்தில் தனது இரண்டு நிலையங்களையும் விற்று சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு கையைச் சுட்டுக் கொண்டு பின்னாளில் இந்தியா போய்விட்டார். அதன் பின்னர் அவரது தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

(இனியும் வரும்)

- மூனா
7.11.2004

கடந்து வந்த நமது சினிமா - 1
கடந்து வந்த நமது சினிமா - 2 
கடந்து வந்த நமது சினிமா - 3
கடந்து வந்த நமது சினிமா - 4
கடந்து வந்த நமது சினிமா - 5
கடந்து வந்த நமது சினிமா - 6


Drucken   E-Mail

Related Articles