
"எங்கள் குடும்பத்தில் தாத்தா மிகவும் முக்கியமான மனிதர். இன்று இந்த நாட்டில் வசிப்பவர்கள் எங்கள் தாத்தாவை அவர்களது இதயத்துக்குள் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையை எண்ணிப் பார்க்கும் போது, நான் மிகவும் நேசிக்கும் என் தத்தாவைப் பற்றிய பெருமையை வார்த்தைகளால் வெளிப்படுத்த என்னால் முடியவில்லை” என Tom Mooreஇன் பேரன் Benjie குறிப்பிடுகிறான்.
Tom Mooreஇன் இடுப்புப் பகுதியில் நடந்த ஒரு அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் Walker இல்லாமல் அவரால் நடமாட முடியாமல் போயிற்று. கொரோனா வைரசின் தாக்குதலின் அனர்த்தங்களை பார்த்தும் கேட்டும் விட்டு அந்தப் போர்வீரனால் வீட்டுக்குள் வீழ்ந்து கிடக்க முடியவில்லை. பிரித்தானிய தேசிய சுகாதார சேவைக்கு பணம் சேகரித்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. நிதி சேகரிப்புக்காக, தனது வீட்டின் பிற்பக்கம் தோட்டத்தோடு அண்டிய 25 மீற்றர் அளவிலான தூரத்தை நாளொன்றுக்கு 100 தடவைகள் நடப்பதாக அறிவித்தார். அவரின் வயது, தேச நலன் கருதி நிதி சேகரிக்கும் அவரது எண்ணம் எல்லாவற்றையும் பார்த்து மக்கள் நிதிகளை அளிக்கத் தொடங்கினார்கள். இதுவரை அவரது வேண்டுகோளுக்கு மக்களால் விரும்பி அளிக்கப்பட்ட பணம் 32 மில்லியன் யூரோக்கள்.
Tom Moore தனது பிறந்தநாளை மிகப் பெரியளவில் கொண்டாட விரும்பியிருந்தார். கொரோனா தனிமைப் படுத்தலினால் அது பெரியளவில் நடைபெறாமல் போனாலும் கூட அவரது பெரிய மனதுக்கு பலரது உளமார்ந்த வாழ்த்துகள் அவருக்கு அதிகளவில் கிடைத்திருக்கிறது.