இன்னுமொரு வழக்கு

தொலைக்காட்சியைப் போட்டால், இப்பொழுது அதிகமாக வருவது துயரமான செய்திகள்தான். இரத்தங்களையோ காயப்பட்டவர்களையோ யேர்மனியத் தொலைக்காட்சியில் பெரிதாகக் காட்டாத காலம் அப்போது இருந்தது. ஆனால் நிலைமை இப்பொழுது மாறிவிட்டது. பரீஸில், யேர்மனியில், லண்டனில், அமெரிக்காவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள், காபூலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல், சிரியாவில் இரசாயனக் குண்டு, இந்தோனேசியா, எகிப்து, சோமாலியா பலஸ்தீனம் என்று... அவலமான செய்திகள்தான் அநேகமாக தொலைக்காட்சிகளில் ஆரம்பச் செய்திகளாகப் போய்க் கொண்டிருக்கின்றன.

கையில் சாப்பாட்டுத் தட்டை வைத்துக் கொண்டு தொலைக்காட்சியை ருசித்துப் பார்த்த காலம் போய்விட்டது என்றே நினைக்கிறேன். எது எப்படியானாலும், வேலையில் இருந்து வீடு வந்ததும், ஷோபாவும், ரிவி ரிமோற்றும்தான் முதன்மை பெறுகின்றன.

அன்றும் அப்படித்தான். தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தேன்.

இங்கே நான் சொல்லவருவது ஒன்றரை வருடங்களுக்கு முந்திய சம்பவம்.

Carolinக்கு வயது 27. திருமணமானவள். யேர்மனியில் Endingen என்ற நகரில் வசித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் மாலையில் தவறாமல் jogging செய்பவள். வெயில், மழை, பனி, காற்று, இருள், பகல் எதுவுமே அவளது joggingக்கு இடைஞ்சலாக இருந்ததில்லை. ஒருநாள் அதற்கும் ஒரு முடிவு வந்தது. 06.11.2016 அன்று joggingக்குப் போன Carolin வீட்டுக்குத் திரும்பி வரவேயில்லை.

தொலைக்காட்சிகளில் அவளது படத்தைக் காட்டி, “இவளைக் காணவில்லை. யாராவது பார்த்திருக்கிறீர்களா? தகவல் தெரிந்தால் அறிவியுங்கள்” என்ற செய்தி ஒளிபரப்பானது. நான்கு நாட்கள் கழித்து அவளது உடல் ஒரு காட்டுப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது. வன்புணர்வு செய்து அதன் பின்னர் தலையில் பலமாக தாக்கப்பட்டு அவள் கொல்லப்பட்டிருக்கிறாள் என பின்னர் அறிவித்திருந்தார்கள்.

யேர்மனிக்குள் பெருமளவிலான அகதிகளின் வருகைதான் இப்படியான குற்றங்கள் நடப்பதற்கான காரணம் என உடனடியாகவே பலமாக குரல்கள் எழ ஆரம்பித்தன. அதிலும் அர்த்தம் இருக்கிறது. 2016 இல் 900,000 அகதிகள் யேர்மனிக்கு வந்ததன் பின்னால் குற்றச்செயல்களும் பெருமளவு அதிகரித்துத்தான் இருக்கின்றன. அதிலும் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் கூடி இருக்கின்றன. கொலைகளும் கூட நடந்திருக்கின்றன. ஆகவே எங்காவது அசம்பாவிதங்கள் நடந்து விட்டால் அதை உடனடியாக அகதிகளுடன் இணைத்துப் பார்த்தார்கள். Carolinஇனின் கொலையிலும் அப்படியான ஒரு பார்வையே இருந்தது.

ஆனால் பலர் நினைத்தது போன்று இல்லாமல் கொலையாளி ஒரு ஐரோப்பியனாகவே இருந்தான்.

யேர்மனியில் நடந்த பல கொலைகள் பற்றிய முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப் படாத நிலையில் அதுவும் கைல்புறோன் நகரில் பகல் வேளையில் மக்கள் நடமாடும் பகுதியில் பெண் பொலிஸ் கொல்லப்பட மற்றைய பொலிஸ் படுகாயம் அடைந்த சம்பவம் பத்து வருடங்களாகியும் முடிவுக்கு வராத நிலையில் Carolin இனின் கொலையாளியை மிக விரைவாக பொலிஸ் கண்டுபிடித்தது ஆச்சரிமாக இருக்கிறது.

பொலிஸார் எப்படித்தான் கொலையாளியைக் கண்டுபிடித்தார்கள் என்பது பற்றிய அறிக்கை வெளியாகி இருந்தது.

Carolin கொலையைப் பற்றிய விபரங்களை பொலிஸார் ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது ஒஸ்ரிய நாட்டில் Kufstein நகரில் தை மாதம் 2014இல் நடந்த ஒரு பெண்ணின் கொலையைப் பற்றிய சில தகவல்கள் அவரகளுக்கு கிடைத்திருக்கின்றன. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் Lucile. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவள். பிரான்ஸின் Lyon நகரத்தில் இருந்து படிப்பதற்காக ஒஸ்ரியாவுக்கு வந்திருந்தவள். ஒரு மாலையில் தனது நண்பியைப் பார்க்கப் போனவளை யாரோ கொலை செய்து விட்டார்கள்.

Lucileவின் கொலையும், Carolinது கொலையும் ஒரே முறையில் நடத்தப்பட்டிருந்தன என்பதை அதாவது இரு பெண்களும் வன்புனர்வு செய்யப்பட்டதன் பின்னர் தலையில் தாக்கப்பட்டே கொலை செய்யப் பட்டிருந்தார்கள் என்பதை பொலிஸார் கவனத்தில் எடுத்துக் கொண்டார்கள். அத்தோடு Carolin இன் கொலைக்குப் பாவிக்கப் பட்ட ஆயுதமான வாகனத் தூக்கியை (lifting rod) கொலை நடந்த இடத்தில் பொலிஸார் கண்டு பிடித்திருந்தனர்.

இரண்டு பெண்களின் கொலையும் நடந்த இடத்திற்கான இடைவெளி 400 கிலோ மீற்றர்கள். இரண்டு கொலைகளும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு அருகிலே அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்திருந்தன. இதனால் நீண்ட தூரம் பயணிக்கும் ஒருவரே கொலையாளியாக இருக்க முடியும் என்பது பொலீஸாரின் கணிப்பாக இருந்தது. அதிலும் பார ஊர்திகள் தரித்து நிற்கும் இடத்திற்கு அருகாமையில்தான் கொலைகள் நடந்திருக்கின்றன. அதனால் பொலீஸாரின் தேடுதல் வெளிநாடுகளில் இருந்து யேர்மனிக்குள் நுளையும் பார ஊர்திகளின் பக்கமாகப் போனது.

இதற்காக ஒஸ்ரியாவினூடாக யேர்மனிக்கு வரும் சுமார் 8,000 பார ஊர்திகளைப் பற்றிய தகவல்களை பொலீஸார் சேகரித்தனர். அந்த 8000 பார ஊர்திகளின் பயணங்களுக்கான பதிவுகள் மட்டும் 45,000 க்கு மேல் இருந்தன. 8000 பார ஊர்திகளில் ஒன்றில்தான் கொலையாளி பயணித்திருக்கிறான் என்ற எண்ணத்தில் 45,000 பதிவுகளுக்குள் தேடுதல் ஆரம்பமானது.

வாகனத் தூக்கி(lifting rod), எந்தப் பார ஊர்திக்குச் சொந்தமானது என்பதை தெரிந்து கொண்டால் தேடுதல் சுலபமாகி விடும் என்ற எண்ணம் வந்தவுடன் அதைப்பற்றி ஆராய இன்னொரு குழு தயாரானது. அப்படி ஆராய்ந்ததில் 285 பார ஊர்திகள் அவ்வாறான lifting rod களைப் பாவிப்பது தெரிய வந்தது. அதிலும் ஈவ்கோ பார ஊர்திகள்தான் அதை அதிகமாகப் பயன் படுத்துகிறார்கள் என்பதால், யேர்மனிக்குள் நுளையும் ஈவ்கோ பார ஊர்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து பதிவேடுகளில் அவற்றை ஆராய்ந்தார்கள். 13 ஈவ்கோ பார ஊர்திகள் யேர்மனிக்குள் நுளைவதைக் கண்டு பிடிக்க முடிந்தது. போலந்தில் இருந்து ஆறு, ருமேனியாவில் இருந்து நான்கு, ஒஸ்ரியாவில் இருந்து இரண்டு மற்றும் செக் குடியரசில் இருந்து ஒன்று என்ற கணக்கு இப்பொழுது பொலீஸாரின் கைகளில் இருந்தது.

13 பார ஊர்திகளிலும் ஓட்டுனர் உட்பட பயணித்தவர்கள் பற்றிய விபரங்களைஅந்தந்த நிறுவனங்களில் இருந்து பொலிஸார் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். அதில் ருமேனியாவில் இருந்து வரும் ஒரு பார ஊர்தியில் ஓட்டுனர் மட்டும் தனியாகவே பயணித்திருப்பது தெரியவந்தது. அவரது கைத்தொலேபேசியின் இலக்கங்களை ஆராய்ந்ததில் Carolin கொலை செய்யப்பட்ட இடத்தில் அவர் தனது தொலைபேசியைப் பாவித்தது பதிவு செய்யப் பட்டிருப்பது தெரிந்தது.

கொலையாளியான ருமேனியாவைச் சேர்ந்த Catalin கைது செய்யப் பட்டார். Carolin கொலையுண்ட இடத்தில் பொலீஸார் சேகரித்த 430 தடயங்கள் மற்றும் டீஎன்ஏ பரிசோதனை எல்லாவற்றிலும் Catalin சித்தி அடைந்ததால் இவர்தான் கொலையாளி என பொலிஸார் அவரை மன்றில் நிறுத்தினார்கள்.

“எனது கட்சிக்காரரான Catalin பாலியல் நோக்கத்திற்காக இந்தக் கொலையைச் செய்யவில்லை. அவரின் மன உளைச்சலின் விளைவே இது” என அவனின் சட்டத்தரணி மன்றில் எடுத்துச் சொன்னார்.

குற்றங்கள் நிரூபணம் ஆனதால் Catalinக்கு ஆயுள் தண்டனை தந்து நீதிபதியான Eva Kleine-Cosack தீர்ப்பு அளித்தார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான நாற்பது வயதுCatalinக்கு ஓஸ்ரியாவில் Lucileஐ கொலை செய்ததற்கான இன்னுமொரு வழக்கு காத்திருக்கிறது.

- ஆழ்வாப்பிள்ளை
15.05.2018

Related Articles

ஆறு வாரங்களில் ஒரு கருவி

இல்லாமை நீங்க வேண்டும்

சட்டத்தின் முன்னால்

Wie viele Kapuzenträger?

Schlemmen auf hoher See

Im Wasser gefangen