தனி ஒரு மனிதன் திருந்திவிட்டால்...

29 வருடங்களுக்கு முன்னால் “வங்கி ஒன்று கொள்ளையிடப்படுகிறது” என யேர்மனிய ஊடகங்கள் பெரிதாக அலறின. நான் யேர்மனிக்கு வந்து சில வருடங்களாகிப் போன நிலையில் இந்தக் கொள்ளை பற்றிய செய்தி என்னையும் அதன்பால் இழுத்திருந்தது. யேர்மனியின் மூச்சுக்குழாயை இறுக்கி அழுத்திப் பிடித்த அந்த வங்கிக் கொள்ளையும் அதன் பின்னரான பணய நாடகமும் யேர்மனியின் குற்றவியல் புத்தகத்தில் “கிளாட்பாக் பணயநாடகம்” என்ற பெயரில் கரும் பக்கங்களாக பதிந்து போய்விட்டிருக்கிறது.

ஓகஸ்ட் மாதம் 16ந் திகதி 1988 அதிகாலையில் முகமூடி அணிந்தபடி டீற்றரும் அவனது நண்பனான ஹன்ஸும் கிளாட்பாக் என்ற நகரத்தில் இருந்த டொச்ச வங்கியை கொள்ளையிடப் போயிருந்தார்கள். அவர்கள் கொள்ளையிட எதிர்பார்த்த தொகை வங்கியிலே இருக்கவில்லை. ஆனாலும் அங்கே இருந்த 120,000 டொச்ச மார்க்குகளை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

பக்கத்துக் கட்டிடத்தில் இருந்த மருத்துவர் ஒருவர் தனது முதல் மாடியில் இருந்து வங்கியில் நடப்பதை அவதானித்து காலை 8.04க்கு பொலீஸுக்கு தகவலைக் கொடுக்கும்வரை எல்லாமே அவர்கள் திட்டமிட்டபடி சரியாகத்தான் நடந்து கொண்டிருந்தன. தகவல் கிடைத்ததால் பொலீஸ் வாகனங்கள் வங்கியின் வாசலிலே வந்து நின்றன. இதனால் டீற்றரும், ஹன்ஸும் வங்கியை விட்டுத் தப்பிக்க முடியாத நிலையில் இருந்தார்கள். அவர்கள் தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக வங்கி ஊழியர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு பேரம் பேச ஆரம்பித்தார்கள். ஏற்கனவே அவர்கள் எதிர்பார்த்த தொகை வங்கியில் இருக்காததனால் பேரத்தில் கொஞ்சம் அதிகமாகவே கேட்டார்கள். 300,000 டொச்ச மார்க்குகளும், பயணம் செய்ய ஒரு BMW காரும் தங்களுக்கு தரவேண்டும் என்பது அவர்களது பேரமாக இருந்தது.

இதற்குள் கிளாட்பாக் நகரத்து அரச சட்டத்தரணி சம்பவ இடத்துக்கு நேரடியாக வந்து, “சரணடையுங்கள். உங்களுக்கான தண்டனையை ஆறு மாதங்களுக்குள் அமைவதாக நான் பார்த்துக் கொள்கிறேன். மேற்கொண்டு தவறுகள் ஏதும் செய்து விடாதீர்கள்” என்று பண்பாக ஒலிபரப்பி மூலம் கேட்டும் பார்த்தார். அவரது கோரிக்கையை டீற்றரும் ஹன்ஸும் கண்டு கொள்ளவேயில்லை.

ஏதாவது வழியில் அவர்களைக் கைது செய்து தங்களது திறமையைக் காட்டிக் கொள்ளலாம் என பொலீஸ்துறையும் அவர்களோடு தொலைபேசியில் உரையாடி காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தது. எதுவுமே கைகூடாத நிலையில் இரவு 9 மணியளவில் டீற்றரும், ஹன்ஸும் கேட்டுக் கொண்டதன்படி பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளாடையுடன் மட்டும் சென்று வங்கியின் வாசலில் 300,000 டொச்ச மார்க்குகளை வைத்துவிட்டு வந்தார். கூடவே அவர்களுக்கு ஒரு Audi காரும் வழங்கப்பட்டது.

இரண்டு பணயக் கைதிகளை மட்டும் தங்களது பிடியில் வைத்துக் கொண்டு வங்கியை விட்டு வெளியேறிய டீற்றரும் ஹன்ஸும் நேரடியாக பிறீமன் நகரத்துக்குச் சென்றார்கள். அங்கே ஹன்சின் காதலியான மரியோனையும் தங்கள் காரில் ஏற்றிக் கொண்டார்கள். பொலீஸ் தந்த காரை தொடர்ந்து பயன்படுத்தினால் பின்னால் ஏதாவது பிரச்சனைகள் வந்துவிடும் என்ற எச்சரிக்கை காரணமாக, வழியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ஒரு காரை பறிமுதல் செய்து அதில் தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள்.

பார்மஸியில் மருந்து வாங்கி, ரெஸ்ரோறண்டில் ஆறுதலாக இருந்து அனுபவித்து காலை உணவு சாப்பிட்டு, கடையில் பழங்கள் வாங்கி உல்லாசமாகப் போய்க் கொண்டிருந்தவர்கள், காரில் இருந்த வானொலியை இயக்கிய போதுதான், தாங்கள் எந்தவிதமான சூழ்நிலைக்குள் இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டார்கள். டீற்றரும் ஹன்ஸும் பயணிக்கும் பாதை, அவர்களது நடவடிக்கைகள் எல்லாவற்றையும் பொலீஸ்துறையிடமிருந்து பெற்று வானொலிகள் நேரடி ஒலிப்பரப்பு செய்துகொண்டிருந்தன. டீற்றரும் ஹன்ஸும் தாங்கள் கண்காணிக்கப்படுவதைப் புரிந்து கொண்டார்கள். தொடர்ந்து காரில் பயணிப்பது பாதுகாப்பாக இருக்காது எனக் கருதி, பிறீமன் நகரத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்த பஸ் ஒன்றை 32 பயணிகளுடன் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை பணயக்கைதிகளான வங்கி ஊழியர்கள் இருவரையும், பஸ்ஸில் இருந்த ஐந்து பேரையும் விடுதலை செய்தார்கள்.

அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த பஸ்ஸில்தான் 18 வயதான சில்கே தனது நண்பி ஈனெஸ் உடனும், 15 வயதான இம்மானுவேல் தனது ஒன்பது வயதான தங்கையுடனும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். பயண நடுவில் நெடுஞ்சாலையில் இருந்த உணவு விடுதி ஒன்றின் கழிப்பிடமொன்றிற்கு ஹன்சின் காதலி மரியோன் செல்லும் போது அவளை பொலீஸார் அதிரடியாக கைது செய்தார்கள். கைது செய்யும் பொழுது அவள் போட்ட கூச்சல் டீற்றருக்கும், ஹன்ஸுக்கும் கோபத்தை அதிகப்படுத்தியது. உடனடியாக மரியோனை விடுவிக்காவிட்டால் முதற்கட்டமாக பணயக் கைதி ஒருவரை சுட்டுவிடப் போவதாக டீற்றர் எச்சரித்தான். மரியோனின் கை விலங்கை பொலீஸ் கழட்டுவதில் ஏற்பட்ட தாமதத்தை வேண்டுமென்றே பொலீஸ்காரர்கள் காலத்தை கடத்துகிறார்களென தவறாக புரிந்து கொண்டு பணயக்கைதியில் ஒருவனான இம்மானுவேலை டீற்றர் சுட்டான். இம்மானுவேல் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சிறுவன். டீற்றரிடம் இனத்துவேசம் இருந்ததனால்தான் அவன் இத்தாலியச் சிறுவனான இம்மானுவேலை முதலாவது ஆளாக சுடுவதற்கு தெரிவு செய்திருக்க வேண்டும் என அறிக்கைகள் பின்னர் வந்தன. அவசர உதவி 20 நிமிடங்கள் தாமதமாகவே கிடைத்ததால் சுடப்பட்டு வீதியில் போடப்பட்ட இம்மானுவேல் இறந்து போனான். பின்னர் நடந்த அவனது உடல் அடக்கத்தின் போது 25,000 யேர்மனியர்கள் கலந்து கொண்டு தங்கள் இரங்கலைத் தெரிவித்தார்கள்.

யேர்மனியப் பொலீஸாரைவிட ஹொலண்ட் நாட்டுப் பொலிஸார் மென்மையானவர்கள் என தாங்கள் எங்கேயோ கேட்டதை நினைத்து, ஹொலண்டுக்கு பஸ்ஸை செலுத்தும்படி நடத்துனருக்கு உத்தரவு போட்டார்கள். ஹொலண்ட் நகரத்துக்கு அவர்கள் பயணிக்கும் பொழுது அவர்களைத் தொடர்ந்து சென்ற பொலீஸ் வாகனம் ஒரு லொறியுடன் மோதியதால் அதில் ஒரு பொலீஸ் இறந்து போனார். இன்னுமொரு பொலீஸ் காயத்துக்கு உள்ளானார்.

ஹொலண்ட்டில் டீற்றருக்கும், ஹன்ஸுக்கும் சாதகமாக எதுவுமே அமையவில்லை. “முதலில் குழந்தைகள், வயதுவந்தவர்களை விடுவியுங்கள். அதற்குப் பிறகு பேசுவதைப் பற்றி யோசிப்போம்” என ஹொலண்ட் பொலீஸ் அறிவித்தது. வேறு வழியின்றி குழந்தைகள், வயதுவந்தவர்களை விடுவித்தார்கள். அதன் பிறகும் எதுவித முன்னேற்றமும் இல்லாததால் சில்கேயையும். ஈனெஸையும் பணயக் கைதிகளாக வைத்துக்கொண்டு ஏனையவர்களை விடுதலை செய்துவிட்டு தாங்கள் பயணிப்பதற்கு ஒரு கார் வேண்டும் என்றார்கள். தாராள மனதுடன் அவர்களுக்கு ஒரு காரைக் கொடுத்தார்கள். ஆனால் அந்தக் காரில் கண்காணிப்புக் கருவியும், மைக்ரபோனும் பொருத்தப் பட்டிருந்தன. அத்தோடு காரின் வேகத்தை வெளியில் இருந்து தானியங்கிக் கருவி மூலம் கட்டுப்படுத்தும் வகையிலும் அது வடிவமைக்கப் பட்டிருந்தது.

ஹொலண்டில் ஆகப் போவது எதுவுமே இல்லை என்றாகிப் போன நிலையில் பணயக்கைதிகள் இருவருடனும் யேர்மனி நோக்கிப் பயணிக்க முடிவெடுத்தார்கள். தனது காதலி மரியோனை தனது பக்கத்தில் வைத்துக் கொண்டு ஹன்ஸ் காரை ஓட்டினான். பின் இருக்கையில் இரண்டு பணயக் கைதிகளின் நடுவே டீற்றர் துப்பாக்கியுடன் அமர்ந்து கொண்டான். ஊடகங்கள் அவர்களைப் பின் தொடர்ந்து சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொழுதெல்லாம் பேட்டி கண்டு நிலமைகளை அறிவித்துக் கொண்டே சென்றார்கள். கேர்ளின் நகர மையத்தில் வைத்து மக்கள் திரளாகப் பார்த்துக் கொண்டிருக்க ஊடகங்கள் அவர்களைப் பேட்டிகள் எடுத்தது பலத்த விசனத்துக்கு உள்ளானது. ஒரு குற்றச்செயல் நடந்து கொண்டிருக்கும் பொழுது குற்றவாளிகளை ஊடகங்கள் பேட்டி எடுப்பது எவ்வளவு பாரதூரமானது என்பதையும், அது எந்தளவுக்கு பொலீஸ்துறைக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதையும் ஊடகத்துறை பிறகுதான் உணர்ந்து கொண்டது. அதன் பின்னரே தங்கள் தவறுக்கு மன்னிப்புக்கோரி, ”இனி குற்றச் செயல்கள் நடக்கும் போது இப்படி நடந்த கொள்ள மாட்டோம்” என யேர்மனிய ஊடக சம்மேளனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இரண்டாம் நாள் (18.08.1988) ஹன்ஸ் காரை கேர்ளினில் இருந்து பிரங்பேர்ட் நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான். அடுத்து தாங்கள் வெளிநாடு ஒன்றுக்குப் பறப்பதற்கு ஒரு விமானத்தை கேட்கப் போகிறார்களோ என எல்லோரிடமும் ஒரு கேள்வி இருந்தது. இந்தக் கேள்வி பொலீஸ்துறைக்கும் வந்திருக்க வேண்டும். அத்தோடு மானிலத்தின் உள்துறை அமைச்சிடமிருந்து வந்த நெருக்குதல்களும் பொலீஸ்துறைக்கு சேர்ந்து கொண்டது. பிராங்பேர்ட்டை நெருங்குவதற்கு முன்னால், அவர்கள் பயணிக்கும் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி இன்னுமொரு வாகனத்தை அதனுடன் மோதவிட்டு டீற்றரையும், ஹன்ஸையும் கைது செய்வது என பொலீஸ் அதிரடிப்படை திட்டம் தீட்டியது. திட்டத்திற்கான இடத்தையும் தீர்மானித்து, ஆயத்தமான நிலையில் இருக்கும் போதுதான் வேகத்தைக் கட்டுப்படுத்தும் தானியங்கியை தாங்கள் எடுத்துவர மறந்து போனது பொலீஸுக்கு தெரிந்தது. இதற்குமேல் தாமதப்படுத்தினால் அது வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம் எனக்கருதி டீற்றரும், ஹன்ஸும் பயணித்த கார் வந்து கொண்டிருந்த வேகத்துடனேயே ஒரு வாகனத்தை மோத விட்டார்கள்.

பொலீஸ் திட்டமிட்டபடி டீற்றரும், ஹன்ஸும் சற்று நிலை குலைந்துதான் போனார்கள். ஆனாலும் அவர்கள் தங்களின் துப்பாக்கிகளை பாவிக்கத் தொடங்கினார்கள். பொலீஸ் தரப்பில் இருந்து மட்டும் 62 தடவைகள் சுடப்படதாக அவர்களின் பதிவேட்டில் இருக்கிறது. இந்தத் துப்பாக்கிச் சண்டையின் நடுவே கிடைத்த சிறிய சந்தர்பத்தில் சில்கேயின் நண்பி ஈனெஸ் காரில் இருந்து இறங்கி ஓடி தப்பித்துக் கொண்டாள். ஆனாலும் அவளது தோள்பட்டையில் குண்டு பாய்ந்திருந்தது. முடிவில் டீற்றர், ஹன்ஸ், மரியோன் மூவரையும் பொலீஸ் கைது செய்தது. சில்கே? அவள் வாகனத்தில் இறந்து கிடந்தாள். “ஹன்ஸின் துப்பாக்கிக் குண்டு அவள் உடலில் இருந்தது” என வழக்கு நடக்கும் பொழுது பொலிஸ் தரப்பில் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டிருந்தது.

பொலிஸ்துறை இன்னும் சற்றுக் கவனத்துடன் செயற்பட்டிருந்தால் இத்தாலியச் சிறுவன் இம்மானுவெலின் உயிரையும், சில்கேயின் உயிரையும் காப்பாற்றியிருக்கலாம் என்ற காரணத்தால் Nordrhein-Westfalen உட்துறைஅமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்து கொண்டார்.

டீற்றர், ஹன்ஸ் இருவர் மேலும் தொடரப்பட்ட வழக்கு 1991இல் விசாரணைக்கு வந்தது. 117 நாட்கள் நடந்த வழக்கில் டீற்றர், ஹன்ஸ் இருவருக்கும் ஆயுள்தண்டனை (30 வருடங்கள்) யும் மரியோனுக்கு ஒன்பது வருடங்கள் சிறைத்தண்டனையும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டன. மரியோனுக்கு இருந்த நோய்கள், அவளுக்குத் தேவைப்படும் மருத்துவ வசதிகள் மற்றறும் சிறையில் நடந்து கொண்ட தன்மைகளை வைத்து ஆறு வருடங்களில் அவள் சிறையில் இருந்து விடுதலையானாள்.

கொலை செய்யப்பட்ட இத்தாலிய சிறுவன் இம்மானுவேலைச் சில நாட்களில் மறந்து விட்டார்கள். ஆனால் சில்கேயை யேர்மனியரால் உடனடியாக மறந்து விட முடியவில்லை. அவள் பெயரில் இசைக்குழு ஆரம்பித்து, பாடல்கள் பல வெளிவந்தன. நடந்து போன பணயநாடகத்தை திரைப்படமாக, ஆவணப்படமாக, தொலைக்காட்சித் தொடராக எல்லாம் எடுத்து வெளியிட்டார்கள். காலப்போக்கில் எல்லோரும் அந்தப் பணய நாடகத்தை மறந்து விட்ட நிலையில் 29 வருடங்கள் கழித்து மீண்டும் அதை ஊடகங்கள் நினைவு படுத்தியிருக்கின்றன.

“சிறையில் நடந்து கொண்ட விதம் மற்றும் மனநிலையான அறிக்கை ஆகியவற்றை கணக்கிட்டு 2017 நவம்பர் மாதத்தில் தனது தண்டனை முடிந்து டீற்றர் (61வது வயது) விடுதலையாகிறான்” என சிறை அதிகாரி அறிவித்திருக்கிறார். வேறு ஒரு பெயரில் புதிய அறிமுகமொன்றுடன் டீற்றரின் வாழ்க்கை அமையப் போகிறது. அப்படியாயின் ஹன்ஸின் விடுதலை? சிறையில் போதைமருந்து வைத்திருந்தது மற்றும் அங்கே நடந்து கொண்ட தன்மைகளை வைத்து அவனது தண்டனைக் காலம் இன்னும் கொஞ்சம் கூடியிருக்கிறது. ஆனாலும் தன்னையும் விடுதலை செய்யுங்கள் என்று மனு அளித்துவிட்டு அவன் காத்திருக்கிறான்.

ஒரு மனிதனுக்கு அவனது குற்றச் செயலுக்காக வழங்கப்படும் தண்டனையானது அவனை நல்வழிப்படுத்தி சமூகத்தில் மீண்டும் சேர்ந்து வாழ வைப்பதுதான் என்பதில் மேற்கத்தையவர்களது செயற்பாடு சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் எங்களது நாட்டில் மட்டும் அது வாழ்நாள் தண்டனையாகிப் போயிருக்கிறது. அதுவும் தரையில் நடக்கும் பொழுது கால்பட்டு எறும்பு, பூச்சிகள் இறந்துவிடக் கூடாது என்று மயில் இறகுகள் கொண்டு தரையைக் கூட்டிக்கொண்டு நடந்தவர்களைப் பின்பற்றி வந்தவர்கள், நீண்டகாலங்களாகச் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் அப்பாவிகளை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

யேர்மனிய தொலைக்காட்சி செய்தியில்,
https://www.youtube.com/watch?v=WPexSbyuAow&t=18s
ஊடகங்களின் நேர்காணல்,
https://www.youtube.com/watch?v=xrEHOpEROdc
தொலைக்காட்சி தொடராக,
https://www.youtube.com/watch?v=IwZK9oUc2yM&t=4542s
https://www.youtube.com/watch?v=5MP47nkOU38

- ஆழ்வாப்பிள்ளை
01.11.2017

Related Articles

ஆறு வாரங்களில் ஒரு கருவி

இன்னுமொரு வழக்கு

இல்லாமை நீங்க வேண்டும்

சட்டத்தின் முன்னால்

Wie viele Kapuzenträger?

Schlemmen auf hoher See

Im Wasser gefangen