அறம் செய விரும்பு

அறம் பாடுதல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அறம் என்றால் தர்மம் என்று தானே பொருள்படும். அறம் செய்ய நல்ல மனம் இருந்தால் போதும் தானே. பிறகு எதற்காக புலவர்கள் "சினம் கொண்டு அறம் பாடினார்கள்" என்று சொல்கிறார்களோ தெரியவில்லை. புலவர்கள் அறம் பாடினால் பலித்து விடுமோ என்ற பயத்தினால்தான் முன்னைய காலத்தில் புலவர்களைக் கண்டவுடன் அரசர்களெல்லாம் பொன்னையும், பொருள்களையும் அவர்களுக்கு அள்ளிக் கொடுத்தாரகளோ? அது மட்டுமா தங்கள் அரியாசனங்களுக்கு நிகராக புலவர்களுக்கும் சரியாசனம் கொடுத்து பக்கத்திலேயே வைத்ததுக் கொண்டதற்கும் புலவர்களின் இந்த அறம்தான் காரணமோ?

மற்றையவர்கள் நாக்குகளை விட புலவர்கள் நாக்குகள் சிந்தும் வாக்குகளுக்கு அப்படி என்ன சக்தி இருக்கிறது என்று தெரியவில்லை. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆரம்ப காலத்தில் திரைப்படத்திற்குப் பாட்டெழுதிக் கொடுத்து அதற்கான பணத்தை பெற படாதபாடு பட்டிருக்கிறார் பாடலுக்கான ஊதியத்திற்காக தயாரிப்பாளர் வீட்டுக்கும் அலுவலகத்திற்கும் பல நாட்கள் நடையாய் நடந்திருக்கிறார். பணத்தைத் தராமல் தயாரிப்பாளர் காலம் கடத்தியதால், சினம் கொண்டு ஒரு காகிதத் துண்டில் பாட்டு ஒன்றை எழுதி தயாரிப்பாளரது மேசையின் மேல் வைத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.

பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் வரிகளை வாசித்த தயாரிப்பாளர் கவிஞரின் பாடலுக்கான ஊதியத்தை வீடு தேடி வந்து கொடுத்துவிட்டுப் போனார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் இதுதான்

"தாயால் வளர்ந்தேன்
தமிழால் அறிவு பெற்றேன் - நாயே!
நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்
நீ யார் என்னை நில் என்று சொல்ல?'


சங்க காலத்தில் மட்டுமல்ல சினிமாக் காலத்திலும் புலவர்களது வார்த்தைகளுக்கு அஞ்சியவர்கள் இருக்கத்தான் செய்யகிறார்கள். கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்திலும் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். செந்தாமரை படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடல் தான்

"பாட மாட்டேன்
நான் இனிப் பாட மாட்டேன்
பாவலர் செய்த தமிழ்க் கலைப் பாட்டன்றி
வேறு எதையும் - பாடமாட்டேன்"
என்று தொடங்கும் பாடல். அந்தப் பாடலைப்பாடி நடித்தவர் நடிப்பிசைப் புலவர் கே. ஆர்.ராமசாமி. இந்தப் படப் பாடலுக்குப் பின்னர் அவர் எந்தப் படத்திலும் தனது சொந்தக்குரலில் பாடவேயில்லை.

ஒரு முறை கண்ணதாசன் தனது அண்ணன் ஏ .எல் .சீனிவாசனின் மகனுக்குப் பிறந்த குழந்தையைப் பார்ப்பதற்கு அவரது வீட்டுக்கு போயிருந்தார். அவர் போன நேரம் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. குழந்தையை எடுத்து கண்ணதாசனின் கையில் கொடுப்பதற்கு உறவினர்கள் முயற்சிக்க, கண்ணதாசன் அவர்களைத் தடுத்து „விடுங்கள் அவன் உறங்கட்டும்“ என்றார். அந்தத் தருணத்தில் அவர் எழுதிய கவிதை தான் இது.

"அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்"


அடுத்த ஏழு நாட்களில் அந்தக் குழந்நதை நிரந்தரமாகவே உறங்கி விட்டது. இந்த நிகழ்வை அப்பொழுது ஒரு சஞ்சிகையில் அவர் வருத்தத்தோடு எழுதியிருந்தார்.

“அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்
என்றே நான் எழுதியதன்
ஈரம் உலரவில்லை
ஏழுநாள் ஆகுமுன்னே
இளங்கன்று தூங்கி விட்டான்!
அறம் பாடி விட்டேனோ!
அறியேன்”


"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் சாக வேண்டும்“
என்று கண்ணதாசன் ஒரு பாட்டு எழுதினார். "கடவுளைச் சாகச் சொல்வதா?" என்று அந்தப் பாடலைப் பாட முடியாது என ரி.எம்.செளந்தரராஜன் மறுக்க
"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்"
என்று கண்ணதாசன் மாற்றிக் கொடுத்தார்.

பிற்காலத்தில் பல பாடகர்களின் வருகை ரி.எம்.செளந்தரராஜனின் நிலையைக் கொஞ்சம் இறக்கி விட்டிருந்தது. நிலைமைக்கு ஏற்ப கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய நிலையில் ரி.எம்.செளந்தரராஜன் இருந்தார் பாடல் வரிகளில் அவர் தலையிடுவதைக் குறைத்துக் கொண்டார்.

"என் கதை முடியும் நேரமிது
என்பதைச் சொல்லும் பாடலிது"
என்று ஒரு பாடலையும்,
“நான் ஒரு ராசியில்லா ராஜா" என்று இன்னுமொரு பாடலையும் ரி.ராஜேந்தர் படத்திற்காக பாடினார். இந்த இரண்டு பாடல்களுக்கும் பின்னர் ஏற்கெனவே ஆட்டம் கண்டு கொண்டிருந்த அவரது இருப்பு இன்னமும் கீழே போய்விட்டது. அதன் பிறகு அந்த இரு பாடல்களையும் அவர் தன் வாழ்நாளில் எங்குமே பாடவில்லை.

திமுகவில் இருந்து விலகி புதுக் கட்சி தொடங்கிய பொழுது கண்ணதாசன் எம்ஜிஆரை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார். நிலைமையைச் சாதகமாக்க, எம்ஜியார் கண்ணதாசனை தமிழக அரசின் ஆஸ்தான கவியாக நியமித்தார். அந்த நிலையில் கண்ணதாசன் சொன்னார்! "எம்ஜியாருடன் நான் வாழ்நாள் முழுவதும் நடத்திய யுத்தத்தில் கடைசியாகத் தோற்று விட்டேன்" என்று.

இதை எல்லாம் இப்பொழுது எதற்காக இங்கே எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். சிவாஜி கணேசனின் என்மகன் படத்துக்கு கவிஞர் பாட்டு எழுதியிருந்தார். திமுகவின் ஊழல், மற்றும் கருணாநிதி, எம்.ஜி.ஆருடனான முரண்பாடுகள் எல்லாவற்றையும் சேர்த்து "நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்" என்று ஒரு பாடலை அந்தப் படத்திற்காக கவிஞர் எழுதினார்,

"சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்
நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம் இவரை விடாது
சொல்கின்றேன்
பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்
பாவம் செய்தவன் தலைமுறை வரையில்
பார்க்கின்றேன்


அன்று அவர் சொன்ன "எதிர்காலம் காட்டும்" ,"நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன்" என்பது இன்று பலிக்கிறதா?

- ஆழ்வாப்பிள்ளை
20.05.2016

Related Articles