ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு?

அறுபது எழுபதுகளில் வந்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் அநேகமானவை திரைக்கதைகளோடு ஒன்றியே இருந்தன. பாடல்களை வைத்தே ஓரளவுக்குத் திரைப்படம் எந்த இரகத்தைச் சார்ந்தது என்பதை ஊகித்துக் கொள்ள முடிந்தது. திரைக்கதை ஓட்டத்துக்கு ஏற்ப பாடல்கள் எழுதுவதில் கண்ணதாசன் வல்லவர். அவரே திரைக்கதை புனைவதில் திறமைசாலியாக இருந்ததால் கதைக்கு ஏற்ப பாடல்கள் எழுதுவது அவருக்கு இலகுவாக இருந்திருக்கும்.

திரைக்கதைக்கு ஏற்ப பாடல்கள் எழுதும் போது சந்தர்ப்பம் கிடைத்தால் தனது விருப்பு வெறுப்புக்களையும் கண்ணதாசன் பாடல்களுக்குள் மெதுவாகப் புகுத்தி விடுவார். அப்படி அவரால் புகுத்தப்பட்ட சில விடயங்களை பாடல்களைக் கேட்கும் பொழுதே சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். பல விடயங்களை அவராகச் சொன்னாலோ அல்லது அவர் சார்ந்தவர்களால் வெளியே வந்தாலோதான் அறிந்து கொள்ள முடியும். எம்ஜிஆர், சிவாஜி படப் பாடல்களிலும் அச்சம் என்பது துளியும் இல்லாமல் துணிந்து தனது விருப்பு வெறுப்புகளை கண்ணதாசன் கையாண்டு கொண்டிருந்தார்.

பாசம் திரைப்படம் தோல்வி அடைந்தாலும் அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் பிரபலமானவை. அந்தப் படத்தில் சிறையில் இருந்து விடுதலை அடைந்து வெளியே வரும் எம்ஜிஆர் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல்தான் „உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக...' என்ற பாடல். மரக்கிளையில் பிடித்து எம்பிக் குதித்து, கடற்கரையில் உருண்டு பிரண்டு, தண்ணீரில் துள்ளித் துள்ளி ஓடி, படகில் பாய்ந்து ஏறி, ஓடும் மாட்டு வண்டியில் இருந்து குதித்து, காற்றில் கைகளைத் துளாவி என்று நிறையவே எம்ஜிஆர் அந்தப் பாடல் காட்சியில் மினெக்கெட்டு இருப்பார். எம்ஜிஆருக்காக கண்ணதாசன் எழுதிய அருமையான பாடல் அது என்று நிறையவே பாராட்டுக்கள் அந்தப் பாடலுக்குக் கிடைத்தது. ஆனால் ஒரு பேட்டியின் பொழுது, அந்தப் பாடலை எம்ஜிஆருக்காக தான் எழுதவில்லை மாறாக அது தனக்காக எழுதிய பாடல் என்று கண்ணதாசன் குறிப்பிட்டிருந்தார். பாடலின் இறுதியில், „தவழும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணி மகுடம் குயில்கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம்' என்று தான் சொன்னது எம்ஜிஆருக்கல்ல தனக்காகத்தான் என்று கண்ணதாசன் சொன்ன பொழுது எம்ஜிஆருக்கும் அவரது இரசிகர்களுக்கும் நாடி விழுந்திருக்கும்.

நாட்டியப் பேரொளி பத்மினி திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்ற நேரம் அவரது இடத்தை சுலபமாக சரோஜாதேவி பிடித்துக் கொண்டார். துணை நடிகையாக படங்களில் வந்து போய்க் கொண்டிருந்த சரோஜாதேவியை நாடோடி மன்னன் திரைப்படத்தின் வெற்றி உயரத்தில் கொண்டு போய் இருத்தி விட்டது. அமெரிக்கா போன பத்மினி இரண்டு வருடங்களில் திரும்பி நடிக்க வந்த பொழுது சரோஜாதேவி திரையுலகில் முதல்தர நாயகியாக மாறி விட்டிருந்தார். காலையில் சிவாஜியோடு ஆலயமணி படப்பிடிப்பு, மாலையில் எம்ஜிஆருடன் பணத்தோட்டம் என்று பெரும் தலைகளையே தனது தேதிக்கு ஏற்ப காக்க வைத்துக் கொண்டிருந்தார். சரோஜாதேவியின் இந்தப் போக்கு அன்று திரையுலகில் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் பலரில் கண்ணதாசனும் ஒருவராக இருந்தார்.

சாண்டோ சின்னப்பா தேவர் தனது படத்தை ஆரம்பிக்கும் பொழுதே அதை வெளியிடும் திகதியையும் அறிவித்து விடுவார். அப்படி ஒரு திட்டமிடல் அவரிடம் இருந்தது. நடிகர்களை ஒப்பந்தம் செய்யும் பொழுதே அவர்களது நடிப்பிற்கான முழுப் பணத்தையும் கொடுத்து விடுவார். அத்துடன் தனது படத்தில் அவர்கள் நடிப்பதற்கான திகதிகளையும் அவர்களிடம் இருந்து முழுமையாக வாங்கி வைத்துக் கொள்வார். சாண்டோ சின்னப்பா தேவர் தனது வேட்டைக்காரன் திரைப்படத்திற்கு நாயகியாக சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்ய அவரது வீட்டிற்குப் போயிருந்தார். அங்கே முழுத் திகதியையும் ஒன்றாகத் தரமுடியாது என சரோஜாதேவியின் தரப்பில் இருந்து மறுப்பு வர அது வாய்த் தர்க்கமாக மாறி, „எம்ஜிஆர் சொன்னால் கூட இனி என் படத்தில் நீயில்லை' என்று சொல்லிவிட்டு சின்னப்பா தேவர் வந்து விட்டார். இந்த விடயம் கண்ணதாசனின் காதுகளுக்கு போய்ச் சேரும் பொழுது அவர் காட்டுரோஜா திரைப் படத்திற்கு பாட்டு எழுதிக் கொண்டிருந்தார்.

திருமணம் முடித்து அமெரிக்கா போய் திரும்பவும் நடிக்க வந்த பத்மினிதான் காட்டுரோஜா திரைப்படத்தின் நாயகி. மீண்டும் நடிக்க வந்த பத்மினியை வரவேற்று பாடல் எழுதுவதுதான் கண்ணதாசனின் நோக்கமாக இருந்தது. காட்டு ரோஜா என்பது படத்தின் பெயராக இருந்ததால் ரோஜாவை மையப்படுத்தி கண்ணதாசன் பாட்டெழுதினார். ரோஜா மலரைவிட தான் அழகாகவும் இளமையாகவும் இருப்பதாக பத்மினி படத்தில் பாடுவதாக கண்ணதாசன் பாட்டு எழுதிக் கொடுத்தார். கண்ணதாசன் எழுதிய பாடலின் ஆரம்ப வரிகள்

„ஏனடி ரோஜா என்னடி கொழுப்பு
எதனைக் கண்டாயோ?
என்று இருந்தது.
என்னடி கொழுப்பு என்ற வார்த்தையை மாற்றும் படி தயாரிப்பாளர் தரப்பு கேட்டுக் கொண்டதால் என்னடி சிரிப்பு என்று மாற்றி எழுதிக் கொடுத்தார்.

ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு
எதனைக் கண்டாயோ?
அன்று போனவள் இன்று வந்து விட்டாள்
என்று புன்னகை செய்தாயோ?

மொட்டாக நின்றவளே
முள்ளோடு வந்தவளே
முத்து நகைகளைக் கொட்டி அளந்திடும்
முகத்தைக் கொண்டவளே
கட்டான ராணி என்று
பட்டாளம் ஊரைக் கொண்டு
கண்கள் மயங்கி கன்னம் சிவந்திட
களித்து நின்றவளே

ரத்தினக் கம்பளமே
அடி முத்திரை மோதிரமே
நீ நாளைப் பொழுதுக்குள் வாடி விழுந்திடும்
மாயக் கதையடியோ
நான் சித்திரப் பெண்மையடி
இது தெய்வப் பருவமடி
எத்தனைக் காலங்கள் மாறிய போதிலும்
என்றும் இளமையடி
எனக்கு என்றும் இளமையடி


https://www.youtube.com/watch?v=bZmEPYSqBRw

கையில் ரோஜா மலர்களை வைத்துக் கொண்டு பத்மினி „ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனைக் கண்டாயோ?' என்று படத்தில் ஆடிப் பாடியது அவரது இரசிகர்களுக்கு பிடித்துப் போயிற்று. ஆனால் பாடலில் வரும் ரோஜா என்ற சொல்லுக்கு முன்னால் „ச' என்ற எழுத்தைப் போட்டால் அது சரோஜா என்று சரோஜாதேவியை நோக்கிப் பாடுவது போன்று இருக்கும். கண்ணதாசனின் இந்த விளையாட்டு அன்று பலருக்குத் தெரியாமல் இருந்தது.

பத்மினியை இளமையாகச் சொன்ன கண்ணதாசனுக்கு, எம்ஜிஆர் தன்னைவிட அதிகளவு வயது குறைந்த நடிகைகளுடன் படங்களில் நடித்துக் கொண்டிருந்ததும் என்னவோ செய்திருக்கிறது. எம்ஜிஆருக்கு தாத்தா வயது. இப்படி இளம் பெண்களுடன் நடிக்கிறார் என்பதைக் காட்ட, பணத்தோட்டம் படத்தில்

'ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை பிளந்து தா தா தா
நாகலிங்கப் பூவெடுத்து நாலு பக்கம்
கோட்டை கட்டி வா வா வா
மாம்பழத்துச் சாறெடுத்து
மல்லிகையில்தேனெடுத்து தா தா தா.. '
என்ற பாடலை எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடலில் கதாநாயகி எம்ஜிஆரைப் பார்த்து தாத்தா தாத்தா என்று அழைக்கும் வகையில் பாட்டு அமைந்திருந்தது. படம் வெளிவந்து பாடலும் பிரபல்யமானதற்கும் பிறகே இந்த விடயத்தை கண்ணதாசன் வெளியே போட்டு உடைத்தார். கண்ணதாசன் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலத்தில் „கவியரசை புவியரசு வெற்றி கொண்டதுண்டா கலைமகளை திருமகள்தான் வெற்றி கண்டதுண்டா' என்று பாடல் எழுதினார். பின்னாளில் அவருக்கு வந்த நிதி நெருக்கடியினால்,

„கலைமகள் கைப் பொருளே - உன்னைக்
கவனிக்க ஆளில்லையோ?
விலையில்லா மாளிகையில் - உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ?
உன்னிடம் ஆயிம் ராகங்களே என்றும்
உனக்குள் ஆயிரம் கீதங்களே
இசை அறிந்தோர்கள் மீட்டுங்களே - இல்லை
எனக்கேனும் வழி காட்டுங்களே'
என்று சோகப் பாடல் எழுதினார்.

எம்ஜிஆர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுது கண்ணதாசனை அரசகவியாக்கிக் கொண்டார். கண்ணதாசனின் கவியரசு என்ற அடைமொழியை முன்பின்னாக மாற்றி அரசுகவியாக்கி எம்ஜிஆர் தன்னோடு சேர்த்துக் கொண்டது அரசியலா அல்லது பழைய நட்பா தெரியவில்லை.

ஆழ்வாப்பிள்ளை
11.04.2016

Related Articles