எனது முதல் தரிப்பிடம்

பொங்குதமிழில் ஒரு கட்டுரையில் முன்னர் இப்படி எழுதியிருந்தேன். „எங்களுக்கான தனித்தன்மையான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் . அவை முற்று முழுதாக தென்னிந்தியக் களியாட்டத் தமிழ் திரைப்படங்களாக இல்லாமல் மாறுபட்டு இருக்க வேண்டும்'

எனது நம்பிக்கை இப்பொழுது துளிர்க்கிறது.

பரவலாகப் பார்வைக்கு காண்பிக்கப் படாத ஒரு திரைப்படம் எனது பார்வைக்கு வந்தது எனது அதிர்ஸ்டம்.

அந்தத் திரைப்படம் சுஜித்ஜியின் The Last halt

Ealing Hospitalக்கு செல்லும் 92ம் இலக்க பஸ் ஒன்று தரித்து நிற்கிறது. பயணிகள் வண்டியில் ஏறுகிறார்கள். The Last halt

என்ற பெயருடன் படம் ஆரம்பிக்கிறது. இப்பொழுது படத்துடன் இணைந்து கடைசித் தரிப்பிடம் நோக்கி நாங்களும் பயணிக்க ஆரம்பிக்கிறோம்.

கதையில் மட்டும்தான் சோகமா? காணும் காட்சிகள் எல்லாமே சோகமாக வந்து நிற்கின்றன. பஸ்சுக்கு காத்து நிற்பவர்கள் தொடங்கி சாலையில் போகிறவர்கள் வருபவர்கள் என்று எல்லோருமே எதையோ தொலைத்து விட்டவர்கள் போலவே காணக் கிடைக்கிறார்கள். இலண்டன் பற்றி கனவு கண்டவர்களுக்கும், தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில் லண்டன் காட்சிகளைப் பார்த்தவர்களுக்கும் இந்தத் தமிழ்த் திரைப்படக் காட்சிகள் பெரிய ஏமாற்றத்தைத் தரும். யதார்த்தத்தை அப்படியே காட்சிப் படுத்தி இருக்கிறார்கள்.

அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் சனங்கள் நடுவே அமைதியாக நடந்து வரும் நிலானி கடைசித் தரிப்பிடம் வரை நீண்ட தூரம் நடந்து வருகிறார். அள்ளிப் பூசிய அரிதாரங்கள் இல்லாமல் அவரவர்கள் இயல்பாகவே வந்து போகிறார்கள். இரண்டு பெண் பாத்திரங்கள். ஒன்று நிலானி. மற்றது வனிதா. இரண்டுக்குமான பாத்திரத் தேர்வு நன்றாக வந்திருக்கிறது. வனிதாவின் சலிப்போடு கூடிய வாழ்க்கையை ரேணுகா மணிமாறன் இயல்பாகவே செய்து காட்டியிருக்கிறார். இறுக்கமான முகத்தோடு சோகத்தையும் காட்டி நிற்கும் பாத்திரத்தில் பிரியாசா அப்படியே பொருந்தி விடுகிறார்.

இந்தத் திரைப்படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள்.

நல்ல பெடியன் நானடி பிள்ளை
நாயே பேயே ஏசாதே
நக்கல் நான் அடிக்கிறதால
நாசமாப்போகச் சொல்லாதே...'

என்ற சுஜித்ஜியின் பாட்டை காரில் ஒலிக்க விட்டுக் கொண்டு வரும் கிங் கொங் வரதன்; மட்டும் இந்தத் திரைப் படத்தில் சந்தோசமாக வந்து போகிறான். அதற்கான காரணத்தை பாட்டின் இறுதி வரிகள் இப்படி சொல்லி வைக்கிறது.

'...பிஎம் ஒண்டை வாங்கிக்கொண்டு ஊரைச் சுற்றி வந்திடுவம்
காசு கஷ்டம் வாந்தாச் சொல்லு தும்படிச்சு வெண்டிடுவம்'

'...27 வயதான அழகிய இளைஞனான கிங் கொங் வரதனுக்கு வரன் பாக்க ஆளில்லாததாலை அவரே பெண் பார்க்கிறார்..' என்று காதலுக்கு மரியாதை செலுத்தும் சிவரூபன் தனது இளவட்ட பாத்திரத்தை அப்படியே தந்து விடுகிறார்.

பாஸ்கர், குமாரசாமி, சஞ்ஜெய், சஜீத், சுஜித்ஜி எல்லோருமே இயல்பாகவே வந்து போவதால் திரைப்படம் பார்க்கிறோம் என்ற எண்ணம் போய் எங்களுக்கு முன்னாலேயே ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கும் நிலையே வந்து விடுகிறது. இவர்களில் யாரேனும் ஒருவராவது நிலானிக்கு உதவ மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு விடுகிறது.

சிவாவின் ஒளிப்பதிவு நன்றாக அமைந்திருக்கிறது.

நிலானி போன்றவர்களுக்கு இது ஒரு சமர்ப்பணம் என்று தயாரிப்பாளர் சொல்லி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது சோகத்திலும் உதவாத இனமா நாங்கள் என்ற வெறுப்பு வந்து விடுகிறது.

யதார்த்தமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக படத்தில் சில காட்சிகள் நீளமாகிப் போயிருக்கின்றன. அதனால்; திரைப்படம் சில இடங்களில் ஆமை வேகத்தில் இருப்பதை சொல்லியே ஆக வேண்டும். ஒரு மணித்தியாலத்துக்கு படத்தை நீட்ட வேண்டும் என்ற கணிப்பு இருந்திருக்க வேண்டும்.

'ரெக்னோலஜியிலை வளர்ந்ததெண்டுறாங்கள் எங்கடை சனம் எல்லா இடத்திலையும் அப்படியேதான் இருக்கு. மோட்டுச் சனம். ஆக படிக்கிற காலத்திலைதான் நான் நிம்மதியா இருந்திருக்கிறன்' என்று சமுதாயத்தை நோக்கி ஆங்காங்காங்கே வசனங்களின் தாக்கம் நிறையவே இருக்கின்றன.

கடைசித் தரிப்பிடம் என்ற இந்தத் திரைப்படம் எங்களின் நம்பிக்கையின் இருப்பிடம். இந்த இடத்தில் இருந்துதான் நான் பயணிக்க விரும்புகிறேன். ஆகவே இதுதான் எனது முதல் தரிப்பிடம்.

சுஜித்ஜிக்கும் அவரது குழுவுக்கும் நன்றி கலந்த வாழ்த்து.

ஆழ்வாப்பிள்ளை
27.09.2015

Quelle - Ponguthamizh

Related Articles