கெளதமனின் `செருப்பு´ (குறும்படம்)

ஆக்கியவர்:- கெளதமன்
கதாநாயகி:- பிரகலதா
நாடு:- இலங்கை
ஆண்டு:- 2004

காலுக்கு செருப்பு வேண்டுமென கேட்கிறாள் சிறுமி. செருப்பு அவளுக்கு கிடைக்கிறது. ஆனால், கண்ணி வெடியின் கோரத்தால் அவள் கால்கள்...?

ஐரோப்பா மற்றும் கனடாவில் தற்போது பரவலாக தமிழில் குறும்படங்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. குறும்படத்துக்கேயுரிய தனிச்சிறப்பாகிய சமூகப் பொறுப்புடன் விடயங்களை நச்சென்று சொல்லல் பல படங்களில் திறமையாகக் கையாளப்பட்டு அவை பல மட்டத்தினரதும் பாராட்டையும் பெற்றிருக்கின்றன. சில படங்கள் கன்னி முயற்சியென்பதால் சொல்ல வந்த விடயத்தில் நிலையாக நிற்காமல் ஏதேதோ சொல்லி கடைசி அறுபது விநாடிகளில் கதையின் உச்சக்கட்டத்தைக் காட்டி விமர்சனத்துக்குள்ளானாலும் அவர்களது முயற்சியும் பாராட்டப்படவேண்டியதே.

இந்தவகையில் புலம்பெயர் ஈழத்துப்படைப்பாளர்களால் நாட்டின் போராட்டம் வறுமை போன்ற உணர்ச்சி நிறைந்த சிறு சம்பவங்கள் குறும்படங்களாக எடுக்கப்பட்டு அவை புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற பல்வேறு நாடுகளையும் சார்ந்த குறும்பட விழாக்களில் வரவேற்பைப் பெற்றதையும் காண்கிறோம். அந்தத் தொடர்ச்சியில் ஈழத்திலிருந்து வெளிவந்த ஒரு நல்ல குறும்படமென்று ஆரம்பித்துச் சில நிமிடங்களிலேயே சொல்லிவிடக் கூடிய குறும்படம்தான் செருப்பு. இக்குறும்படம் வெளிவந்து சிலநாட்கள் ஆன போதும் சங்கைக்கு இவை கொண்டுவருவதில் உள்ள சிக்கல்காரணமக பல நாட்களாக பார்வைக்கு எட்டவில்லை. நேற்றே அப்பால் தமிழில் இணைக்கப்பட்டுள்ள கோப்பிலிருந்து தரவிறக்கிப் பார்த்தேன்.

கெளதமன் என்பவரால் இயக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம். 15 நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் ஒவ்வொரு நிமிடமும் இது நிழல் பிம்பங்கள் என்ற உணர்வின்றி ஈழத்தின் வன்னிப்பகுதியில் நடைபெறும் வாழ்க்கையின் சிறுகாலப்பகுதியைக் கண்முன்னால் நிறுத்துகின்றது. கதை நடக்கும் களம் வன்னியென்று குறிப்பிடப்படாவிட்டாலும் உணர முடிகின்றது. கூடவே யாழ்ப்பாணத்திலும் போர் நடந்த காலத்தில் இதே வாழ்க்கைதான் என்ற நினைவும் தலை தூக்குகிறது.பாத்திரத்தேர்வு கதை கதைக்களம் என்று ஒவ்வொரு விடயமும் கவனமாகக் கையாளப்பட்டிருக்கின்றது. பாடசாலைக்குப் போவதற்குச் செருப்பு வாங்க ஆசைப்படும் எழைக்குடும்பத்துச் சிறுமியின் பரிதவிப்பு. அவளுக்கு சிறு செருப்பைத்தானும் வாங்கிக்கொடுக்க முடியாத ஏழைத்தந்தையின் இயலாமை. வறுமையின் கோரத்தாண்டவம். அதனை விட செருப்புக் கிடைத்தும் அதனை சிறுமி அனுபவிக்க முடியாமற் போய்விட்ட அவலம் என ஒவ்வொரு சம்பவமும் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்டுள்ளன.

தேங்காயைக் கோதி சிறு உண்டியல் செய்து செருப்பு வாங்குவதற்காக சிறுமி பணம் சேர்க்கும் ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒருசோகக் கதையை நின்று நிறுத்தி வாசித்த உணர்வு. பின்னணி இசை படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. பாத்திரங்கள் உணர்ந்து நடித்திருக்கிறார்கள் அதிலும் அந்தச் சிறுமியினதும் தந்தையினதும் நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. கோடரி வெட்டிக் காயமேற்பட்ட போதும் அதனையும் தாங்கி சம்பளத்தை வாங்கிச்செல்லும் தந்தை. தந்தைக்கு காய்ச்சல் வந்தபோது தான் ஆசையாசையாய் சேர்த்து வைத்த காசை அம்மா எடுக்கையில் தடுக்க மனமின்றி ஊமையாய் அழும் மகள் இரு உறவுகளும் சிறப்பு. அழகான ஒரு கவிதையொன்றை குறும்படமாகப் பார்த்த மனநிறைவு.

 - ஈழநாதன்
சலனச்சுருள்

Related Articles