நான் கேட்டவை 2 - மனதில் நிற்கும் பாடல்கள்

எனக்காகவா நான் உனக்காகவா.. பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியதாக  உங்கள் கட்டுரையில் இருக்கிறது. அது தவறு என்று ஒரு அன்பர் அறிவித்திருக்கின்றார். அதை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். சரி பாருங்கள். என்று பொங்கு தமிழ் ஆசிரியரிடம்  இருந்து அறிவித்தல் வந்திருந்தது.

தவறு தெரிந்தது. கண்ணதாசன் அந்தப் பாடலை எழுதவில்லைத்தான்.  கவிஞர் வாலிதான்  அந்தப் பாடலை எழுதி இருந்தார். சுட்டிக் காட்டிய அந்த அன்பருக்கு முதலில் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.

இது எனது முதல் தவறு கிடையாது. பல தடவைகள் இவ்வாறான தவறுகள்  எனக்குள் இருந்திருக்கிறது. இனிமேலும் இதுபோல் தவறுகள் வராமல் காப்பாத்துடா சாமி. சரி இனி சாமி பார்த்துக் கொள்ளும்.

அன்றைய காலத்தில் சினிமா பார்க்கப் போவது என்றால்  மிக மிகச் சிரமமான விடயம். முதலில் சினிமா பார்ப்பதற்கு வீட்டில் இருந்து அனுமதி பெற வேண்டும். பிறகு சினிமா பார்ப்பதற்கான பணத்துக்கு ஏதாவது வழி செய்ய வேண்டும்.  வீட்டில் சினிமா என்பது அவசியம் இல்லாத ஒன்று. (அநேகமாக நான் அறிந்த  பல வீடுகளில் இதுதான் நிலமை)   அப்படி இல்லை „சினிமாவுக்குப் போகத்தான் வேணும் என்று வீட்டில் கேட்டால், „படத்துக்கு எல்லாம் காசு தரேலாது. படிக்கிற வழியைப் பார்' எனும் பதில் வரும். ஆக சினிமா பார்க்க வேண்டுமானால் காசு வேண்டும்.

அந்தக் காசைத் தேட  நான் அந்த வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பித்து விட்டேன். என்ன,  சந்தையில் இருந்து வீட்டுக்கு பொருட்கள் வாங்கி  வந்தால் கொஞ்சம்  ஏறுமுகமாக  விலையைச் சொல்வேன். அதுவும் சுலபமானதாக இருக்கவில்லை. சந்தையின் அன்றைய பொருட்களின் விலை விபரம் எல்லாம் வீட்டில் விரல் நுனியில்  வைத்திருப்பார்கள். அதனால்  பெரியளவில் சம்பாதிப்பது என்பது முடியாத ஒன்று. ஒரு படம் பார்ப்பதாயின் குறைந்த பட்சம் நாலு அல்லது ஐந்து தடவைகள் சந்தைக்குப்  போக வேண்டி இருக்கும். பொருட்களை எல்லாம் கட்டிச் சுமக்க வேண்டி இருக்கும்.   வசதிப் பட்டால் பையன் அப்பப்ப காசுலை கணக்கு விடுறான் என்று வீட்டில் தெரியும். ஆனாலும் யாரும் என்னை பெரிதாக அதட்டுவதில்லை.

இப்படி எல்லாம் காசு சம்பாதிச்சு அப்பாடா என்று பெருமூச்சு விட்டு நிமிர்ந்து பார்த்தால், எந்தப் படத்தை பார்க்க விரும்பினேனோ அந்தப் படம் தியேட்டரை விட்டுப் போயிருக்கும். இப்படி  நான் பார்க்க விரும்பி தவற விட்ட படங்கள் ஏராளம்.  

படம் பார்க்க தியேட்டருக்கு போவதென்றால் அது சனிக்கிழமை பகல் காட்சியாகத்தான்  இருக்கும். ரிக்கெற் எடுக்க நீண்டவரிசை வெயிலில் நிற்கும். அந்த வரிசையில் நிற்கும் என் கை, காற்சட்டைப் பைக்குள் இருக்கும் சில்லறைக் காசுகள் ஒன்றோடு ஒன்று மோதி தங்களுக்குள் காயப்பட்டுப் போகாமல் இருக்க  அவற்றை அணைத்துப் பிடித்திருக்கும். ரிக்கெற் தருபவரிடம் காசை  அள்ளிப் போடும் போது நிமிர்ந்து ஒரு பார்வை பார்ப்பார். 'எந்த உண்டியலை உடைச்சாய்? ' என்பது போல் அது இருக்கும். நீண்ட வரிசை, ஆளைக் கொல்லும் பகல் நேர வெயில்  இத்தனைக்கும் நடுவே என் சில்லறைக் காசை எண்ண அவருக்கு சிரமமாக இருந்திருக்கலாம். ஆனால் நான் அடித்துச் சொல்வேன் அதில் ஒரு சதம் ஏனும் குறையாது என்று. எத்தனை தடவை எண்ணிப் பார்த்திருப்பேன் பிழைக்க வாய்ப்பே இல்லை. சரி அவர் திருப்திக்கு எண்ணிப் பார்க்கட்டும் என்று அமைதியாக நிற்பேன்.

இடைவேளையின் போது சோடாப்போத்தல்களில் அதன் திறவுகோலால் தட்டி  „ட்றிங் ட்றிங்' என்று ஒலி எழுப்பி ஒரு வியாபாரம் நடக்கும். எப்போ படம் தொடங்கும் என்ற  தவிப்பு எனக்குள் இருக்கும். „இருந்த காசெல்லாம்தானே ரிக்கெற்றுக்குக் குடுத்திட்டன். இவங்கள் வேறு எரிசசல் ஊட்டிக் கொண்டு“ என்ற சலிப்பும் கூடவே  இருக்கும்.  என்னிடம் பணம் இல்லாததற்கு  அவர்களை எதற்கு  நொந்து கொள்ள வேண்டும்  என்ற  எண்ணம்  எனக்கு மீண்டும் படம் தொடங்கும் நேரம்தான்  வந்து சேரும்.

இந்த இடைவேளை வியாபாரத்துக்குள்தான் அன்றைய படத்திற்கான பாட்டுப் புத்தகமும் விற்பார்கள். அதற்குப் பெரிய காசு இல்லை. ஆனால் சிறியவனிடம் அதற்கும் அப்பொழுது வசதி இல்லை. அந்தப் பாட்டுப் புத்தகத்தில்  பாட்டெழுதியவர்கள், பாடியவர்கள் எல்லாம் விளக்கமாகப் போட்டு இருப்பார்கள். பாட்டு வரிகளின்  இடையிடையே வரும்  ஹம்மிங்,  ஆஆஆ, ஓஓஓஒ, லலல என்று எல்லா எழுத்துக்களும் அதற்குள் அடங்கி இருக்கும். அந்த நேரம் எனக்கு அப்படியான பாட்டுப் புத்தகங்கள் கிடைத்திருந்தால் பின்னாளில் பிழைகள் விடாதிருந்திருப்பேன்.
சரி இனி நான் கேட்டவைக்கு வருவோம்.

'ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதலிரவு....'
இந்தப் பாடலின் வரிகளில் இறுதிச் சொல் சில இடங்களில் இல்லாமல் இருக்கும். பாடலைக் கேட்கும் போது அந்தச் சொல் தானாகவே மனதில் வரும் விதத்தில் இலகுவான வார்த்தைகளைக் கவிஞர் கையாண்டு இருப்பார் அதற்கேற்றாப் போல் இசையும் இணைந்திருக்கும். கற்பகம் திரைப்படத்தில் வரும் இந்தப்பாடலை  கண்ணதாசன்தான்  எழுதி இருந்தார் என்றுதான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.

அத்திக்காய் காய் காய் ஆலங்காய்.., அத்தான் என்னத்தான்.. என்று பாடல்களுக்குள் கண்ணதாசன்  வார்த்தைகளால்  விளையாடி இருப்பதால்தான் எனக்கு அந்த எண்ணம் வந்தது.  ஆனால் நீண்ட காலத்துக்குப் பின்னர்தான் அது கவிஞர் வாலி எழுதியத பாடல் என்று தெரிய வந்தது.

கண்ணதாசனுக்கும் இயக்குனர் கே.எஸ் கோபாலகிருஸ்ணனுக்கும் இடையில் இருந்த சின்னக் கீறலால், இயக்குனர் கவிஞர் வாலியைக் கொண்டு முழுப் பாடலையும் இந்தப் படத்தில் எழுதுவித்தார். போதாததற்கு ஆண் குரலில் எந்தப் பாடலையும் இந்தப் படத்தில் அவர் வைக்கவில்லை. பாட்டும் வெற்றி. படமும் வெற்றி. படத்தின் வெற்றிக்குப் பின்னர் கவிஞர் வாலி ஒரு பேட்டியில் இப்படிச் சொல்லி இருக்கிறார்.

„கற்பகம் படம் வருவதற்கு முன் சாப்பிட காசில்லாமல் பட்டினி கிடந்தேன். கற்பகம் படம் வந்த பின் சாப்பிட நேரமில்லாமல் பட்டினி கிடந்தேன்'

கற்பகம் படத்தில் முதலில் எம்ஜிஆர் தான் நடிப்பதாக இருந்தது. எஸ்.வி. ரங்கராவ் பாத்திரத்திற்கு டி.எஸ். பாலையாவை போடும்படி எம்ஜிஆர் கேட்க அதை கே.எஸ் கோபாலகிருஸ்ணன் மறுக்க, அப்படியானால் என்னால் நடிக்க முடியாது என எம்ஜிஆர் விலகிக் கொள்ள, அந்த வாய்ப்பு ஜெமினிகணேசனுக்குப் போனது. ஜெமினி கணேசனுடன் சாவித்திரி, எஸ்.வி. ரங்கராவ், கே.ஆர்.விஜயா, எம்.ஆர்.ராதா ஆகியோரும் நடித்திருந்தனர்.

கற்பகம் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான வருத்தம் எம்ஜிஆரிடம் இருந்ததோ என்னவோ, அதைப்போன்ற கதை அமைப்புக் கொண்ட ஒரு குடும்பப் படத்தில் நடித்திருக்கிறார். அது பணம் படைத்தவன். டி.ராமண்ணா படத்தை இயக்கித் தயாரித்திருந்தார். பணம் படைத்தவனில் எம்ஜிஆர், சௌகார்ஜானகி, கே.ஆர். விஜயா, டி.எஸ். பாலையா, நாகேஸ் நடித்திருந்தார்கள்.

கற்பகம் படத்தில் வருவது போல் பணம் படைத்தவனில் முதல் மனைவி இறந்து விடுகிறார். அதில் மனைவியை இழந்து தவிக்கும் கணவன். இதில் பிள்ளையை தம்பி வீட்டில் கொடுத்து விட்டு தவிக்கும் அண்ணன் என கதைகளில் மாற்றங்கள் இருக்கும். ஆனாலும் எம்ஜிஆர் படத்தில் ஒரு வித்தியாசமான கதை கொண்ட படம் பணம் படைத்தவன்.

இந்தப் படத்தில் இடம் பெற்ற கண்போன போக்கிலே கால் போகலாமா.. பாடலை கண்ணதாசன் எழுதினார் என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது.

கண்போன போக்கிலே கால் போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா..
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..

என்று அந்தாதியாக ஆரம்பிக்கும் இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் கவிஞர் வாலி.

அலுங்காமல் குலுங்காமல், துள்ளாமல், துடிக்காமல் எம்ஜிஆர் அமைதியாகப் பாடுவதாகக் காட்சி இருக்கும். இதே போன்ற நடன அமைப்புகளோடு சொர்க்கம் படத்தில் சுசிலா பாடும் „ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துக்கள் சேர்த்து வைத்திருந்தேன்..' பாடல் காட்சி இருக்கும். அந்தப் பாடல் வண்ணத்தில் இருந்தாலும் கறுப்பு வெள்ளையில் வரும்  „கண்போன போக்கிலே கால் போகலாமா..' பாடல் காட்சி நன்றாக அமைந்து இருந்தது.

கற்பகம் படத்தில் பி.சுசிலா பாடும் பாடல், அன்று பலரால் முணு முணுக்கப் பட்ட பாடல் அது „பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் பிடிச்சான்..“ என்ற பாடல். பணம் படைத்தவனில் „அந்த மாப்பிளை காதலிச்சான் கையைப் பிடிச்சான்…“ என்ற பாடல் இருக்கிறது. அங்கே மச்சான். இங்கே மாப்பிள்ளை.
பணம் படைத்தவன் படத்தில் இடம் பெற்ற எல்லாப் பாடல்களுமே இனிமையானவை.

„அந்த மாப்பிளை காதலிச்சான்  கையைப் பிடிச்சான்...'
இந்தப் பாடல் காட்சியை நடனக் கலைஞர் தங்கப்பன்  நன்றாக அமைத்திருப்பார். கட்டிலில் படுத்திருக்கும் எம்ஜிஆர் எழுந்து ஆடும் பொழுது, அவரிடம் இருக்கும் குதூகலத்தை அவரின் கால்களில் அவர் காட்டும் முத்திரைகளில் பிரதி பட வைத்திருப்பார். நாயகனும் நாயகியும் தொடாமலே காதலைத் தெரிவிக்கும் இந்தக் காட்சிஅழகாக இருக்கும். இப் பாடலில் „அம்மம்மா என்ன சுகம் அத்தனையும் கன்னி சுகம்' என்ற வரிகள் இசைத் தட்டில் இருக்கும்.  ஆனால் இந்த „கன்னி சுகம்' என்பது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானதால், „அம்மம்மா என்ன சொல்ல அத்தனையும் கண்டதல்ல' என்று படத்தில் மாற்றி இருப்பார்கள்.

டி.ராமண்ணாவின் படத்தில் பாடல் காட்சிகளில் ஏதாவது ஒரு புதுமை இருக்கும். நாயகனும், நாயகியும் வெறுமனே பூங்காக்களை ச் சுற்றி, மரங்களைச் சுற்றி ஓடி ஓடி பாட்டுப் பாடாமல்  ஏதாவது ஒரு  இடத்தில் வைத்துப் பாடலை அமைத்திருப்பார்.

பறக்கும் பாவை படத்தில்  குளியலறைக்குள் வைத்து „உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே உறவென்று நான் நினைத்தது..“, பணக்காரக் குடும்பம் படத்தில்  மாட்டு வண்டியின் கீழே „இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா?...“ நான் படத்தில் காருக்குள்  இருந்து  „போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்…“, தங்கச் சுரங்கம் படத்தில் கிணற்றுக்குள் இருந்து „சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் இரண்டு வந்து விளையாடுது…“ என்று படத்துக்குப் படம் பாடல் காட்சிகளில் புதுமை சேர்த்திருப்பார். பணம் படைத்தவன் படத்தில் தாஜ்மாகாலில்  „பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்.. „ பாடலை  எடுத்திருக்கிறார்.

நல்ல மெலடி நிறைந்த பாடல். முகலாய உடையில் எம்ஜிஆர், கே.ஆர். விஜயா பாடுவதாக படத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங் அருமையாக இருக்கும்.
„பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்...'

„எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்..'
இந்தப் பாடலில் காக்கை இனம் வாழும் வாழ்க்கை முறை பார்த்து மனித குலம் வாழ உழைப்பான்  என்ற பாடல் வரி வரும். அன்றைய காங்கிரஸ்காரருக்கு காக்கைகள் என்று சொன்னால் பிடிக்காது. காக்கைளைக் காங்கிரஸார் தணிக்கை செய்ய, நேற்று நாம் வாழ்ந்த வாழ்க்கை விதம் பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்று படத்தில் பாடல் இடம் பெற்றிருக்கும்.
பாடல் காட்சியில் கை வண்டி இழுத்து வரும் ஒரு முதியவருக்கு எம்ஜிஆர் உதவுவது போல் காட்சி ஒன்று வரும். எனக்கு என்னவோ அந்தக் காட்சியைப் பார்க்கும் பொழுது அந்த முதியவருக்கு எம்ஜிஆர் உபத்திரவம் தருவது போல் இருந்தது.

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்... அன்றைய காதலில் தோல்வி அடைந்த பெண்களுக்கான சோகம் ததும்பும் கண்ணீர்ப் பாட்டு. எம்ஜிஆருக்கு சோகம் வெகு தூரம் என்பதாலோ என்னவோ அநேக காட்சிகளில் எம்ஜிஆரை தூரத்தில் வைத்தே காட்சியை அமைத்திருக்கிறார்கள்.

மாணிக்கத் தொட்டில் ங்கிருக்க மன்னவன் மட்டும் ங்கிருக்க...
பாடல் காட்சியில் வெளிச்சம்  கொஞ்சம் கம்மியாக இருக்கும். சோகங்கள் என்றால் கறுப்புதானா? அல்லது சோகத்தில் எம்ஜிஆர் முகம் சரியாக வராது என்பதாலா ? என்னவோ எம்ஜிஆருக்குப் பின்னால் வெளிச்சம் தந்து முன்னால் இருட்டித்து காட்சியை ஒப்பேற்றி இருக்கிறார்கள்.

பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் பெண்ணுக்கு அழகு வரும்.. பாடலில் சௌகார்ஜானகியை ஆட விட்டு பார்வையாளர்களுக்குக் கொஞ்சம் சிரமத்தை உண்டாக்கி இருப்பார்கள்.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன் என்று கூட்டணி அமைத்து ஏ.பீம்சிங் சிவாஜி கணேசனை வைத்து „ப' வரிசையில் பதிபக்தி, பாகப்பிரிவினை, படிக்காதமேதை, பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார் படங்களை இயக்கினார். (ராஜாராணி விதிவிலக்கு) அதே போல் டி.ராமண்ணா எம்ஜிஆரை வைத்து „ப' வரிசையில் புதுமைபித்தன், பாசம், பெரிய இடத்துப் பெண், பணக்காரக் குடும்பம், பணம் படைத்தவன், பறக்கும் பாவை படங்களை இயக்கினார்  (குலேபகாவலி, கூண்டுக்கிளி ஆகிய இரண்டு படங்கள் விதிவிலக்கு) ஏ.பீம்சிங், டி.ராமண்ணா இருவரும் இயக்கிய இந்தப் 'ப' வரிசையில் வந்த எல்லா படப் பாடல்களும் செம ஹிட்.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன் என்ற கூட்டணி, பணம் படைத்தவன் திரைப்படத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, வாலி என்று சற்று மாறிப் போயிருந்தது. ஆனாலும் பாடல்கள் இனிமையாகவே இருந்தன. இன்றும் மறக்க முடியாத அளவுக்கு மனதில் நிற்கின்றன.

ஆழ்வாப்பிள்ளை
22.06.2014

நான் கேட்டவை - 1 

Comments 

Related Articles