பெயல் மணக்கும் பொழுது - (அ.மங்கை) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம்

புத்தகம்/Books/Bücher

தொகுப்பாசிரியர் அ.மங்கை அவர்களின் அறிமுக உரையிலிருந்து சில பகுதிகள்.....

----// இத்தொகுப்பிற்காகத் தேடியலைந்தபோது எழும்பிய கேள்விகள் பல. மாலிகாவின் உதட்டோரம் சுழித்தோடும் புன்னகை கிளப்பும் கவிதைகள், பெண் கவிஞருடையது இல்லை என்பதைத் தெரிந்தபோது என்னுள் எழுந்த ஏமாற்றத்தை எப்படி ஆற்றுவது எனத் தெரியாது போனது. கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு, இப்படி ஒரு குரல் உண்டு எனத் தெரிந்தபோது, இதுபோன்ற வெளிப்பாடுகளின் தேவை, அவற்றை வெளியிடப் பெண் பெயர் தெரிவு செய்தமை போன்றவற்றை நாம் கட்டுடைக்க வேண்டியது அவசியம் எனப்படுகிறது. ஆண்மை / பெண்மை கட்டமைப்புகளின் பின் தொழிற்படும் ஊகங்களைப் புரிந்து கொள்ள வேண்டியதாகிறது. கோவையில் இருந்து வெளிவந்துள்ள 21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகள் ஆய்வு கட்டுரைத் தொகுப்பில் ப.தமிழரசி என்பவருடைய கட்டுரை முழுக்க முழுக்க மாலிகாவின் கவிதைகளை பெண் கவிஞரின் குரல் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ளதைக் காண நேர்ந்தது. இன்னமும்..... என்னுள் தயக்கங்கள் உள்ளன. இத்தொகுப்பில் இடம்பெறும் எவரேனும் ஆண் கவிஞர்களாக இருப்பாரோ என, முடிந்தவரை உறுதி செய்துள்ளேன். வ.ச.ஐ.ஜெயபாலன், ஐங்கரநேசன், சித்ரலேகா, ஆழியாள், சுமதி ரூபன், தெ.மதுசூதனன் ஆகியோர் இதற்குப் பேருதவி செய்தனர். அவர்களது பங்களிப்பின்றி இத்தொகுப்பை நிறைவு செய்வது சிரமமாக இருந்திருக்கும்.

இத்தொகுப்பில் இடம்பெறும் சிலரை நான் நேரில் அறிவேன். பலரை நான் அறிந்ததாக உணர்கிறேன். இன்னும் பலரைச் சந்திக்க ஆவலாக உள்ளேன். இவர்களுக்குள் ஒவ்வொருவரது ஆளுமை, சிந்தனை, அரசியல் தெரிவு ஆகியவற்றில் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இத்தொகுப்பில் அனைவரும் ஒரு சேர இருப்பதைக் குறித்து அக்கவிஞர்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வெவ்வேறு அரசியல் சார்பும் சிந்தனையும் கொண்டவர்கள் என்ற வகையில் அது நியாயமானதும் கூட. ஆனால் தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஈழப் பெண் கவிஞர்களுக்கான கவிதைத் தொகுதி என்ற வகையில், அனைத்துத் தரப்பையும் இணைப்பது எனக்கு அவசியமாகப்பட்டது. அதைவிடக் கூடுதலாக வேறுபாடுகளை ஒருங்கே வைப்பது வளமான வாசிப்பிற்கு வழிகோலும் என்று நான் நம்புகிறேன். எனது அடிமன உந்துதலும் படைப்பாளிகளான இப்பெண்களோடு நான் நடத்தும் உரையாடலும் இதுவாகும். இதனை எனது தோழிகள் ஏற்பார்கள் என நம்புகிறேன்.

இக்கவிதைகளை நான் எடுத்த தொகுதிகள், இதழ்கள், மலர்கள் குறித்த விவரத்தை ஒவ்வொரு கவிதையோடும் இணைத்துள்ளேன். தொகுதியாக்கத்தில் இடம்பெறவேண்டிய முக்கிய தரவுகள் அவை என்றும் கருதுகிறேன். இதன் மூலம் பெண்கள் என்ற ஒரே அடையாளத்தை மட்டுமின்றி, இப்பெண்களின் சார்புத் தன்மையும் செயல்களமும் வெளிப்படும் எனக் கருதுகிறேன். தரவுகளை ஏற்கனவே வெளிவந்த தொகுப்புகள் தராத காரணத்தால், மூலத்தோடு ஒப்பிடவும், விடுபட்ட / மாற்றப்பட்ட சொற்கள் / வரிகளைக் கண்டறியவும் வாய்பின்றிப் போகின்றது. அடிப்படை அச்சு அறமாக இதைக் கருதிச் செயல்பட வேண்டிய அவசியத்தை, தமிழகத்தில் இன்று வலியுறுத்த வேண்டிய தேவை உள்ளது.

இத்தொகுப்பு முறைமை கூடியவரை அனைத்து தரப்புப் பெண் குரல்களையும் ஒருசேரப் பதிவு செய்வது என்பதாகவே உள்ளது. கவிஞர்களை அகரவரிசையில் வெளியிடுவதன் மூலம் இந்த இருபதாண்டுக் காலச் சூழலுக்குள் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், முரண்கள் போன்றவற்றைக் கொண்டுவர இயலாமல் போனது. இலக்கியத்தின் அழகியல் அளவுகோல், தனிப்பட்ட இரசனை மட்டங்கள் போன்றவற்றை இதுபோன்ற தொகுதிக்குள் கொண்டுவர நான் விரும்பவில்லை. வாழ்வா / சாவா என்ற போராட்டத்தில் , மூச்சுவிடத் திணறும் சூழலில் வெளிவரும் இக்கவிதைகளைக் கூறுபோட்டு, கூவி விற்க நான் தயாராக இல்லை. அதற்கான மனம் என்னிடம் இல்லை.

இவற்றோடு இத்தொகுப்பைப் பற்றி நினைக்கும் போது எனக்குச் சில அச்சங்கள் ஏற்படுகின்றன. இதில் வந்துவிடக்கூடிய தவறுகள் எனது தூக்கத்தைக் குலைக்கின்றன. தயவு செய்து தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அவற்றைச் சரிசெய்வதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். //----

இக்கவிதைத் தொகுப்பினை சிவ செந்தில்நாதன் தனது மாற்று வெளியீட்டினூடாக பதிப்பித்துள்ளார். நூலின் பிரதிகள் வேண்டுவோர் நேரடியாக சிவ செந்தில்நாதனுடன் தொடர்புகொள்ளலாம்.

தொலைபேசி : +919382853646

இக்கவிதைத் தொகுப்பானது 280 பக்கங்களுடன் டெம்மி அளவு தாளில் நேர்த்தியான கட்டமைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய ரூபா 130.00 ஆகும்

 

ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள். - பெயல் மணக்கும் பொழுது

Drucken

Related Articles