சாவினால் சுற்றி வளைக்கப்பட்டவர்கள்..

கடவுளும் கையினை உதற உலகமும்

கத்தியத் தீட்டிக் கையினிற் கொடுக்க

திடமாய் இருந்த வாழ்வின் விடுதலை

முடமாய்ப் போனது அன்பே..

இந்தக் கடல்தான் நாம்

எழுந்தன்று நின்ற கடல்

இந்தக் கடல்மடி தான்

எம் வாழ்வைச் சுமந்த மடி

இந்தக் கடற்கரை தான்

எம் வாழ்வின் இறுதி வரை

வந்து வழி அனுப்பி

வாய் விட்டு அழுத கரை

அன்றிந்தக் கடற்கரையில்

அடித்து வந்த அமைதி அலை

இன்றுந்தான் அடிக்கிறது

எவர் சொன்னார் இல்லையென்று..?

மா சனத்தின் மனதறுந்து வீழ்ந்து விட்ட

மண் மேலே

மயான அமைதி அலை தன் மார்பில் அடிக்கிறது

இன்றுந்தான் அடிக்கிறது

எவர் சொன்னார் இல்லையென்று..?

மயான அமைதி அலை தன் மார்பில் அடிக்கிறது..

பொன்னாய் இன்றும்

பொழிகின்ற இந் நிலவே

அந் நாளும் எம் முன்றில் நின்றதடி

இதைக் காட்டி

எத்தனை கதை கதையாய்

எமக்கெங்கள் தாய்மார்கள்

சத்துணவோடூட்டி

சதை பிடிக்க வைத்திருப்பார்

அத்தனை சதையும்

இதோ இந்த நிலா முன் தான்

பித்தளைக் குண்டறுக்கப்

பிய்ந்தறுந்து வீழ்ந்ததடி..

இப்போதும் இந் நிலவே

எம் வானில் நிற்கிறது

எடுத்தூட்டி விடுவதற்குத் தாயும்

ருசி பிடித்து

இன்னுமெனக் கேட்பதற்குக்

குழந்தைகளும் இல்லையடி

தாயும் குழந்தையுமாய்

தப்பித்து எங்கேனும்

தகரக் கொட்டைகயுள் வாழ்ந்தாலும்

நிலாக் காட்டி

ஆக்காட்டு என்று சொல்லி

ஊட்டுதற்கும் அதை ரசித்து

அன்பாகத் தலைதடவி விடுவதற்கும்

அவளிடத்தில்

தெம்பான வார்த்தை எல்லாம்

தீர்ந்தாலும் தீத்துகின்ற

அன்பொழுகும் கை கூட

அறுந்தெல்லோ போனதடி..

பதம் பார்த்துப் பறித்து உண்பதற்கு யாருமின்றி

பழமெல்லாம் கனிந்தழுகி வீழ்கிறது

மேனியிலே

இதமாய் ஏர் முனையை இழுப்பதற்குக் கைகளின்றி

எங்கும் நிலம் வெடித்துப் பிளக்கிறது

வீடழிந்து

காடெழுந்து படர்ந்து கனக்கிறது

பேச்சறுந்து

உலக வரைபடத்தில் இல்லாத நிலம் போல

ஒதுக்கப்பட்டுள்ள ஓர் நிலத்தில்

எஞ்சியுள்ள

இழக்க இனி ஏதும் இல்லாத மக்களையும்

இன்னும் ஏதுமங்கு மீந்திருந்தால்

இழக்க வைக்க

அந்நியன் மிகுந்த அவாவோடியங்குகிறான்

பன்னாட்டு நலனெம்மில்

பாய் விரித்துப் படுக்கிறது..

இத்தனை காலமாய் ஊட்டி வளர்த்த

அத்தனை உயிர்களின் ஆசையும் கனவும்

இத்தரை மீதுதான் வீழ்ந்தது உரமாய்

சத்தமே இன்றிக் கிடப்பினும் உள்ளே

சத்து நிறைந்து தான் கிடக்குது

பூமியில்

ஒவ்வொரு தேசம் விடிவதற்கென்றும்

ஒவ்வொரு காலம் உள்ளது, அன்று

எவ்வளவு இந்த உலகம் எம்மை

இறுக்கி அமுக்கி வைப்பினும் விதைகள்

அறுத்து விலங்கை உடைத்து நிமிர்ந்துமே

செழித்து வளர்ந்திடும் என்கிற

பூமியின்

அழிக்க முடியாத நியம உண்மையை

இன்னும் என் மனம் நம்புது அக்காலம்

என்னுடை வாழ்வுக் காலத்துலெழுந்தால்

எங்குதான் தேடுவேன் வார்த்தையை

அன்பே

இந்தப் பிறப்பின் பேறினைச் சொல்ல

- தி.திருக்குமரன்

Related Articles

இன்டர்நெட் காதல்

முதுமை

சாவோடிவை போகும்!

நிலுவை

தத்துவம்

இலவு காத்த கிளியாக....!

எம்மவர் மட்டும் எங்கே...?

ஓ... இதுதான் காதலா !

வயல் வெளி

கேணல் கிட்டு