கொஞ்ச நேரம்

இயற்கையை, தான் மட்டுமே இரசிக்கவேண்டும் என்ற எண்ணமில்லாதவன் கலைஞன். அதனால் தான் அழகு என்று காண்பதை ஓவியமாகவோ, புகைப்படமாகவோ ஒளிப்படமாகவோ சிறைப்பிடித்து காலம் காலமாக யாவருக்கும் காட்டி மகிழ்கிறான்.

இந்த மகிழ்ச்சி எனக்கும் அடிக்கடி வருவதுண்டு. அதனால் கமராவுடனே தான் எந்த விடுமுறை என்றாலும் கழிப்பேன். இது இன்று அல்ல அன்று தொட்டுத் தொடரும் பழக்கம். விடுமுறை என்றால் தனித்துச் செல்லும் பழக்கம் எனக்கு மிக அரிது. இன்று போல் கணவன், தனியாகவும், மனைவி தனியாகவும் விடுமுறைக்கு செல்லும் பழக்கம் குடிகொள்ளாத முதல் தலைமுறை மனிதன் நான்.

முன்பு கொழும்பு செல்வது என்றால் பிற்பொக்ட் கவனம் என்று சொல்லி அனுப்புவார்கள். இப்போ பாங்காக் போவது என்றால் அங்கு பெண்கள் கவனம் என்று சொல்லி அனுப்புவார்கள். கொழும்பில் கொடுக்காவிட்டாலும் பிக் பொக்ற் அடிப்பார்கள், ஆனால் இங்கு ஆண்கள் இடம் கொடுக்காமல் பெண்கள் அடிக்க மாட்டார்கள் என்பது சிறு வேறுபாடு.

பாங்காக்கை விட புக்கெற்றும், பிப்பி அயலன்ட் மற்றும் ஜேம்பொண்ட் அயலண்டும் (அது முன்பு ஜேம்பொண்ட் நடித்த படம் ஒன்று எடுத்த தீவு என்பதால் வந்த பெயர்.) ஒரு திரைப்படத்திற்கு வேண்டிய அழகிய காட்சிகள் கொட்டிக்கிடக்கும் இடம், இத்தீவு. நானும் மனைவியும் ஒருவார விடுமுறையில் சுற்றுலா போனோம்.

புக்கெற் அன்று சுனாமியால் அதிகம் பாதிக்கபட்ட இடம். இதனைத்தானோ அழகும் ஆபத்தும் ஒரே இடத்தில் என்றார்கள். அழகிய 5 நட்சத்திர விடுதி, காலை எழுந்ததும் உணவு. சற்று எட்டி நடந்தால் கடல். ஆசைதீர அலைகளுடன் நீந்தி மகிழ்ந்தோம்.

தனியாகவும், சோடியாகவும் பல நாடுகளிலும் இருந்து வந்திருந்தார்கள். கொட்டலில் எமது அறைக்கு நேரே தாய்லாந்துப் பெண்ணொருத்தி நேரத்திற்கு நேரம் ஆடை மாற்றிக்கொண்டு தலையில் ஒரு பூவுடன் சுற்றிவருவாள். அந்தப் பூவைச் சுற்றி ஒரு வண்டு! ஒரே வண்டு!! தினம் மொய்த்தவண்ணமே இருக்கும்.

அவர்கள் கைகள் கோர்த்தவண்ணம் திரிவார்கள். சற்று Zoom பண்ணிக் கவனித்தால் அவன்தான் அவளைப் பிடித்திருப்பான். அவள் அந்தப் பிடியில் எந்தவித உணர்வும் கொண்டவளாகத் தெரியவில்லை. அவள் காதலன் வயது ஒரு முப்பது வயது மட்டுமே அவளை விட அதிகமாக இருக்கலாம்.

தினமும் ஏதாவது ஒரு இடத்திற்கு கொட்டல் Van இல் தனியாவும், குழுவாகவும் எம்மை அழைத்தச் செல்வார்கள். நாம் தனியாகச் செல்வதே வழக்கம். ஆனால் பிப் அயலன்ட் தீவிற்கு கப்பலில் செல்ல வேண்டும் என்பதால் குழுவாகச் சென்றோம்.

அழகாக நான்கு அடுக்குகள் கொண்ட பெரிய கப்பல். அது நீரைக் கிழித்துக்கொண்டு புறப்பட்டது. எனக்கு படம் எடுக்வேண்டும், எனவே மேல் அடுக்கில் இருந்தால் சுலபம் என்று மேல் அடுக்கு இருப்புக்குச் சென்று அமர்ந்து கொண்டேன்.

என் மனைவிக்கு ஒரு குணம், வெயில் என்றால் தலை எரியுது என்பா, குளிர் என்றால் விறைக்குது என்பா. இயற்கையை என்ன றீமோட் மூலம் கட்டுப்படுத்த முடியுமா. சற்று நேரத்தில் “நீங்கள் படத்தை எடுங்கோ. நான் கீழ்தட்டில் இருக்கிறேன்” என்று புறப்பட்டு விட்டா.

நான் தனியாக நின்று படம் எடுத்துக் கொண்டு நின்றேன். பலர் செல்பி எடுத்தார்கள். ஒரு சிலருக்கு செல்பியில் திருப்தி இல்லை. தங்களை ஒருமுறை எடுத்து விடும்படி கேட்டார்கள். நானும் எடுத்து விட்டேன். அவர்களும் பார்த்து விட்டு “அட வடிவாக இருக்கிறது” என்று தங்கள் தங்கள் மொழிகளில் கூறினார்கள். மகிழ்ச்யைக் காட்ட ஏது மொழி. அது தானாகப் புரியும்.

அவர்களுடைய மகிழ்ச்சி மேல்தளத்தில் ஒருவருக்கொருவர் பரவி என்னை ஒரு படப்பிடிப்பாளராக மாற்றி விட்டார்கள். என்னைப் படம் எடுக்க விடுகிறார்கள் இல்லையே என்று வெளியே சற்றுச் சினந்து கொண்டாலும், அவர்கள் என் படப்பிடிப்பிற்கு தந்த சின்னச் சின்ன அங்கீகாரம் அபார மகிழ்ச்சியை தந்தது.

நடுக்கடலில் இரு மலைகள். ஒன்றை ஒன்று தழுவியதுபோல் இருந்தன. ஆனால் அது ஒரு கோணத்தில் பார்த்தால் மட்டுமே அப்படித் தெரியும்.

நான் அந்தக் கோணத்தில் அந்த மலைகளில் ஓரு ஆணையும் பெண்ணையும் தேடிக்கொண்டு நின்றபோது. மிக மிக அருகில் ஆணும் பெண்ணும் தெரிந்தன். அவளது நீண்ட தலைமயிர் என் கமராவை கடல் காற்றின் துணையோடு சுற்றிக் கொண்டது.

அவள் இடைக்குமேல் வலைபோட்டு பிடித்த மீன்போல் உடல் வலையால் பின்னப்பட்டு இருந்தது. பின்னலில் இடைவெளியைப் பார்க்கும்போது இது தானாக விரும்பி வலையில் வீழ்ந்த மீன்போலவும் இருந்தது.

அட அவள் வேறுயாருமல்ல கோட்டலில் நம் முன்னறை மொடல்தான். ஆம் நான் முன்பு சொன்ன அந்தக் காதல் சோடிகள்தான் அவர்கள்.

தங்களுடைய கமராவைத் தந்து தங்கள் இருவரையும் படம் எடுத்து விடும்படி சொன்னான். சரி எனக்கு கப்பல் போகும் வேகத்தில் நான் கண்வைத்த அந்த மலை போய்விடும் என்ற ஏக்கம். அவர்களுக்கு மலைபற்றிய மலைப்பே இல்லை. அடிக்கடி கட்டிப்பிடிப்பதும். கொழும்பில் வாகன நெரிச்சலான நேரங்களில் ஒன்றை ஒன்று முட்டுவது போல், அவர்களது இதழ்களும் அடிக்கடி நெரிச்சலைப் பயன்படுத்தி முட்ட முயன்றன. ஏனோ ஒரு இதழ் தகராறு பண்ணிய வண்ணமே இருந்தது. இந்தத் தகராறை முன்பு கோட்டல் வளாகத்திலும் பலதடவை கண்டு இருக்கிறேன். நாம் அதனைத்தான் ஊடல் என்று சொல்கிறோமே என விட்டுவிட்டேன்.

இப்போது அவர்கள் என்பதிலுக்காக காத்திருந்தாலும் தங்களது வேலைத் திட்டத்தில் மிகவும் உறுதியாக இருந்தார்கள். கமராவை எனக்கு நீட்டியபடியே ஒருவாறு முத்தமிட்டு விட்டான். முத்தமிட்டதை நான் கண்டேன் ஆனால் அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

நான் சற்றுச் சத்தமாகவே சொன்னேன் “5 நிமிடம் பொறுங்கள். அந்த மலைபோனதும் எடுத்து விடுகிறேன்” என்று. அவனுக்கு மலை என்ன? மடுவென்ன. ஓக்கே ! “நாம் முன்னே போய் நிற்கிறோம்” வாருங்கள் என்றான்.

சற்று நேரத்தில் முன்பக்கம் சென்றேன். கப்பலின் முன் கூர்ப்பகுதி நீரை கிழித்துக்கொண்டு பாய்ந்தது. அதனையும், அவர்கள் இருவரையும் ஒரு சட்டத்திற்குள் படமாக்கிக் கொடுத்தேன்.

அதனைப் பார்த்த அவள் தன்னை ஒருபடம் எடுத்து விடும்படி தனது கமராவை என்னிடம் தந்தாள். தன்னைத் தனியாக எடுக்கும்படி. நான் அவளை எடுப்பதற்காக ஓடும் கப்பலில் பின்படலம் அழகாக வரும் வரை காத்திருந்தேன். அவனோ விடுவதாக இல்லை தானும் படத்தில் வரவேண்டும் என அவளை அடம்பிடித்துக் கொண்டு நின்றான்.

அழகிய கூந்தல் தாய்லாந்து நாட்டின் கலாச்சரத்தை காட்டும் பூக்கள் தலையில். மொத்தத்தில் ஒரு மணமகள் போல் தெரிந்தாள். நான்கு படம் படக்படக் என்ற கிளிக் செய்தேன்.

என் ஆவலைப் புரிந்து கொண்டவன், அவளிடம் எனக்கும் ஒரு போஸ் கொடுக்கவும் அவர் எடுப்பார் என்றான். அவள் சற்றும் தயங்காமல் இடுப்பை நெளித்து மார்பை நிமிர்த்தி சும்மாயிருந்த மயில் சிறகு விரிப்பது போல் முடிந்தவரை தன்னை அழகை விரித்தாள்.

சற்று நேரத்தில் அவள் மாயமாக உள்ளே மறைய, அவளையே சுற்றிய வண்டு என்னிடம் வந்தது.

“நான் எனது மின் அஞ்சல் தருகிறேன் அந்தப்படத்தை எனக்கு அனுப்பவிடு” சொன்னான். நான் ஒப்புக்கு வேண்டிக் கொண்டேன்.

என்னை அவதானித்ததாகவும், அழகு இரசனை அதிகம் எனக்கு உள்ளதாகவும் தன் கணிப்பைக் கூறினான். “நான் மலேசியாவில் இருந்து வந்துள்ளேன்” என்றவன் சட்டென “நீங்கள் தனியாகவா வந்ததீர்கள்?” எனக் கேட்டான். “இல்லை நான் மனைவியுடன்” என்றேன்.

சத்தம் வராமலே ஏதோ வாய்க்குள் பேசுவது தெரிந்தது. அதனை எப்படி என்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

சிரித்துக்கொண்டே சொன்னான் “நான் இங்கு வந்துதான் இந்தப் பெண்ணைச் சந்தித்தேன். சுப்பர்” என்று வாயை உறிஞ்சினார். எதனைச் சொன்னார் என்பது அவரது கண்களிலும், சொண்டிலும் தெரிந்தது. சரி அதனை விடுங்கள் அதற்கு அடுத்தால் போல் “கொஞ்ச நேரம்போதும் வேண்டும் என்றால் சொல்லவும். கோட்டலிலேயே அந்த நேரத்தை நான் தருகிறேன் என்றார்.

“ஏன் மாமாவேலையை பார்க்கிறார்?” என்று தமிழில் என்றால் உடனடியாகக் கேட்டு விடலாம். இது அவனுக்கு புரியும் பாசையில் கேட்டு விட்டேன். “அப்படி என்றால் நீ யார்?” என்று. அத்தோடு “உனக்கு என்ன லாபம்?” என்றேன்.

அவன் சொன்னவாரத்தை எனக்கு தீபாவனி மலிவுவிற்பனையை ஞாபகமூட்டியது. அதாவது ஆறு பேரைக் கொடுத்தால் அவள் தனக்கு ஒரு முறை இலவசம் என்றான்.

- மாதவி
வெற்றிமணி - ஜூன் 2018 

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு