சில பேரின் சில பக்கங்கள்

கதை எழுத முயலும் போதெல்லாம் நான் என் சுயத்தை இழந்து கொண்டிருக்கிறேன். கதை எழுத எனக்கு வராது என்று சொன்னால் அவன் கேட்கிறானே இல்லை. எழுது எழுது என்று என்னை ஆய்க்கினைப் படுத்திக் கொண்டே இருக்கிறான். ஒரு பொழுதில் மின்னஞ்சலிலும், இன்னொரு பொழுதில் தொலைபேசியிலும் என்று தொல்லைப் படுத்துகிறான்.

„ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள்“ என்று தொடங்கினேன். அவன் மிகக் கோபமாக „உந்தக் கதையை எத்தனை காலத்துக்குத்தான் கேட்டுக் கொண்டிருப்பது?“ என்று கத்தினான்.

எழுதத் தொடங்கியதைக் கிழித்துப் போட்டு விட்டு, இல்லையில்லை அது அந்தக் காலம். எழுதத் தொடங்கியதை அப்படியே விட்டு விட்டு இன்னொரு பக்கத்தைத் திறந்தேன். எனது கோப்புக்குள் இப்போது பாட்டி வடை சுட்டதும், நரி திராட்சைப்பழம் சாப்பிட்டதும், குரங்கு அப்பம் பிய்த்துத் தின்றதும்... என்று குறை குறையாகப் பல துண்டுகள். அவைகளை எறியவும் மனமில்லை. தொடரவும் தெரியவில்லை.

புதிய பக்கம் ஒன்றைத் திறந்தேன். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது. நான் எழுதத் தொடங்கினேன்.

ஒரு ஊரில் ஒரு ராணி இருந்தாள்… அவன் இன்னும் கடுப்பாகி விட்டான்.

„அப்பிடியெண்டால் உனக்கு எங்கள் ஊர் ராணிகளின் கதைகளைச் சொல்லட்டுமா?“

„என்ன உன்ரை ஜெர்மனியக்கதையளோ? அங்கையிருக்கிற பெண்களுக்கு என்ன குறைச்சல்? எல்லா வசதிகளும் இருக்குது. தோய்க்கிறது கூட வோசிங்மெசினிலைதானே. கோப்பையளைக் கூட டிஸ்வோசரிலைதானே போடீனம்“

„நீ மட்டுமென்ன மாட்டு வண்டில்லையே திரியிறாய்? மோட்டச்சைக்கிள் இல்லாட்டில் கால் தேய்ஞ்சுபோடும் எண்டு சொல்லி அதிலைதானே பறக்கிறாய். மாற்றங்கள் உனக்கு மட்டுமில்லை. எல்லாருக்கும்தான்.

„ஹி..ஹி..ஹி..ஹி…“

„சும்மா இளிக்காதை. உனக்குத் தெரியுமோ? கிருபாகரனுக்கும் அவன்ரை பெண்சாதிக்குமிடையிலை ஏதோ பயங்கரப் பிரச்சனையாம். டிவோஸ் மட்டுக்கும் வந்திட்டுது.“

„பார் பார் கொழுப்பை. வெளிநாட்டுக்கு வருமட்டும் „கூப்பிடு கூப்பிடு எண்டு“ நாண்டு கொண்டு நிண்டு, காதல் கதையெல்லாம் பேசி கடிதம் கடிதமாய் எழுதிப்போட்டு இப்ப டிவோஸ் எடுக்கப் போறாளோ? அவளுக்கு என்ன பிரச்சனை?“

„ஏனிப்ப அவளைப் பேசுறாய்? கிருபாகரனிலையும் பிழையிருக்கலாந்தானே? ஏன் எப்பவும் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கிறாய்?“

„என்ன இருந்தாலும்...“

„என்ன? என்ன இருந்தாலும்...
என்ன இருந்தாலும் அவள் அநுசரிச்சுப் போகோணுமெண்டிறியோ?“

„அப்பிடியில்லை…“

„எல்லாரும் நீ நினைக்கிற மாதிரியில்லை. எத்தனையோ பெண்கள் எத்தனையோ சோகங்களை தங்களுக்குள்ளை வைச்சுக் கொண்டுதான் வாழுறார்கள். வேணுமெண்டால் உனக்கு நான் சிலபேரின்ரை சில பக்கங்களை படிச்சுக் காட்டட்டோ?

„மற்றையவைளின்ரை அந்தரங்கங்களைப் பார்க்கிறது தப்பில்லையோ?“

„தப்புத்தான். ஆனால் உனக்கு வேறையெப்பிடி நான் விளங்கப் படுத்தலாம்.

இங்கை பார்...

இது சகானாவின்ரை டயறியிலிருந்து

மழை அழகாய் இருந்தது. சுடும் வெயிலும் கூட அழகாய்தான் இருந்தது. மலர்களும் அழகாய் இருந்தன. விழும் இலைகளும் கூட அழகாய்தான் இருந்தன. கவிதைகள் அழகாய் இருந்தன. வாழ்க்கை மட்டும் கவிதை போல இருக்கவில்லை. நான் எழுதிய

நான்
யார் யாருடன் பேசலாம்
யார் யாருடன் பேசக் கூடாது
என்பதையெல்லாம்
அவனேதான் தீர்மானிக்கிறான்

தான்
யார் யாருடனெல்லாம்
உறவு வைத்திருக்கிறேன் என்ற விடயத்தில்
நான் தலையிடவே கூடாது என்ற
நிபந்தனைகளைச் சற்றும் தளர்த்தாமல்…

என்ற கவிதை அழகென்றும், அருமை என்றும் முகநூலில் நூற்றுக் கணக்கான கொமென்ற்ஸ்சும், லைக்ஸ்சும்.
நிலத்தில் சிதறியிருந்த சோற்றுப் பருக்கைகளையும், சுவரில் ஒட்டியிருந்த மீன்குழம்பின் கறைகளையும் சமைப்பதற்கு எடுத்த நேரத்தையும் விட, அதிகம் நேரம் எடுத்து துடைத்த எனது மனதின் வலி பற்றி கவிதை படித்த யாருக்கும் தெரிந்திருக்காது. எல்லாம் அந்தத் தொலைபேசி அழைப்பால் வந்தது. பார்த்துப் பார்த்து அவனும் இவன் சாப்பிடும் நேரந்தான் அழைக்க வேண்டுமா? அழைத்தவன் என் மகன் வீட்டில் இல்லை என்று நான் சொன்னதும் பேசாமல் அழைப்பைத் துண்டித்திருக்கலாம்.

„சுகமா இருக்கிறீங்களோ அக்கா?“ என்று சும்மா கேட்டு வைத்தான். „ஓம்“ என்று சொல்லி விட்டு நானும் இணைப்பைத் துண்டித்திருக்கலாம். சனி எங்கெல்லாம் குந்தியிருக்கும் என்று பல சந்தர்ப்பங்களில் எனக்குத் தெரிவதில்லை. „ நீங்களும் சுகமா இருக்கிறீங்கள்தானே...?“ நான் கேட்டு முடித்தேனோ இல்லையோ எனக்கே இன்னும் தெரியவில்லை. ணொங் என்ற சத்தமும், தொடர்ந்து படாரென்று உடையும் சத்தமும். நெஞ்சு ஒரு தரம் திடுக்கிட்டது. திரும்பினேன் நிலமெல்லாம் சோறு. சுவரில் மீன்குழம்பு வழிந்து கொண்டிருந்தது. மீன் துண்டுகள் பிய்ந்து சிதைந்து ஆங்காங்கு சிதறிக் கிடந்தன. கூடவே கீரை, கத்தரிக்காய் வெள்ளைக்கறி... என்று பார்க்கச் சகிக்கவில்லை. என்னால் உடனடியாக பதறிலில் இருந்து மீளமுடியவில்லை.

கோபம் தெறித்தது அவன் முகத்தில். வாய் கூவம் நதியாய் கூவியது. மகனின் நண்பனைச் சுகம் விசாரித்ததால் அவன் வார்த்தைகளில் நான் விலைமாதுவையும் விடக் கேவலமாக உருண்டேன். பிரண்டேன்.

மினைக்கெட்டுச் சமைச்சதைக் கூட்டி அள்ளிக் கொட்டும் போதுதான் மனசுதாங்காமல் ஒரு தடவை அழுது தீர்த்தேன். அதன் பின் எனக்கு அவனோடு பேசவே பிடிக்கவில்லை.


„இப்ப என்ன சொல்லுறாய்? சகானா இன்னும் அந்தப் புருசனோடைதான் வாழுறாள். விட்டிட்டு ஓடேல்லை. ஆனால் எத்தனை தரம் மனம் மறுகிச் சாய்ந்திருப்பாளோ..! இப்பவாவது பெண்களுக்கு ஜெர்மனியிலும் பிரச்சனை இருக்குது எண்டிறதை நம்புறியோ?“

„உதென்ன ஆயிரத்திலை ஒண்டுக்கோ அல்லது லட்சத்திலை ஒண்டுக்கோ நடக்கும். உதை மட்டும் வைச்சு, ஒட்டுமொத்தப் பெண்களின்ரை வாழ்க்கையையும் கணக்கிடேலாது.“

„அப்ப இன்னும் சிலரின்ரையைப் படிச்சுக் காட்டிறன்.

இது நிர்மியின் டயறியிலிருந்து

அவனது நியாயம் எனக்குப் புரியவில்லை. தனது எந்த விடயத்திலும் நான் தலையிடக் கூடாதாம். அவன் எங்கு போனாலும், எப்போ வந்தாலும், யாரோடு சிரித்தாலும் ஏன் யாரோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டாலும் நான் பாராமுகமாய் இருக்க வேண்டுமாம். அவனுக்கான உணவைச் சமைத்து வைத்து விட்டு, அவனுடைய உடைகளையும் தோய்த்து, அயர்ண்பண்ணி வைத்து விட்டு அவனுக்காக வீட்டிலேயே காத்திருக்கவும் வேண்டுமாம்.

இது ------ டயறியிலிருந்து

இன்று நிம்மி வந்திருந்தாள்.

அவள் பேசினாள். நிறையப் பேசினாள். ஆண்களை மனம் கொண்ட மட்டும் திட்டித் தீர்த்தாள். அவளது கணவனையும் சேர்த்துத்தான். 'அனேகமான எல்லா ஆண்களுமே தமது மனைவியரின் கஸ்டங்களை விட மற்றைய பெண்களின் கஸ்டங்களைத்தான் கண்டு கொள்கிறார்கள்' என்றாள். தனது கணவனின் குறை நிறைகளைப் பற்றி மற்றைய பெண்களிடம் சொன்னால் நம்புகிறார்களே இல்லை என்று அலுத்துக் கொண்டாள். அவள் மட்டுமல்ல பல பெண்கள் அப்படித்தான் சொன்னார்கள். 'என்ரை புருசனைப் பார்த்து என்ன அருமையான மனுசன் எண்டு என்ரை சிநேகிதியள் எல்லாரும் சொல்லினம்' என்றாள். 'நான் பாரம் தூக்கிக் கொண்டு வந்தால் பார்த்துக் கொண்டிருப்பார். அவையளிலை ஆரையாவது பாரத்தோடை கண்டால் ஓடிப்போய் உதவி செய்வார். அவையளைத் தூரத்திலை கண்டாலே கதவைத் திறந்து பிடிச்சுக் கொண்டு நிற்பார். நான் எவ்வளவு ருசியா சமைச்சுக் குடுத்தாலும் அதுக்கொரு நொட்டை சொல்லுவார். வேறை யாரும் சமைச்சுக் குடுத்தால் இதெல்லோ சாப்பாடு எண்ட மாதிரிச் சாப்பிடுவார். அடுத்தவன் பெண்டாட்டியிலை உள்ள கரிசனை சொந்தப்பெட்டாட்டியிலை இல்லை. அவற்றை செய்கையளைப் பார்த்து எல்லாப் பொம்பிளையளும் அவரை அருமையான மனுசன் எண்டுதான் சொல்லினம். எனக்கெல்லோ தெரியும் அவரைப் பற்றி' என்றாள்.

இது ---- டயறியிலிருந்து

என் முடிவு என்னதாக இல்லாமல் அவர்களானதாக இருந்ததில் எனக்கு வலி அதிகமாக இருந்தது. பெண்விடுதலைக்காய் மேடையில் பேசும் அம்மாவும் என் விடயத்தில் ஊர்ச்சனம் என்ன சொல்லும் என்றுதான் பார்த்தாள். நான் உளவியல் ரீதியாகப் பாதிக்கப் படப் போகிறேன் என்பதைப் பற்றி அவள் அக்கறைப் படவில்லை. ஊரெல்லாம் சொல்லிச் செய்த கல்யாணம் அவர்கள் பார்த்துச் சிரிக்கும் படியாக ஆகி விடக் கூடாதே எனபதில்தான் கவனமாக இருந்தாள்.

இது ---- டயறியிலிருந்து

எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. அவனோடை வாழ முடியேல்லை. விட்டிட்டுப் போகட்டோ எண்டு யோசிக்கிறன்.

எல்லாம் மாறும் மாறும் எண்டு நினைச்சுக் கொண்டே வாழ்க்கை ஒடீட்டுது. எனக்கு வர வர ஏலாதாம். ஒரு முட்டைக்கோதை கையிலை கொண்டு திரியிற மாதிரித்தான் என்ரை வாழ்க்கை. அவனுக்கு ஒண்டுமே சொல்லேலாது. மூக்குநுனியிலை கோபத்தை வைச்சுக் கொண்டே திரிவான். எந்த நேரத்திலை சீறிப்பாய்வான் எண்டு தெரியாது.

இது ------ டயறியிலிருந்து

என் மனதை வதைத்தவர்கள் எல்லோரையும் உதைத்து விட எனக்கு ஆசைதான். ஆனால் வதைத்து என் மனதைச் சிதைத்தவன் அக்னி வளர்த்து அருந்ததி பார்த்து வரும் இன்பத்திலும் துன்பத்திலும் பாதி என்று எல்லோர் முன்னிலும் வாக்குறுதி கொடுத்து என்னைத் தனதாக்கிக் கொண்ட என் புருஷன்தான். உதைக்கவும் முடியாமல் வதையைச் சகிக்கவும் முடியாமல் மனம் தகிக்கிறது. ஆனாலும் வாழ்க்கை..? அது... தொடர்கிறது. கலாச்சார வேலி தாண்டும் தைரியமின்றி!

இது ----டயறியிலிருந்து

உந்தப் பெண்ணியம் எழுதுற ஆக்கள் எல்லாம் புருசன்மாரை டிவோஸ் எடுத்திடுவினம். நீங்கள் மட்டும் இன்னும் ஒண்டா இருக்கிறிங்கள். எப்ப டிவோஸ்? எண்டு ஒருத்தன் என்ரை புருசனட்டைக் கேட்டானாம். சரியான...

இது ---------- டயறியிலிருந்து

40வயதுக்கு மேல் ஒரு பெண் எந்தப் பிரச்சனையையும் கதைக்கவோ சொல்லவோ முடியாதா? அதற்கு மெனோபோஸை விட்டால் வேறு காரணமே இல்லையா?

இது -----டயறியிலிருந்து

எனது உலகம் நிரம்பி வழிகிறது
அவனது பொய்களால்

இது -----டயறியிலிருந்து

அவனைப் பற்றிய எந்தச் சாரலும் என்னுள் வீசாத பொழுதுகளில், எந்தவித முன்னறிவிப்புமின்றி நான் பயணிக்கப் போகும் பேருந்தை ஓட்டிக் கொண்டு அவன் வருவான். இன்றும் அப்படித்தான் வந்தான்.

தூரத்தில் பேரூந்து வரும் போது நான் அவனை நினைக்கவுமில்லை. கவனிக்கவுமில்லை. பேருந்துக்கான மாதக்கார்ட்டைக் காட்டிக் கொண்டு ஏறும் போதுதான் அவனது காந்தப் பார்வை என்னைத் தீண்டியது. அந்தக் கண்களுக்குள் என்ன..? ஆனந்த முறுவலா! நட்பார்ந்த தழுவலா! தெரியவில்லை.

அவனும் நானும் பேசியதில்லை. சிரித்ததில்லை. அவன் யார், என்ன பெயர், அவனது குடும்பம், இது பற்றியெல்லாம் அறிய இத்தனை வருடங்களில் ஒரு போதும் நான் அக்கறைப் பட்டதுமில்லை.

எந்த மொழிகளுக்கும் அப்பாற் பட்ட அந்த நோக்கல், அது போதும் மனசை இன்பக் கடலுக்குள் தள்ள!

இது ------டயறியிலிருந்து

மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கும். அந்த இடத்தைத் தாண்டப் போகிறேன் என்றாலே இப்படித்தான். கால் என்னை அறியாமலே பிறேக்கை மெதுவாக அழுத்தும். கார்க்கண்ணாடியினூடு கண்கள் அலை பாயும். அங்கேதான் அவன் நிற்பான். என்ன பார்வை அது! என்னைக் கொக்கி போட்டு இழுத்து விடும் காந்தப் பார்வை. ஒரு கணம்தான். எனது கார் அவனைத் தாண்டி விடும். அந்தப் பார்வையின் வாசம் மட்டும் என்னுள்ளே பரவி மனசெல்லாம் சந்தோச வாசனை வீசும். வாய் மலர்ந்து உதடுகள் விரிந்து தானறியாமலே ஏனிந்த நெஞ்சு விம்மி விம்மித் துள்ளுதோ... என்று முணுமுணுக்கும். அந்தப் பார்வை இனித்துக் கொண்டே இருக்கும், வீடு திரும்பிய பின் எதற்காகவாவது என் கணவன் என் மீது சீறிப் பாயும் வரை.


இப்போது அவன் எரிச்சலுடன் இடை மறித்தான். „இது சரியெண்டிறியோ? வீட்டிலை புருசன் இருக்கத்தக்கதாய் ரோட்டிலை ஒருத்தன்ரை பார்வைக்காண்டி கண்கள் அலைபாயுறதும், சந்தோசிக்கிறதும்?“ கத்தினான்.

„சும்மா கத்தாதை. அமைதியாக யோசி. எது சரி? எது பிழை? எண்டதை யார் தீர்மானிக்கிறது? நீ மட்டும் என்ன செய்யிறாய்? ஆற்றையும் மனைவியைப் பார்த்து நீ அசடு வழியிறேல்லையோ? அவையளின்ரை பார்வைக்காக ஏங்கித் தவமிருக்கிறேல்லையோ? அந்தப் பொம்பிளை உன்னைப் பார்த்துச் சிரிச்சால் உனக்கு உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை குளிருது. ஆனால் உன்ரை மனைவியைப் பார்த்து யாராவது சிரிச்சால் உனக்கு மனம் கொதிக்குது. முதல்லை உன்ரை மனைவியைக் காதலிக்கப் பழகிக் கொள். அவளைக் காதலோடு பார். சாதாரணமாகப் பெண்கள் விரும்புவது சாய்ந்து கொள்ளத் தோதான தோளையும், அணைத்துக் கொள்ளும் அன்பையுமே. அது பெரும்பாலான பெண்களுக்கு வீட்டில் கிடைப்பதில்லை. அவர்களில் சிலர்தான் எங்கேயாவது கிடைத்து விடும் ஒரு கண்சிமிட்டலிலோ, வார்த்தை ஜாலத்திலோ தம்மை இழந்து விடுகிறார்கள்…“

அவன் கோபத்தின் உச்சத்துக்கே போயிருந்தான். „நிப்பாட்டு. இதுக்கு மேலை எனக்கொண்டும் சொல்லாதை. உன்னோடை கதைக்கவே ஏலாது. எப்ப பார்த்தாலும் விதண்டாவாதம். எனக்கு உன்ரை கதையும் வேண்டாம். கத்தரிக்காயும் வேண்டாம். என்னை விடு. நான் போறன்“ சினந்து சீறினான். தொடர்பை வேகமாகத் துண்டித்தான்.

இவன் போன்றானவர்களுக்கு முன் எதையெழுதி என்ன கண்டேன். எழுதத் தொடங்கிய இதையும் அப்படியே விட்டு விட்டு, என் வேலையைப் பார்க்கத் தொடங்கினேன்.

- சந்திரவதனா
3.11.2016

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு