திருமணமாவது நீறு

தான் உள்ளே போவதை யாராவது பார்க்கிறார்களா என ஒரு பக்கம் பயம் இருந்தாலும் 'இனி இப்படி எல்லாம் வெக்கப்பட்டு வாழ முடியாது, நான் ஆசாபாசம் கொண்ட ஒரு சராசரி மனிதன் தான், என மற்றவர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ நான் நம்ப வேண்டும்' என்ற சிந்தனையுடன் உள்ளே வந்து விட்டான் சங்கர். இப்படி வெக்கப்பட அது ஒன்றும் விலை மாது விடுதி இல்லை ஆனாலும் பணமே தான் இந்த வருகைக்கும் காரணம்.

“என்னை அம்மாதான் பெத்தாங்க அதால எனக்கு அம்மாவை பிடிக்கும். உங்களுக்கு ஏன் என் அம்மாவை பிடிக்கும்...? ” என நாய்குட்டியின் வாலை பிடித்து நிமிர்த்தியபடி - சேபிய நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து இங்கிலாந்தில் வசிக்கும் ஒலிவியாவின் மூன்றே வயதான மகள் டொமினிக்கா தாயின் புதிய காதலன் என்று சொல்லிக்கொண்டு வீடுவரை வந்திருக்கும் சங்கரிடம் கேட்டது.

சங்கருக்கு இப்போதுதான் நடுத்தர வயது அரும்பி இருந்தது ஆனாலும் அதை பெரும் கடினத்தின் மத்தியில் முப்பதாக மாற்ற முயற்சிகள் செய்து விட்டு வந்திருந்தான். இருந்தபோதிலும் தன் இந்த பொய் வயதும் ஒலிவியாவின் உண்மை வயதைவிட பத்து வயது அதிகம்தான் என்ற நெருடலுடன் - நீண்ட வயது வித்தியாசம் எல்லாம் மேற்குலகில் சகயம் - என எண்ணிக்கொண்டு வந்து கதவு முதல் கண்ணாடி வரை எல்லாவற்றையும் பார்த்து சிரித்தக்கொண்டு நின்றவனின் காதில் காதலியின் ஒரே மகள் டொமினிக்காவின் இந்த கேள்வி நீளமாக விழுந்தது.

சங்கர் இதை எதிர்பார்க்க வில்லை. முதலில் குழந்தையின் மழலை ஆங்கிலத்தை ரசித்தவன் எங்கே ரசனையை விட்டு துணுக்குற்றான் என்று தெரியாது சங்கடமானான். நியாயமான கேள்வி மட்டுமல்ல கடினமான கேள்வியும் கூட .

சங்கர் தனக்கு தானே கேட்டுக்கொண்டான் . ' அதுதானே ஏன் இவளின் அம்மாவை எனக்கு பிடிக்கவேணும்... ? ' . சங்கர் விடைக்காக சங்கடப்படுவதை கண்டு விடையை இலகு படுத்த மீண்டும் ஒரு கேள்வியை முன் வைத்தது குழந்தை.

“அம்மாவை பிடிக்கும் எண்டதால அவா உங்கட காதலியா ? காதலி எண்டதால பிடிக்குமா ?” என ஒரு போடு போட்டது சின்ன பொண்ணு.

'சரியாப் போச்சு போ . அம்மாவை ஏன் பிடித்தது என்ற முதல் கேள்வியின் பதிலையே இன்னும் பிடிக்கவில்லை அதற்குள் அடுத்ததா ? நாலு வயது ஆக முன்னே இப்படி நாற்பதை வாட்டி எடுக்குமா ? நல்ல வேளை அம்மாவை மட்டும்தான் பிடிக்கும் என்று பிள்ளை நினைத்திருக்கிறது. அம்மாவுடன் சேர்த்து இந்த வீடு, நடக்கமுடியாத அம்மாவின் தந்தை , முன்பின் காணாதவரையும் பல கால பழக்கம் போல வாலாட்டி வரவேற்கும் 'டொலி' நாய்குட்டி, இவ்வளவு ஏன், கண்ணாலும் கதை பேசி சிரிக்கும் சுட்டிப்பொண்ணு உட்பட ஏராளமானவற்றை எனக்கு பிடிக்கும் என்ற சமாச்சாரம் தெரிந்தால் எல்லாத்திற்கும் பிடித்ததற்கான காரணம் சொல்வதில் என் கதை கந்தல் ' என எண்ணினான்.

சங்கரின் ஆங்கிலம் அரை குறை தான் ஆனால் அது ஏனோ அவனின் வெள்ளக்கார காதலி ஒலிவியாவுக்கு பிடித்திருந்தது . அவள் அரைகுறையாய் தான் உடுப்பும் போடுவாள் என்பதால் அவளக்கு அரை குறைகள் தான் பிடிக்குமோ என்னவோ ? அவளுக்கு ஏதோ விளங்கித்தானே இருக்கிறது இல்லை என்றால் சங்கரால் இவ்வளவு நெருங்கி வீடுவரை வந்திருக்க முடியுமா ? சங்கர் எங்க வந்தான் அந்த சம்பவம்தான் வர வைத்தது .

இங்கிலாந்தின் நடுப்பகுதியான பேமிங்காம் நகரத்தின் அருகே இருக்கும் ஒரு சிறு கிராமம்தான் அந்த வோதகாம்ரன் கிராமம். சங்கர் அங்கிருந்த ஒரு மளிகைக்கடையில் வியாபார உதவியாளனாக கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்கிறான். கடைக்கு அருகில் இருக்கும் பாலாஜி கோயிலுக்கு வரும் பக்தர்களால் கோயில் கூட்டமா இருந்ததோ இல்லையோ கடை கல கல என்று குருவி உறையும் மரம் போல எல்லா காலங்களிலும் கூட்டமாக இருந்தது . இந்த பிரதேசத்தில் இதுதான் ஒரு பெரிய தமிழ் கடை . இதனால் கடைக்கு வந்து கோயிலை எட்டி பார்ப்பவர்களும் உண்டு. கோயிலும் கடையும் ஒன்றை ஒன்று நன்றாக பார்த்துக் கொண்டது. உரிமையாளர்கள் வரும் சில்லறையை பார்த்துக் கொண்டார்கள்.

அன்று வெளிச்சமும் இருட்டும் கலந்த ஒரு குறுட்டு பொழுதில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு என வழக்கத்திற்கு அதிகமான பக்தர் வெள்ளம் கடையில் அலை மோதியது. மழைவேற பெய்துகொண்டிருந்ததால் வாங்கிய பொருட்களை வாடிக்கையாளர்கள் காருக்குள் கொண்டு போய் ஏற்ற முடியாமல் கடை தாவாரத்திலேயே நின்றார்கள். கடைக்கு முன்னால் இருந்த அடுக்கு மாடிக்கட்டடத்தின் கூரை நீர் வடிகால் மூலமாக கோமேதகம் நிறத்தில் விழுந்து கொண்டு இருந்தது. வீதியால் சென்றுகொண்டிருந்த வாகனங்களின் மேல் நீர் - ஆடை போல் போர்த்தி இருக்க - அதன் கரை வீதியெங்கும் இழுபட்டு வெள்ளிமணிகள் போல மழைநீர் சிதறிக்கொண்டு இருந்தது.

அது பனி கொட்டும் காலம் நேரம் மாலை 5 மணியாகியது. கடும் குளிரை மழையில் தோய்த்து கன்னத்தில் ஒற்றிக்கொண்டிருந்தது காற்று. குளிர் காற்று ஏதோ குறும்பு செய்வது போல எல்லோரும் கால்களை ஒடுக்கிக் கொண்டார்கள். சிலர் அது மார்புக்குள் புக முனைவதாக எண்ணி கழுத்தை தோழுக்குள் புதைத்தார்கள். உதடுகள் மட்டும் ஆதரவின்றி நடுங்க குளிர் தன் ஈர நாக்கை உதட்டில் உரசிக் கொண்டிருந்தது . வீதி விளக்குகள் எரிந்து கொண்டிருக்க அதன் வெளிச்சம் மழையில் நனைந்து தொங்கிக் கொண்டிருந்தது.

அந்த அடுக்கு மாடி குடியிருப்பு தொகுதிக்குள்ளே இருந்து - ஒரு பொரித்த உருளைகிழங்கு கீறல் (சிப்ஸ்) போல உடலும், மக்டொனால் பேகரின் ஈரமான குருத்து பச்சை சலாட் போல இளமையும், ஜஸ்கிறீம் கோனின் நிறமும் கொண்ட ஒரு மாது மழையில் நனைவதை மறந்து வந்து கொண்டிருந்தாள் . அவளை தொட வென மழை மளிகைக்கடையினுள்ளும் பெய்ய முனைந்தது. ஆற்றங்கரை நாணல் போல ஒதுங்கி வந்தவளுக்கு கடைக்குள் நின்ற கூட்டம் மரியாதை செலுத்தி வழி கொடுத்தது. மனைவிமார் சுற்றம் அருகில் நிற்பதாலோ என்னவோ அவளை தொடர்ந்து பார்க்காததால் பலரது கண் சுற்றத்தை நொந்தது .

அவளோ யாரையும் கணக்கு பண்ணாமல் கடைக்கு பொறுப்பாக கள்ளாவில் (ரில்லில்) நின்ற சங்கரிடம் வந்தாள். நீல விழிகள் படபடக்க, நெற்றி - வெள்ளி முடியை நீருடன் சேர்த்து ஒதுக்கி - குழந்தைக்கு தீத்தும் சோறு போன்ற மெதுவான ஆங்கிலத்தில் “ தயவுசெய்து எனது மின்சார காட்டுக்கு 10 பவுண்ஸ் ( பவுண் - இங்கிலாந்து நாணயம் ) பணம் போட்டு தரமுடியுமா ...? வீட்டில் பணமுமில்லை வெப்பமும் இல்லை. என் பிள்ளை குளிர் தாங்க முடியாமல் நடுங்குகிறது. நேற்று இரவு என் பணத்தை சில பொறுக்கிகள் தட்டிப்பறித்து விட்டார்கள்” என உதிர்த்துவிட்டு, சாப்பிடுவோரை வாய் பார்க்கும் சாலையோரப்பிள்ளை போல நின்றாள். அந்த வெள்ளைக்கார மாது. அவளின் கண்கள் அவள் பொய் சொல்லவில்லை என்று கூறியது.

'பத்து பவுண்ஸ் இல்லை தங்கமணி - பத்தாயிரம் தாரேன். ஒரு பதக்கம் சங்கிலி தாரேன் ' என்று அவன் கொடுத்து விடுவான் ' என எண்ணிக்கொண்டார்கள் அங்கு கூடி நின்ற ஆண்களில் சிலர். ஆனால் சங்கருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 'கடன் கொடுத்தால் வாடிக்கையாளர்கள் வராமல் வேறு கடைகளுக்கு செல்வதாகவும், இவர்களுக்கு இரங்கினால் கொடுத்த காசும் போய் வாடிக்கையாளரையும் இழக்க வேண்டி வரும் என்றும் ஒருபோதும் நம்ப கூடாத இரக்கமற்றவர்கள், நன்றி மறக்கும் சின்னத்தனமானவர்கள்“ என பொரிந்து தள்ளி - இனி யாருக்கும் கடன் கொடுப்பதில்லை - என முதலாளியின் முடிவை எண்ணி தயங்கினான் .

' இப்போது இவளுக்கு என்ன பதில் சொல்வது? இவள் ஒன்றும் முதலாளியிடம் கடன் கேட்கவில்லை நம்மிடம் தானே கேட்கிறாள்? - நாளை வெள்ளி ; சம்பளம் எடுத்து உன்னிடமே தந்து விடகிறேன் என்று வேறு கெஞ்சுறாள். தென்னம்பாளை போல பற்களை காட்டி கெஞ்சிய போது அழகு அதிகரித்து இரக்கத்தை இரட்டிப்பாக்கியது சங்கருக்கு .

அவன் எரிஞ்ச ரான்ஸ்போமர் மாதிரி காஞ்சு கருத்து வறுகி போய் இருந்தான். கருப்பு என்றால் வெள்ளையருக்கு குறிப்பாக பெண்களுக்கு சற்று பிரியம் என பலர் சொல்ல கேட்டிருக்கிறான். ஆனாலும் - உதவி செய்யப்போய் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கொடுத்தாக முடிந்தவிடுமோ ? - என்று வேறு பயமாய் இருந்தது. ' இப்போது மட்டும் என்ன வாழுதாம் . மனைவி பிள்ளைகள் என தான் குடும்பமா நல்லாவா இருக்கிறேன் ' என்றெல்லாம் வேற சிந்தனை செய்தான்.

அவன் இலங்கை பெற்றோருக்கு இந்தியாவில் அகதி முகாமில் பிறந்த மகன் . அங்கும் இருந்து அகதியாக இங்கிலாந்து வந்த இந்த மூன்து வருடத்தில் ஊரில் பணம் உழைத்து அனுப்பி தங்கைகளுக்கு மட்டும் திருமணம் செய்து வைத்தவன் அல்ல. மனைவிக்கும் இவன்தான் திருமணம் செய்து வைத்தான். மனைவி திருமணமாகிபோய் இரண்டு வருடமாகிறது. இதெல்லாம் இப்ப அடிக்கடி நடக்கிற சங்கதிதான் . கடலுக்கடியில் ஓடும் நீரோடை போல வெளியில தெரியாது. கம்பன் குழந்தையாய் இருந்தபோது ' துணை தேடிய துணைகள் ' கதை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்திருக்கிறது காவியமாக்கி விட்டான் இன்று இதை வைத்து கதையும் எழுதமுடியாது . இருந்தாலும் இவன் வாழ்வில் இந்த கண்றாவி எல்லாம் இங்கிலாந்து வந்த பின் தான் சென்னையில் நடந்தேறியது. மனைவியின் கள்ளக் காதலை கலியாணம் வரை கொண்டுபோய் செய்து வைத்தான்.- இப்படி ஒரு மனைவியுடன் காலமெல்லாம் வாழ்ந்து விட இருந்தோமே - என்று மனதை தேற்றிக்கொண்டான். ஆனாலும் சங்கரின் இரு பெண்பிள்ளைகள் தாயுடன் தான் இருக்கிறார்கள். தாய் கணவனுடன் இருக்கிறார். பிள்ளைகள் திருமண வயதை எட்ட 10 வருடம் காத்திருக்க வேண்டும் இவன் பிள்ளைகளுக்கு என அனுப்பும் பணத்தில்தான் மனைவியின் குடும்பமும் ஓடுகிறதாம். பிழைக்கத்தெரிந்த குடும்பம் . இதற்கும் இவளுக்கு 10 பவுண் கடன் கொடுப்பதற்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் ஏதோ ஒன்று இருப்பதாக அவனுக்கு தோன்றியது.

இதற்கு முன் இவள் கடைக்கு வந்து போகும் போது, இவனின் பேரைக் கேட்டதும், „நானும் தனியேதான் இருக்கிறேன்“ என்றதும், கதவால் வெளியேறி போகும் போது கதவுகளுக்கிடையில் விரலை வைத்து நசிப்பது போல பார்வையை பற்றவைத்து விட்டு போவதும், அவளின் அனுமதி பெற்றோ அனுமதி இன்றியோ அவள் அங்க அழகு நளினமாக அசைத்து மனதை பொங்க வைத்ததும், இவனை வாடிக்கையாளர்கள் யாராவது வசை பாடும் போது இவன் சிரிச்சு சமாளிக்க முனைகையில் அல்லது காதுகொடுத்து கேட்காதவன் போல கேட்டு நிற்கும் போது அவள் இவனுக்காக பேசியும், சில சமயம் பேச்சு வாங்கியும் நின்றது என பல - அரசல் புரசலாக நடந்த சம்பவங்கள் எல்லாம் - வந்து அவன் கழுத்தை நெரித்தன.

போக சங்கர் தங்கி இருப்பது கடையின் பின்னால் உள்ள அறையில்தான் என்பதையும்,அவள் கடைக்கு வரும்போதெல்லாம் சங்கர் வேலையிலே நிற்பதையும் அவள் நன்றாக அறிவாள். இந்நிலையில் 'என்னிடம் பணம் இல்லை !' என்று முகத்திலடித்தாற் போல் கூறுவது நிச்சயம் பொய் என்று ஊகித்து விடுவாள். ஏனோ அவள் தன்னை பொய்காரன் என்று எண்ணி விடக்கூடாது என அவன் மனம் விசாலமானது. பக்தர் வெள்ளம் வேறு அவளை பரிதாபமாகவும் அவனை அந்த கடையின் முதலாளி போலவும் பார்த்தது. பதில் ஏதும் பேசாமல் சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான். அவள் வெளியேறும் போது புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு சென்றாள் . அந்த புன்னகை திரு கொண்டல் பூ போல நெற்றிக்கு நேர கண்களுக்குள் சுற்றியது .

மறு புறம் ' எங்கே இவள் இத்தோடு இந்த பக்கம் வராமல் விட்டு விடுவாளோ... ? கிரமமாக வந்து போனவளை வராம பண்ணிவிட்டேனோ.. ? . 'பணம் கொடுத்து ஒரு வாடிக்கையாளரை வராமல் பண்ணிவிட்டாய்' என்று முதைலாளி திட்டுவாரோ.. ' என்றும் யோசனை ஓடியது .

அடுத்தநாள் வந்தாள் . பணமும் தந்தாள் . கூடவே நன்றியும் சொன்னாள். அதுமட்டுமா சொன்னாள். 'எனது பிள்ளைக்கும் உன்னை பிடித்திருக்கிறது' என்று சொல்லி விட்டு வெக்கப்பட்டு அல்ல துக்கப்பட்டு போக மனம் இல்லாமல் போனாள். ஏனோ அதற்குப்பின் அவளிடம் அதிக பணம் இருப்பதில்லை பல சமயம் அறவே இருப்பதும் இல்லை. கூடவே சிறு சிறு பணத்துடன் வந்து ஒவ்வொரு பொருளாக வேண்டினாள்.

' என்னை பார்க்கதானா இப்படி அடிக்கடி வருகிறாள்' என்பதை உறுதிப்படுத்த . " உண்டியலையா தோண்டிக்கொண்டு வருகிறாய் ?" என்று கேட்டான். அவள் பல்லை சொண்டால் பாதகமாக மூடி கடித்தபடி “அதிக பணம் கொண்டு வந்தால் யாரும் தட்டி பறிப்பார்களோ என்ற பயம் " என்றாள். உண்மை மட்டுமல்ல பொய்யும் அழகாகவே இருக்கிறது அவள் வாய் சொன்னால்.

அவளின் ஆங்கிலம் தெளிவாக இருந்தாலும் ஏனோ அவ் ஊரார் அவளை கேலிசெய்தார்கள். அவள் பூர்வீகம் சேபிய நாடு என்பதால் கூட அவ்வாறு இருக்கலாம் . இவனுக்கு புரியும் படி மெதுவாக பேசுவாள் .

அந்த குடியிருப்பு பகுதி அரச உதவியில் வாழும் கீழ் மட்ட மக்களின் சேரி. அங்கே பலர் வேலைக்கு போகாதவர்கள். அவளும் கூட அப்படித்தான். பிள்ளையுடன் வாழும் தனித்தாய். ஆனால் அவள் தந்தையை பராமரிக்கும் பணிக்கு தன்னை அமர்த்தியுள்ளதால் அவளக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. தந்தை ஒன்றும் பெரிய வயதானவர் இல்லை. ஆனால் ஆள் மிக பெரிதாக இருப்பார் . நன்றாக வேலை செய்து, நன்றாக குடித்து, நன்றாக உடம்மை கெடுத்து வைத்திருந்தார். நீரிழிவு நோய்க்கு நித்தம் ஊசி மருந்து போட வேண்டும் . ஒரே படுக்கைதான். அவர் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும் இல்லை இல்லை படுத்திருந்தே விட்டு போகட்டும். அதுவா இப்ப முக்கியம் . ஒரு வகையில் அவர் படுக்கையில் இருப்பது சௌகரியம் தானே.

குழந்தை டொமினிக்கா கையை பிடித்து குலுக்கி சங்கரின் எண்ண ஓட்டத்தை குலைத்தது. சங்கர் அதன் தலையை தடவியபடி " உன் அம்மா மிக நல்லவர் என்பதாலேதான் எனக்கு அவரை பிடிக்கும் “ என்றான். அதற்குள் ஒலிவியா " சங்கர் தேனீர் போடவா ? இல்லை பியர் குடிக்கிறியா ?" என கேட்டபடி குளிர்சாதனப் பெட்டியை திறந்தாள். ஏதோ அடுப்பு அதனுள் தான் இருப்பது போல.

அவன் " வெறும் தண்ணி தந்தால் போதும்" என்றான்.

" புகை (சிமோக் ) பண்ணு ?" என கை விரல்களுக்குள் இருந்த சிகரட்டை காட்டி கேட்டாள்.

அவன் சிரித்தபடி "பழக்கமில்லை " என்றான் கூனி குறுகி குற்றம் செய்தவன் போல.

அவள் அதை நம்பமுடியாமல் கண்களை அகல விரித்து ஏன் இந்த கெட்ட பழக்கம் என்பதுபோல "உண்மையாகவா ..?" என்றாள்.

அதற்குள் பிள்ளை முந்திக்கொண்டு " சங்கர் ஆள் தான் நல்லா கருகி இருக்கிறார் ஆனால் புகை மணம் இல்லை " என்றது. அவள் பிள்ளையை கடிந்து பார்த்து பின் புன்னகைத்து விட்டு " நான் புகைத்து விட்டு வருகிறேன் " என குசுனி கதவை திறந்து வெளியேறினாள்.

அதுவரை படுத்திருந்த அரை முதியவர் மெல்ல அசைந்தார் . பின் விழிகளை அகல விரித்து 'யார் நீ ?' என்றார் சங்கரை பார்த்து.

'இவள் இவருக்கு என்னை பற்றி சொல்லவில்லையா ?' என கோவமாக எண்ணிக்கொண்டு யன்னல் ஊடாக அவளை உதவி கேட்டு பார்த்தான். அவள் ஏதோ சேபிய மொழியில் கூறி கையை காட்டினாள். கட்டிலில் கிடந்தவர் மறு கணம் அமைதியாக மறு பக்கம் திரும்பி படுத்துக்கொண்டார். என்ன சொன்னாள் என்று புரியவில்லை. இது ஒன்றும் முதல் தடவையும் இல்லை பல முறை இவள் தனது தாய் மொழியில் பேசுவாள் . நமக்கு ஏன் அதன் விபரம் என இருந்து விடுவான்.

பூனை ஒன்று எல்லாற்றையயும் வலம் வந்தபடியே இருந்தது. குசுனி சமைப்பதற்கன்றி சமைத்து வாங்கியதை வைத்து எடுக்கவே பயன்பட்டது. ஒலிவியாவின் பெற்றோரின் படமாக இருக்கவேண்டும் சுவரில் மாட்டி இருந்தது . தந்தையிலும் தாய் வயதானவர் போல சிரித்துக்கொண்டு இருந்தார். குளிர்சாதனப்பெட்டியில் குளிர் மட்டும் முழுமையாகவும், மீதி எல்லாம் அரையும் குறையும் அறுந்தும் திறந்துமாய் கிடந்தன. சங்கர் சுத்தமாக இருக்க ஆசைப்படுவான் ஆனாலும் அவளுடன் ஒப்புடுகையில் எதையும் பொறுத்துக் கொள்ளலாம் போல இருந்தது.

"சங்கர் இரவு என்ன சாப்பாடு வேண்டுவம்?" என்றாள். போட்டிருந்த ஜீன்சுக்குள் கையை விட்டு காசை எடுத்தபடி. அவன் அரை கிலோ தக்காளிப்பழம் வேண்டி இரண்டு கறி சமைத்து மூன்றுநாள் சாப்பிடும் வள்ளல். 'ஏன் காசை அனியாயமாய் செலவு செய்வான் ' என எண்ணிக்கொண்டு ஆனால் சிரித்தபடி "உன் விருப்பம் “ என்றான்.

அவள் புரியாமல் மீண்டும் கேட்டாள். அவன் அப்படி விரும்பி எடுத்து சாப்பிட்டவன் இல்லை . எடுத்த உணவை விரும்பி சாப்பிடுபவன் . எங்காவது கடைக்கு சாப்பிட சென்றால் அருகில் இருப்பவரின் உணவுதான் இவனின் தட்டிலும் இருக்கும். சதாகரித்தக்கொண்டு " நீ என்ன சாப்பிட விரும்புகிறாய் ?" என்றான்.

"கடையில் போய் முடிவு செய்வோம்" என்றாள். சரி என தலையை ஆட்டினான். உடை போட்டுக்கொண்டு வருவதாக உள்ளே சென்று சில உடையை கழற்றிவிட்டு வந்தாள் . அது அவளின் நாகரீக முதிர்ச்சி என விட்டு விட்டான்.

" சரி போவோம் " என்றாள். எதுவும் பேசாமல் அவளுடன் நடந்தான் .

ஒரு வகையாக உணவு உண்டு முடிந்தது . பணம் கொடுக்க போனான் . 'இல்லை' என தடுத்து, தான் கொடுத்தாள். கூச்சமாக இருந்தது . பின்னர் இவனிடம் திரும்பி "உனக்கு நீ கொடு " என்றாள் .

கூச்சம் போய் கோபம் வந்தது. அவள் செயல் ஒன்றும் அழகானதாய் இருக்கவில்லை. ஆனாலும் அர்த்தமானதாக இருந்தது. இவன் உழைப்பிலேயே இன்னொருவருடன் வாழும் முன்னாள் மனைவியோடு ஒப்பிடுகையில் இது ஒன்றும் தவறாகவும் தெரியவில்லை.

நேரம் இரவு ஒன்பதாகி குளிர் அளவோடும், இருட்டு அதிகமாகவும் இருந்தது. இருவரும் மெல்ல காலாற நடந்தார்கள் . அவள் அவனின் மிக அருகிலேயே நடந்தாள். ஏதோ நினைத்தவள் மெல்ல அவனின் கையை பிடித்தாள். குளிர் காணாமல் போக இளம்சூடான சுனாமி ஒன்று அவனை வந்து தழுவி தள்ளியது. முன் எச்சரிக்கை செய்யாமல் மூளையில் பல நரம்புகள் மோதிக் கொண்டன . பல இன்ப நினைவுகள் தோன்றி ஊதி பெருத்து வளர்ந்து ஓடிப் பிடித்தன . சுகமும் பயமும் கலந்து மாய உணர்வு ஒன்று பிறந்து தவழ்ந்து பின் இறக்கை முளைத்தது.

பெரு வளைவில் திரும்பும் வண்டி போல தலையை மெதுவாக அவள் பக்கம் திரும்பி அவள் முகத்தை பார்த்தான். அவள் அவனின் தோளோடு நாடியை உரசியபடி " நல்ல சாப்பாடு இல்லையா.... ?" என்றாள்.

அவனால் அவளின் மன ஓட்டத்தை துளியும் கணிக்க முடியவில்லை. தன் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாது தத்தளித்தான். அவளின் கையை அழுத்தினான். அதன் தாக்கம் அவள் முகத்தில தெரிகிறதா என தேடினான். அதை இருட்டு இருட்டடிப்பு செய்தது. எதையும் எண்ண முடியாத புதிரான முரண்பாட்டு மூட்டையாய் இருந்தாள் அவள்.

இப்படியே இந்த பாதை நீண்டு வாழ்வின் எல்லைவரை போகாதா என்ற ஆவலுடன் “ நாம் திருமணம் செய்து கொள்வோமா ? ” என்றான் ஒருவகை கிளர்ச்சியில் .

அவள் கண்ணை சுருக்கி „எனக்கு 16 வயதாக இருக்கும் போதுதான் அம்மா தந்தையை திருமணம் செய்தார். அப்படி இருக்க நான் எப்படி இப்போதே அது பற்றி யோசிக்கமுடியும் ” என்றாள்.

- யாவும் கற்பனை -

- பசுந்திரா

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு