ஒரு நேரம்

12 வயதான மூத்த மகனின் காற்சட்டை அரையில் இருந்து நழுவி குஞ்சாமணிக்கு கீழே வந்ததை அவன் வெக்கதோடும், வெறுப்போடும் மேலே இழுத்து விட்டதும், வயிற்றில் ஆகாரம் ஏதும் இல்லாததால் அது மீண்டும் மீண்டும் நழுவிக்கொண்டே இருந்ததும் , மூன்று வயதான நந்து காலையில் இருந்து பசிக்குது என்று சாப்பாட்டுத்தட்டுடன் பின்னும் முன்னும் திரிந்துகொண்டு இருந்ததும், ஐந்து பிள்ளைகளும் பசியில் அடிவயிற்றை பிடித்துக்கொண்டு ஆலாய் பறந்ததை பார்க்க முடியாமல் எழும்பி வந்து விட்ட சிவபாதத்தாருக்கு அந்தக் காட்சிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு நேரம் கழிவதென்பது இவ்வளவு கடினமாக இருப்பது இது ஒன்றும் முதல் தடவை இல்லை . ஆனாலும் இதுவும் ஒரு தடவை. எப்படி இந்த நாளை கொண்டு போகப் போகிறேன் என்பதே அவர் யோசனையாக இருந்தது .

'வாழ்க்கை தற்செயல் சம்பவங்களின் கோர்வையா ? இல்லை நிர்ப்பந்தங்களின் நீட்சியா ? 'எதுவாக இருந்தாலும் அவர்முன் ஆறு வயிறுகள் ஆறாமல் கிடக்கின்றன ஏதாவது செய்தாகவேண்டும் வீட்டில் இருந்து வீதிக்கு வந்தார். வீதி இரண்டு பக்கமும் போனாலும் ஒரு பக்கம் வெறும் காடு - விறகெடுக்கவே அத்திசையில் செல்ல வேண்டும் . ஆண்டவனே என்று - கனத்திலும் , தொகையிலும் அவர் வீட்டு உச்சிவரை அடுக்கியிருப்பது விறகே - இருந்தும் அதிகம் வயிறுகளே எரிந்து கொண்டிருந்தன . மறு பக்கமே அவரின் - ஊர் , சனம், சகோதரங்கள் எல்லாம் . அத் திசையில் இறங்கி நடந்தார் . அவருக்கும் வயிறு என்று ஒன்று இருந்து . ஆனாலும் அது பசி எடுக்கும் போதெல்லாம் பிள்ளைகளின் பிஞ்சுப் பசியையும் , பச்சைப்பிள்ளைக்காறி மனைவியின் பசியையுமே நினைவுக்கு கொண்டு வந்தது . தன் வயிற்றை மறந்து நடந்தார் . சிந்தனையை அறுக்கும் - ஒரு பசி அலையை - எழுப்பியது வயிறு. ' வளியில் எங்காவது தண்ணி குடித்து விட்டு போகவேண்டும்' என எண்ணிக் கொண்டார்.

மன்னார் - அனுராதபுரம் பிரதான வீதியின் செட்டிகுளம் துண்டு வெட்டியாய் கிடந்தது . எப்போதாவது ஒரு சில வண்டிகள்தான் அந்த வீதியை பாவிக்கும் . உச்சி வெய்யிலில் ' தார் 'உருகி செருப்பில் ஒட்டிக் கொள்ளும் என்பதால் வீதியை விட கரையே அதிகம் தேய்ந்தது . சிவபாதத்தார் - வந்த வீதியை திரும்பி பார்த்தார் . குனிந்த குனியில் கன தூரம் வந்து விட்டாலும் பிள்ளைகளின் குரல் அருகில் கேட்டது . " அப்பா..! வரேக்குள்ள புள்டோ ரொபி வாங்கிக் கொண்டு வாங்கோ.. " என்றான் நாலாவது மகன் நந்து . " ஐந்து வேண்டி வாங்கோ " என கணக்கை நினைவு படுத்தினான் முன்றாவது மகன் நேசன் . - பாதி என கிடைக்கும் கால்துண்டு இனிப்பு - அனியாயத்தில் இருந்து தப்பி முழுசாக ஒன்று பெற்றுக்கொள்ளலாம் என்பது அவன் எண்ணம் . அவனுக்கு வயது ஆறாக இருந்தாலும் மறக்காத எண் ஐந்து . மூத்தவன் அமைதியாக இருந்து விட்டான். அவனுக்குத் தான் தெரியும் அப்பா வேலைக்கு போக வில்லை ; வேலை தேடும் வேலைக்கு போகிறார் என்ற உண்மை. இதுவே வேலைக்கு போவதாக இருந்தால் -வீட்டுச்சாமான் சிட்டை - போடுபவன் அவனே . அவன் அமைதியாக இருந்தது பத்தே வயதான இரண்டாவது மகள் சுதாவுக்கு சங்கடமாகத்தான் இருந்தது . ஆனாலும் சாமான் பையை அவள் எடுத்துக் கொடுத்துவிட்டாள். ஒன்றும் பலனளிக்கா விட்டால் அப்பா பனம் பழமாவது கொண்டு வருவார் என்பது அவள் நம்பிக்கை . அந்த நம்பிக்கை பலிக்க இன்னும் நாலுமாதம் காத்திருக்க வேண்டும் என்பதை அவள் அறியமாட்டாள். இருந்தாலும் சபாபதியர் பையை வாங்கிக் கொண்டார்.

அம்மா சாறி கட்டுகிறார் என்பதை கடைசி தங்கையின் அழுகை காட்டிக் கொடுத்தது . அவளை ஒரு போதும் அம்மா விட்டு விட்டு போக மாட்டார் என்றாலும் இடுப்பில் ஏறும் வரை அழுவது அவள் வாடிக்கை .

அம்மாவும் அப்பாவும் வீட்டில் இல்லை என்றால் இவர்களுக்கு வேலை அம்மா திரும்பி வரும் வரை அவரின் நடமாட்டத்தை விண் பார்வை ( ஏரியல் வியூ ) ஊடாக அவதானிப்பதே ; வீட்டில் இருந்து கொண்டே அவரை பின் தொடர்வர்கள். பொதுவாக அவர் வீட்டில் இருந்து கிளம்பும் முன்னரே அவர்களின் ஒத்திகை ஆரம்பமாகும் . இதற்கு தேவையானவை அம்மாவின் பயண விபரம் அதாவது அவர் எங்கெங்கே போகிறார் என்ற வரைபடம் . இதனை நேசன் “போற இடத்தை கேக்காத நேசன் " என்ற கண்டனத்தின் மத்தியில் அம்மாவிடமே கேட்டு அறிந்து கொள்வான். அடுத்தது காலம் . நேரம் கணிக்கவோ அல்லது நேரத்திற்கெதிரான அம்மாவின் நடை வேகத்தை தெரிந்து கொள்ளவோ அவர்களிடம் எதுவும் இல்லை . ஆனாலும் அதீத கற்பனையயும் வரைபடத்தை நோக்கி அம்மா நகரும் பாவனையையும் வைத்து ' அம்மா இப்போது எவடத்தில போறா ' என்பதை துல்லியமாக கணித்து விடுவார்கள். இதற்காக வீதியில் உள்ள எருக்கலமரம் , விழாமரம் , துருசு , விடத்தல் மரம் , யோசேப்பு வீட்டு , ஆண்பனையடி போன்ற அனைத்து பாதை ஓர விபரங்களையும் பள்ளிக்கூடம் போகும் போதோ அல்லது கோயிலுக்கு போய்வரும் போதோ குறிப்பெடுத்துக் கொள்வார்கள் . "இப்போது அம்மா இராசாமாமா வீட்டு முடக்கால திரும்புறா " என்பார் ஒருவர். “மூலையில வனைஞ்சு நிக்கிற கள்ளிமரத்தை தள்ளிக்கொண்டு நடக்கிறா “ என்பான் இன்னொருன் . போவது வருவது எல்லாம் இலகுவில் கணக்கு பண்ணி விடலாம் . ஆனால் எவ்வளவு நேரம் அவ்விடத்தில் இருப்பார் என்பதை யாராலும் கூறமுடியாது . இதனை அழகாக “அம்மாவுக்கு கதை கண்ட இடம் கைலாயம்” என அப்பாவும் சொல்லுவார்.

“ சரி இப்ப அம்மா அரசக்கா வீட்ட போயிற்றா இனி புளியம்பழம் உடைத்து அதன் கொட்டை எடுத்து உப்பு போட்டு உறுண்டை ஆக்கி வைக்கும் வேலை ஆரம்பிக்கும். இனி 5 மணிக்கு பிறகுதான் அம்மாவை பின்தொடரலாம் “ என்றான் ஒருவன். அது வரை வீதி ஓர பிலாமரத்திலோ , கிளிசேறியா மரத்திலோ வயதுக்கேற்ற உயரத்தில் இருந்தபடி வீதியால் போகும் வாகனங்களை ஆளுக்கு ஒன்றாக பிரித்து கணக்கெடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

வண்டி எழுப்பும் சத்தத்தில் இருந்தே அது என்ன வண்டி ? நேசன்ர காரா இல்லை அக்காட லொறியா என கூறி விடுவார்கள் . மூத்த அண்ணா பஸ்யை எடுத்து விடுவார். அடுத்து அக்கா லொறியை தன் உடமையாக்கிக் கொள்வாள். சைக்கிள் நந்தவுக்கு . இதில் அண்ணா எட்டு மணித்தியாலம் கொட்டாவி விட்டு இரண்டு பஸ்சோடு உச்சிக் கொப்பில் இருப்பார். அதிக சயிக்கிளோடு நந்து அக்காவுக்கு அருகில் இருப்பான். நந்துவுக்கும் நேசனுக்கும் அக்கா எண்ணி கொடுப்பாள் . பசி வரும்போது ஒரு பஸ் வந்தல் போதும் எல்லோருக்கும் உற்சாகம் வந்து விடும். பஸ் வண்டிக்குள் இருக்கும் ஒரு மனிதநேயக்காரர் இவர்களின் கைகாட்டலுக்கு பதிலாக தன் கையை காட்டினால் அந்த மரமே ஆணி வேரோடு ஆடும் அளவுக்கு ஆனந்தம் அதிரும். அந்த நபர் அவர்களின் ஆள்கால பேசு பொருளாக மாறிவிடுவார் . மடுக் கோயில் திருநாள் காலங்களில் கடைசித்தங்கையை விட இவர்கள் நாலு பேரும் பெரும் பணக்காரர் ஆகிவிடுவார்கள். பிற மாவட்டங்களில் இருந்து மடுத்தேவாலயத்திற்கு பக்தர்கள் வாகனங்களில் அவ்வீதியால் வந்தவண்ணமே இருப்பார்கள். இதனால் அண்ணாவிடமே ஒரு நாளைக்கு 50 பஸ் வண்டி இருக்கும் . கார் எண்ணுபவர் பாடு அதோ கதிதான் வந்து கொண்டே இருக்கும் கண்ணிமைக்காமல் எண்ணிக்கொண்டு இருப்பார்கள் . பொழுது போக்கிற்காக உருவாக்கிய விழையாட்டுக்கள் பசியை போக்கு காட்ட பயன்பட்டது.

பெரும்பாலான காலங்களில் ஒரு சில வாகனங்களை தவிர அவ் வீதியே ஒரு பிச்சக்கார வீதியாக காட்சி தரும் வாகனங்களில் அடிபட்ட முயல் , தவளை , ஓணான் வத்தல்களை தின்ன அவ்வப்போது காகங்கள் தான் பறந்துகொண்டு இருக்கும். வீதி உபயோகம் குறைவாதலால் காட்டு உயிரினம் களைப்பாற ரோட்டுக்கு வந்து காத்து வாங்கும் . அவ்வப்போது அவ்விடத்திலேயே அடிபட்டு உயிரையும் விட்டு விடும். அவ்வாறான ஒரு காட்டின் நடுவே மதவாச்சியில் இருந்து பல மைல் காடுகளுக்கு அப்பால் அமைந்திருந்தது அந்த முதலியார்குளம் கிராமம் .செட்டிகுளம் என்னும் பெரும் தேசத்தின் ஒரு குக் கிராமம். அதன் முதல் குடி சபாபதியர் வீடு அயல் வீடு அரைக்கட்டை தாண்டியே இருந்தது . ஆனால் அவ்வப்போது விசித்திரமான விருந்தாளிகள் விட்டுக்கு வருவார்கள். பெருந்தெருவால் போன - வண்டி பழுதாகியவர்கள் - தண்ணி கேட்டு வருவது மாதத்தில் இருமுறையாவது நடக்கும் .

அன்று உச்சி வெய்யில் நெற்றியை பிளந்து கொண்டிருந்தது . அடர்ந்து வளர்ந்த பலாவிற்குள் சிறு காற்று வீச பலாமரம் பிள்ளைகளை பொலிவுடன் வைத்திந்தது. பசி மட்டும் அவ்வப்போது வந்து எல்லாவற்றையம் கெடுக்கும் . ஒருவர் பசிக்குது என்றாலே அது எல்லோரது வயிற்றுக்கும் பற்றிக்கொள்ளும் . அதனால் நேசனை தவிர யாரும் பசித்தாலும் சொல்ல மாட்டார்கள் . ஒரு கையால் மரக்கொப்பை பிடித்தபடி மறுகையால் வயிற்றை தடவும் போது காண்வரின் கண் கலங்கும் உடனே அவர் “அம்மா இப்ப சில நேரம் வந்தாலும் வருவா “ என்பார். ஆனால் பசித்து வயிற்றை தடவியவரே “ இல்லை அம்மா வர நேரமாகும் “ என்பார் . இது நேசனுக்கு மட்டும் விதிவிலக்கு அவன் வயிறு மட்டுமே போராடி வெல்லும். அவன் பசி தாங்க மாட்டான். இதற்கு சிவபாதத்தாரே ஒரு காரணம் வைத்திந்தார் . அவனுக்கு மூன்று வயதில் கல்லடசல் வந்து யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் அறுவை சிகிர்ச்சை செய்து தான் சுகமாகியது . இதனால் அவனால் பசி தாங்க முடியாதாம் . இது எல்லோரும் ஏற்றுக்கொண்ட பொது விதி அவனுக்கு பசித்தால் பழுக்காத பப்பாபப்ழமும் பிடுங்கப்படும். பாதி பழுத்த பிலாக்காய் பழத்து விட்டதாக கருதப்படும் . ஏன் வெறும் முட்டை அவித்து அவனுக்கு மட்டும் கொடுக்கப்படும். அவன் பாதி தந்தால் தான் மீதிப்பேருக்கு வரும் . ஆனாலும் அவனுக்கே அடிக்கடி பசிக்கும் . அவனே அவர்கள் அனைவர் சார்பிலும் பசி தொடர்பாக குரல் தர வல்ல அதிகாரியாகவும் இருப்பான்.

எங்கிருந்தோ வந்த ஒரு ஓணான் பலாவிலைகளை ஊடறுத்துக் கொண்டு பலாமரத்தில் ஏறியதை கண்டு விட்டான். 'பசிக்குது அண்ணா... 'என வாயெடுத்த நேசன் "அண்ணா...ஓணான் " என கத்தினான். அந்த சத்தம் கேட்டு ஓணானே திரும்பி ஓடிவிட்டது .

00000
பாலில்லா மாடு பட்டிக்கு வந்தது போல கடைத்தெருவுக்கு வந்த சிவபாதத்தாரை வளிமறித்தார் கடைக்கார சின்னய்யா.
“ சிவபாதம் குசினி ஒழுகுது . மேய வேணும் போல கிடக்கு , எத்தின கட்டு கிடுகு வேணும் எண்டு ஒருக்கா பாத்து சொல்லு . நாளைக்கு வேண்டி போடுறன் வந்து ஒருக்கா மேஞ்சு தா “ என்றார் . கும்பிட போன தெய்வம் குறுக்க வந்தமாதிரி இருந்தது சிவபாதத்தாருக்கு . 'இண்டைக்கே கடனா இவரின் கடையிலேயே சாமான் வேண்டி விடலாம்' என எண்ணியபடி சரி என தலையை ஆட்டி விட்டு பாவக்குளம் வீதியில் உள்ள சின்னையா விட்டை நோக்கி நடந்தார்.

அந்த செட்டிகுளம் ஊரில் சிவபாதத்தார் பாதம் படாத வீதியோ , வயலோ , ஏன் வீட்டு முகடோ கூட இல்லை எனலாம். யாருக்கும் கேடு நினைக்காத ஒரு பச்சைத்தண்ணி மனிதன். உள்ளொன்று வைத்து வேறொன்று பேசத்தெரியாத பேர்வளி . என்ன கொஞ்சம் தண்ணி போட்டு விட்டால் கனக்க கதைப்பார் - எல்லாம் இவர் பலரிடம் எமாந்த கதையாகத்தான் இருக்கும் . அந்த ஊரை விட்டால் வேறு ஏதும் தெரியாது இதனால் அனேகமானவர்களை மன்னித்து விடுவார் . ஆனால் தண்ணி போடும் போது எது அவரின் ஞாபகத்தை அதிகம் பாதிக்கிறதோ அது போதை தெளியும் வரை மீண்டெளுந்து ஒலிக்கும். இதனாலேயே பலர் அவரிடம் அதிக பாக்கி வைத்துக் கொள்வதில்லை. அதேவேளை நல்லவர் என அவர் நினைப்பவருக்கு செலவில்லா ஒலிபெருக்கி விளம்பரமும் செய்வார். “ இராசதுரை அருமையான மனுசன் 5 மணி ஆனாப் போதும் காசோட வரம்பில நிப்பான். - இவன் விசயரத்தினம் 12 மணியெண்டால் காணும் ' எல்லாத்தையும் அப்பிடியே விட்டுட்டு சாப்பிட வாரும் சபாபதி ' எண்டு வேலை செய்ய விடமாட்டான் “ என முரசறைவார்.

வளம் பல கொண்டவன் செட்டி அவ்வாறே ; திரும்பும் திசை எல்லாம் குளம் பல கொண்ட செட்டி என்பதால் அது செட்டிகுளம் என பெயரெடுத்தது போலும். அந்த வெங்கலச் செட்டிகுளம் பற்றி ஒரு நாட்டுக்கூத்து பாடலில் “ வன்னி நாடாம் வள நாடாம் வளங்கள் பொருந்தும் செட்டிகுளம் சென்நெல் விழையும் சீர்பதியாய் சிறப்புடன் விளங்கும் முகத்தான்குளம் .” என்னும் பாடல் அதிக நீர்பாசனம் கொண்ட குளமான முகத்தான் குளத்தை குறிப்பதாகும். இதனாலோயே ஒட்டு மொத்த வன்னி மக்களையே ஒரு கட்டத்தில் அடைக்கலம் கொடுத்தபெருமை இந்த வளநாட்டையே சாரும்.

ஊர் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது ஆனால் சிவபாத்தார் தான் இப்படி அல்லல்பட நேர்ந்து விட்டது. அவருக்கு இதே ஊரில் இரண்டு அக்கா , ஒரு அண்ணா , ஒரு தங்கை என நான்கு சகோதரர்கள் இருக்கிறார்கள். இவரும் அண்ணனும் சேர்ந்து நெல்லுக்காணி ,புலவுக்காணி ,வீடுவளவு ,தென்னந்தோட்டம் என பல சீர் கொடுத்து சகோதரிகளை திருமணம் செய்து கொடுத்தார்கள் . பத்து சகோதரங்களுடன் பிறந்த ஒன்பதாவது பிள்ளை இவர் . எல்லோரும் வளமான வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். இவரின் இரக்க சிந்தனையால் தாயில்லாமல் வளர்ந்த சந்திராவை திருமணம் செய்தார். பொன் , பொருள் , காணி ஏதும் இல்லை அதற்காக அவர் ஒருபோதும் வருந்தியதும் இல்லை . அவரும் சரி மனைவியும் சரி உறுதியான மனம் படைத்தவர்கள்.
0000
ஐந்து குஞ்சுகளையும் நினைத்தபடி செட்டிகுளம் குளக்கட்டில் கடைக்கார சின்னய்யாவின் வீடு நோக்கி நடந்து கொண்டு இருந்ததார் சபாபதியர். நேரம் மூன்று மணிக்கு மேலாகிக்கொண்டு இருந்தது . வெய்யில் சுட்டாலும் குளக்காற்று அதனை குளிரவைத்ததுக்கொண்டிருந்தது . முதல் நாள் குடித்த கஞ்சியோடு அடுத்தநாள் மதியமாகிவிட்டது . வயிறு பசியை கிள்ளிக்காட்டியது . கையில் இருந்த பையை குளக்கட்டில் வைத்து விட்டு குளத்தின் துருசடியில் இருந்த ஒற்றையடி பாதை வளியாக மெல்ல குளத்துக்குள் இறங்கினார் .தெளிந்த நீர் சில் என்று இருந்தது. நீரில் தெரிந்த நீல வானம் , பச்சை தாமரை இலை , சிவப்பு தாமரைப்பூ எல்லாம் சேர்ந்து ஒரு அழகிய வர்ண கம்பளம் விரித்ததுபோல் இருந்தது . அதில் ஆங்காங்கே வெள்ளை கொக்குகள் முத்துப்போல் மிளிர்ந்தன . அவ்வப்போது அக் கம்பளத்தை உதறி விரித்து ஒழுங்கு படுத்தியது காற்று. மருத மரத்தில் இருந்து விழுந்த பட்ட கொப்பு ஒன்று நீரில் குத்தி நின்றது . அதில் சிறு மீன்கொத்தி பறவை ஒன்று இழைப்பாறிக்கொண்டு இருந்தது . சபாபதியரைக் கண்ணடதும் எழுந்து பறந்தது.

இரு கையாலும் குளத்து நீரை வயிராற அள்ளி குடித்து விட்டு ஒருவாறு சின்னய்யாவின் குசினி கிடுகுக்ணக்கை பார்த்துக்கொண்டு மீண்டும் கடைத்தெருவுக்கு திரும்பினார்.

புளுக்கொடியலை உடைத்து நாரை வார்ந்துகொண்டு இருந்த கடக்கார சின்னையர் இவரைக்கண்டதும்

“எத்தின கட்டு வேணுமண்ண ?" என்றார்.
“கொழும்புக் கிடுகு எண்டால் பத்து கட்டு வேணும் , எங்கிட கிடுகெண்டால் ஒரு 12 கட்டு வேணும். அதோட ஈக்கில் ஒருகிலோ வேண்டி இரவே ஊறப்போடுக்கோ... மற்றது 2 கிலோ இளக்கயிறும் வேணும். குசனியின் கிழக்குப்பக்க பாச்சித்தடி ஒண்டு நல்லா உளுத்துப் போட்டுது ; அடுத்த மழை வரையும் தாங்காது அதையும் மாத்தினா நல்லம். ஏறி இருந்து மேயேக்க முறிஞ்சு கொட்டினாலும் கொட்டும் போல கிடக்கு” என்றார் பக்குவமாக . கடனை வேண்டிவிட வேண்டும் என்ற உள்நோக்கமும் வார்த்தையில் ஒட்டி இருந்தது . “ இதுக்குத்தான் சபாபதியர் வேணும் எண்டுறது சரி நீர் போயிற்று நாளைக்கு வாரும். நான் எல்லாத்தையும் ஒழுங்கு செய்யிறன். கையோட கிடுகெடுத்து மேல எறிய ஒரு ஆளையும் கொண்டு வாரும் " என்று விட்டு கடைக்குள் சென்றார் . கிடுகெடுத்து தர மனைவியை கூட்டி வரலாம் , அதுவும் இரண்டு நாளா சாப்பிடாம வெறும் கஞ்சியோட கிடக்குது இண்டைக்கு எப்படியாவது உலை வைத்துவிட வேண்டும் ' என எண்ணிக்கொண்டு கடையின் முன் தாவாரத்தின் கப்பை பிடித்தபடி ' எப்படி ஆரம்பிக்கிறது ? என்ன இருந்தாலும் நாளைக்கு வேலை , இண்டைக்கு முற்பணமா கடன் கேக்கிறதில என்ன பிழை இருக்கு... ? குசுனியின் கூரையை பிரிச்சா மழை வாறதுக்குள்ள மேஞ்சு முடிக்கவேணும் எவ்வவு பொறுப்பான வேலையை பொறுப்பெடுத்திருக்கிறேன் கடன் தந்தால்தான் என்ன ' என பலவாறு யோசித்தபடி தயங்கி நின்றார் . கேட்டுவிடலாம் என ஊறிய எச்சிலை விழுங்கிக்கொண்டு வாயெடுக்க அதற்குள் ஒருவன் கடைக்கு வந்து விட்டான். அருகில் இருந்த மர வாங்கில் இருந்து கொண்டு வெத்தில சரையை எடுத்து பிரித்தார். அதனுள் வெறும் காஞ்ச சண்ணாம்பு கட்டிகளும். ஒருதுண்டு பாக்குக்கும் , புகையிலக்கட்டையுமே கிடந்தது கிளறிப்பார்த்தார் ஒரு ரூபா குத்தி மட்டுமே தட்டுப்பட்டது அதை பிச்சைக்காரனும் வேண்ட மாட்டான். பாக்கை வாயில் போட்டு கடித்தபடி மீண்டும் அந்த கேள்வியை வயிற்றில் இருந்து தொண்டை வரை கொண்டு வந்தார் . அதற்குள் கடைக்கார் முந்திக் கொண்டார். “சபாபதியண்ண கேட்டு குறை நினைக்காதீங்கோ வேலை முடிய ஒரு கட்டுக்கு 40 ரூபா படி பேசினமாதிரி தருவன் . இண்டைக்கு ஒண்டும் கேக்காதேங்கோ “ என்று முடிவாக சொல்லிவிட்டு விளக்கு மாறை எடுத்தக் கொண்டு வெளிப்புறத்தை கூட்டி மஞ்சள் தண்ணி தெளிக்க ஆயத்தமானார்.

சபாபதியர் அதற்கு மேல் எதுவும் பேசாமல் பையை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தார். குனிந்தபடியே மூத்த தமக்கை வீட்டை கடந்தார் . ஆனாலும் அக்கா கண்டு விட்டார்.' தம்பி.. தம்பி ' கூப்பிட்டும் விட்டார். நிமிர்ந்து பார்த்தார் அக்கா சுளகில் அரிசியுடன் மாமரத்தின் கீழ் நின்றார் . படலையை திறந்து பாதையெங்கும் கிடந்த சாணியை கடந்து வீட்டு வாசலுக்கு வந்தார் “என்னடா வேலை கெதியா மடிஞ்சுதா இந்த நேரத்தில திரும்பி போறா ?” என்றார். “ஓமக்கா குடிக்க தண்ணி தாவன்” என்றார் பையை அருகில் இருந்த மண்குந்தில் போட்டு அதன் மேல் இருந்தபடி. “ தம்பி உரிச்ச தேங்காய் முடிஞ்சு போச்சு நாலைஞ்சு தேங்கா உரிச்சுத்தாடா நான் தண்ணி கொண்டு வாறன்” என்று விட்டு உள்ளே சென்றார் . தேங்காய் உரிக்கிற கடப்பாறையடியில் 20 தேங்காய்க்கு மேல் கிடந்தது ஒவ்வொன்றாக எடுத்து உரித்தார் இடையில் தண்ணி வந்தது குடித்தார் . “ஒரு இளநியை புடுங்கி குடியன்” என்றார் அக்கா. “ பறவாய் இல்லை தேங்காய் காணுமா எண்டு பார்” என்றார் பத்தாவது தேங்காயை உரித்தபடி . "கிடக்கிற எல்லாத்தையும் உரி இங்க ஆர் இருக்கு உரிக்க உன்னையும் அடிக்கடி காணுறது கஸ்டம் “ என்றார். முழு தேங்காயையும் உரித்து கொண்டு வந்து குசுனிக்குள் வைத்து விட்டு. “ என்ன தலை பறக்குது .. எண்ணை தண்ணி வைக்கிறதில்லையோ ? "என்றார் தமக்கையின் பஞ்சுபெட்டி தலையை பார்த்தபடி. "நேற்றுத்தான் முழுகினனான் " என்று விட்டு அதே குந்தில் தம்பிக்கு அருகில் வந்து இருந்தார். “சரி அக்கா நான் வாறன் “ என்று விட்டு கிளம்பினார் சிவபாதத்தார் . "வீட்ட என்ன கறி ஒரு தேங்காயை கொண்டு போவன் " என்று எடுத்து அந்த பையினுள் போட்டு கொடுத்தார் . தேநீருக்கு சீனி இல்லாம தேங்காய் சொட்டை முடித்து மனைவியிடம் பேச்சு வாங்கியது நினைவில் வந்தது “ சரி அக்கா நான் வாறன் என்று விட்டு புறப்பட்டார்.

குறுக்கு வயலை கடந்து வாய்கால் கட்டில் ஏறி மனைவி புளி உடைக்க போன அரசக்கா வீட்டை நோக்கி நடந்தார் . பொழுது சாய்ந்து கொண்டு இருந்தது . அசரக்காவின் வீட்டு வாய்க்கால் கரையில் நிற்கும் புளி 5 மணிக்கே அவர்களின் வீட்டை இருளில் மூள்கடிக்கும் பெரிய பழையகாலப் புளி . அந்த ஊரின் அரைவாசிப் புளித்தேவையை பூர்த்தி செய்யம் அளவுக்கு வருடா வருடம் உலுப்பிக் கொட்டும் . வாய்காலில் முளங்கால் வரை தண்ணி ஓடிக்கொண்டு இருந்தது . வாய்காலைக்கடந்து புளியயையும் தாண்டி அரசக்கா வீட்டு முற்றத்திற்கு வந்தார் . மனைவியும் வேலை முடிந்து வீடு போக ஆயத்தமாகிக்கொண்டு இருந்தார். எல்லா புளியும் உடைச்சாப்பிறகு நெறுத்து சம்பளம் தருவதாக அரசக்கா சொல்லிவிட்டார். செம்பளமாக உடைத்து வேறாக பிரித்து வைத்த புளியை ஒரு பனைஒலை பெட்டியில் போட்டு ' இதை கொண்டு போ சந்திரா ' என கொடுத்தார் . சபாபதியர் உடைந்த மனத்தோடு மனைவியை பார்த்தார் . மனைவியின் கண்களில் பிள்ளைகளின் பசியும் ஏக்கமும் தெரிந்தது . கணவனை பார்த்து பையில் என்ன என்பதாக கண் அசைத்தார் தேங்காய் என்றதும் " பெரியமச்சாள் கூப்பிட்டவாவா " என்றார். சபாபதியர் பதிலின்றி அமைதியாக நின்றார் . அரசக்கா கையில் இரு தம்ளரில் பால் தேனீருடன் வந்து “ இதை குடிச்சிட்டு வெளிக்கிடுங்கோ இருட்டிப் போட்டுது சின்னப்பிள்ளை வேற நேர காலத்திற்கு வீடு போய் சேருங்கோ” என்றபடி தேனீரை நீட்டினார். அதை கையில் வாங்கியதும் . இடுப்பில் இருந்த சின்னவள் எட்டிப்பார்த்தாள்." நான் இப்பதான் அக்கா வீட்ட குடிச்சனான் " என்று விட்டு அரைவாசியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி மகளிடம் கொடுத்தார். அது வேண்டி கடைவாயால் வளிய குடித்து விட்டு பேணியை தந்தையிடம் நீட்டியது . மெதுவான தொனியில் மனைவியிடம்.
" முந்தநாள் நான் புளி உலுப்பினதுக்கு அரசக்கா இன்னும் காசு தர இல்லை கேட்டு பார்க்கட்டா ? " என்றார் .
“அவாட்ட இப்ப காசு இல்லையாம் , கேட்டால் உங்களுக்கும் புளிதான் கிடைக்கும் பேசாம இருங்கோ பிறகு காசா வேண்டலாம் " என்றார் மனைவி.
“அவன் நேசன் பசி தாங்க மாட்டான் அதுகளும் நேற்றில இருந்து வெறும் கஞ்சித்தண்ணியோட கிடக்குதுகள் நாளைக்கு திங்கள் பள்ளிக்கூடம் இப்ப வெறும் கையோட வீட்ட போக முகத்த முகத்த பாக்கப்போகுதுகள்” என்றார் .
“நாளைக்கு வேலை இருக்கு எண்டதால கிடக்கிற அரிசியை போட்டு கஞ்சி காச்சி தேங்காயையும் திருவிப்போட்டு இரவைக்கு சமாளிப்பம் நாளைக்கு பாப்பம்” என்றார் மனைவி. சிவபாத்தாரக்கு மனம் கேட்க வில்லை .

வெத்திலை சரையை எடுத்து பிரித்துக் கொண்டு யோசித்தார் . அதற்குள் அரசக்கா வெத்தில தட்டத்துடன் விறாந்தைக்கு வந்தார் . “இந்தாங்கோ இதில போடுங்போ” என தட்டத்தை நீட்டினார் . பின் “போயில முடிஞ்சு போச்சு இருந்தா தாங்க” என்றார் சிவபாதத்தாரை பார்த்து. அவர் தன்னிடம் இருந்த புகையிலையில் கிள்ளி கொடுத்தார். வேண்டி கொடுப்பில் அடைந்தபடி “எங்க இவன் சீலன் ..? பாலக்கறந்தா கண்ட அவிட்டு விடாம எங்க போயிற்றான்” என்று குரல் கொடுத்தார். சீலன் பால் செம்புடன் வேம்புக்கு கீழ முன்வீட்டு ராசனோட கதைத்தக் கொண்டு நின்றான். சிவபாத்தார் புகையிலையை வாயில் வைத்தபடி மனத்தின் முழுபலத்தையும் ஒன்றிணைத்து “நெல்லு இருந்தா அரைப்புசல் நெல்லு தாங்கோ அரசு.. பிறகு கணக்கில கழிக்கலாம் இல்லை எண்டால் நாளைக்கு கடைகார சின்னய்யரின் குசினி மேச்சல் இருக்கு காசு வேணும் எண்டாலும் தாறன் ” என்றார் ஒரே மூச்சில். அரசக்கா இடுப்பில் பிள்ளையோடு நின்ற சந்திராவை பார்த்தார் . அந்தப் பார்வையில் 'விளக்கு வைச்சாப்பிறகு நெல்லு கொடுக்கமுடியாது ' என்ற பதில் உறைந்திரந்தது . “ அடடா நான் நேர காலம் தெரியாம..." என இழுத்தார் சிவபாதத்தார் . மனைவி சற்று கோவமாக “ உதால முதல்ல எம்ழுபுங்கோ இருட்ட முன்னம் வீட்ட போவம். இப்ப இரவில நெல்லை கொண்டு போய் என்ன செய்யப் போறியள்” உச்ச தொனியில் ஆரம்பித்து நளினமாக முடித்தார் . மௌனமாக வீடு நோக்கி நடந்தார் சிவபாதத்தார் .

நெருப்புப்பெட்டியை இறுக்கி பொத்திப்பிடித்துக்கொண்டு நால்வரும் கைவிளக்கின் முன்னால் சுற்றி இருந்தபடி ” இப்ப அப்பாவும் அம்மாவும் பக்கத்துக்காணிக்கு கிட்ட வருகினம், இப்ப எங்கிட விளாத்திமரத்தை கடக்கினம் , இன்னம் கொங்ச நேரத்தில அப்பா காறித்துப்பும் சத்தம்கேட்கும் என்றான் மூத்தவன். சின்ன பிள்ளைகள் இருக்கும் வீட்டில் விளக்கு வைத்தபின் வீடு திரும்பினால் வீட்டுக்குள் வருமுன் காறி துப்பி முகம் கழுவி விட்டுத்தான் வர வேண்டும் என்பது அவர்களின் ஒரு மரபு . என்ன ஆச்சரியம் அவர்களின் கணிப்பு போலவே அப்பாவைத் தொடர்ந்து அம்மாவும் காறித்துப்பும் சத்தம் கேட்டது . வீட்டின் பின் காட்டுக்குள் பிசாசு சிரித்தது போல் கேட்டதும், பகல் விழையாடிய பிலாவுக்கு அருகில் ஏதோ கறுப்பாக பேய் போல தெரிந்ததும் , பாம்பின் கொட்டாவி மணமான விழாம்பழ மணம் மணததும் காறித்துப்பும் சத்தம் கேட்டதும் மறைந்து போனது. சாத்தி திறாங்கு போட்டிருந்த கதவை திறந்து கொண்டு மடை உடைத்து பாயும் வெள்ளம் போல் நால்வரும் பெற்ரோரை நோக்கி ஓடினார்கள் . ஆளுக்கொருவர் கையில் இருந்ததை வாங்கிக் கொண்டார்கள் . கடக்குட்டி நந்து வேண்ட ஒன்றும் இல்லையாகையால் அவனை சிவபாத்தர் தூக்கி தோளில் சுமந்தபடி "அழாம இருந்தியா ?" என்றார் . அவன் “புள்டோ ரொபி வேண்டி வந்தனீங்களா ?" என்றான். "இல்லையப்பு " என்றதும் அழ ஆரம்பித்தான். “இரவில அழப்பிடாது நாளைக்கு ஆளுக்கு இரண்டு வாங்கிக்கொண்டு வாறன் என்று தேற்றினார் . எல்லோரும் ஒருமித்த குரலில் "அம்மா பசிக்குது "என ஆரம்பித்தார்கள். "இந்தா இப்ப அம்மா கஞ்சி காச்சுறன் " என பானையை கழுவினார் .


“ அப்பா ..! அண்ணாவுக்கு கை விரல் நெரிஞ்சு போச்சு “ என்றான். தோளில் இருந்த நந்து. “ஏன் ? என்ன நடந்தது ? எங்க காட்டு பாப்பம்..” என்றார் சிவபாதத்தார். “அது அப்பா ஒரு லொறி காத்துப்போய் எங்கிட வீட்டுக்கு முன்னால நிண்டுபோட்டுது . சிங்கள ஆக்களின்ர லொறி. மன்னாரில இருந்து உப்பு கொண்டு போற லொறி . காத்துபோன சில்ல மாத்த - இடையில குடுக்கிற முண்டு கட்டை - இல்லாம எல்லா உப்பு பொட்டியையும் கீழ இறக்கிக்கொண்டு இருந்தவ , லொறியும் ஒரு பக்கம் சரிஞ்சு பிரள்ர மாதிரி வந்து போட்டுது . உடனே அண்ணா எங்கிட பெரிய உரலை உருட்டிக்கொண்டு போய் அவேட்ட கொடுத்தவன் அப்பதான் உரல் கையில விழுந்து விரல் நெரிஞ்சு போட்டுது " என்றான் நேசன் .
” இப்ப உரல் எங்க ?" என்றார் அம்மா . "பிறரு சில்லு மாத்திப் போட்டு தண்ணியும் வேண்டிக்குடிச்சுப் போட்டுதான் போனார்கள் அவைக்கு நல்ல சந்தோசம் எல்லாற முதுகிலயும் தட்டிப்போட்டு . ஒரு உப்புப்பெட்டியையும் இறக்கி தந்து போட்டுப் போவவை " என்றான் நேசன். "என்னடா புதுக்கதை சொல்லுறியள் எங்க பாப்பம் அந்த உப்புப் பெட்டியை ? " என்றார் சிவபாதத்தார். சட்டிபானை கவிட்டிருந்த பரணில் தண்ணிவடிந்தபடி இருந்த பெட்டியை காட்டினான் சிவபாத்தாரின் மடியில் இருந்தபடி நந்து . அவர் விளக்கை எடுத்துக்கொண்டு பரணை நோக்கி நடந்தார். சதுர மரப்பெட்டி ஒன்று பரணில் இருந்தது . ஆனால் நாலா புறமும் ஆணி அடித்து திறக்க முடியாமல் இருந்தது. ஒருவகை கடற்கரை நாற்றமும் அதிலிருந்து வந்தது . கீழே இறக்கிவைத்து விட்டு கத்தியால் தெண்டி பலகையை திறந்தார். உள்ளே வெள்ளை நிறத்தில் கசிந்தபடி கட்டிகட்டியாக உப்பு நிறைந்திருந்தது . "வெள்ள உப்பு .., வெள்ள உப்பு.. " என நேசன் கூவிக் கூவி துள்ள ஆரம்பித்தான். சிவபாதத்தார் மனைவியை கூப்பிட்டார் . " நேசன் அது உப்பில்ல ஐஸ்கட்டி " என்றார் அம்மா. சிவபாதத்தார் ஐஸ் கட்டிகளை கிண்டிய போது உள்ளே இறால், நண்டு , பெரிய மீன் , சின்ன மீன் என கிண்ட கிண்ட வந்தது . இன்னும் உயர துள்ளியபடி "எதை இப்ப காச்சுறது " என்றான் நேசன். "எல்லாத்திலயும் கொஞ்சத்தை போட்டு ஒடியற்கூழ் காச்சுவம் " என்றார் அம்மா .

-பசுந்திரா சசி

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு