ஓர் இதயம், வறுமை கொண்டிருக்கிறது....

ரைநாள் நித்திரையில் கழிந்துபோனது. மெயிலில் வந்த அலுப்பு; மத்தியானம் சாப்பிட்ட பிறகும் – சாய்வுக்கதிரையில் சிறு கண்மூடல்.

    யாரோ தோளில் தட்டியதைப்போல.... முழித்தால் தேத்தண்ணீருடன் அக்கா. தம்பியும்கடலால வந்திற்றான் போல; குசினிக்குள் சாப்பிட்டபடி, அவன்....

    ‘எட,அப்ப நாலுமணிக்கு மேலபோல’ ; அவசரம்.

   “எங்க போகப்போறாய்?” – அக்கா.

    “உப்புமால் கந்தோருக்கு. பெடியங்கபந்தடிப்பாங்க, பாக்கலாம்.”

   ‘உப்புமால் கந்தோர் ; பந்தும் பெடியங்களும்.

    ஓ!இந்தப் பின்னேரங்கள்....’

   கால்கள் பரபரக்கின்றன. ‘நானும் பந்தடிக்கலாம்; சீ! களைக்கும். ஒரு வருஷம் –விளையாடாம விட்டு.’

 ‘சவக் கொழும்பு – விளையாடக்கூட ஏலாது....’

   கனநாளைக்குப் பிறகு சைக்கிள் ஓட்டம் – ஓடுறது கஸ்ரம்; காத்தாக்கிடக்கு.சோழகமும் எழும்பியிற்றுது....

    ‘இதென்ன! ஒருத்தருமில்லாம, வெறும் வெளி. இவங்களெல்லாம் எங்க போயிற்றாங்க ;காத்தெண்டு வரயில்லையா....?’

   வெட்ட  வெளி.

   புல்லுமேயிற மாடுகள்; பின்னால் தூரத்தில சவக்காலை. தொங்கலில் கடலருகில்ஒற்றைத் தென்னை – சோழகத்தின் வீச்சில் ஓலைகளை, ஆட்டியபடி.

     ‘சீ!’ ஏமாற்றத்தில் எரிச்சல்.

   திரும்பிவந்து வீட்டுக்குள் முடக்கம்.

   இருட்டிவிட்டது. ஏழு மணி. வாசிகசாலைக்குப் போற முந்தின நேரம்;பார்க்குக்கும் போகலாம்.

     இதென்ன....றோட்டில, மெழுகுதிரியைப்  போல லைற்றுகள்; மங்கல்  வெளிச்சம். பார்க்க ஒருமாதிரி.

    வாசிகசாலையிலும் முந்தியப்போல கலகலப்பில்ல.வெளிலைற்றும் மங்கல் ; இதில, ‘காட்ஸ்’ விளையாட ஏலாதுதான்; அதனால்தானா?

    உள்ளே, படந்தட்டிப்பார்க்கின்ற இரண்டு சின்னப்பெடியங்கள். கையில பள்ளிக்கூடப் புத்தகங்கள்; ரியூசனிற்குப் போயிற்று வந்தவங்கள்போலிருக்கு....

    பேப்பர் பார்க்கிற ‘யூலியசின்ர’ தகப்பன்;புத்தக மேசைகளும் வெறுவாங்குகளும்.

   சும்மா தட்டிப்பார்த்தபடி.... ஒன்றையும் வாசிக்க மனமில்லை; முந்திஇப்பிடியில்ல – வெளியேறல்.

   சுப்பிரமணிய பார்க்கும், அழுது வடியு.... து. “தரின்ன தரீன்னா....” வெறும்இழுவைக் குரல் – றேடியோவில்.

   றேடியோவுக்கு முன்னால், கல் சீற்றுகளில் அந்தப் பழைய கோஷ்டி. இப்பவும்,அரசியல் அரட்டை அடித்தபடிதான்....

   பின்புறம் ஒரே அமைதி. வெளிக் கேற் லைற்று ஒளிபடிந்தபடி தண்ணீர்த் தடாகம்.சறுக்கீஸ், அந்த நெடிய மரங்கள் இருளிலும் – ஒளியிலும் கலந்தபடி....

   மனிதர்களில்லாத, இந்த வெறும் தனிமை – இப்ப பிடிக்கவேயில்ல.

   முந்தி, மனநிறைவும்; உள்ளக் கிளர்ச்சிகளும்!

   தனிமையில் – றேடியோச் செய்தி முடியும்வரை, மெல்லிய ஒளி படர்ந்த மக்கிப்பாதையில் சிறு உலா; நிறைவாகத்தானிருக்கும்.

   ‘தனிமை’. இதுக்கு அர்த்தமிருக்குமா....?’

    இப்ப ‘இது’ விசர்த்தனம். ஆக்களோட புழங்க வேணும்; உலகத்தில, நான்மட்டுந்தானா?

   ‘றொபின்சன் குருசோக்கள்’ ; இப்ப இது ஏலாது.

 

                     2

 

    ஒருநாள் கழிஞ்சுபோச்சு; கிறீஸ்துராசாவை, ஏன் காணயில்ல....? ஓ! இண்டைக்குஞாயிற்றுக்கிழமை; கடலுக்குப் போகாயினம்.

   “கிறீஸ்துராசா”

   “அவன் இல்லத்தம்பி. போனகிழமதான் தாளையடிக்குப் போனவன்; அங்க தங்குவேலையாம்.” – வெளிவந்தபடி கிறீஸ்துராசாவின் அம்மா.

    “தங்குவேலைக்கு....அங்க ஏன்?”

   “அங்க மேசன் வேலைக்குத்தம்பி. அவன் இப்ப கடலுக்குப் போறயில்ல.”

   கிறீஸ்துராசா இல்லாம, லீவு எப்பிடிக் கழியும்! சீ! அந்தாள், இஞ்ச நிண்டிருந்தால்....என்ர போக்குக்கு, புத்தகங்கள், ஊர்க்கதைகள் நல்லாய்க் கதைக்கலாம்.

    மனம்நெருங்கிய ஒரே சிநேகிதனாகக் கிறீஸ்துராசா!

    ‘வேறஆர்....?’

   வெட்ட வெளி.

   ‘சென்லூயிஸ்’, ’அல்போன்ஸ்....?’ சும்மா சிரிப்பதோட சரி. அந்த வாசிகசாலையடிப் பெடியங்களட போக்கும், வேற.

     ‘அப்ப ஒருத்தருமே, இல்ல.....’

     பத்து மணியின் இள வெய்யில். வாசிகசாலைமுன்னால்  நிழல்வாடி மரத்தின் கீழ்கும்பல்; யேக்கப்பின்ர தேத்தண்ணீர்க் கடையிலும், படகுப் பெடியங்கள்.

    ஓ! இண்டைக்குத் தொழில் ஒண்டும் போகாதெல்லா....!அதா.... ன். குறுக்காகக் கடந்தபடி தேவதாஸ்.

    இதென்ன.... கண்டுங் காணாதமாதிரி; சும்மாசிரிக்கவுங் கூடாதா?

    ஏன், நான் தன்னப் பொருட்படுத்த மாட்டனெண்டா?;அப்பிடியென்ன நான் மாறியிற்றன்....

     இந்தப் ‘போஸ்ற்மாஸ்ரர் அன் சிக்னலர்ஸ்’; கொழும்பில வேல. இதாலயா? அதுவும் இந்த ஒருவருஷத்துக்குள்ளயா....?

     காட்ஸ் விளையாடுகிற படகுப் பெடியங்கள்; சுவையோடு மொய்த்துப் பார்க்கும் கும்பல்.

    அவங்களுக்கு நான் முக்கியமில்ல. முந்தி, நானும்அவங்களைப் பொருட்படுத்தயில்லயே ; அவங்கள் ஏன் என்னட்டக் கதைக்கப் போறாங்க.

    நெருங்காத முகங்கள்.

    பதட்டமாய், இயல்பில்லாமல் வாசிகசாலையில் –ஏங்குகிற மனம்.

     ‘சீ! ஊருக்கு ஏன் வந்தன்?’

    எரிச்சலோடு, தனிமை வறட்சியில் மனம்புதையதிரும்பிவந்து வீட்டில் – சாய்வுக் கதிரையில் ஒடுக்கம். புத்தகங்களோடும், இராவரைக்கும் அதிலேயே.

 

                    3

 

     ‘வெளியில எங்க போறது? ஆரப் பாக்கலாம்....’

     ‘சீ!’ – எரிச்சல். ‘இண்டையோட மூண்டுநாள்; இன்னும் அஞ்சுநாள்க் கிடக்கு.’

     ‘கொழும்புக்குப்போனால்....?’

     கொழும்புக்கு....? சைவக் கடை; ஒற்றைத்தனியறையின் மூன்றாவது கட்டில் – அதில் ஒடுங்கியபடி....

     ‘வெள்ளவத்தையில இருந்து கோட்டைக்கு, கோட்டையிலஇருந்து வெள்ளவத்தைக்கு.’ ஒவ்வொரு நாளும்,அர்த்தமில்லாமல் மெஷினைப்போல....

     “இதென்ன, சும்மா நெடுக வீட்டுக்குள்ளயே.வெளியில போய், நாலு மனிசரோட கதைச்சுப் புழங்கன்; சும்மா விசரன் மாதிரி யோசிச்சபடி.”

      அம்மாவிற்கும் என்னைப் பார்க்கஎரிச்சல்போல;

      அவ எரிச்சல்படுகிறா. “ஆரோட போய்க்கதைக்கிறது?”

     “இவர்தான், ஒரு புதுமாதிரியான மனிசன்; அப்பஏன் இஞ்ச வந்தனி?”

     ஏன் இஞ்ச வந்தனி?

     ஏன் இஞ்ச வந்தனி?

      சுற்றிச் சுற்றி வந்தபடி அந்தச் சொற்கள்.‘ஓம்! நான், ஏன் இஞ்ச வருவான்? வறண்டு போகவா ?’

      ‘அம்மாவே கேட்டாச்சு.’

     ‘அம்மா எங்க? வெளியால எங்கயோ போயிற்றா போல ;ஆளைக் காணன்.’

     ‘இந்த எரிச்சலில இருந்து விலகவேணும்; சும்மாஏன் இஞ்ச. இப்ப அஞ்சரை மணிதானே; இண்டைக்கு மெயிலுக்கே போயிரலாம்.’

     வெளியில கிடந்த உடுப்புக்களை அடுக்குவதில்அவசரம். அக்காவையும் காணயில்ல; பக்கத்து வீட்டில போல....

     தங்கச்சி தனியத்தான் வீட்டில. ‘கனநாளைக்குஇஞ்ச வரப்படாது. எப்பிடியோ சவக் கொழும்பிலதான்....’

     ஒற்றைச் சூட்கேசோடு, வெளிவாசலுக்கு வந்தபோது– கதவைத் திறந்தபடி, அம்மா.

     “எங்க சூட்கேசுங் கொண்டு....?” அவவிற்கு ஆச்சரியந்தான்.

     “நான் கொழும்புக்குப் போறன்.”

     “இதெ....ன்....ன திடீரெண்டு.... இன்னும்லீவு கிடக்கே....!” அவவிற்குப்பயம்போல.... ஏதோ நான் அவையளவிட்டு விலகப் போறதைப்போல....

     எரிச்சல்பட்டபடி மௌனமாக, நான்.

     அம்மா அழுகிறா. “எனக்கொண்டும் விளங்க இல்ல;எங்களில உனக்கென்ன கோவம்? நீ இப்ப, முந்தின ஆளில்ல; உன்னப் படிப்பிக்க, நான்எவ்வளவு கஸ்ரப் பட்டனான்.”

     “இதென்னண ஒண்டுமில்லாததுக்குச், சும்மாஅழுதுகொண்டு.... “

     அவவின் நினைப்பு இதே, ஏதோ நான் அவவைப்பேசுகிறதைப்போல –

     “ஒரு தாய் சொல்லுறதக் கேக்கவேணும்; இதென்னதிடீரென? எங்களையெல்லாம், நீ மறக்கப்போறியா....?”

     எனக்கு எரிச்சல்; ட்றெயினுக்கும் நேரம்போகுது.

     “எனக்குத் தெரியா ; நான் போறன்.”

     நான், திரும்பிப் பார்க்க இல்ல. ஸ்ரேஷனுக்குஞாயமான தூரம் நடக்கவேணும். கூட வர, ஒருத்தருமே இல்ல....

     சூட்கேசும் நானும்; ‘பீச்றோட்’ சந்தி லைற்றில்,

     சிறிது  தூரம்நிழலும்....

 

 அ. யேசுராசா

-ஆனி 1969

 நன்றி : நெய்தல்

 1971

 பி.கு. : இச்சிறுகதை The Destitute Heart என்னும் பெயரில் ஏ.ஜே.கனகரத்தினாவினால்    மொழியாக்கஞ் செய்யப்பட்டு, கனடாவிலுள்ள TSAR Publications நிறுவனம் 2001இல் வெளியிட்ட, Lutesong  and  Lament என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு