வழிகாட்டிகள்..!

சிங்கள, தமிழ்  ஆசிரியர்களை நிறுவகத்திற்கு அழைத்து அவர்களைக் கொண்டு எழுதுவித்து, அதைத் திருத்தி சிங்களத்தில் எழுதிப் புத்தகமாய் அச்சிடுவார்கள். சிங்களத்தில் உள்ள வழிகாட்டியை மொழிபெயர்ப்புச் செய்வதற்காய் ஒருவரைத் தேடிப்பிடிக்க வேண்டும். என்.ஜீ.ஓ.க்கள் மொழிபெயர்ப்புச் செய்வதற்கு பக்கத்திற்கு ஆயிரக் கணக்கில் செலுத்தும் போது, அரசாங்கச் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணப்படி மொழி பெயர்ப்புச் செய்வதற்கு எவர்தான் விரும்புவர்.  அரசாங்கச் சுற்றுநிரூபக் கட்டணத்தின்படி மொழி பெயர்க்க வருபவர்களில் அனேகமானோருக்கு நகர, ணகர, னகர பேதங்களோ லகர, ழகர, ளகர பேதங்களோ ரகர, றகர பேதங்களோ சரியாய்த் தெரிந்திராது. மொழிபெயர்ப்புச் செய்பவர் தரத்தர எடுத்து மொழியைச் செம்மையாக்கி, தட்டச்சுச் செய்ய தர்மினியிடம் அனுப்பி பல தடவை புறூவ் பார்த்து எல்லாம் சரி என்றால் பொருத்தமான இடங்களில் படங்களை ஒட்டி பிரிண்டுக்கு அனுப்பி... சில வேளைகளில்சிங்களத்தில் கடைசி நேரத்தில் ஏதாவது திருத்தங்கள் செய்வார்கள. அதைத் தமிழிலும் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடுவார்கள். அத்திருத்தங்கள் இல்லாமலேயே தமிழ்ப் புத்தகங்கள் வெளியாவதுமுண்டு.

பாடசாலைகள் தொடங்கி இரண்டு மாதங்கள் உருண்டு விட்டன. இன்னும் புத்தக வேலை முடிந்தபாடாய் இல்லை. சிங்களப் புத்தகம் டிசெம்பரிலேயே பள்ளிக்கூடங்களுக்குப் போய் விட்டது. தமிழ்ப் புத்தகம்..? இன்னும் ஆறேழு தரம் புறூவ் பார்த்து அச்சுக்கூடத்திற்கு அனுப்பினாலும், அது அங்கு கிடந்து தூங்கிப் பின்பு நிறுவகத்தின் களஞ்சியத்தில் கிடந்து, லொறிகளில் போய் மாகாணக் கல்வி அலுவலகங்கள், வலயக் கல்வி அலுவலகங்கள், கோட்டக் கல்வி அலுவலகங்கள் என்று அலைந்து பள்ளிக்கூடங்களுக்குப் போய்ச் சேர இரண்டாந் தவணைத் தேர்வுகள் ஆரம்பமாகியிருக்கும்.

புறூவ் பார்த்து முடிந்த தாள்களை பைலில் இட்டு, தர்மினியிடம் அனுப்புவதற்காய் சில்வாவைத் தேடினான். அவனைக் காணவில்லை. அவன் இப்போது கன்ரீனில், வீரவங்ஸ செய்தது சரி என்றும் சோமவங்ஸவில் பிழை என்றும் யாரிடமாவது வாதிட்டுக் கொண்டிருக்கலாம்... அல்லது பணிப்பாளரின் வேலையாய் மகரகம சந்திக்குச் சென்றிருக்கலாம்.

பைலைத் தூக்கிக் கொண்டு 'ரைப்பிங் பூலு'க்குப் போனான். தர்மினி சோர்ட் லீவில் போய் விட்டதாக கணினியைப் பார்த்து ரைப் பண்ணிய படியே வாணி சொன்னாள்.

' ஹாய் என்ன புதினம்' கன்ரீனில் இருந்து கதைத்து விட்டு 'ரைப்பிங் பூலு'க்கு வந்த கமலநாதன் கேட்டார். அவருக்கு இது தான் வேலை சந்திக்கும் எல்லோரிடமும் புதினம் கேட்பார். இவனுக்கு எரிச்சலாய் வந்தது.

' சேர் இண்டைக்கு ஆறு பேருக்கு 'புறமோஷன் லெட்டர்' வருகிதாம்' பொய் ஒன்றை உதிர்த்து விட்டு அவர் அடுத்த கேள்விக்குத் தாவுவதற்கிடையில், விரைவாய் படிக்கட்டுக்களால் ஏறி மறைந்தான். இனிக் கமலநாதன் காணுகின்ற ஆட்களுக்கு இதைச் சொல்லித் திரிவார். திரியட்டும். மனதில் சிரிப்பு வந்தது.

• 
சுதந்திர சதுக்க ஒழுங்கையால் இலங்கை மன்றக் கல்லூரியை நோக்கி நடக்கையில் இந்திரனுக்கு, மூன்று தரம் தேசிய அடையாள அட்டையையும் பொலிஸ் பதிவுத்துண்டையும் காட்ட வேண்டியிருந்தது. காலை வெய்யிலில் உடல் வியர்த்தொழுகிற்று.

வரவேற்புக் 'கவுண்டரி'ல் இருந்த 'லிப்ஸ்ரிக்' பூசிய இளம் பெண் நீட்டிய படிவத்தில் பெயர், பதவி, அலுவலக முகவரி என்பவற்றை எழுதி ஒப்பமிட்டுக்  கொடுத்தபோது அவள் புன்னகைத்துக் கொண்டு நீல வர்ண தோற் பையொன்றைக் கொடுத்தாள். பையின் மேற்புறத்தில் அரச இலச்சினையைப் பொறித்து அருகில் ' தல்விச் செயற்றிட்டம், தேசிய மாநாடு-2008' என்று மும்மொழிகளிலும் வெள்ளை நிறத்தில் அழகாக அச்சிட்டிருந்தார்கள். கல்வி என்பதை தவறுதலாய் தல்வி என அச்சிட்டிருந்தார்கள். இதில் கூட எழுத்தப் பிழை. வெறுப்பாய் இருந்தது. பரவாயில்லை  மொழிகளுக்கு சமவாய்ப்பாவது உள்ளதே என்று மனதில் சிரித்துக் கொண்டான். கடையில் வாங்குவதென்றால் இந்தப் பை இரண்டாயிரம் ரூபாவுக்குக் குறையாது. அலுவலகத்திற்குக் கொண்டு திரியலாம். தொலைபேசி விபரக் கொத்தொன்றின் பருமனிலிருந்த, மாநாட்டில் வாசிக்கப்படப்போகும் அறிக்கைகள் மும்மொழிகளிலும் பையினுள் கிடந்து கனத்தன. இனிக் காலம் பூராக அலுவலகத்தின் அலுமாரியினுள் கிடந்து, தூசு படியப்போகும் அறிக்கை, 'சரஸ்வதி கபேயில் கொடுத்தால் கைதுடைக்க இரண்டு கிழமை சமாளிப்பார்கள்.

'ரெஸ்ட் றூமி'ல் போய் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்து, தலைவாரி ரையைக் கட்டிக்கொண்டு நடந்தான். காலைச் சாப்பாட்டுக்கான வரிசையில் மாகாணங்களின் கல்வி அதிகாரிகள், பல்கலைக்கழக கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள்...  நின்றார்கள். நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களைச் சேர்ந்த அவர்களில் பலரை அவனுக்குத் தெரிந்திருந்தது. முன்னைய மாநாடுகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளில் சந்தித்துக் கொண்ட வழக்கமான முகங்கள். பண்டார, சுனில், றணசிங்க, பெர்ணாண்டோ, ரத்ணாயக்க, முனசிங்க, அபேசிங்க, குருப்பு, திருமதி ஜயசிங்க, திருமதி விஜேசிங்க,  சொய்ஸா,  வாமதேவன், குரூஸ், திருமதி விமலராஜா, திருமதி மரியதாஸ், ரங்கசாமி, அன்வர், நவ்சாத், திருமதி அஸ்வர், ராஜேந்திரம்...

வாமதேவன் 'கோட்' அணிந்திருந்தார். இவர் கப்பலில் வந்திருப்பாரோ இல்லை 'பிளைட்'டில் வந்திருப்பாரோ? செயற்றிட்டந்தானே பயணத்திற்குக் காசு செலவளிக்கின்றது.

' ஹாய் இன்ரன் ஹவ் ஆ யூ' வாமதேவன் கேட்டார்.
இவர்களுக்கு யாழ்ப்பாணத்தைத் தாண்டிவிட்டால் தமிழ் மறந்து விடுகிறதா? இந்திரன் என்ற பெயரையே 'இன்ரன்' என்று வெள்ளைக்காரர் கதைக்கிறது மாதிரி உச்சரிக்கிறார்!

' இருக்கிறன்.'

சாப்பிடும்போது அருகில் வந்தமர்ந்த வாமதேவன், கடைசியாய் வெளியான புலமைப்பரிசில் பெறுபேறுகளைப் பற்றிக் கதைத்தார். ' பொஸ்கோ 92%, ஹிண்டுப் பிறைமறி 90%...' பெருமை பொங்கக் கதைத்தார். சதவீதங்கள் அவரின் விரல் நுனியில் இருந்தன. சோக்கும் கரும்பலகையும் கொடுத்தால் வரைபுகள், அட்டவணைகள் எல்லாம் வரைந்து விளக்குவார் போலிருந்தது.

' சேர், அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயம், கொழும்புத்துறை துரையப்பா, குருநகர் றோக்ஸ், நாவாந்துறை றோ.க. நாவலர் வித்தியாலயம் போன்ற பள்ளிக்கூடங்களில்  றிசல்ட்ஸ் எப்படி ' என்று மனதில் வந்த வினாவைக் கேட்க நினைத்தவன் கேட்காமல் விட்டான். காலைவேளையில் இவரை ஏன்  சோர்வடையச் செய்வான்? இவ்வளவு பள்ளிக்கூடங்களிலிருந்தும் மொத்தமாய் மூன்று பேர் சித்தியடைந்திருப்பார்களா?

ஒல்லிகளை, முட்டுக்காய்களைப் பின்னால் மறைத்து வைத்து விட்டு, நல்ல ஓரிரண்டு தேங்காய்களை  காட்சிக்கு வைத்துக் காட்டி எல்லாத் தேங்காய்களையும் விற்றுத் தள்ளும்  ஒரு தேங்காய் வியாபாரி போன்று வாமதேவன்  இந்திரனின் மனதில் தோன்றினார். வருமானங்குறைந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவிப் பணம் வழங்குவதற்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று பெற்றோரின், பாடசாலைகளின், கல்வி அதிகாரிகளின் கௌரவத்தைப் பறைசாற்றப் பயன்படுகின்றன். ஓடி விளையாட வேண்டிய பிள்ளைகளை ரியூட்டறிகளுக்கும், பாடசாலைகளில் மேலதிக வகுப்புக்களுக்கும் அனுப்பிக் கஷ்ரப்படுத்தும் பெற்றோர்...

மாநாட்டைத் தொடக்கி வைக்க அமைச்சர் வருவதற்குப் பிந்தும் என்று கதைத்தார்கள். ஆய்வுக்குப் பொறுப்பான செயற்றிட்டத்தின் பணிப்பாளர் சோமபால தனது 'கோட்'டைச் சரி செய்தவாறு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். ஆசிரியராய் சேவையை ஆரம்பித்து, ஆசிரிய ஆலோசகர், அதிபர், உதவிக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் எனப் பல பதவிகள் வகித்து ஓய்வு பெற்று விட்டாலும் தனது சேவை கல்விச் சமுதாயத்திற்குத் தேவை என நினைத்தோ அல்லது பணத்திற்காகவோ பணிப்பாளர் பதவியில் ஒட்டிக் கிடக்கிறார். கிழவர்கள் எல்லோரும் சேவை செய்யவோ உழைக்கவோ வெளிக்கிட்டுத்தான் இளைஞர்களெல்லோரும்  வேலை தேடி ஊர்வலம், உண்ணாவிரதம் என்று அலையிறார்கள் போல. செயற்றிட்டத்திற்கு செலவழிக்கும் கோடிகளில் ஐந்து வீதமாவது சோமபாலவின் சம்பளத்திற்கும் வாகனத்திற்தும் ரெலிபோன் செலவுகளிற்கும் செல்கின்றதைனக் கேள்விப்பட்டிருக்கிறான்.

 •
கருத்தரங்கு ஆரம்பமாகியிருந்தது. அமைச்சர் தனதுரையை சிங்களத்தில் நிகழ்த்திக் கொண்டிருந்தார். 'கோட்' அணிந்த ஒருவர் அதனைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். 'சகல இன மக்களையும் தமது அரசு சரி சமனாய்க் கருதுகிறது மாகாண ரீதியாக செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டு கல்வியின் விருத்திக்காய் செயற்றிட்டங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். முதலில் கிழக்கு, வடக்கு மாகாணங்களில் ஆரம்பிக்கப்படும்...'

தமிழ் அதிகாரிகள் பலமாகக் கை தட்டினார்கள். செயற்றிட்டம் உருவாக்கப்பட்டால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கல்வி மேம்படுமென நினைக்கிறார்களா... இல்லை சில பதவிகளில் அமர்ந்து மேலதிகமாய் உழைக்கலாம்  என நினைக்கிறார்களா?  ஆய்வுகள், ஆய்வறிக்கைகள், மாநாடுகள், கருத்தரங்குகள் என்று செலவளிப்பதை விட செயற்றிட்டங்களால் வேறு பயனிருப்பதாக அவன் அறியவில்லை.  அமைச்சர் கரங்கூப்பி விடைபெற்றுச் செல்ல சோமபாலவும் வேறு சிலரும் அவரை வழியனுப்ப வெளியே சென்றனர்.

பேராசிரியர் தம்பித்துரை தலைமையில் கருத்தரங்கு ஆரம்பமாயிற்று. பேராசிரியர் அணிந்திருந்த  இளநீல வர்ணக் 'கோட்' அவருக்கு எடுப்பாகவிருந்தது. பேராசிரியர் தனது வழமையான நகைச்சுவைப் பாணியிலான உரையை ஆரம்பித்தார். சபை வயிறு குலுங்கச் சிரித்தது. நல்ல காலம் பேராசிரியர் சினிமாப் பக்கம் நடிக்கப் போகவில்லை. போயிருந்தால், விவேக் வடிவேலு ஆட்கள் வாய்ப்பில்லாமல் அலைய வேண்டி வந்திருக்கும்! புள்ளி விபரங்கள் பேராசிரியரின் உரையில் தவழ்ந்து விளையாடின. ஆசிய நாடுகள் பலவற்றின் எழுத்தறிவு, கல்வி கற்போர் தொகை, வேலை வாய்ப்பு... என புள்ளி விபரங்களை அடுக்கிக் கொண்டு போனார். உலகிலேயே இலங்கையின் எழுத்தறிவு வீதம் குறிப்பிடத்தக்க உயர்ந்த மட்டத்தில் உள்ளதென்றார். பேராசிரியர் புதிதாக ஏதோ கண்டுபிடிடத்து விட்டார் என எண்ணி சபை உற்சாகமாய்க் கை தட்டிற்று.

கலாநிதி விபுலசேனா ஆய்வறிக்கையை முன்வைத்தார். மேடையில் மூன்று பெரிய திரைகளில் சிங்கள, தமிழ், ஆங்கிலத்தில் அவர் முன் வைத்த விடயங்கள் தோன்றி மறைந்தன. மேடையின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த மூவரின் விரல் அசைவுகளில் கணினிகளின் திரையில் தெரிந்தவைகள் 'மல்ரி மீடியாப் புரொஜெக்ரர்'கள் மூலம் திரைகளில் விழுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.  எளிய சலாகை வரைபுகள், கூட்டுச் சலாகை வரைபு, பல்தரச் சலாகை வரைபுகள், நிலைக்குத்துச் சலாகை வரைபுகள், மீடிறன் பல்கோணிகள், வட்ட வரைபுகள், பெட்டிவிசை வரைபுகள், படவரைபுகள், அட்டவணைகள்... பல்வர்ணங்களில் திரைகளில் வித்தியாசமான 'ஸ்ரில்'களில் திரைகளில் தோன்றி மறைய மண்டபத்தின் 'ஏசி'யின் குளிரில் இந்திரனுக்குத் தூக்கம் வருவது போலிருந்தது.


பெரிய இலங்கைப் படம் திரைகளில் தோன்றிற்று. சூப்பர் ஸ்ரார்  ரஜனிகாந்தின் படங்களின் ஆரம்பத்தில் திரையில் வந்து விழும் எழுத்துக்கள் போல, இலங்கைப் படம் மீது மாகாணங்ககளின் பெயர்கள் வந்து விழுந்தன. மெல்லிய இசையுடன் பச்சை, செம்மஞ்சள், சிவப்பு வர்ணங்கள் வந்து மாகாணங்களின் மேல் நிரம்பின. இந்திரன் தேசப்படத்தை உற்றுப்பார்த்தான. வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்கள் சிவப்பில் தோன்றின. மேல் மத்திய மாகாணங்கள் பச்சையில் தோன்றின. ஏனைய மாகாணங்கள் செம்மஞ்சளில் தோன்றின.

சிவப்பில் தோன்றும் மாகாணங்களில் ஆரம்பக் கல்வி மிக அபாயகட்டத்திலிருப்பதாயும் அவ்மாவட்டங்களுக்கு விஷேட கவனம் எடுக்கப்பட வேண்டும் எனவும்,  செம்மஞ்சள் நிறத்திலிருக்கும் மாகாணங்களில் ஆரம்பக் கல்வியின் நிலை ஓரளவு நல்ல நிலையில் இருப்பதாயும், பச்சையிலுள்ள மாகாணங்களில் ஆரம்பக்கல்வி சிறப்பாய் இருப்பதாயும் கூறி தனது ஆய்வறிக்கை முன்வைத்தலைப் பலத்த கை தட்டல்களுடன் கலாநிதி விபுலசேனா முடித்துவைத்தார்.

இதைக் கண்டுபிடிக்கிறதுக்கு கோடிக்கணக்கிலை செலவளித்து ஆய்வுகள் செய்ய வேண்டியிருக்கு. சும்மா பார்த்தாலே தெரிகிறதே. கையிலை இருக்கிற பெரிய புண்ணை சக்தி வாய்ந்த குவிவு வில்லை வைத்து தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்கள்! வடக்கிலையும் கிழக்கிலையும் பெருந்தோட்டத்திலையும் எத்தனை பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கின்றது. அங்கு இருக்கின்ற ஒரு பாடசாலைக்கென்றாலும் வருச தொடக்கத்திலை புத்தகங்கள் போய்ச் சேர்ந்திருக்குமா? இவனுக்கு இப்படியான மாநாடுகளுக்குப் போக விருப்பமில்லை. அவற்றில் கலந்து கொள்வதை வெறுத்தான். ஆய்வறிக்கையும் பையும் கருத்தரங்கும் சாப்பாடும் கொடுப்பனவும்... விருப்பமில்லை என்று எவ்வளவோ சொல்லியும் பணிப்பாளர் கடமை லீவு பெறுவதற்குரிய றோஸ் நிறப் படிவத்தை நிரப்பி வைத்து விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தியிருந்தார். நிறுவகத்திலிருந்து தமிழ் அலுவலர் எவரும் மாநாட்டில் பங்கேற்காவிட்டால் யாராவது தூக்கிப் பிடிப்பார்கள் என நினைக்கிறார் போல.

தேநீர் இடைவேளையில் மைலோவுடன் கேக், பற்றீஸ் கொடுத்தார்கள். இவன் அலுவலகத்திற்கு போன் செய்து தர்மினியிடம் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் ஏழாவது புறூவ் பார்ப்பதற்காய் பின்னேரம் வருவதாகச் சொல்லி வைத்தான்.

கலந்துரையாடல் ஆரம்பமாகியிருந்தது. செயற்றிட்டப் பணிப்பாளர் சோமபால, பேராசிரியர் தம்பித்துரை, கலாநிதி விபுலசேனா ஆட்கள் மேடையில் இருந்தனர். சபையில் இருந்த பெரும்பாலனவர்கள் இலக்கிய விமர்சனக் கூட்டங்களை பாராட்டுக் கூட்டங்களாக மாற்றியமைக்கும் விமர்சகர்கள் போல ஆய்வைப் பாராட்டியே பேசினர். ஆய்வாளர்களின் சேவை மனப்பாங்கு, நாடு பூராவும் தரவு சேகரிக்கப்பட்ட விதம், தேசிய மாநாடு ஒழுங்கு செய்யப்பட்ட விதம், ஆய்வறிக்கையை முன்வைத்த தன்மை... எல்லாவற்றுக்கும் ஒருவர் மாறி ஒருவராய்ப் பாராட்டினார்கள். நல்லாய் முதுகு சொறிந்தார்கள். இவனுக்கு சினமாய் இருந்தது. ஆய்வுக்காக அனுராதபுரத்திற்குப் போனபோது தனக்கு சிக்குன்குனியா வந்ததென  விபுலசேனா சொன்னார். 

ஆய்வு செய்வது தானே இவர்களின் வேலை. அவற்காகத்தானே இலட்சங்களுக்குக் கிட்டச் சம்பளமெடுக்கிறார்கள். பல்கலைக்கழகங்களில் பதவியுயர்வு பெறுகிறார்கள். சுற்றுலா போல ஒவ்வொரு மாகாணங்களுக்கும் செயற்றிட்ட வாகனங்களில் குடும்பத்துடன் போய் 'கெஸ்ட் ஹவுஸ்'களிலை தங்கி வந்திருப்பார்கள். அனுராதபுர அட்டமஸ்தான, சிகிரியாக் குன்று, கன்னியா வெந்நீரூற்று, நிலாவெளிக் கடற்கரை, நுவரெலியா உலக முடிவு எல்லாவிடங்களுக்கும் செலவில்லாமல் போய் வந்திருப்பார்கள். ஏன் விமானத்தில் பலாலிக்குப் போய் அங்கிருந்து நயினாதீவு நாகவிகாரைக்கே போயிருப்பார்கள். இவனுக்கு சபையினரின் அறியாமையை நினைக்கச் சிரிப்பு வந்தது.

வாமதேவன் எழுந்து நின்றார். பணியாள் ஒருவன் அவரிடம் 'வயரி'ல்லாத 'மைக்'கைக் கொடுத்தான். வடக்கு மாகாணக் கல்வி நிலைமை, ஆசிரியர் பற்றாக்குறை, பாடநூல்கள் இன்மை, பாடசாலைகளை ஒழுங்காக நடத்த முடியாதிருத்தல், இரவில் மின்சாரத் தடை, மண்ணெய் தட்டப்பாடு,  உணவில்லாமல் மாணவர் வகுப்பறையில் மயங்கி விழுதல் இவற்றால் மாணவர் ஒழுங்காகப் படிக்க முடியாதிருத்தல் பற்றியெல்லாம் கதைப்பாரென்று இந்திரன் நினைத்தான். தேசிய மாநாடுகளை வெள்ளிக்கிழமைகளில் நடத்துவதால் தன்னைப் போன்ற இந்துக்கள் மதிய உணவாக மரக்கறிகளையே சாப்பிட வேண்டியிருப்பதாயும் கருத்தரங்குகளை செவ்வாய், வெள்ளி தவிர்ந்த நாட்களில் நடத்தும் படியும் கேட்டு அமர்ந்தார். சோமபால வருத்தப்பட்டார். இனி இத்தவறு நடக்காமல் தான் பார்த்துக் கொள்வதாய் உறுதியளித்தார். பல தமிழ் ஆட்கள் கை தட்டினர். அன்வர் எழுந்து வெள்ளியில் நடத்துவதால் ஜூம்மாத் தொழுகை கூடத் தடைப்படுவதாயும் இனி மேல் வெள்ளிக்கிழமைகளில் வைக்காமல் விடுவதென்ற முடிவை இஸ்லாமியர் சார்பில் பாராட்டினார். சமயங்கள் ஒன்றுபடுகின்றன இந்திரன் மனதில் சிரித்துக்கொண்டான்.

ஒவ்வொரு வருசமும் ஒரே மாதிரியான நீல நிறப் பையைத் தருவதைக் தவிர்த்து எதிர்காலங்களில் வேறு நிறங்களில் தரும்படி ரெங்கசாமி  கேட்டார். பணிப்பாளர் ஒத்துக் கொண்டார்.

திருமதி  விமலராஜா எழுந்து வழமையாகத் தரப்படும் பை ஆண்களின் பாவனைக்கானது. பையைத் தயாரிக்கும் போது பெண்களையும் கவனிக்க வேண்டும் என்றார். பெண்ணுரிமை வாதியாக இருப்பாரோ?

 'மேடம் பையை மிஸ்டர் விமலராஜாட்டைக் கொடுங்களேன்' என்று நவ்சாத் சொல்ல சபையில் சிரிப்பொலி எழுந்திற்று.

மாநாட்டில் பங்குபற்றுவதற்கான கொடுப்பனவு ரூபா இரண்டாயிரம் போதாதென்றும், பொருட்களின் விலை அதிகரித்துள்ள இக்காலத்தில் ஐயாயிரமாக அதிகரிக்கும் படியும் குரூஸ் கேட்டார். கை தட்டல் அடங்கச் சில நிமிடங்கள் பிடித்தன. தன்னால் தனியாக இதைப் பற்றிக் தீர்மானிக் முடியாதென்றும் உத்தியோகத்தர்களுடன் கதைத்து தீர்மானிப்பதாகவும் சோமபால சொன்னார்.

இவனுக்கு வெறுப்பாய் இருந்தது. 'என்ன மனிதர்கள்' இவர்கள். செயற்றிட்டத்திற்குச் செலவளித்த பணத்தில் இரண்டொரு பள்ளிக்கூடங்களைக் கட்டியிருக்கலாம் என்று மனதில் தோன்றிற்று.


சாப்பாட்டு மேசையில் இவனருகில் வாமதேவன் வந்தமர்ந்து சாப்பிட்டார். இந்திரன் அவரின் கோப்பையை எட்டிப் பார்த்தான். சோற்றுடன் பருப்பும் உருளைக்கிழங்கும் ஏதோ இலைக் கறியும் பப்படமும் மிளகாய்ப் பொரியலும் கிடந்தன.

' ஹாய் இன்ரன் ஹவ் ஆ யூ' வாமதேவன் கேட்டார்.

' சுகமாய் இருக்கிறன் சேர்'

' தம்பி ஆறாம் வகுப்பு ஆசிரியர் கைந்நூல் வந்திட்டுதோ' வாமதேவன் ஆறாந்தர மாணவர்களின்  விசயத்தில் அக்கறையாய்த் தான்  இருக்கிறார் போல.

' அதுக்கிப்ப ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியெண்டு பெயர் சேர். ஆறாவது   தரமாப் புறூவ் பாத்திட்டன் இன்னும் வேலை முடியேல்லை'

' அது அவசரமில்லைத் தம்பி ஆறுதாலாய்ச் செய்யுங்கோ. என்ரை கடைசி மகன் ஆறாம் வகுப்பிலை இருக்கிறான். நீர் புறூவ் பார்த்த பேப்பர்களைத் தந்தீரென்டா நான் அதைப் புத்தகமாய்க் கட்டிப் போட்டு அவனுக்குப் படிப்பிச்சுப் போடுவன். அவனுக்கு சரியான விளையாட்டுப் புத்தி படிக்கிறேல்லை'

கொடுப்பனவு பெறுவதற்காய் வரிசையில் நிற்கையில் வாமதேவன் காலையில் இவனுக்குச் சொன்ன கடைசியாய் வெளியான புலமைப்பரிசில் பெறுபேறுகளைப் பற்றி 'கம்பஹா' கல்வி அதிகாரி பண்டாரவுக்கு இங்கிலீசில் விளக்கிக் கொண்டிருந்தார்.  ' பொஸ்கோ 92%, ஹிண்டுப் பிறைமறி 90%...' 

 பண்டாரவுக்கு முன்னால் இந்திரன் வாமதேவனிடம் ' சேர், அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயம், கொழும்புத்துறை துரையப்பா, குருநகர் றோக்ஸ், நாவாந்துறை றோ.க. .நாவலர் வித்தியாலயம் போன்ற பள்ளிக்கூடங்களில்  றிசல்ட்ஸ் எப்படி'  என்று இங்கிலீசில் கேட்கத் தொடங்கினான்.

-நிர்மலன்
நன்றி : கலைமுகம் ( ஜனவரி - ஜூலை 2008 )

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு