சிவா

தாலி கட்டுவதற்கு ஆயத்தம் போல.. முன்வரிசைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு பூக்களைக் கொடுக்கிறார்கள். குருக்களின் மந்திர உச்சரிப்புடன் தவில், நாதஸ்வர ஒலி கலந்து மண்டபமெங்கும் ஒலிக்கின்றது.

'என்னிலை பிழையில்லை என்று கண்டுபிடிக்க இவங்களுக்கு ஆறு வருசம் எடுத்திருக்கு மச்சான்' விரக்தியாய்ச் சிரிக்கிறான்.

'நான் உள்ளுக்கை இருக்கேக்கை அப்பர் மண்டையைப் போட்டிட்டார்' சிவா சொல்கிறான்.'

எப்ப நடந்தது?'

'மூண்டு வருசத்திற்கு முந்தி, கொழும்பிலைதான் செத்தவீடு நடந்தது. கைவிலங்கு பூட்டிக் கூட்டிக்கொண்டு போனவங்கள்'

'நான் கேள்விப்படேல்லை மச்சான்'

'கனத்தையிலை நான்தான் கொள்ளி வச்சன்டா' சிவாவின் கண்கள் கலங்குகின்றன.

கெட்டிமேளச் சத்தம் கேட்கின்றது. முன்வரிசைகளில் இருப்பவர்கள் மணவறையை நோக்கி மலர்களைத் தூவுகிறார்கள். 'அக்காவும் கலியாணங்கட்டி அவுஸ்ரேலியா போனாப் பிறகு அம்மாதான் தனிய றூம் எடுத்து வழக்குக்கு கோட்ஸ்க்கு அலைந்தவ பாவம்.'

இரண்டு வரிசை முன்னால் இருந்த விக்கியும் ரஞ்சனும் எங்களைத் திரும்பிப் பார்த்துவிட்டு முன்னால் திரும்பித் தங்களுக்குள் கதைக்கிறார்கள். சிவாவுடன் கதைப்பது தங்களுக்குப் பிரச்சினை என்று கதைப்பார்கள். 'முரளி மடைத்தனமாய் சிவாவுடன் கதைத்துக்கொண்டிருக்கிறான்' என்று என்னைப் பற்றியும் கதைக்கக்கூடும்.' முந்தநாள் வெள்ளவத்தை டெல்மன் ஹொஸ்பிற்ரலடியிலை விக்கியைக் கண்டனான். அவன் என்னைக் கண்டிட்டு றோட்டைக் குறஸ் பண்ணி லாண்ட்சைட்டாலை போட்டான்' சிவாவின் குரலில் வேதனை தெரிகிறது.

'அவனுக்குச் சரியான பயமடா'

'கண்டறியாத பயம் கோட்ஸாலையே வெளியிலை விட்டாலும் இவங்கள் என்னை நம்புறாங்கள் இல்லையெண்டதுதான் கவலையாயிருக்கடா.'சிவாவின் வார்த்தைகள் சூடாகின்றன.

'மச்சான் உன்ரை பழைய ஆள் சம்பி இப்ப எங்கை?' நான் கேட்கிறேன்.

'அவள் இப்ப லாலைக் கலியாணங் கட்டி ரெண்டு பிள்ளைகளும் இருக்கெண்டு கேள்விப்பட்டன்... அவளிலையும் பிழையில்லை.'சிவாவின் முகத்தில் கவலையின் ரேகைகள் படிகின்றன.

பட்டுப்பாவாடை சட்டை அணிந்த சிறுமியொருத்தி கற்கண்டுத் தட்டை நீட்டுகிறாள். கற்கண்டுத் துண்டொன்றை வாயில் வைத்தபடி சிவா சொல்கிறான். 'எனக்கு இப்பிடி கலியாண வீடுகளுக்கு வெளிக்கிட்டுத் திரிய விருப்பமில்லை. எல்லாரும் என்னைக் கண்டு ஒதுங்கிப்போயினம். வான்மதி கட்டாயம் வரச் சொன்னதாலை தான் வந்தண்டா..'

'இல்ல சிவா... நாட்போக இது பழகிடும்'

'நான் அவுஸ்ரேலியா போக றை பண்ணுறன். அக்காவும் அங்கைதானே! அத்தாருக்கு என்னிலை சரியான கோபம்..அது சரி, நீயிப்ப என்ன செய்யிறாய்?'

'கிரஜுவெட் அப்பொயின்ற்மென்ற்ரிலை படிப்பிக்கிறன்'

'எங்கையெடா?'

'மட்டக்குளியிலை, பழைய கல்கிசை றூமிலை தான் இருக்கிறன்.'

'உன்னட்டைப் படிக்கிற பிள்ளைகள் பாவங்களடா.' சிரிக்கிறான். ஒழிவு மறைவில்லாத பழைய சிரிப்பு.

சிவாவை எனக்கு 'அட்வான்ஸ் லெவல்' படிக்கும் காலத்திலேயே தெரியும். நாங்கள் யாழ்ப்பாண நகரின் வெவ்வேறு கல்லூரிகளில் கல்வி கற்றிருந்தாலும் ரியூட்டரிகளில் சந்தித்திருக்கிறோம். ஆனால் அப்போது எனக்கு சிவாவுடன் அதிகம் கதைத்துப் பழக்கமிருக்கவில்லை. 'சயன்ஸ் அக்கடமி'யில் சோதியரின் 'பிஸிக்ஸ்' வகுப்புக்களில் அவன் பின்வாங்கில் அமர்ந்திருந்து, தன் நண்பர்களுடன் சேர்ந்து பெட்டைகளுக்கு ஏதாவது பகிடிகள் விட்டுக் கொண்டிருப்பான். ஆனால் சோதியர் அவனைப் பிடித்து கரும்பலகையில் கடினமான கணக்குகளைச் செய்ய விட்டபோதெல்லாம் அவனால் இலகுவாய் சமன்பாடுகளைப் பிரயோகித்து விடை காணமுடிவது முன்வாங்குகளில் அமர்ந்திருந்து படிக்கும் எங்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நல்லூர்க் கந்தசுவாமிக் கோவிலின் தீர்த்தத் திருவிழாக்களின் போது தீர்த்தக் கேணியில் நண்பர்களுடன் இறங்கி பக்தைகளுக்கு தண்ணீர் தெளிப்பதில் சிவா மும்முரமாய் ஈடுபட்டிருந்ததைப் பல தடவை அவதானித்திருக்கிறேன். 

வளாகத்திற்கு வந்ததன் பின்பு அவன் வெள்ளவத்தையில் அறையெடுத்திருந்தான். கறுப்பு யூலைக்கு முன்பு கொழும்பில் வசித்ததாலோ என்னவோ அவனால் சரளமாய் சிங்களம் பேச முடிந்தது. சிங்கள மாணவர் பலர் அவனுக்கு நண்பர்களாகினர். அவர்களுடன் சேர்ந்து 'குறூப் ஸ்ரடிஸ்' செய்யுமளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவனாகிப் போனான். சனநெருக்கடி மிக்க பஸ் பயணங்கள் வெறுத்துப் போக, சைக்கிள் ஒன்று வாங்கி அதில் வளாகத்திற்கு வந்து போகத் தொடங்கினான். நாங்கள் அடையாள அட்டை, பொலிஸ் பதிவுத் துண்டு, பல்கலைக் கழக பதிவுப் புத்தகம் எல்லாவற்றையும் சரிபார்த்து பஸ்களுக்குக் காத்திருக்கும் மாலை வேளைகளில், அவன் மஞ்சள் வெய்யிலில் உடல் வியர்க்க சிங்கள நண்பர்களுடன் மைதானத்தில் 'வொலிபோல்' விளையாடிக் கொண்டிருப்பான். முதலாம் அரையாண்டுத் தேர்வில் சகல பாடங்களிலும் அவன் A, B தரங்களில் சித்தியடைந்தது C, D தரங்களில் தட்டுத் தடுமாறிச் சித்தியடைந்த எங்களுக்கு வியப்பாய் அமைந்தது.

'நியுக்கிளியர் பிஸிக்சி'ன் கடைசி ஒப்படையைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்த இறுதி நாளின் மதிய வேளையில், நானும் ரஞ்சனும் சீமெந்து வாங்கொன்றில் அமர்ந்திருந்து நான்கைந்து இங்கிலீஸ் புத்தகங்களைப் பார்த்து விடையெழுதிக் கொண்டிருந்த போதுதான் எங்களுக்கு சிவாவின் காதல் விவகாரம் தெரிய வந்தது. சிவாவும் சம்பியும் 'கேக்' தட்டை நீட்டித் தங்கள் காதல் விவகாரத்தைத் சொன்னார்கள். சம்பியின் தந்தை களுபோவில வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணராகப் பணியாற்றுவதாய் அறிந்திருந்தேன்.

வழமையாகவளாக வாசலில் புன்னகை பூக்கும் 'செக்குரிட்டிக்கார்ட்' கிழவனின் முகத்தில் புன்னகையைக் காணவில்லை. 'அசங்கரலா யண்ட' அதிகாரத்தொனியில் சொல்கிறான். புத்தகப்பை, பல்கலைக்கழகப் பதிவுப் புத்தகம் எல்லாவற்றையும் ஆராய்கிறான். தனது மேசையில் இருக்கும் கொப்பியில் பெயரெழுதி, ஒப்பமிட்டுச் செல்லுமாறு சொல்கிறான். மாணவர் சங்கப் போராட்டம் ஏதாவது நடக்கப் போகின்றதா?

இறுதித் தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதனால் எல்லோரும் 'சீரியஸாய்' படிக்கிறார்கள் போலும். நேரத்துடன் வந்து சீமெந்து வாங்குகளில், டிஸ்கஷன் றூமில் லைபிறறியில்... எல்லா இடங்களிலும் இருந்து படிக்கிறார்கள். ரஞ்சன், வத்சலா, அன்பு, இளங்கோ, சுரேஸ், செல்வி, விக்கி....என நாங்கள் வழமையாக இருந்து படிக்கும் சீமெந்து வாங்கிலில் வேறு ஆட்கள் இருந்து படிப்பது தெரிகின்றது. அருகில் சென்று பார்த்தால் றுவான், மனோஜ், லசந்தி, லால் ஆட்கள் இருக்கிறார்கள்.

புத்தகப் பையை மனோஜின் அருகில் வைத்துவிட்டுச் சொல்கிறேன். 'மே அப்பே தன' இது எங்களின் இடமென்று.

'ஒயாகே தன வவனியாட்ட எஹாட்ட' என்ன இது... எனது இடம் வவுனியாவுக்கு அங்காலை என்று லால் சொல்கிறான். பகிடியாய்ச் சொல்கிறானா இல்லை சீரியஸாய் சொல்கிறானா? றுவான், மனோஜ், லசந்தி ஆக்களின் முகங்களிலும் வழமைபோல் நட்பான புன்னகையைக் காணவில்லை. இவங்களுக்கு இன்றைக்கு என்ன நடந்திட்டுது?

'மச்சாங் லால், மம கன்ரிம கீல என்னங், மகே பாக் மெத்தன தியனுவ பொட்ட பலாகண்ட...' என்று எனது புத்தகப் பையைப் பார்த்திருக்கும் படி சொல்லி விட்டு கன்ரீனை நோக்கி நடக்கையில் மனோஜ் கேட்கிறான்  'முரளி பாக் அத்துல மொனவாத தியனே?' புத்தகப் பையினுள் என்ன கிடக்கென்று இவன் ஏன் கேட்கிறான்.

'பொத் தமாய்... ஐ அகண்ணே?' எனது வார்த்தைகள் சூடாகின்றன.

'உம்பலாவ பிலிகண்டபாய், ஈய சிவாகே வெட தண்ணுவானே'- றுவான் சொல்கிறான்.

என்ன இது... எங்களை நம்ப இயலாதாம்... சிவாவின் வேலை தெரியுந்தானே என்கிறான். இவன் என்ன கதைக்கிறான்! சிவா எங்களோடை பழகிறதிலும் பார்க்க இவங்களோடைதானே கூடப் பழகுகிறவன். ஒன்றாய் இருந்து ஒரே பார்சலைச் சாப்பிடுவது, விளையாடுவது, படிப்பது, பிறக்டிக்கல் செய்வது... எல்லாம் இவங்களோடை தானே! பிறகு என்ன நடந்திருக்கும்?

'றுவான் மம தண்ணாய் ஒயா கியண்ட'- எனக்குத் தெரியாது நீ சொல்லு என்று கேட்கிறேன்.

'முரளி, பொறு கியண்ட எப்பா'-லசந்தி சொல்கிறாள்.

கன்ரீனில் வழமைபோல காலை உணவுக்காக பாணும் பருப்பும் பிளேன்ரீயும் வாங்குவதற்காய் வரிசையில் நிற்கையில் எல்லோரும் என்னைப் பார்ப்பது போன்றதொரு உணர்வு. என்ன நடந்திருக்கும் சிவா-சம்பி விவகாரம் சம்பி வீட்டில் தெரிய வந்து ஏதாவது பிரச்சினையா..? அப்படியிராது... கன்ரீன்கார ஷாந்தையாகூட தனது நட்புக் கலந்த புன்னகையைத் தொலைத்திருந்தார்.

'டேய் முரளி! சிவாவை பிடித்திட்டங்கள்.' பாணைப் பிய்த்து பருப்புடன் சேர்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், பாண் தட்டுடன் அருகில் வந்தமர்ந்த ரஞ்சன் சொன்னான். அவனின் குரலில் நடுக்கந் தெரிந்தது.

'ரஞ்சன், என்னடா நடந்தது' எனது குரலிலும் நடுக்கம் தொற்றிக்கொண்டது.

சிவா முதல் நாள் இரவு கம்பஸில் இருந்து விளையாடிவிட்டு ஏழரை மணியளவில் சைக்கிளில் வீட்டுக்குப் போயிருக்கிறான். வழியில் அவனின் பள்ளிக்கூடக் கால நண்பனொருவனை கண்டு கதைத்திருக்கிறான். நண்பனுக்கு பஸ் வர, நேரமாக சிவா அவனை தனது சைக்கிளில் ஏற்றிச் சென்றிருக்கிறான். வழியில் சோதனைச் சாவடியொன்றில் சோதிக்கையில் நண்பனின் பையில் பயங்கரவாதத்துடன் தொடர்பான புத்தகமிருந்ததென்று இருவரையும் பிடித்து அடைத்து விட்டதாய்க் கதைகள் உலாவின.

எப்படிச் சொன்னாலும் இவங்கள் இனி நம்பப் போவதில்லை. இனி இவர்களின் கதைகளில் புத்தகம் துப்பாக்கியாகும். துப்பாக்கி கைக்குண்டாகும். கைக்குண்டு... இங்கு படிக்கும் எல்லாத் தமிழருக்கும் வால் முளைத்திருப்பதாயும், நான்கு கால்கள் உள்ளதாயும் நம்புவார்கள்! நம்பாதவர்களை சிங்கள ஆங்கில ஊடகங்கள் ஆதாரங்களுடன் நம்பச் செய்யும். லைபிறறியில் தமிழ் மாணவர்கள் குறைவாகத்தானிருந்தார்கள். எல்லோரும் என்னையும், ரஞ்சனையும் வித்தியாசமாய்ப் பார்ப்பது போலிருந்தது. 'திவயின'வையும், 'லங்காதீப'வையும் சில்வா ஆட்கள் சுற்றிவர இருந்து உரக்க வாசிக்கிறார்கள். சிவாவைப் பற்றிய யோசனைகள் மீண்டும் மீண்டும் வந்து தொலைத்தன. பாடங்கள் மூளைக்கேற மறுத்தன. மதியச் சாப்பாட்டுக்காய் பற்றைகளில் பதுங்கும் 'கப்பிள்ஸ்'களையும் 'கபரக்கொய்யா'க்களையும் தாண்டி கன்ரீனை நோக்கி நடக்கையில், மரப்பாலத்தில் பெரிய கபரக்கொய்யாவொன்று குறுக்கே படுத்திருந்து வழியை தடைசெய்தது. ரஞ்சன் எறிந்த கல்லொன்று அதன் முதுகில்பட, அது வாலால் பாலத்தில் அடித்துவிட்டு பற்றைக்குள் ஊர்ந்து மறைந்தது. போக வேண்டாம் என்று அது தனது வலிய வாலால் பாலத்தில் அடித்துக் கூறிற்றோ..?

கன்ரீனின் நீண்ட விறாந்தை முழுதும் காக்கிச் சட்டைகள் நிறைந்திருந்தன. என்ன இது? ஆட்களைப் பிடிக்கப் போறாங்களா? சீருடையுடன் படையினர் வளாகத்துக்குள் வரக்கூடாதென்று எத்தனை தரம் நாங்கள் துணைவேந்தர் அலுவலகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்று ஊர்வலங்கள் போயிருக்கிறம். தாடிக்காரங்களின்ரை யூனியன்தான் ஊர்வலங்களை ஒழுங்கு செய்யிறது. நாங்கள் தானே முன்னுக்குப் போறது! சிவா அழகாக சிவப்பு மையால் தமிழில் பிறிஸ்ரல் போட்களிலை சுலோகங்களை எழுதிறவன்.  என்னதான் நடந்தென்ன? காக்கிச் சட்டைகள் வளாகத்தக்குள் புகுந்து விட்டனவே! ஏன், இங்களே போய்க் கூட்டி வந்திருப்பாங்கள் போல...

காக்கிச்சட்டைகள் ஒவ்வொரு மாணவரினதும் அடையாள அட்டையை வாங்கிப் பார்க்கிறார்கள்.

பெரேராக்கள்,பெர்னாண்டோக்கள்,சில்வாக்களை விட்டுவிட்டு அமுதன், ராகவன், குகன், கிரி, உமா, தேவகி... ஆட்களை வரிசையில் விடுகிறார்கள். சிவாவின் நண்பர்கள் என்று பிடிப்பதானால்... பெரேராக்கள், பெர்ணாண்டோக்கள், சில்வாக்களைத் தானே முதலில் வரிசையில் விடவேண்டும்!

வரிசையில் எனக்கு முன்னால் குகன், சீலன், றமேஸ், இளங்கோ, வான்மதி, ரதி. ஆட்கள் பைல்கள் புத்தகப் பைகளுடன் தலை கவிழ்ந்து நிற்கிறார்கள். எழுபது எழுபத்தைந்து பேர் இருக்குமோ..? சீனிவாசன் பொலிசுக்கு ஏதோ பேப்பரைக் காட்டிக் கதைக்கிறான். 'செம்மாணவர் அமைப்பின்' உப செயலாளர் தானென்று சொல்லுறான் போல... சிவப்பு, நீலம், பச்சை எதென்றாலும் 'தானா' வென்றால் அவங்களுக்கு ஒன்றுதான். ஆறரை அடி உயரமிருக்கும் தடித்த பொலிஸ்காரனொருவன் நாலடி உயரச் சீனியின் கொலரைப் பிடித்து இழுத்து வந்து வரிசையில் முன்னால் நிறுத்துகிறான். யூனியன்காரர்தான் வரிசைக்கும் தலைமை தாங்கவெண்டுமென்று பொலிஸ்காரன் விரும்பிறான் போல... சீனியை நினைக்கப் பாவமாயிருக்கு. சில விரிவுரையாளர்களிடம் 'ஐ ஆம் ஏ லெப்ரிஸ்ட் ஸ்ருடன்ஸ் யூனியன் கொமிற்ரி மெம்பர்' என்று சொல்லி காரியங்களைச் சாதிக்கிறது மாதிரி பொலிசிட்டையும் சொல்லிற்றான். சீனியின் பருப்பு பொலிசிட்டை வேகாதோ?

சீனியின் யூனியன் தலைவன் கித்சிரி, ரெலிபோன் பூத்துக்குப் பக்கத்திலிருக்கும் சீமெந்து மேசையில் அமர்ந்திருந்து, தாடியைத் தடிவியபடி சிகரெட் ஒன்றைப் புகைத்துக் கொண்டிருக்கிறான். சிகரெட் முடிந்த பின்பு வந்து பொலிசுடன்  கதைத்து எங்களை விடுவிப்பான் போல... அடுத்த யூனியன் எலெக்சனுக்கு எங்கடை ஆதரவு அவனுக்கு தேவை. என்ன... இவன் கித்சிரி ரீவியைப் பார்க்கிறான். ஜயசூரியாவும் களுவும் விசுக்குகிறார்களாக்கும். இவன் இனி 'மச்' முடியுமட்டும் எழும்ப மாட்டான். 'இதெல்லாம் சிவாவாலை வந்த வினை.'
'நாங்கள் இனி 'பைனல்' எடுத்த மாதிரித்தான்.'
' உள்ளுக்கு எத்தினை வருசம் போடுறாங்களோ தெரியாது!'
'அவன் 'சீனா'க்களோடை உரஞ்சித் திரிந்தாலும் 'தானா'க்களைத்தான் பிடிக்கிறாங்கள்.
'வரிசையில் நிற்பவர்கள் மெல்லிய குரல்களில் புறுபுறுக்கிறார்கள்.

விசாரணை, வாக்குமூலம், கைரேகைப்பதிவு, இரகசியப் பொலிஸ் அறிக்கை... என வழமையான பொலிஸ் சடங்குகளின் பின்னர், வெய்யில் கொளுத்தும் மதிய வேளையொன்றில், கல்கிசை நீதிமன்றால் இறுதித் தேர்வுக்கு முதல் நாள் எம்மை விடுவித்தார்கள். இறுதிப் பரீட்சையின் கடைசி வினாத்தாளுக்கு விடையளித்துவிட்டு, நானும் ரஞ்சனும் குகனும் ஆறுதலாய் கன்ரீனில் இருந்து 'அலப்ப' சாப்பிட்டு பிளேன்ரீ குடித்துக் கொண்டிருக்கையில், லாலுடன் கைகோர்த்தபடி கன்ரீனுக்கு வந்த சம்பி எங்களை முறைத்துப்பார்த்துவிட்டு 'கேக்' தட்டொன்றை வாங்கிக்கொண்டு போனாள்.

சிகரெட்டை ஊதிப் புகையை விட்டுக்கொண்டு வந்த கித்சிரி தன் கண்ணாடியைச் சரி செய்தவாறு, தான்தான் தன் கட்சித்தலைவரைப் பிடித்து எங்களை வெளியே எடுத்து விட்டதாயும் சிவாவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவனை வெளியே எடுக்க முடியவில்லையென்றும் சொன்னான்.

'மச்சாங்! எலெக்சன் தவச கிட்டு த?' என்று சிங்களத்தில்  ரஞ்சன் 'தேர்தல் தினம் நெருங்குகிறதா' என்பதைக் கேட்டான். ரஞ்சனின் 'நக்கலைப்' புரிந்த கித்சிரி தலையைத் தொங்கப் போட்டபடி, நீண்ட விறாந்தையில் நடந்து மறைந்து போனான்.

'சீனி யூனியனிலை இருந்து விலகிட்டானாம்' - குகன் சொன்னான்.

வீட்டை விட்டு வெளிக்கிடவே பயமாக இருக்கிறது. ஏன் வீட்டிற்குள் இருக்கவே பயமாய்த் தான் இருக்கிறது. தினமும் ஆட்கள் காணாமல் போவதாய் செய்திகள் காதில் விழுகின்றன. நாடெங்கும் வெண்ணிற வேன்கள் திரிகின்றன. என்னிடம் எட்டாம் வகுப்பில் படிக்கும் யூட்டின் தந்தையைக் காணவில்லை. யூட் மூன்று வாரங்களாய் பாடசாலைக்கு வருவதில்லை. நான் தங்கியிருக்கும் வீட்டுக்கு மூன்று வீடு தள்ளி அறையெடுத்திருந்து படித்த, உயர்ந்த-மெலிந்த மொறட்டுவப் பல்கலைக்கழக மாணவனையும் காணவில்லையென்று வீட்டுக்கார அன்ரி சொன்னா.

சிவா தந்திருந்த டயலொக் நம்பருக்கு தொடர்ந்து அழைப்பெடுத்தாலும் தொடர்பு கிடைக்கவில்லை. அது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாய்த் தெரிய வந்தது. சிவா தந்திருந்த முகவரிக்கு அவனைத் தேடி நாரஹென்பிட்ட தொடர்மாடிக்கு ஒரு சனிக்கிழமை மாலை போனபோது வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீடுகளில் விசாரித்த போதும் அது பயனில்லாது போயிற்று. அவ்வீட்டுக்காரர்கள் என்னை ஒரு மாதிரியாய்ப் பார்த்தார்கள்.

அடுத்தநாட் பாடத்திற்காய் பாடக்குறிப்புற்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த ஓர் இரவில் ரெலிபோன் சிணுங்கிற்று. காணாமல்போனோர் உறவினர் சங்கம் நடத்திய ஊர்வலத்தில் வெள்ளைச் சேலை உடுத்திய வயோதிபப் பெண்ணொருத்தி சிவாவின் புகைப்படத்தைக் காவியபடி நடந்து சென்றதை ரீவி செய்தியறிக்கையில் தான் பார்த்ததாக, அழுதபடி ரஞ்சன் சொன்னான்!

நிர்மலன்
நன்றி : யுகமாயினி நவம்பர் 2009

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு